புதன், 28 டிசம்பர், 2016

34வது வீதி கலை இலக்கிய களம்

        "வீதி கலை இலக்கிய களம் "  35வது கூட்டம் 25.12.2016 அன்று காலை 10.00 மணிக்கு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் ஆக்ஸ்போர்டு உணவுக் கல்லூரியில் நடை பெற்றது.  கூட்டத்திற்கு கவிஞர் ரேவதி தலைமை ஏற்க நான் (சோலச்சி) வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன்.

     சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த திருவில்லிபுத்தூர் கவிஞர் சி.அன்னக்கொடி அவர்கள்  மற்றும் சேலம் கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்களை வரவேற்று வாழ்த்து கூறி நிகழ்ச்சி தொடங்கியது. 

       முதல் நிகழ்வாக மறைந்த முந்நாள் முதல்வர் மாண்புமிகு டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா மற்றும் கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு கவிஞர் மிடறு முருகதாஸ் அவர்கள் கவிஞர் இன்குலாப்பின் "மனுசங்கடா " பாடலைப்பாட நிகழ்ச்சி தொடந்தது.
 
      கவிஞர் மா.கை.நாகநாதன், பொன்னமராவதி கவிஞர்  அ.கருப்பையா (பணிநிறைவு பெற்ற ஆசிரியர்) , கவிஞர் பவல்ராஜ், கவிஞர் சாமியப்பன், கவிஞர் சிவக்குமார், கவிஞர் பாரதி செல்வன்,  கவிஞர் பாரதி ஏகலைவன், சிறுகதை எழுத்தாளர் செம்பைமணவாளன், கவிஞர் காசாவயல் கண்ணன்,  போன்ற கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள்.  கவிதை தலைப்பு "நான் சொல்றத கேளுங்க " என்று கொடுக்கப்பட்டிருந்தது. கவிஞர்கள் சிலர் அவர்களது தலைப்பில் எழுதி வாசித்தனர்.

      குழந்தைச் செல்வங்கள் சமத்துவபுரம் பள்ளி மாணவி வெர்ஜினும் நிலையப்பட்டி பள்ளி மாணவி ஜனனியும் மிகச் சிறப்பாக பாடல்கள் பாடினார்கள். கவிஞர் பவல்ராஜ் அவர்கள் காதல் பாடல் ஒன்றை இசையுடன் பாட அனைவரும் தன்னை மறந்து தாளம் போட நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்தது. பதிலுக்கு நானும்
"நகைக்கடை வீதியில
நாங்க ஒன்னா போகயில
நகைக்கடை ஓனரெல்லாம்
எட்டிப் பார்த்தாங்க அவங்க
நகைகளெல்லாம் உண்மையானு
தட்டிப் பார்த்தாங்க....."
  -என்று என் மனைவிக்காக நான் எழுதிய பாடல்களை பாட நிகழ்ச்சி கலகலப்பாக சென்றது.

    சேலம் கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்களின் "ஞாபக நடவுகள் " கவிதை நூலினை எங்கள் அம்மா கவிஞர் மு.கீதா அவர்கள் நூல் விமர்சனம் செய்தார்கள். ஏற்புரை வழங்கிய கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்கள் நன்றி தெரிவித்ததோடு மிடறு முருகதாஸ், கவிஞர் மு.கீதா, எனது (சோலச்சி) கவிதைகள் குறித்தும் தற்கால கவிதைகள் குறித்தும் மிகச் சிறப்பானதொரு உரையை வழங்கிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. 

#"நான்
எழுதிய
முற்றுப்பெறாத
முதல் கவிதை ..."

#"அன்று
மூன்று பக்கம்
கடலால்....
இன்று
நான்கு பக்கமும்
கடனால்...."

#"படிப்பதற்கு
மட்டுமல்ல
பள்ளிக்கூடம்....
ஒருவேளை
பசியாறவும்தான்...."

    - இவை கவிஞர் கூ.ரா.அம்மாசையப்பன் அவர்களின்  கவிதைகளில் சில.

          கவிஞர் மா.மு.கண்ணன் அவர்கள் இயற்கை மருத்துவம் குறித்து சிறப்பானதொரு கட்டுரையை வழங்கினார்கள். படைப்பாளர்களின் ஒவ்வொருவரின் நிகழ்வுக்கு பின்னர் அவர்களது படைப்பு குறித்த விவாதமும் சிறப்பாக நடந்தேறியது.

      நிகழ்ச்சிகள் அனைத்தையும் உற்றுநோக்கிக்கொண்டு இருந்த கவிஞர் சி.அன்னக்கொடி அவர்களின் சிறப்புரை மிகவும்‌ சிறப்பானதாகவே இருந்தது.  இவர் ஆற்றோரம் மண்ணெடுத்து, மனசோடு பேசு, விதைகள் விழுதுகளாய் என்கின்ற மூன்று கவிதை நூல்களும் கருவறை முதல் கல்லறை வரை என்கிற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நூலும் எழுதியுள்ளார்.

#"மரணமே... என்னை
நெருங்க நினைக்கிறாயா
மரணமே உனக்குத்தான்
மரண அடி நிச்சயம் ....!

# "மனித வாழ்க்கையை
கூட்டிப் பார்த்தேன்
கழித்துப் பார்த்தேன்
பெருக்கிப் பார்த்தேன்
வகுத்தும் பார்த்தேன்
கிடைத்தது ஒன்றே ஒன்றுதான்
"ஒன்னுமில்லை....!"

#"மாமியாருக்கு தனித்தட்டு
போட்டு வைத்திருந்தாள் - மருமகள்
பேரன் சொன்னான்
பாட்டி இறந்த பிறகு
பத்திரப்படுத்திக்கொள்
உனக்கும் பயன்படும் என்று..."

   -இது இவரது கவிதைகளில் சில.

        புதுக்கோட்டை மக்களுக்கே தெரியாத பல செய்திகளை சங்க பாடல்களிலிருந்து எடுத்துக்காட்டுகளுடன் கூறி புதுக்கோட்டைக்கு புகழ் சேர்த்த விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

      சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடையும் நூல்களும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

      நிகழ்வின் கடைசி நிகழ்வாக மாற்று உணவுமுறை குறித்து செயல் விளக்கமும் வீடியோவும் காட்டப்பட்டது. மாற்று உணவுமுறை குறித்து எங்கள் அம்மா கவிஞர் மு.கீதா அவர்கள் விளக்கினார்கள். கவிஞர் மிடறு முருகதாஸ் நன்றி கூற மதியம் 1.25 க்கு நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.