Friday, 24 March 2017

வாரந்தோறும் வியாழன் வெள்ளி

நீண்ட நாளாய் பதிய வேண்டும் என நினைத்த பதிவு .......

   எம் பள்ளியில் (ஊ.ஒ.ஆ.பள்ளி, மரிங்கிப்பட்டி. அன்னவாசல் ஒன்றியம், புதுக்கோட்டை ) ஒவ்வொரு வியாழனும் மதியம் விளையாட்டு விழா,  ஒவ்வொரு வெள்ளியும் மதியம் இலக்கிய விழா. மதியத்திற்கு  மேல் பாடப் புத்தகப் பயன்பாடு கிடையாது. இலக்கிய விழாவில் மாணவர்களே தலைமை ஏற்று தொகுத்தும் வழங்குவார்கள்.

  
இன்றைய நிகழ்வில் மாணவர்கள் தாங்களாகவே கவிதை வடிவில் பேசியும் அவர்களே தயார் செய்து பாடலும் பாடினார்கள். கதை சொல்வது, நகைச்சுவை, தனி நடிப்பு என பலதரப்பட்ட நிகழ்வுகள் இருக்கும். மாணவர்களுக்கு எது தோன்றுகிறதோ அதைச் செய்து காட்டுவார்கள்..

மாணவர்கள் பாடிக்கொண்டு நடனமாடும் காட்சி....

Thursday, 23 March 2017

பத்து மாசம் சுமந்ததுமே........

////......பத்து மாசம் சுமந்ததுமே......////

பத்துமாசம் சுமந்ததுமே தப்புதான் - நம்
பாவங்களை ஒழிப்துமே எப்பதான்

கண்ணைக்கட்டி காத்துலதான் பறக்கிறோம்
கண்டபடி வாழ்க்கையத்தான் கெடுக்கிறோம்

இது நன்றி கெட்ட உலகமடா
தெருநாய்களாக தெரியுதடா.....

கண்டதையும் சாலையில் போட்டு எரிக்கிறோம்
கண் எரிச்சல் முகத்தை மூடி தவிக்கிறோம்

மார்கழி கடைசியிலே போகி என்பதோ
மனதில் மாசுகளை எரித்து விடுவது...

மண்ணில் புகைவதுமே நாளும் தொடருது
மனுசன் ஊழலுமே நல்லா வளருது....

சுயநலமே கோலோச்சி நிற்குது - அதை
தோற்கடிக்க சோலச்சி பாட்டு அழைக்குது

விரோத செயல்களைத்தான் வேரறுக்க வேணுமடா
துரோகம் செய்வோரெல்லாம் தெரு நாய்கள் தானடா...

கண்ணை மூடி காதைப் பொத்தி நடப்பதால்
குற்றங்கள் எல்லை மீறுதடா....

வெள்ளை வேட்டி சட்டையைப்போல்
மனசு இருக்கனும் வேகம் கொண்டு
நியாயம் கேட்க உள்ளம் பறக்கனும்

பிறர் குடியை கெடுப்பதிலே உந்தன் மகிழ்ச்சியா....

நீ மட்டும் வாழ்ந்தால் இங்கே நிலையும் வேறடா
முடிவில் கொண்டு போவது எனனனு கூறடா......!!!

       - சோலச்சி புதுக்கோட்டை

Wednesday, 22 March 2017

"தேவதைகளால் தேடப்படுபவன்

**தேவதைகளால் தேடப்படுபவன்**
               - கவிஞர் தங்கம் மூர்த்தி.
              
             கவிதை நூல்

       சோலச்சியின் பார்வையில்..........

   தேவதைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதுக்கோட்டை  கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களால் படைக்கப்பட்ட நூல்தான் "தேவதைகளால் தேடப்படுபவன் ". நிகழ்கால சமூகத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. அவரவர் வாழ்க்கையை வாசிக்கும் போதே உணர வைக்கிறார் கவிஞர்.

" இப்போது
மங்கலாய்த் தெரிகிறதெனக்கு
அம்மா இல்லா
இவ்வுலகு.....!!!

        என்று தனது தாய்க்கு நூலை சமர்ப்பணம் செய்து தொடங்குகிறார்.

    தமது கருத்துகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை வாசிப்போருக்கு புரியும் நடையில் இருக்கும்போதுதான் அவை வெற்றி பெறுகின்றன.  கவிஞர் அவர்கள், வெற்றி பெற்ற கவிதைகளையே படைத்துள்ளார்.

"இருள்
நழுவி விலகி
நிலவுக்குப்
பாதையமைக்கிறது.......
..........,,,
...........,,,
"அப்போது
பூமியெங்கும்
பூத்திருந்தன
நிலவுகள்...!!"

  என்று நிலவு பூக்கும் பூமி என்கிற தலைப்பில் தமது நிலவினை பூமியெங்கும் பூத்துக்குலுங்கச் செய்கிறார்.

   சொற்களைப் பற்றிச் சொல்லும்போது தமது சொல்லாடலை அழகாக நடனமாடச் செய்திருக்கிறார்...

"சூடேற்றும் தருணத்திற்காகத்
தவமிருக்கின்றன
எல்லாச் சொற்களும்....!"

    எவ்வளவு ஆழமான ஆய்வு என்பதை நம்மால் உணர முடிகிறது. மிகப்பெரிய இயந்திரங்களைக்கூட கையாளுவது எளிது. ஆனால் சொற்களை எல்லோராலும் கையாள முடியாது. சொற்களின் வித்தையை கற்றறிந்தவர்களால் மட்டுமே இது சாத்தியமாகும்.

   ஒவ்வொரு மனிதனும் தன்னிலை உணர்வதில்லை.  பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமே தன்னை உணராததுதான். இதுதான் வாழ்க்கை என்று உணர்ந்து விட்டால் எல்லாம் இன்பமயமாகிவிடும். எல்லோருக்குமான வாழ்க்கை மரணத்தின் அருகில்தான் உணர வைக்கிறது. கவிஞர் அவர்கள் மெய் உணர்தல்  என்கிற கவிதையில்

"நன்றாய்
வாழ்ந்ததைப் போலிருக்கிறது
என்றோ
செத்ததைப் போலவும் இருக்கிறது..."

  இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையை நமக்கு உணர வைக்கிறார்.

  கவிஞர் அவர்கள் தனது பலமாக கருதுவது எது தெரியுமா .....

"ஒருவேளை
சாத்தான்களை
சந்திக்க நேர்ந்தால்
உன்
புன்னகையைக் கொண்டே
விரட்டுகிறேன் ...!

   என்கிறார்.  ஆனால் நாம் சிரிக்க மறந்து சீரழிந்து கொண்டு இருக்கிறோம். புன்னகைதான் வாழ்க்கையின் வழித்துணை. இருப்பதில் இருந்து புன்னகையை கண்டறிய வேண்டும். எந்தக் கடைதனிலும் விலைக்கு கிடைக்காது புன்னகை.  அந்த புன்னகையால் நட்பு வட்டத்தை பெருக்கவும் முடியும். சாத்தான்களை விரட்டி அடிக்கவும் முடியும்.
  
  திருவிழாக்கள் எதற்கு கொண்டாடுகிறோம் என்று தெரியாமலேயே திருவிழாக்களை கொண்டாடி வருகின்றோம். ஊர்த்திருவிழாக்களின் கடைசி நிகழ்வாக மஞ்சள் நீராடுதல் என்ற நிகழ்வு நடக்கும். திருவிழா காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பலதரப்பட்டவர்களும் கூடியிருப்பார்கள். எந்தவிதமான நோய் தாக்குதல்களும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கிருமிநாசினியான மஞ்சளை நீரில் கலந்து நீராடினார்கள் நம் முன்னோர். ஆனால் இன்று வண்ணப் பொடிகளை தூவி விளையாடிக்கொண்டு இருக்கிறோம்.

திருவிழாக்களைப் பற்றி கவிஞர் இவ்வாறு கூறுகிறார் ....

  "குழந்தைகளைக் கண்டதும்
குதூகலத்துடன்
துள்ளுகின்றன
திருவிழாக்கள்...."
    
என்கின்றார். திருவிழாக்கள் மூலம் ஏதோவொரு வகையில் நம் மகிழ்ச்சியாக இருந்தாலும்,  குழந்தைகளால்தான் திருவிழாக்களே மகிழ்ச்சியாக இருக்கின்றன என்கின்றார். கவிஞர் அவர்கள் இந்த இடத்தில் குழந்தைக் கவிஞராகவே மாறியிருக்கிறார்.

   எல்லோராலும் கொண்டாடப்படக்கூடிய கவிதை இது. எல்லோரது வாழ்க்கையிலும் கூடவே வரக்கூடிய கவிதை. நாய்கள் பற்றிய கவிதை.

"நாய்களைப் பற்றிய
கவிதைகள் பெரும்பாலும்
நாய்களைப் பற்றியதாய்
இருப்பதில்லை ....
......,,,
......,,,
எங்கள் தெருவில்
வேலைவெட்டியின்றித்
திரிகின்றன
பல நாய்கள்...
....,,,
.....,
என் எலும்புத் துண்டுகளை
கடித்து
என்னையே கடிக்க
முனைகின்றன.....
.....,,,,
.....,,,
நாய்களோடு வாழவும்
பழகிக்கொள்ள வேண்டியிருக்கிறது ....

நாய்களைப் பற்றிய
கவிதைகள் பெரும்பாலும்
நாய்களைப் பற்றியதாய்
இருப்பதில்லை ....!

  இப்போது புரிந்திருக்குமே..... எல்லோருக்கும் ஏற்ற கவிதையிது. இனி நாய்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய தொடங்கலாம். நான் நாய்கள் என்று சொன்னது நாய்களை இல்லை.

   "எம்முறையிலும்
வேறெவ்வகையிலும்
எதுவொன்றும்
செய்ய முடியாது என்னை...

காரணம் நான்
தேவதைகளால் தேடப்படுபவன்.."

  என்று கவிதையொன்றில் குறிப்பிடுகிறார். தன்னம்பிக்கை இழந்து பலவீனமாய் இருப்போர் இதை வாசிக்க நேர்ந்தால் அவர்களுக்குள் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும். தன்மீது நம்பிக்கை உள்ளோருக்கு தன்னுள் மேலும் சக்தி அதிகரிப்பதை உணர முடியும்.
   
     மற்றவர்களை பார்த்து பார்த்து பொறாமை கொண்டு தம்முடைய வாழ்க்கையை பலரும் வாழாமலேயே செத்துவிடுகிறார்கள். இன்று முகத்துதி பாடுவது அதிகரித்துவிட்டது. "இருவேறு சிரிப்புகள் " என்ற கவிதையில் முகத்துதி பாடுவதை மிக அழகாக நயம்பட சொல்லியிருப்பார் கவிஞர்.

    ஒசைகளும் சத்தங்களும் என்கின்ற கவிதையில்

"எங்கெங்கு கேட்பினும்
மௌனங்களை மிதிக்கும்
மரணச்சத்தம்...."

  என்று இயற்கைக்கு முரணான வாழ்க்கை மீது வெகுண்டெழுந்து வேதனைப் படுகிறார் கவிஞர்.

    "நடைப்பயிற்சி செலவோரில்
பலரும்
நடைப்பயிற்சி செய்வதில்லை
நான் உள்பட...."

   என்று ஒரு கவிதையில் குறிப்பிடுகிறார். என்ன என்று ஆச்சரியமாக இருக்கிறதா...!! நூலை வாங்கி நீங்களே வாசித்து பாருங்கள். உண்மை புரியும்.

     இன்றைய அரசியலைப் பற்றி குறிப்பிடும் பொழுது...

"மனுக்களை வாசித்து
கண்ணீரால்
ததும்புகின்றன
குப்பைத் தொட்டிகள்....!

  உண்மை தானே கவிஞர் குறிப்பிடுவது.

      சமூகம் சார்ந்து, காதல் சார்ந்து என்று ஒவ்வொருவரது வாழ்க்கையையும் கவிதையாக படைத்திருக்கும் இந்த "தேவதைகளால் தேடப்படுபவன் " கவிதை நூல் எல்லோரது கைகளிலும் தவழ வேண்டிய நூல். தமிழ் கூறும் நல்லுலகம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை மேலும்மேலும் கொண்டாடி மகிழும் என்பது திண்ணம். இதுவே எனது எண்ணம்.

  நூல் ஆசிரியர் : கவிஞர் தங்கம் மூர்த்தி
புதுக்கோட்டை

பேச : 9443126025

பக்கங்கள்: 72

பதிப்பு :டிசம்பர் 2016

விலை  :ரூபாய் 60/-

நூல் வெளியீடு :

படி வெளியீடு
கே.கே.நகர் மேற்கு,
சென்னை  - 600078
(பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்‌)
பேச : 8754507070

          அன்பு பண்பு பாசம்
   
நட்பின் வழியில் எந்நாளும்

       சோலச்சி புதுக்கோட்டை
       பேச : 9788210863

Sunday, 19 March 2017

19.03.2017 சென்னை ஆவடி முத்தமிழ் மன்றத்தில் ....

       19.03.2017 ஞாயிற்றுக்கிழமை  மாலை சென்னை ஆவடி ଞதிண் ஊர்தி மற்றும் இயக்கித் தொழிலகத்தின் முத்தமிழ் மன்றத்தில் எழில் இலக்கிய பேரவையின் உலக மகளிர் தினம் மற்றும் நூல் வெளியீட்டு விழாவில் தோழர் கவிஞர் பொன்.கலைச்செல்வி தலைமையில்  கவிதை வாசித்தபோது....

  நிகழ்ச்சியில் தோழர் கவிஞர் ஈரோடு தமிழன்பன், பாவேந்தர் பாரதிதாசனின் மகள்வழி பேர்த்தி தோழர் கவிஞர்  மணிமேகலை குப்புசாமி,  தோழர் கவிஞர் அமுதா பாலகிருஷ்ணன்,  தோழர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    தோழர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி மற்றும் தோழர் கவிஞர் மணிமேகலை குப்புசாமி இவர்களின் நூல் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் நல்லதொரு வாய்ப்பினை வழங்கிய போற்றுதலுக்குரிய புலவர் எழில் சோம.பொன்னுசாமி அவர்களுக்கும் கவிஞர் களக்காடு முனுசாமி,  கவிஞர் பொன்.இனியன் மற்றும் கவிஞர் தங்க ஆரோக்கியதாசன் உள்ளிட்ட தோழர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நட்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை

Thursday, 16 March 2017

அழைப்பிதழுக்குள் பணம் .....

வியக்கிறேன்.......

     அன்றொருநாள் மாலை நேரம்  , என் அப்பா எனக்கு வந்த கடிதங்களை மேசையில் வைத்திருப்பதாகச் சொன்னார்.  வழக்கம் போல் கடிதங்கள் மற்றும் மாத இதழ்களை புரட்டிப் பார்த்தேன். அதிலொன்று திருமண அழைப்பிதழ். அந்த திருமண அழைப்பிதழ் பசை வைத்து ஒட்டப்பட்டிருந்தது. பிரித்துப் பார்த்தால் உள்ளே ஐம்பது ரூபாயில் ஒன்று இருபது ரூபாயில் ஒன்று பத்து ரூபாயில் ஒன்றும் என மொத்தம் எண்பது ரூபாய் இருந்தது. எனக்கு ஒரே வியப்பு ..... திருமணத்திற்கு வரச் சொல்லி பணமும் அனுப்புவார்களா என்று.....! அதில் உள்ள முகவரியைப் பார்த்தால் கோயம்புத்தூர் என்று இருந்தது. அந்த அழைப்பிதழ் எனக்கு பழக்கமானவர்களாக இல்லை.  தங்களன்புள்ள என்ற இடத்தில் இருந்த அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் , அவர்களுக்கு யாரென்றே தெரியவில்லை.  மேலும் பணமும் அனுப்பவில்லை பத்திரிக்கையும் அனுப்பவில்லை என்றார்கள்.  யாரோ.... என்று நானும் விட்டுவிட்டேன் ... இரண்டொரு நாள் கழித்து கோயம்புத்தூரில் இருந்து  தோழர் அகிலபாரதி (பார்த்தது கிடையாது)  என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். எனது முதல் பரிசு நூல் குறித்து நீண்ட நேரம் பேசினார்.  பேச்சின் இடையில் கோயம்புத்தூரிலிருந்து யாரோ ஒருவர் எனக்கு திருமண அழைப்பிதழில் ரூபாய் எண்பது அனுப்பி இருந்தார்கள் யெரென்று தெரியவில்லை தோழர் என்றேன். உடனே, அவர் நான்தான் தோழர் என் அப்பாவிடம் சொல‍்லி உங்கள் முதல் பரிசு நூலுக்கு பணம் அனுப்பச் சொன்னேன். அவரோ எங்கள் உறவினரின் திருமண பத்திரிகையில் வைத்து அனுப்பியதாக சொன்னார்.  நானும் உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் என்று அந்த அழைப்பிதழின் முகவரியை சொல்ல ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு மாற்றுதிறனாளி என்பது பிறகுதான் தெரியும்.  நான் நட்புக்காகத்தானே அனுப்பினேன் என்று சொல்ல, நானும் நட்புக்காகத்தான் என்று பதிலுரைத்தார்.  இலவசமாக நூலினைப் பெறக்கூடாது என்பது அவரது கொள்கையாம்... இவர்களால்தான் எழுத்தாளர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

        11.03.2017 சனிக்கிழமை மாலை எங்கள் அய்யா கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு "சோலச்சி எங்க இருக்கீங்க. திண்டுக்கல்லுக்கு ஒரு நிகழ்ச்சிக்கு போனேன். தோழர் வீரகடம்ப கோபு வுக்கு உங்க நூல அனுப்பி இருந்தீங்களாமே.....அவரு என்னப் பாத்து நானுத்தம்பது ரூபா கொடுத்து விட்டுருக்காரு. குடுமியான்மலைக்கிட்ட தானே வீடு,  அதுவழியாத்தான் காருல வந்துக்கிட்டு இருக்கேன் வாங்கிக்கிருங்களா... என்றபோது நெகிழ்ந்து போனேன். ஓர் படைப்பாளனை வாழ வைப்பது என்பது அவனது எழுத்துகளை  எல்லோரிடமும் கொண்டு செல்வதும் அவன் வீழ்ந்துவிடாமல் தாங்கி பிடிப்பதும்தான். இவர்கள் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் நான் இறப்பதற்குள் ஓராயிரம் நூல்கள் எழுதி குவித்துவிடலாம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.  என் எழுத்து பொருளாதர அளவில் இலாபம் பெற வேண்டும் என்பதல்ல. என் எழுத்து பொருளாதாரத்தால் முடங்கி விடக்கூடாது என்பதுதான். பணத்துக்காக படைப்பவன் நானில்லை.

   எத்தனையோ எழுத்தாளர்கள் வயது கடந்தும் நூல் வெளியிட முடியாமல் பொருளாதாரத்தால் முடங்கி கிடக்கிறார்கள்.......

  எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்தும் கரம் பிடித்து தொடரும் தோழர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    களம் காண்போம்
    கரம் கொடுப்போம் .....!!!!

    - சோலச்சி புதுக்கோட்டை

   

Wednesday, 15 March 2017

இணையத்தில் சோலச்சியின் நூல்கள்...

        ஆதரவு தர வேண்டுகிறேன்

             மகிழ்ச்சியான செய்தி....
    வணக்கம் தோழர்களே....

     எனது "முதல் பரிசு " சிறுகதை நூலும் "காட்டு நெறிஞ்சி " கவிதை நூலும் தற்போது இணையத்தின் மூலமாக வாசிக்கவும் வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் ஆதரவு தரும்படி மகிழ்வுடன் கேட்டுக்கொள்கிறேன்.  இணையத்தில் எனது நூலினை கொண்டுவந்த தோழர் பத்மநாபன் மற்றும் அவர் சார்ந்த தோழர்களுக்கும் எங்கள் அய்யா கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இணையத்தில் வாங்கி வாசித்துவிட்டு தங்களது கருத்துகளை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கீழ்காணும் இணைத்தில் எனது நூல்கள் கிடைக்கும்.

    நட்பின் வழியில்
  சோலச்சி புதுக்கோட்டை

இணையம் : WWW.pustaka.co.in

Tuesday, 7 March 2017

சோலச்சி என்பது யார்.....?

சோலச்சி என்பது யார்........?????

மகளிர் தின நல்வாழ்த்துகளை மனசார தெரிவித்துக் கொள்கிறேன்.....

வணக்கம் தோழர்களே.....

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் ....

என் இயற்பெயர் தீ.திருப்பதி.

சோலச்சி என்பது யார்......?

  இதற்கான விளக்கத்தை எனது "முதல் பரிசு " சிறுகதை நூலில் என்னுரையில் பதிவு செய்துள்ளேன்.

    நான் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது எனக்கு அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள்.

    என் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல்  ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில்  வாடி வதங்கிய காலம் அது. அப்போதுதான் என் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களிடம் தஞ்சம் அடைந்தேன். , .மறுக்காமல் எங்கள் வறுமை நிலையை போக்கியதோடு மாலை நேரம் அவர் வீட்டில் வந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

     நான் என் ஆசிரியர் வீட்டுக்கு சென்ற போது என்னைப்போல் ஏராளமான ஏழை மாணவர்கள் படித்துக் கொண்டு இருந்தனர். ஆங்கிலம், கணக்கு,  அறிவியல் சொல்லிக் கொடுப்பார்கள். நானும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டேன்.

    அன்று அவர்கள் எனக்கும் எங்கள் குடும்பத்திற்கும் அரிசி,காய்கறிகள்,  மளிகைசாமான், சமைக்கப் பாத்திரம், நாங்கள் உடுத்திக்கொள்ள துணிமணிகள்,  கைச்செலவுக்கு பணம் இன்னபிறவும் கொடுத்து உதவவில்லை என்றால் என்படிப்பும் பாதியில் நின்றிருக்கும். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் எழமுடியாமல் இருந்த என் தாயைக் காப்பாற்றவும், என் தந்தை மற்றும் தங்கையைக் காப்பாற்ற என் அண்ணனோடு (கவிஞர் புதுகை.தீ.இர) பிழைப்பு தேடி அப்போது அலைந்திருப்பேன்.

   பன்னிரெண்டாம் வகுப்பு வரை நான் படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். அவர்கள் நீட்டிய அந்த உதவிக்கரம் , நான் மேல்படிப்பு (ஆசிரியர் பயிற்சி) படிக்கும் வரை அவர்களைப் போலவே  பேராசிரியர் பெருமக்களும் உதவிக்கரம் தந்தார்கள்.

  ஆசிரியர் பயிற்சி புதுக்கோட்டையில் (2000-2002) பயின்ற காலத்தில் போற்றுதலுக்குரிய செல்வி.நா.விஜயலெட்சுமி அம்மா அவர்கள்,  திருமதி.டி.அகிலா அம்மா அவர்கள்,  திரு.சொ.சுப்பையா அவர்கள் (தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்) , திரு.மு.மாரியப்பன் அவர்கள், திரு. நா.செல்லத்துரை அவர்கள் (தற்போது DIET முதல்வர்) , திரு.ம ராஜ்குமார் அவர்கள்,  திரு.ஜமால்நாசர் அவர்கள்,  திரு. கோ.முருகன் அவர்கள்,  திரு.டி.மாரியப்பன் அவர்கள், மற்றும் மேலான என் பாசத்திற்குரிய நண்பர்களும் உதவிக்கரம் நீட்டி என்னை ஆதரித்தார்கள்.

   என் வாழ்க்கையில் முதல் ஒளியை ஏற்றிவைத்த என் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எண்ணியபோதுதான் அவரது பெயரையே புனைப்பெயராக "சோலச்சி " என்று வைத்துக்கொண்டேன்.
     என் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள் கொடுத்த சேலையை படுத்த படுக்கையில் நோய்வாய்ப்பட்டு செயலிழந்து  கிடந்ததால் என் தாயால் கடைசிவரை அந்த சேலையை கட்டாமலேயே 2004 இல் நவம்பர் 25 ஆம் தேதி (நான் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிக்கு வந்த இருபத்தெட்டாம் நாள்) இறந்து போனார்கள். 

  எனது முதல் நூலான "முதல் பரிசு " சிறுகதை நூல் வெளியீட்டு விழா 19.08.2015 என் அண்ணன் பிறந்தநாள் அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இளைய எழுத்தாளர்களின் வழிகாட்டி எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்கள் தலைமையில் என் ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் வெளியிட்டு சிறப்பு செய்தார்கள்.

   தோழர்களே... என் ஆசிரியர் பெயரையே என் புனைப்பெயராக வைத்துக்கொண்ட சோலச்சியின் வரலாறு இதுதான்.

  கவனமுடன் இதை வாசித்த அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      நட்பின் வழியில்
   அன்பு பண்பு பாசம்
    நட்புடன் எந்நாளும்
              உங்கள்
         சோலச்சி புதுக்கோட்டை