Monday, 5 November 2018

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா - சோலச்சி

வாருங்கள் தோழர்களே....
வரவேற்று காத்திருக்கின்றேன்....

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா..!

2018நவம்பர் 24 முதல் 2018டிசம்பர் 3 வரை - புதுக்கோட்டை நகர்மன்றத்தில்...

மாலை நிகழ்வுகளின் சிறப்பு விருந்தினர்கள் :

1) எழுத்தாளர் எஸ்.ரா
2) பேச்சாளர் ஞானசம்பந்தன்
3) குன்றக்குடி அடிகளார்
4) சகாயம் ஐ.ஏ.எஸ்.
5) எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
6) எழுத்தாளர் சு. வெங்கடேசன்
7) முனைவர் சுப்பையா
8) கவிஞர். சல்மா
9) தோழர் ஸ்டாலின் குணசேகரன்
10) பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி
11) "புதிய தலைமுறை" - கார்த்திகை செல்வன்
12) கவிஞர் அறிவுமதி
13) "காக்கை சிறகினிலே" - இரா. எட்வின்
14) "இந்து தமிழ்" - மு. முருகேஷ்
15) "பூவுலகின் நண்பர்கள்" - சுந்தர்ராஜன்

வாருங்கள் தோழர்களே....
புத்தக மழையில் நனைந்து
சொற்பொழிவுகளில் மூழ்கி
சங்கமிப்போம்.....
        நட்பின் வழியில்
               சோலச்சி
     பேச : 9788210863

Wednesday, 24 October 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

  அன்னவாசலில் இலக்கிய விழா

அக்20. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கிய கூட்டம் நடைபெற்றது.
       புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில்  ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்  இலக்கிய கூட்டம் கோகிலா மெட்ரிக் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. இலக்கிய கூட்டத்திற்கு இலக்கிய ஆர்வலர் எம்.சி.லோகநாதன்  தலைமை வகித்தார். சிறுகதை எழுத்தாளர் சோலச்சி வரவேற்புரை வழங்கினார். கவிஞர் கு.இலக்கியனின் சாபத்திற்குள் பயணிக்கும் இரயில் கவிதை நூல்குறித்து இலக்கிய ஆர்வலர் சேக் அப்துல்லா விமர்சன உரை நிகழ்த்தினார். கவிஞர் புதுகை தீ.இர அவர்களின் வியர்வையின் முகவரி கவிதை நூல் குறித்து எழுத்தாளர் செம்பை மணவாளன் அவர்கள் விமர்சன உரை நிகழ்த்தினார். விழாவில் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பரிதி இளம்வழுதி அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும்,  அன்னவாசல் காவல்நிலையமானது பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய இடத்திலேயே அமைந்திட வலியுறுத்தியும் புத்தகங்கள் இருக்கும் வீடுகளாக மாற்றுவோம் என்ற அடிப்படையில் மாதந்தோறும் இரண்டு நூல்களாவது வாங்கி வாசிக்க செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்துவதெனவும் அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியை அன்னவாசல் கீரனூர் சாலையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
      இக்கூட்டத்தில் கவிஞர் புரட்சித் தமிழன் சத்தியசீலன், கவிஞர்.புதுகை தீ.இர, நதிகள் இணைப்பு போராளி கவிஞர் புதூர் உ.அடைக்கலம், ஆவடிக் கவிஞர் சக்திகுமார் போன்றவர்கள் கவிதை வாசித்தனர். கவிஞர் பூ.அடைக்கலம் மது ஒழிப்பு பற்றிய சமூகப் பாடலைப் பாடினார். மோகன்ராஜ், குழந்தைவேலு, குமார், கே.டி.கந்தசாமி, பா.இன்பராஜ், ஆ.கிருஷ்ணகுமார் போன்ற இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
       விழாவில் கலந்து கொண்ட கவிஞர் கு.இலக்கியன் பேசும்போது, கிராமப்புற பகுதிகளில்தான் இலக்கியம் செழித்து வளர்கிறது.  இலக்கியத்தின் பிறப்பிடமும் கிராமங்கள்தான். இந்த அமைப்பானது புதிய படைப்பாளர்களை ஊக்குவிக்கும் அரணாக விளங்குகிறது. இன்று இலக்கிய அமைப்புகள் பல இயங்கிவந்தாலும் இது போன்ற கிளைகளில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை வெளி உலகுக்கு கொண்டு வருவது அவசியமாகிறது. அன்னவாசல் கிளையின் செயலாளர் சோலச்சி சகபடைப்பாளர்களை மிகச் சிறப்பாக நேர்த்தியாக வழிநடத்தி வருவதைக் கண்டு வியக்கிறேன். எத்தனையோ இலக்கிய கூட்டங்களுக்கு சென்றிருக்கின்றேன். இருந்த போதும் இந்தக் கூட்டம் மன நிறைவாக இருக்கிறது. இன்றைய படைப்பாளர்கள் அலங்காரத்திற்காக சொற்களை குவித்து எழுதுவதை தவிர்த்து வாழ்வியலின் அனுபவங்களை துயரங்களை அதற்கான தீர்வுகளை எழுத முன்வர வேண்டும். பேனா கிடைத்துவிட்டது என்பதற்காக அனைத்தையும் எழுதக் கூடாது. இந்த சமூக வளர்ச்சிக்கு எது தேவையோ அதை உணர்ந்து எழுத வேண்டும் '' என்று கூறினார். நிறைவாக எழுத்தாளர் சோலச்சி நன்றியரையாற்றினார்.

Saturday, 13 October 2018

சாமக்கோழி - சோலச்சி

                   சிறுகதை


......சாமக்கோழி...  -சோலச்சி

''இந்தக் கூறுகெட்ட உலகத்துல காலம் போறதே தெரியமாட்டேனுது... எப்புடியாவது திங்ககெழம சந்தையில எலந்தப்பழத்த வித்துறனும். கனகுக்கு மாத்திக்கிறதுக்குக்கூட வேற பாவாடை இல்ல.  கிடைக்கிற காசுக்கு நல்ல பாவாடைய வாங்கிட்டு இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேந்துறனும். தனக்குள்ளயே பேசிக்கொண்டு கனகையும் கையில்  பிடித்துக்கொண்டு நடந்தாள் சொர்ணம் பாட்டி.

  மகன் சாராயம் குடிச்சே செத்துப் போனான். மருமக எங்கே போனாளோ இன்னைக்கு வரை தெரியல. அந்தப் பாட்டிதான் கனகை வளர்த்து வருகிறாள். அவளும் இப்போது ரெண்டாங்கிளாசு படிக்கிறாள். நல்லாப் படிச்சாலும் பிள்ளைங்க எல்லாரும் அவள தபால் பெட்டினுதான் கூப்புடுவாங்க....

  பலமுறை ஊசியால் தச்சதையே தச்சு அந்தப் பாவாடை சட்டை நஞ்சு போயிருச்சு. உதவி பண்றதுக்கும் வேற ஆளு இல்ல. சொர்ணம் பாட்டியோ எலந்தப்பழம், நாவல்பழம், கொய்யாப்பழம்னு சீசனுக்குத் தகுந்தமாறி விக்கிறாள். அதுல கெடக்கிற காச வச்சுத்தான் ரெண்டு உசுரும் வாழனும். ஒரு பாவாடை,  சட்டை கனகுக்கு வாங்கனும் என்ற ஆசை. அது இன்றைக்கு நிறைவேறும் என்ற ஆசையோடு சந்தையை அடைந்தாள் சொர்ணம் பாட்டி.

  ''என்னப்பாட்டி எலந்தப்பழம் மாரி இருக்கு. வயசான காலத்துல எதுக்கு ரொம்ப நேரம் குந்திக்கிட்டு இருக்கே. மொத்தமா வெலயச் சொல்லு நான் வாங்கிக்கிறேன்....'' என்றார் முரளி.

  ''மவராசன் நல்லா இருப்பா.. இதை எடுத்துக்கிட்டு இருபது ரூபா கொடு....''

  ''சரி பாட்டி, இந்தாங்க இருபத்தஞ்சு ரூபா இருக்கு. பேத்திக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்க...''

  ''சரிப்பா...'' கையெடுத்து கும்பிட்டாள்.

  கண்ணுல தென்பட்ட ஒரு துணிக்கடைக்குள் சென்று பாவாடை விலையை கேட்டாள். எல்லாம் நாற்பது ரூபாய்க்கு மேலதான் சொன்னார்கள்.  பல கடைகளில் ஏறி இறங்கி கால் வலித்ததுதான் மிச்சம். பொழுதும் சாய்ந்தது. '' நாளைக்கு ரொம்ப கொண்டுவந்து வித்துட்டு இந்தக் காசையும் செத்து நல்ல பாவாடை வாங்கிறனும்..'' கனகைக் கூட்டிக்கொண்டு அந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

 பாதி தூரம் சென்றவுடன் யாரோ கூப்பிடவும் திரும்பிப் பார்த்தாள். இரண்டு தடியன்கள் கத்தியோடு நின்று கொண்டு ''ஏ...கெழவு என்ன வச்சுருக்க... ஒழுங்கா கொடுக்கல குத்திடுவோம்..அது என்ன சீலையில முடிஞ்சு வச்சுருக்கே..அத அவுத்துக் கொடுடி...''

  ''சாமி... நான் பெத்த ராசாக்களா.. விட்டுடுங்கய்யா... இருபத்தஞ்சு ரூபாதான் வச்சுருக்கேன். ஏம் பேத்திக்கு சட்டை எடுக்கனும்ப்பா...'' என்று கெஞ்சினாள்.

  ''அண்ணே...அண்ணே... எங்கள விட்டுடுங்கண்ணே....''

  ''போங்கடி... இன்னைக்குப் பூரா ஒன்னுமே கெடைக்கல. விடனுமாம்ல....''சொர்ணம் பாட்டியைத் தள்ளிவிட்டு  இருபத்தஞ்சு ரூபாயை எடுத்துக்கொண்டு ஓடிப்போனார்கள் வழிப்பறி திருடர்கள்.  பாட்டியின் கனவு அப்படியே கடற்கரையில் கட்டிய மணல்வீடு போல கண்ணீரில் அரித்துக்கொண்டு போனது.

  ''எந்திரிங்கபாட்டி... '' பழைய துணியால் அவள் முகத்தை துடைத்து தூக்கினாள் கனகு. 

  ''இந்தச் சட்டையே எனக்கு நல்லா இருக்கு. இதான் எனக்குப் புடிச்சிருக்கு. பள்ளிக்கூடத்துல பாவாட சட்ட தர்றதா டீச்சர் சொன்னாங்க அதப் போட்டுக்குறேன்...''

  அவளை அணைத்தவளாய் ''எப்புடியாவது ஒரு பாவாட சட்ட எடுத்தர்றேன் தாயி....'' கண் கலங்கினாள் சொர்ணம் பாட்டி.

  அன்றிரவு முழுவதும் பாட்டிக்கு தூக்கமே இல்லை.  சாமக்கோழி கூவும் போதே எழுந்து எலந்த மரத்தில் எலந்தப் பழம் பொறுக்கத் தொடங்கினாள். விடியும் பொழுதாவது நமக்கு வெளிச்சம் தராதா என்ற நம்பிக்கையில் சொர்ணம் பாட்டி..

                   &&&&&&&&&

Monday, 24 September 2018

கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும் - ந.பிச்சம்மாள்

    ''கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும்''

    வகை: சிறுகதை

     நூலாசிரியர் : கவிமதி சோலச்சி

     நூல்விமர்சகர் : ந.பிச்சம்மாள்

    விலை : ரூபாய் 110/-

    நூலாசிரியரிடம் பேச:9788210863

   வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்,
                         திருச்சிராப்பள்ளி.


  கருப்பச் சட்டையும் கத்திக்கம்புகளும் சிறுகதை தொகுப்பை வாசிக்க ஆரம்பித்து எனக்கு தெரிந்த வகையில் பதிவு செய்கிறேன்.

  ''குருவிக்காடு'' - இக்கதை விவசாயிகளின் பிரச்சினைகளை கொண்டுள்ளதாக உள்ளது. காவிரியாற்றின் கரையிலுள்ள குருவிக்காடு கிராம மக்களின் ஒற்றுமை நன்கு வெளிப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அரசாங்க அதிகாரிகள் வந்து மிரட்டியும் ஆண்களும் பெண்களும் ஒற்றுமையாக இருந்து விவசாய நிலங்களை அழிக்கவிடாமல் செய்கிறார்கள். முத்தையன் என்ற பெரியவர்,  இவர்களை நெறிப்படுத்தும் முறை அற்புதம். நாம் என்னதான் போராடினாலும் எந்த அரசும் நம்மைக் கண்டு கொள்ளாது என்று அவர் ஆதங்கப்படுவது நெஞ்சை விட்டு அகலவில்லை. வேலுப்பிள்ளையின் உறுதியான பேச்சு எல்லோரையும் ஈர்த்து விடுகிறது. அவன் சொன்ன ஒரு வார்த்தையில் , புரட்சியின் போது தான் செத்தாலும், என் உடலை வைத்து கடைசி வரை போராடுங்கள் என்று கூறும்போது என் கண்களும் என்னையறியாமல் கலங்கிவிட்டன. இந்த போராட்டத்தால் நம் ஊர் மட்டுமல்ல உணர்வு உள்ள ஒவ்வொருவரும் நமக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பிக்கையுடனும், உறுதியுடனும் கிராமம் முழுவதும் விடியலில் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து பிரதமர் அலுவலகம் செல்ல ஆயத்தமானது அபாரம். நிச்சயம் அவர்கள் வெற்றியடைவார்கள் என்பது இந்த குடிமகளின் ஆவல்.

  '' அலோ....நா....ஐ...ச்சி பேசறேன்''  -ஹெட் கிளார்க்காக இருக்கும் முத்துச்சாமி சிடுமூஞ்சி என்று அவரை அனைவரும் கேலி பண்ணுவதும் , தன்னுடைய நிலையை தெரியாமல் இவர்கள் பேசுவதை நினைத்து மேலும் கடுப்பாவதும் அவரது மேலாளர் கருணா,  கூப்பிட்டவுடன் செயற்கையான முகமலர்ச்சியுடன் அவரைப் பார்த்து வணக்கம் சொல்வதும்,  அதைப் புரிந்து கருணா முத்துச்சாமியை தன் வீட்டிற்கு அழைப்பதும் அருமை. இவருடைய இந்த மனோநிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

  அங்கே போனவுடன்,  கருணாவின் மனநலம் குன்றிய சகோதரி,  படுக்கையில் இருக்கும் அவரது தந்தையை அவர் விசாரித்து அவரது மூத்திரப்பையை கொண்டு போய் பாத்ரூமில் விட்டு கழுவி வந்து தந்தைக்கு மாட்டி விடுகிறார். (என் கணவர் படுத்த படுக்கையாக இருந்தபோது,  இதே மாதிரி  தினமும் நான் செய்தது ஞாபகத்திற்கு வந்தது. இப்போது அவர் உயிரோடு இல்லை). பிறகு கருணா தன் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் சிரித்த முகத்தோடு விளையாடி மகிழ்வதை பார்த்து முத்துசாமி மனம் மாறுவதை நமக்கு கண்கூடாக காட்டியிருக்கிறார் ஆசிரியர். பாராட்டுக்கள்.

  '' கதவு'' - இக்கதையில் தன் மனைவியுடன் எப்போதும் சுகத்தை எதிர்பார்க்கும் பழனிவேலுக்கு, அவள் கீழே விழுந்து அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்த பிறகு அவள் நல்லபடியாக திரும்பி வரவேண்டும் என்று நினைப்பது, தான் செய்த தவறை ( அதாவது அவளை ஒரு போதைப் பொருளாக நினைத்து வாழ்ந்ததை)  உணர்ந்து அவள் முதல்நாள் பேசிய பேச்சால் அவன் மனம் மாறுவதும் அருமை. தன் மனம் புரிந்து நடந்து கொண்ட அவளை தான் புரிந்துகொள்ளவில்லையே என்று நினைத்து தான் அவளுக்கு சாமியில்லை. அவள்தான் தன் சாமி என்று நினைத்து அவனுடைய மனக்கதவு நன்றியுடன் திறந்து கொண்டது அற்புதம்.

  '' வம்சத்தை தேடி '' படித்த இளைஞனான மணி பக்கத்து ஊரான மல்லாமலையின் இளம்பெண் ஒருத்தியை கைபிடித்து இழுத்ததால் இவனைத் தேடி அவ்வூர்காரர்கள் வருகிறார்கள். அவனை ராசாத்தி ஒளித்து வைக்கிறாள். இரண்டு ஊர்காரர்கள் பாசத்தோடு பழகியிருந்தாலும், மணி செய்த செய்கையால் அவர்கள் வெகுண்டு எழுந்து வருகின்றனர்‌.  இதனால் இது ஊர்களுக்கும் விரோதம் ஏற்படுகிறது.

  பஞ்சாயத்தில் மணியின் பெற்றோர்கள் மன்னிப்பு கேட்பதும், அவர்கள் மன்னித்தாலும் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொள்வதால் மணியின் வாழ்க்கையில் ஓர் வெறுமை ஏற்படுகிறது. அண்ணா என்று செல்வி கூப்பிட்டாலும் தான் செய்த தவறு அவனை உறுத்துகிறது. அவனுக்கு மன வாழ்க்கை கொடுத்து வம்சத்தை பெருக்க அவன் அம்மா நினைப்பது ஓர் தாயின் ஆதங்கம் தெரிகிறது. ( இக்கதையில் சாதி வேற்றுமை மறைந்திருப்பதை ஆசிரியர் எடுத்துக் கூறியிருக்கும் பாங்கு அருமை. ) 

  '' அம்மனக்கட்டை '' - ஊரில் நல்ல உயர்ந்த நிலையில் வாழ்ந்த குடும்பம் பாஸ்கர் குடும்பம். தன்னைத் தேடி வருபவர்களுக்கெல்லாம் வயிராற கூழ் வார்த்த குடும்பம். ஆகவே அவர்களின் கூழ்வார்த்த குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு பாஸ்கர் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வருவதும்,  அனைவரும் பதைபதைத்து அங்கு செல்வதும்,  அக்குடும்பத்தைப் பற்றி தங்கள் நினைவுகளையும்,  அவர்கள் உரையாடல்கள்,  சாதி பிரச்சினைகளை தீர்ப்பவர்கள் என்று கூறுவதும் அற்புதம். கடைசியில் அந்த பாஸ்கர்தான் நெஞ்சு வலியால் இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் அனைவரும் திகைத்து நிற்கின்றனர். பாஸ்கர் அவர்களின் இறப்பு அவர்களை ஊமையாக்கிவிட்டது. மரணத்தை விட ஒரு கொடிய நோய் வேறு எதுவும் இல்லை  என்பதை அவர்கள் உணருகிறார்கள். மரணம் என்பது வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறது என்பது ஒரு நிதர்சனமான உண்மை. சமூகம் எத்தனை படோபடமாக இருந்தாலும் மனதளவில், ( அம்மணமாக)  ஒன்றுமில்லாமல் இருப்பதாக அழகாக முடித்துள்ள ஆசிரியர் பாங்கு அருமை.

  '' பிச்சை புகினும் " - குடும்பத்தலைவன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பம் எந்த நிலைமைக்கு வந்து விடும் என்பதை மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார் ஆசிரியர். குடிக்காக மகளையே பிச்சை எடுக்க வைக்கும் அந்த குடிகாரனை என்னவென்று சொல்வது?  அந்தக் காட்சியை பெற்று தாய் புலம்பும்போது,  என் கண்ணிலும் நீர் நிறைந்தது. அதனால் அவளுக்கு ஏற்படும் கோபம் சொல்லி மாளாது. அன்றைக்கு சிலம்போட நியாயம் கேட்டது போல்,  இன்று மாரியக்கா....... இறந்து போன குடிகார கணவனை தலைமை முடியை பிடித்து இழுத்துக்கொண்டு கண்ணகிபோல் தெருவில் சென்றது அவளின் மன திடம் தெள்ளத் தெளிவாகிறது. ( குடிசை மாற்று வாரிய பகுதியில் வேலை செய்ததால் இத்தகைய குடிகார குடும்பங்களை சந்தித்திருக்கின்றேன். அப்பேர்ப்பட்ட குடிகாரனையும் திருத்தியுள்ளேன் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )

  '' அம்மா'' - கருப்பாயி சிறு வயதில் பேரழகுடன் திகழ்ந்தவள் இன்று நோய்வாய்ப்பட்டு கயிற்றுக் கட்டிலில் கிடக்கிறாள். அவளை பராமரிக்க போராடும் மகனின் வேதனையை தத்ரூபமாக எடுத்துக் கூறி நம் மனதை மிகவும் கலங்க வைத்துவிட்டார் ஆசிரியர். எலும்புருக்கி நோய் வந்து அவள் படும்பாடு சொல்லி மாளாது. தன் அம்மா கடுமையாக இருந்தாலும் மனதில் அவள் பாசத்துடன் வளர்த்ததை நினைத்துப் பார்க்கிறான் சாமிக்காளை. அவனை எழுதவிடாமல்,  அவள் கத்துவதை பார்த்து,  அவளை தூக்கி தண்ணீரில் கழுவிவிட்டு, மறுபடியும் கட்டிலைப் பார்த்தபோது அதில் புழு நெளிவதைப் பார்த்து கட்டிலையும் நன்றாக சுத்தம் செய்து, அம்மாவை எப்படியாவது பக்கத்திலிருந்த பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தானவ அவனிடம் மேலோங்கி இருப்பது அற்புதம். ( இக்காலத்தில் பெற்ற தாயை யார் இவ்வாறு பார்த்துக் கொள்கிறார்கள்?  விரல்விட்டு எண்ணி விடலாம்)  பழனியம்மாள் படுத்திருந்த நார் கட்டில் கூட நாளை தன்னையும் தூக்கி வெளியே எரிந்து விடுவார்கள் என்று யதார்த்தமாக ஆசிரியர் முடித்திருக்கும் பாங்கு அருமை.

  '' ஊமச்சி '' - முத்தம்மாள் தன் குடும்பத்தை காப்பாற்ற என்னவெல்லாம் பாடுபடுகிறாள் என்றும், மற்றவர்களின் பேச்சுகளையும் சட்டை செய்யாமல்,  தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது,  ஒரு ஏழைத்தாயின் வாழ்க்கையை ஆசிரியர் நம் கண் முன்னே கொண்டு நிறுத்தியுள்ளார். அற்புதம். அவளுக்கு உதவியாக சின்னவன் பாக்கியராஜின் செயலும், ஓர் உணர்வை தூண்டுவதாக இருந்தது.  அவன் அழும்போது நம் கண்களும் கலங்கி விடுகின்றன. நாட்டில் நடக்கும் வறுமை என்ற பேயை அந்த அழுகுரல் சாடியிருக்கிறது என்பதும் என் கருத்து. ,( ஊமச்சி நத்தை போல் இருக்கும் என்பதை இப்பொழுதுதான தெரிந்து கொண்டேன். வாய் பேச முடியாத ஊமச்சி கதையோ என்று நினைத்தேன்.) 

  '' தட்டு வண்டியும் தங்கராசும் " - தன் தகுதிக்கு தகுந்தவாறு தங்கராசு திருமணம் செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. வாழ்க்கையில் கல்வி, அழகு போன்றவை ஒரு மனிதனுக்கு தேவை. அது இல்லாவிட்டால் தங்கராசு போல் பாடுபட வேண்டும். இவைகள் இல்லாவிட்டாலும் அவன் பொறுமையின் சிகரம். சிறந்த உழைப்பாளி.  தன் இரண்டு பெண் குழந்தைகளுக்காக அவன் உழைப்பதை பார்த்து அந்த கிராமமே அங்கலாய்க்கிறது. தன் சிநேகிதனுடன்  தொலைபேசியில் எப்போதும் பேசிக்கொண்டேயிருப்பதும் , தன் குழந்தைகளைக் கூட மறந்து மற்றொருவனுடன் சென்று விடுகிறாள் என்று படிக்கும்போது வேதனையடைகிறது. அவள் பெண் வர்க்கத்திற்கே இழுக்கு ஏற்படுத்துகிறாள். இக்காலத்தில் சில பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் விவாகாரத்து அதிகமாக நடக்கிறது.  கணவனின் அன்பை புரிந்து கொள்ளாமல் அவனை அலட்சியப்படுத்துவது நமக்கு வெறுப்பாக இருந்தது.  தன் குழந்தைகளை தட்டு வண்டியில் வைத்துக்கொண்டு ஓட்டும்போது ஒருநாள் அவன் விபத்யில் சிக்கி கிடக்கும்போது அவள் மனைவி வேறொருவருடன் போகிறாள். இககதையிலிருந்து சமூகம் பல விஷயங்களில்  எவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளது என்பது புலனாகிறது.  இக்கதை உண்மையிலேயே மனதை வருத்தும்படி இருந்தது.

  '' சொன்னபடி வாழு'' - இது கவிஞர் செல்வராசின் கதை.தன் மனைவியிடம் அன்பாக இருப்பார். ஆனால் தன் குழந்தைகளிடம் மிகவும் கடுமையாக இருப்பார். ஒருநாள் அகிலாபுரத்தில் ரோட்டர கிளப்பில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்காக கருத்தரங்கம் வைத்திருந்தார்கள்.  அதில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து பேச வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.  அந்த கருத்தரங்கில் அவருடைய மகளும் கேட்க வந்திருந்தது அவருக்கு தெரியவில்லை.  அவருடைய பேச்சால் எல்லா மாணவர்களும் உற்சாகமாக இருந்ததை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்து அவருக்கு ஒரு கவரையும் கொடுத்தனர். வீட்டிற்கு வந்தவுடன் தன் சுபாவத்தை காட்டினார்.  மகள் உள்ளே போய் கதவை சாத்திக்கொண்டு இருந்தாள.  தாய் எவ்வளவு கூப்பிட்டும் வெளியே வரவில்லை.  வெகுநேரம் கழித்து அவளே வெளியே வந்து அன்று பேசிய பேச்சாளர் பேச்சை அப்படியே சொன்னதும், தன் பேச்சை அவள் கேட்டிருப்பதால்,  அதை உணர்ந்து தான் செய்த தவறை நினைத்து வருந்யுவதும் அருமை.

  மேடையில் வாய்கிழிய பேசும் பேச்சாளர்கள் உண்மையில் அதற்கு எதிராகத்தான் நடந்து கொள்வர் என்பது நிதர்சன உண்மை.  கல்வியை முதலீடாக வைத்து வருங்கால சந்ததியர்கள் பணம் காய்ச்சி மரங்களாக பெற்றோர்களால் மாற்றப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் ஆணித்தரமாக கூறியிருக்கிறார் அருமை. பாராட்டுக்கள்.

  '' கருப்புச் சட்டையும் கத்தக் கம்புகளும்'' - இதில் சேரி மக்களிடம் பாசம் காட்டும் நசீர்பாய். பகுத்தறிவை போதித்து அவர்களை மற்ற மனிதர்கள் மதிக்க வைக்க வேண்டும் என்று பாடுபடுவது அருமை. ஆனால் மேல் சாதிக்காரர்கள் இவர்களை இழிவுபடுத்தி பேசுவதும் தங்களின் அடிமைகளாகவே இருக்க விரும்புவதும் ஆசிரியர் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். அற்புதம்.சாதி வெறியர்கள் இன்னும் நாட்டில் உள்ளனர்.

  தவராசா, சாமிக்கண்ணு, சுப்ரமணியன் என்ற மூன்று இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு பெரியார் தொண்டர்,  அவர்களை மருத்துவமனையில் சேர்த்த லாரி டிரைவர் சுந்தரத்தை போலீஸ் அதிகாரிகள் அவனிடம் கேள்வி கேட்க,  அவனும், இந்த மூன்று இளைஞர்களை அடித்து விட்டு பலபேர் ஓடியதை தன் லாரி வெளிச்சம் மூலம் பார்த்ததும்,  உடனடியாக காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்து வந்ததையும் கூறுகிறான். அவனது மனிதாபிமானம் நன்கு வெளிப்படுத்துகிறது.

  சாதிய வன்மத்தை இக்கதை தெளிவுபடுத்துகிறது.  குழந்தைகளை கல்வி கற்பதற்கும் கைத்தொழில் கற்க உதவி செய்யும் நசீர்பாய் என் மனதில் உயர்ந்து நிற்கிறார். மேலும் சாதி வெறியர்களை ஒழிக்க ஒரு சிறுவன் புறப்பட்டு ஆயுதங்களோடு வருவதும், அவனுக்கு புத்திமதி கூறி நசீர்பாய் அரவணைப்பதும் அருமையிலும் அருமை. மாவட்ட ஆட்சியரும் ,நியாயமாக பேசும் மாவட்ட எஸ்.பியும் என் மனதில் உயர்ந்துள்ளனர். ( எனது மூத்த பையனும் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். அவர் பணிபுரியும் ஊரில் உள்ள அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ) 

  இச்சிறுகதை தொகுப்பில் சாதி கொடுமை பொருளாதார நிலை,  பகுத்தறிவு, வறுமை, மதுவின் தீமை, பிறருடன் அன்புடன் நடப்பது, தான் பேசும் பேச்சுக்கும் செயலுக்கும் மாறுபட்ட தன்மை,  குடும்பத்தில் ஏற்படும் மனப் பிளவுகள் ஆகியவற்றை ஆசிரியர் கொடுத்திருப்பது அருமையிலும் அருமை. கதைகளின் ஆங்காங்கே மண் வாசனையும் தெரிகிறது.  சமூக அக்கறையை இந்த தொகுப்பு வெளிப்படுத்துகிறது. 

  இம்மாதிரியான சமூக அக்கறை கொண்ட கதைகளை படைக்குமாறு இந்த வாசகி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.  தங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

                 இப்படிக்கு

             ந.பிச்சம்மாள்,

         ( உரத்த சிந்தனை) 

நங்கநல்லூர், சென்னை -600061

             பேச : +919790702927