புதுக்கோட்டை புத்தக திருவிழா ......
2016நவம்பர் 26 முதல் டிசம்பர் 04 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்ற புத்தக திருவிழா வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக அமைந்திருந்தது. முதல்நாள் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் உயர்திரு எஸ்.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு திருவிழாவினை தொடங்கி வைத்தார்கள். அன்று மாலை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு மாலை நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து சிறப்பு செய்தார்கள்.ஒவ்வொரு நாள் மாலை நிகழ்வையும் மிக நேர்த்தியாக கொண்டு சென்றது எங்கள் எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் பங்கு அளப்பறியது.
நாள்தோறும் மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம், இலக்கிய உரைவீச்சு என ஒன்பது நாளும் புதுக்கோட்டை திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க தோழர்களின் பணி மிகவும் பாராட்டக்கூடியது.
தோழர்கள் மணவாளன், ரமாராமநாதன், பொன்.க, புதுகை செல்வா, புதுகைப்புதல்வன், நாராயணன், குமரேசன், சதாசிவம், மு.கீதா, ஆர்.நீலா, பீர்முகமது, மீரா செல்வக்குமார்...... என தோழர்களின் பட்டியல் நீளும்.
இந்த புத்தகத்திருவிழாவில் புதுமை என்னவென்றால் புதுக்கோட்டை படைப்பாளிகளுக்கென்று தனியாக ஒரு ஸ்டால் அமைத்ததுதான். அதில் புதுக்கோட்டை படைப்பாளிகளின் ஆயிரக்கணக்கான நூல்கள் அந்த அரங்கில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இவ்வளவு படைப்பாளிகளா என கண்டவர்கள் வியந்து போனார்கள். புதுக்கோட்டை படைப்பாளிகள் அரங்கினை மிகச்சிறப்பாக மேலாண்மை செய்து விழா சிறக்க துணை நின்றவர்களில் எங்கள் அய்யா முத்தமிழ் அறிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் பணி மிக முக்கியமானதாகும்.
ஸ்டால் அமைத்திருந்த பதிப்பகத்தார் மிகவும் நெகிழ்ச்சியுடன் சென்றார்கள். இத்திருவிழாவில் எனது "முதல் பரிசு " சிறுகதை நூல் பதினொன்று, "காட்டு நெறிஞ்சி " கவிதை நூல் ஒன்பது என மொத்தம் இருபது நூல்கள் விற்பனையானதாக எங்கள் அய்யா முத்தமிழ் அறிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் சொன்னபோது நான் நெகிழ்ந்து போய்விட்டேன். புதுக்கோட்டை படைப்பாளிகள் அரங்கை முழுமையாக கவனித்துக் கொண்ட அருமைத்தம்பி கவிஞர் மா.கை.நாகநாதனுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவ்வப்போது மழை வந்து முத்தமிட்டபோதும் மிகச்சிறப்பாக புத்தகத்திருவிழா நடைபெற்றது.
இனி ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டையில் இன்னும் நிறைய மாற்றங்களுடன் புதுமையாக நடைபெறும். இந்த ஆண்டு புத்தகத்திருவிழாவை காணத்தவறிய தோழர்கள் இனி வரும் காலங்களில் மறக்காமல் வாருங்கள். கொண்டாடி மகிழ்வோம்.
- நட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை
1 கருத்து:
புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழாவினை நானும் கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
கருத்துரையிடுக