Thursday, 23 February 2017

தீரர் சத்தியமூர்த்தி மணிமண்டபம் திறப்புவிழா

மனசார வாழ்த்துறேன்....

கவிஞர் வைகறை குடும்பத்திற்கு நிதியுதவி

23.02.2017 இன்று தீரர் சத்தியமூர்த்தி மணிமண்டபம் அவரது வாரிசுகள் முன்னிலையில் திறப்புவிழா

"நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடி......" என்கிறது பழம்பெரும் பாடல் ஒன்று. அந்தப் பாடலுக்கு முழுவதும் பொருத்தமானவர் திருமயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அழகுத்தேவர் அறக்கட்டளையின் நிறுவனர் அண்ணன் சக்திவேல் அவர்கள்.

  ஆம் தோழர்களே...

  அரசு செய்யவேண்டிய பணியை அல்லது குறிப்பிட்ட கட்சி செய்ய வேண்டிய பணியை தனிமனிதனாக செய்து நிகழ்த்தி வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். தீரர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு மணிமண்டபம் திருமயத்தில் கட்டி எழுப்பியுள்ளார்கள். இனி திருமயத்திற்கு சுற்றுலா  செல்பவர்கள் கோட்டையை மட்டுமல்ல தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் மணிமண்டபத்தையும் தவறாமல் காண்பார்கள்.

       திறப்புவிழா இன்றைய நாளில் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பத்து குழந்தைகளுக்கு காதணிவிழா

என் அருமை மைத்துனர் கவிஞர் வைகறை குடும்பத்திற்கு ரூபாய் பத்தாயிரம் நிதி உதவியும்

மற்றும் மதியம் ஐந்தாயிரம் நபருக்கு குறையாமல் அறுசுவை அன்னதானம், இரவு பாட்டு மன்றம் என்று நிகழ்வுகள் ஏராளம். தமிழகத்தின் பிரபலமான கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டர். மணிமண்டபம் கட்ட இருபத்தைந்து இலட்சத்திற்கு மேல் மற்றும் திறப்புவிழா செலவு ஐந்து இலட்சத்திற்கும் மேல் அனைத்தும் தனிமனிதரான அண்ணன் சக்திவேல் அவர்கள்தான்.

    கோடிகோடியாய் மூட்டைகட்டி மூவாயிரம் தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைக்கும் இந்த மண்ணில்தான் இவர் போன்ற நல்லவர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இவ்வளவு தாராள மனம் கொண்ட அண்ணன் சக்திவேல் அவர்கள் பணத்தில் கோடீஸ்வரர் கிடையாது.  திருமயத்திலும் சிங்கப்பூரிலும் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். தனது தொழில் மூலம் ஈட்டும் வருவாய் அனைத்தையும் தான தர்மங்களுக்கே செலவிடுகிறார்.

    வருடந்தோறும் மாணவர்களின் கல்விக்கும் இலக்கியத்திற்கும் முண்டாசு கவிஞர் பாரதியார்  பிறந்தநாளில் திருமயத்தில் மிகப்பெரிய விழா எடுத்து தங்கநாணயங்களையும் பணமுடிப்பையும் கல்வி உதவித்தொகையும் நோட்டு புத்தகங்கள் மற்றும் எண்ணற்ற பரிசுப்பொருள்களையும், பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப் பொருள்களையும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அண்ணன் சக்திவேல் அவர்களுடன் எனக்கு நட்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் பட்டிமன்ற பேச்சாளர் அண்ணன் கோ.வள்ளியப்பன் அவர்கள்தான்.

     வள்ளல் குணம் கொண்ட அண்ணன் சக்திவேல் அவர்களின் பேரும் நல்ல குணமும் மண்ணில் நீங்காது நிலைத்திருக்கும் என்று மனசார வாழ்த்தி மகிழ்கின்றேன்.

Monday, 20 February 2017

அப்பாவின் வேட்டி கவிதை நூல்

           புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம் 36வது கூட்டம் 19.02.2017 ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது.  அதில் என்னால் விமர்சனம் செய்யப்பட்ட நூல் குறித்து...

நூல் விமர்சனம் :-

"அப்பாவின் வேட்டி " (கவிதை நூல்) - கவிஞர் பொம்பூர் குமரேசன்.

ஆசிரியர் முகவரி :
154 ஈ-1
நாயக்கர் தோட்டம்,
பூசாரி பாளையம்,
கோயம்புத்தூர்  - 641003
தொடர்பு எண் :9976775637

வெளியீடு :நறுமுகை
29/35,தேசூர்பாட்டை,
செஞ்சி -604202
விழுப்புரம் மாவட்டம்
தொடர்பு எண் : 9486150013

பக்கங்கள் :96
விலை :75
முதற்பதிப்பு :மே 2016

    வளர்ந்து வரும் இலக்கிய உலகில் கவிதைகளின் பங்கு மிக முக்கியமானது. "கவிதைகளில் நல்ல கவிதை, கெட்ட கவிதை என்று கிடையாது. பொதுவாக இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடிய கவிதைகள் அனைத்துமே நல்ல கவிதைகள்தான் ." கவிஞர் பொம்பூர் குமரேசன் அவர்களின் "அப்பாவின் வேட்டி " கவிதை நூல் இந்த சமூகத்திற்கு பயன்படக்கூடிய மிகச் சிறந்த நூல்.

    இன்று பொறியியல் மாணவர்களைப் போல் கவிஞர்களும் பெருகிவிட்டார்கள். கவிதைகளின் நடையும் பலவிதமாக மாறிவிட்டது. ஆண்டுதோறும் தமிழுக்கு எண்ணற்ற நூல்கள் புதிதுபுதிதாக வந்து மகுடம் சூட்டத் தொடங்கி விட்டனர்.

   "எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு - இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன், நமது தாய்மொழிக்கு புதிய உயிர் தருவோனாகின்றான் " என்பார் முண்டாசு கவிஞர் பாரதியார்.  அந்த வகையில் இந்நூல் எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளக்கூடிய நூலாக வெளிவந்து இருப்பது பாராட்டுக்குரியது.

   "ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக எழுதி குவிப்பது அல்ல படைப்பு.  நிறைய எழுதுவதல்ல மன நிறைவாக எழுதுவதுதான் படைப்பு "என்பார் புதுக்கோட்டை பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் முத்துநிலவன் அவர்கள்.  கவிஞர் பொம்பூர் குமரேசன் அவர்கள் மன நிறைவாக எழுதியிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

    "கருப்பும் ஆட்சிக்கு வரும்
     இன்று அந்தியிலும்
     நாளை ஆப்ரிக்காவிலும்...!"

        இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் எழுதிய இந்தக் கவிதையினை இன்றும் இயக்குநர் பாரதிகிருஸ்ணகுமார் அவர்கள் பல மேடைகளில் தனக்கு பிடித்தமான கவிதை என்று சொல்லி வருவது அந்தக் கவிதையின் எளிய நடையும் எல்லைதாண்டிய சமூக பற்றும்தான் காரணம்.

    இந்த கவிதை நூலில் அப்படி குறிப்பிட்டு சொல்லும் வகையில் எண்ணற்ற கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இந்நூல் அப்பாவைப் பற்றிய நூல் என்றபோதும் சமூகம் சார்ந்த படைப்புகளையும் பதிவு செய்துள்ளார் கவிஞர்.

    வீட்டுக்கணக்கு என்ற
கவிதையில்....

"எல்லாக்
கணக்குகளையும்
சரியாகப் போடும்
அப்பா..

வீட்டுக்
கணக்கை மட்டும்
தப்புத்தப்பாய்
போடுகிறார்..

அம்மாவின்
முந்தானை
கண்ணீர் சொட்ட.......

  என்று மிக அழுத்தமாக அதன் வலிகளை உணர்த்தி நம் கண்களையும் கலங்கச் செய்துவிடுகிறார் கவிஞர்.

  அப்பாவின் வேட்டி என்கிற கவிதையில் ...

அப்பா
அடிக்கடி சட்டை மாற்றம்
அரசியல்வாதி அல்ல ....

அன்றாடம் கசக்கிகட்டும்
விவசாயி....

    என்று ஊழல் அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி கொடுக்கிறார். மேலும்
 
அப்பாவின் வேட்டியில்
தெரியும் வானம்
அதையும்
மறைத்து மறைத்துக்கட்டிக்
காப்பார் மானம் ...
..............
..............
..............
..............,,,
ஒருநாள்
அப்பாவின் வேட்டி
அதிகம் கிழிந்து போக...

ஒரு துண்டு
சாமி துடைக்கவும்...
ஒரு துண்டு
சாணம் மொழுகவும்
ஒரு துண்டு
கரித்துணியாகவும்
ஒரு துண்டு
கோவணமாகவும்
மாறிப்போனது...

எதற்கும் கவலைப்
படுவதில்லை அப்பா....

       என்று கண்ணீர்த்துளிகளால் நம்மை நிறைத்துவிடுகிறார் கவிஞர். இந்தக் கவிதையை வாசிக்கும் அனைவருக்குள்ளும் அவரவர் அப்பா மிக உயர்ந்த இடத்தில் வந்து போகிறார் என்பதை காணலாம்.  அப்பாவை நேசிக்காதவர்களும் இனி நேசிக்கும்படி செய்துவிடுகிறார் கவிஞர். எந்த அப்பாக்களும் தனக்கென எதுவும் தனியாக செய்து கொள்வது கிடையாது. 

   "இன்று பெரும்பாலான அப்பாக்கள் தாயுமானவராக இருப்பதை காண்கிறேன் " என்று அவ்வப்போது சொல்லுவார் பெண்ணியக்கவிஞர் மு.கீதா அவர்கள்.

    இன்று பெற்றோரைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே இத்தேசத்தில் சிட்டுக்குருவிகள் மீதும் அப்பா அக்கறை கொண்டதாக குறிப்பிடுகிறார்.

"வயலிலிருந்து
வந்தால் அப்பா
விளைந்த நெற்கதிர்களை
எறவானத்தில் கட்டுவார்...

சிட்டுக்குருவி
சின்னது
சின்னதாய்ப் பறந்து
கொத்தித் தின்னும் ....

   என்று குறிப்பிடுகிறார் கவிஞர்.  இந்த இடத்தில் அப்பா முண்டாசு கவிஞர் பாரதியாக வந்து போகிறார்.

   சைக்கிள் கவிதையில்....

பின்பக்க மட்காட்டில்
சாயம் போன ஹெர்குலஸ்
உலகத்தையே தூக்கித்
தோளில் வைத்து நிற்பார்
வெற்றிப் பெருமிதத்தோடு ...

அப்பாவும்
தூக்கித் தூக்கிப் பார்க்கிறார்
குடும்பத்தை நிமிர்தவே
முடியவில்லை ....

        என்று சொல்லும் போது அப்பா வீட்டுக்காக எவ்வாறு உழைத்து தேய்ந்து போகிறார் என்பதை உணர முடிகிறது. அப்பாவைப் பற்றிய கவிதைகள் ஏராளம் என்றாலும் பொதுவான படைப்புகளும் குவிந்து கிடக்கின்றன.

  மணல் கொள்ளை பற்றி கவிஞர் இவ்வாறு கூறுகிறார்....

  புதைத்தல்..... என்கிற தலைப்பில்

மாண்டுபோன
மனிதனை
ஆற்றங்கரையில்
புதைக்கிறார்கள்...

மணல் அள்ளி
ஆற்றை
வீட்டில்
புதைக்கிறார்கள்....

என்கிறார் கவிஞர். இந்தக் கவிதை வரும் காலங்களில் பலராலும் பேசப்படக்கூடிய கவிதையாக வரும் என்பதில் ஒருபோதும் ஐயமில்லை.

கவிஞர் பொம்பூர் குமரேன் அவர்கள் தீண்டாமை பற்றியயெல்லாம் மிக உருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

மிகச் சிறப்பான கவிதை நூல்தான் மறுப்பதற்கில்லை என்றபோதும் சில இடங்களில் உரைநடையும் உறவாடுகிறது. அந்த இடங்களில் வார்த்தைகளை சற்று திருப்பி போட்டாலே இன்னும்  மிகச் சிறந்த படைப்பாக வந்துவிடும். அதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். நூலை வாசிக்கின்ற பொழுது பிடித்த கவிதை அருகே ஒவ்வொரு காகிதமாய் வைத்துக்கொண்டு வந்தேன். வாசித்து நிறைவு செய்த பிறகு பார்க்கிறேன் அனைத்துப் பக்கங்களிலும் காகிதம் வைக்கப்பட்டிருந்தது. அப்படியானால் நூல் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை நீங்களும் வாசித்து பார்த்தால் நிச்சயமாக உணர்வீர்கள். உங்கள் வீட்டு புத்தக அலமாரியில் "அப்பாவின் வேட்டி " யும் இடம் பெற வேண்டிய நூல். கவிஞர் பொம்பூர் குமரேசன் அவர்கள் மேலும் நூல்கள் பல படைத்து களப்பணியாற்றும்படி மனசார வாழ்த்தி பாராட்டி மகிழ்கின்றேன்.

      - நட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை
பேச : 9788210863

Monday, 13 February 2017

கண்ட கண்ட பொண்ணுகயெல்லாம்...

காதலைக் கொண்டாடுவோம்......

கண்ட கண்ட பொண்ணுகயெல்லாம்
என்னப் பார்த்து கண்ணடிக்க
அதனால கறுத்துப்போனேன்
ஆசை சுந்தரி
நீ மயக்கம் தெளிஞ்சு மலர வேணும்
இப்ப எந்திரி.....!

செம்மண் புழுதியில சீவி சிரிச்சு மினுமினுக்க
சிவப்பு சேலை கட்டிப்போன
செங்காந்தள் மலரே உன்ன
இறுக அணைக்கவா
அணச்சு முத்தம் கொடுக்கவா....!

களைக்கொத்து புடுச்சு புடுச்சு - உன்
ரேகை எல்லாம் அழிஞ்சுருச்சு
நீ வெதச்ச கடலை மட்டும்
விவரமாக வெளஞ்சிருக்கு
நானும் கூட கறுப்புதானடி - நீ
எனக்கு ஏத்த எடுப்புதானடி....!

தலையில உருமாகட்டு
அதுக்கு மேல புல்லுக்கட்டு
என்னை நீ மல்லுக்கட்டு
ஏத்த இடம் ஜல்லிக்கட்டு
நீயும் கணக்கு பண்ணி பாரு
இப்ப கண்ண விழிச்சு கூடு....!

நம்ம ஊரு சாமியத்தான்
நல்லா நீயும் உத்துப்பாரு
விளக்கு வச்சு பார்த்தால் கூட
சிவக்கலையே கறுத்த பெண்ணே
அதுக்கு இந்த கறுப்பு
பரவாயில்லை ஏத்துக்க
உன் மாராப்பாய் என்னைத்தானே போத்திக்க...!

அஞ்சடி கூந்தல்காரி
அரப்பு போட்டு நானும்  குளிச்சேன்
அப்பவும் உன்ன பார்த்து மிரண்டு
இப்ப போனதடி சுருண்டு
என் ஆசையெல்லாம் திரண்டு
வர பண்ணுறீயே முரண்டு....!

இன்னும் மயக்கம் தெளியலையா
இந்தக் கறுப்பு பிடிக்கலையா
என்ன விட நீயும்
அட கொஞ்சம் தான்டி சிவப்பு
அதுக்கு ஏண்டி இப்படி நீயும்
செய்யுறீயே முறைப்பு....!

     - சோலச்சி புதுக்கோட்டை

Friday, 10 February 2017

அவரும் வேணாம் இவரும் வேணாம்...

அவரும் வேணாம் இவரும் வேணாம்
ஆள விடுங்கடா...
எங்கள ஆள விடுங்கடா
உங்க ஆட்டத்த ஒடுக்க வந்த
மனுசன் நாங்கடா.....!

எத்தனை நாளைக்கு நாங்க
குனிஞ்சே இருக்கது
இன்னும் எத்தனை காலம் தான்
எங்கள பிழிஞ்சு சாறு எடுப்பது...
முதுகெலும்பு இல்லாத மண்புழுவா
இனி மோதிப்பாரு
உசுர எடுக்கும் பாம்பு நாங்கடா.....!

எச்சி சோறு போட்டா
ஓடிவரும் நாயி இல்லடா..
உங்க இடுப்பு எலும்ப முறிக்கும்
எங்க ஓட்டுதானடா...
இனி வேசமெல்லாம் நிலைக்காதுடா
தொகுதிக்குள் வந்து பாரு
துரத்தி அடிச்சு நொறுக்க துணிஞ்சுட்டோம்.....!

விரலைக்காட்டும் வித்தையெல்லாம்
சொத்தைதானடா...
வெறும் கோசம் போட்ட நாங்க இப்ப
உங்க கூட இல்லடா....
இனி நீங்கதானே உங்களுக்கு
போஸ்டர் ஒட்டனும்
மறுத்து மொறச்சு பார்த்தா
சீக்கிரமா நடையக்கட்டனும்....!

சாராயம் பொட்டலத்துக்கு
சாய மாட்டோம் ...
சத்தியமா எங்க நாட்ட இனி
ஆள வந்துட்டோம்...
உழைப்பாளி இல்லாத தேசம் இல்லையே
இனி நாட்ட பாரு
எங்க அரசியலால் ஒளிரப் போகுது....!

   - சோலச்சி புதுக்கோட்டை