Wednesday, 27 December 2017

சாகாவரம் - கவிமதி சோலச்சி

பரிசுக்காய்ப் பாட்டெழுதி
பார் ஏய்க்கக் கூட்டு சேர்த்து
வீணாய் நிலம் சுமக்க
பைந்தமிழே உனைத் தொட்டேன்
என நினைத்தாயோ....!

நாடி நரம்புகளில் குடியேற்றி
இரத்த நாளங்களாக்கி - தமிழே
தொழுது பாடுகின்றேன்...! - இந்த
வித்தை மறப்பேனோ..?
செத்து போவேனே...!

ஆயிரமாயிரமாய் கவிதை
அள்ளித் தருபவளே..!
அறுவை மறந்தேன்
தமிழ்ச் சுவை உணர்ந்தேன்...!

உன்னில் கலந்தேனே
உள்ளம் மலர்ந்தேனே...!
உந்தன் திறத்தாலே
அள்ளித் தந்த வரத்தாலே....

சாகாவரம் பெற்றான் சோலச்சி
சரித்திரத்தில் நிலைப்பான் கோலோச்சி.....!!!

      - சோலச்சி புதுக்கோட்டை

Tuesday, 28 November 2017

விரிசல் - கவிமதி சோலச்சி

    எனது இரண்டாவது கவிதை நூலான மேன்மை வெளியீட்டில் உருவான "விரிசல் " கவிதை நூல்  25.11.2017 அன்று மாலை புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நகர்மன்றத்தில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணக்குமார் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி அவர்களால் வெளியிடப்பட்டது.  இந்நிகழ்வில் எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி,  புதிய தலைமுறைக் கல்வி இதழின் தலைமை உதவி ஆசிரியர் மோ.கணேசன், மேன்மை வெளியீட்டின் உரிமையாளர் தோழர் மணி,  அறிவியல் இயக்க நண்பர்கள் மற்றும் இலக்கிய நண்பர்கள்,  ஆர்வலர்கள்,  பள்ளி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
  

Sunday, 26 November 2017

ஆட்டுக்கார ஆறுமுகம் - கவிமதி சோலச்சி

         --ஆட்டுக்கார ஆறுமுகம் -- 

  கவிமதி சோலச்சி புதுக்கோட்டை

  

  காண்போர் யாவரையும் கவரக்கூடிய கண்கள்,  சிலிர்த்து நிற்கும் புருவங்கள், வசீகரப்படுத்தும் சின்ன உதடுகள், சேலைக் கட்டாமல் தாவணி போட்ட சின்ன இடை கொண்ட பத்மாவதி கஞ்சிக் கூடையை தலையில் சுமந்து கொண்டு வயலுக்கு சென்று கொண்டு இருந்தாள். "இங்கேரு நானும் வர்றேன் நில்லு "" என்றான் அரை டவுசர் போட்ட ஆறுமுகம்.

  "என்ன ஆறுமுகம் பரீட்சைக்கு படிக்காம வயலுக்குச் வர்ற..."

  "அட நீ வேற ..! நல்லா படிக்கிற நீயே போகும்போது மக்குப்பய நா.... என்ன "

  "இல்ல ஆறுமுகம் கொஞ்சம் படிச்சா பாஸ் பண்ணிடுவே... ஏதோ மாமன் மயனாச்சேனு சொன்னேன். நீ படிக்கலைனு வையி ஒனக்கு வாக்கிறவ அவ்ளோதான்..."

  "அதுக்கு நீயே வந்துருவே...."

  "ஆசையப் பாரு.  அப்பா உழுகுறாரு கொஞ்சம் சும்மா இரு...."

  "அப்பா..... கஞ்சி கொண்டு வந்துருக்கேன்...."

  முருகவேலு காளைகளை வயலில் நிற்க வைத்தார்.

  இந்தா கால் அலம்பிட்டு வர்றம்மா.. என்னம்மா மாப்பிள்ளையையும் கூட்டிக்கிட்டு வந்துருக்கே...."

  "இல்லப்பா ஆறுமுகம்தான் வந்துச்சு...."

  "மாப்ள...! ஏம் பொண்ணு தாவணி போட்டுட்டா, நீங்க இன்னும் டவுசரையே மாத்தலையே... அதமாத்துங்க..." என்றார் கிண்டலாக.

  "இருங்க மாமா வர்றேன்...." வேகமாக ஓடினான்.

  "மாப்ள நில்லுங்க ...! எங்கே ஓடுறீங்க..."

  "ஒன்னுல்ல..."

  "மாப்ள எப்பவுமே வெளையாட்டுப் புள்ளதான்..."

  சாப்பிட்டு முடித்தவுடன் கஞ்சிக் கூடையை தூக்கி தலையில் வைத்தார்...

  "நா வர்றப்பா..."

  "பாத்துப் போமா..."

  "சரிப்பா..."

  "பத்மா நில்லு ...." வேர்த்து விறுவிறுக்க ஓடி வந்தான். 

  "யாரு அடையாளமே தெரியல... அட நம்ம ஆறுமுகம் மச்சான்..."

  "பத்மா நா போட்டுருக்க கைலியும் சட்டையும் எப்புடி இருக்கு...."மூச்சு வாங்க நின்றான்.

  "ம்..... சோளக்காட்டு பொம்ம மாறி இருக்கு ...." "நா வர்றேன் ..." புன்முறுவலுடன் சென்றாள்.

  அன்று ஒரு நாள்...

, "ஆறுமுகம் இங்கே வாயேன்....."

    "ம்.... என்ன...."

  "ஒன்ன பேரு சொல்லு கூப்புட்டா தப்பா நெனச்சுக்குவியா..."

  "நீ கூப்புடாம வேற யாரு கூப்புடுறது... என்ன கைய பின்னாடி மறக்கிற...."

  "ஒனக்கு புடிக்குமுனு கேப்ப ரொட்டி சுட்டுக் கொண்டு வந்தேன், தின்னு....."

  "கொண்டா,   அடேங்கப்பா,  நீ செஞ்சதாச்சே....என்ன ருசி... காலம் முழுசும் ஓங்கையாலே சாப்புடனும்...."

  "ம்.... அவசரத்த பாரு...! நா பி.எஸ்.சி முடிச்சதுக்கு அப்புறந்தான் கல்யாணமே..."

  மௌனமாக இருந்தான்....

  "எதுக்கு அமைதியாயிட்ட..."

  "அது..... படிப்ப நிறுத்த முடிவு பண்ணிட்டேன்...."

  "என்ன சொல்ற...."

  "ஆமா... ஒனக்காவது சொத்து பத்து கேணினு இருக்கு... எங்களுக்கு பத்து ஆடுதான் இருக்கு. அம்மா எறந்ததுக்கு அப்பறம் அப்பா பாத்துக்கிட்டு வந்தாரு. அவருக்கும் ஒடம்பு சரியில்ல.எனக்கும் படிப்பும் ஏறல. சோத்துக்கு என்ன பண்றது. நீ நெறைய படிக்கனும். நல்லா படிச்ச மாப்ளயப் பாத்து கல்யாணம் பண்ணிக்க...." கண் கலங்கினான்.

  "நல்லா இருக்கு ஒன்னோட பேச்சு,  ஓ ஆசைப்படி நெறையப் படிக்கிறேய்யா, ஆனா உன்னத்தான் கட்டிக்கிடுவேன்...."

  நாட்களும் கடந்தன.....

  ஆள் உயர குச்சியைத் தூக்கிக் கொண்டு  தூக்குச் சட்டியில்  கூழை ஊத்திக்கொண்டு ஆடுகள ஓட்டிக்கிட்டு போவான். பத்மாவின் நெனப்பு அவனை வாட்டியது. பத்து ஆடுகள மேய்க்கத் தொடங்கியவன் அறுநூறு ஆட்டுக்கு சொந்தக்காரன் ஆனான்.

  அன்றொரு நாள்.....

  "மச்சான் நான் பி.எஸ்.சி பாஸ் பண்ணிட்டேன். இனிமே நமக்கு கல்யாணந்தான்...." சந்தோசத்துடன் ஓடி வந்தாள் பத்மாவதி.

  "எனக்கு தெரியுமே.... நீ எல்லாத்துலேயும் பாஸ் பண்ணிடுவேணு...."

  வேப்ப மரத்தில் வைக்கப்பட்டு இருந்த குங்குமத்தை எடுத்து அவளது ஊள்ளங்கையில் வைத்தான்.

  ஒருநாள்,  இங்கே பாரு கோவிந்தசாமி. ஓம்புள்ள ஆட்டுக்கார ஆறுமுகத்த ஏம்புள்ளையோட பழக விடுறது நல்லா இல்ல. பத்மாவதிக்கு பிடிச்ச மாப்ளயா பாத்து கட்டுறதா முடிவு பண்ணிட்டேன். ஓம் மவன் குறுக்கே வந்தா அப்பறம் போலிசுக்கு போறது மாறி இருக்கும்.... எச்சரித்தார் முருகவேல்.

  "நல்லா இருக்கே... அதுக ரெண்டும் மனசுல ஆசை வளர்த்துக்கிட்டு திரியுதுங்க. சேத்து வக்கிறதுதாயா மொறை...."

  "இதபாரு நான் சொன்னா சொன்னதுதான்  ...." கோபத்துடன் புறப்பட்டார் முருகவேல். 

  சிலநாள் கழித்து ராத்திரி ஒரு மணிக்கு  யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார் கோவிந்தசாமி.

  "என்னம்மா ராத்திரில......"

  "இல்லங்க மாமா.... வேறொருத்தருக்கு என்னயக் கட்டி வக்கிறதா கட்டாயப்படுத்துனாங்க. நா முடியாதுனுட்டு யாருக்கும் தெரியாம வந்துட்டேன்...."

  "சரி,  வாமா விடிஞ்சதும் பேசிக்கிவோம்...." உள்ளே அழைத்தார் கோவிந்தசாமி

  பொழுது விடிந்தது.....

  "ஆறுமுகம் உங்கள அரஸ்ட் பண்றோம்...." என்றார் இன்ஸ்பெக்டர்.

  "எதுக்கு....."

  "முருகவேல் பொண்ண கடத்திக்கிட்டு வந்துட்டதா புகார் கொடுத்துருக்காங்க....

  "என்னய யாரும் கத்திக்கிட்டு வரல...நாந்தான் வந்தேன்...." தண்ணீர் குடத்தை இறக்கி வைத்துவிட்டு விவரத்தைச் சொன்னாள் பத்மாவதி.

  "அப்படியா.... உனக்கென்னமா வயசு...."

  "இருபத்தொன்னு நடக்குது சார்....."

  "கேச வாபஸ் வாங்கிட்டு சின்னஞ்சிறுசுகள வாழ்த்துங்க...." வாழ்த்துக் கூறி விடைபெற்றார் இன்ஸ்பெக்டர் ......

            -----&------

  கவிமதி சோலச்சியின் "முதல் பரிசு " சிறுகதைத் தொகுப்பிலிருந்து ....

பேச :9788210863
மின்னஞ்சல் : solachysolachy@gmail.com

Thursday, 23 November 2017

வெளிச்சம் (சிறுகதை) - கவிமதி சோலச்சி

வெளிச்சம் - கவிமதி சோலச்சி

      
வயிற்று வலியும் மயக்கமும் வர வீட்டு வாசலிலே விழுந்துவிட்டேன். "அய்யய்யோ....! தொளசி விழுந்துட்டானே....." என் தாய் ஆரியமாலா அழுது ஓடி வர அனைவரும் வந்துவிட்டனர். பாதி கெரக்கத்தில் இருந்த என்னை தூக்கி முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். ஓரளவு மயக்கம் தெளிந்தேன். வயிற்று வலி நின்றபாடில்லை. என்னை என் பிடித்துக்கொள்ள அண்ணன் ரவி மோட்டார் சைக்கிளில் வைத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவசரகால சிகிச்சை பிரிவில் அட்மிட் செஞ்சாங்க... டாக்டரும் என்னை பரிசோதனை செய்து மருந்துகள் கொடுத்தார். அது பத்து படுக்கைகள் கொண்ட அறை. நான்கு நோயாளிகள் படுத்திருந்தார்கள். என்னை ஒரு படுக்கையில் படுத்திரு என்று சொல்லிவிட்டு வெளியே வந்து கம்பவுண்டரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள். "இன்னா தொளசி ஆச்சு... ஊட்டுக்கு போயிருந்தேனா அம்மா சொன்னச்சு. ஓடி வந்துட்டேன். எப்புடி இருக்குது....." என்றான் கோயம்பேட்ல இருக்கும் பாலிய சினேகிதன் ஆறுமுகம். "வயித்துலதான் வலிச்சுக்கிட்டே இருக்கு... டாக்டரு சரியாய்டும்னுருக்கார்...." "ஒடம்ப கவனுச்சுக்க இந்தா செலவுக்கு நூறுரூபாய வச்சுக்க ..." கொடுத்த பிறகு புறப்பட்டான். சுருங்கிப் போன முகம் சட்டை போடாமல் சேலையால் மூடிய தேகம். தொளதொளனு ஆடும் கைகள். வெண்பஞ்சு போல் முடி, கிணத்துக்குள் நீந்தும் மீன்போல குழிவிழுந்த கண்களை உடைய அந்த பாட்டியை தள்ளுவண்டியில் படுக்கவைத்து தள்ளிக்கொண்டு வந்தார்கள். டாக்டர் அவசர அவசரமாக காலில் கட்டு கட்டினார். இரத்தம் வழிவது நின்றது. "வயசான ஆளுங்கிறதால காலு ரொம்ப வீக்காயிருக்கு. ஆப்ரேசன் செஞ்சாதான் சரியாகும். எட்டாயிரம் ரூபா செலவாகும். ஏற்பாடு செய்ங்க...." என்றார் டாக்டர். "பணத்துக்கு என்ன பண்றதா யோசிச்சுருக்கே.. என்கிட்ட ஆயிரம் ரூபாதான் இருக்கு. ஓன்கிட்ட எவ்ளோ இருக்கு...." ""ரெண்டாயிரம் ரூபா நா வச்சுருக்கண்ணே. மீதி ஐயாயிரம் ரூபாய் தான்..." மகன்கள் இருவரும் பேசிக்கொண்டனர். படியில் இருந்து இறங்கும்போது வழுக்கிருச்சு. வயசானதால காலு ஒன்னு ஒடிஞ்சே போச்சு. வயசானவளாக இருந்தாலும் அந்தப் பாட்டி மீது மகன்கள் இருவரும் அளவு கடந்த பாசம் வைத்தார்கள். கொஞ்ச நேரத்தில் தலையை விரித்துக் கொண்டு கண்களில் நீர் ஒழுக "ஆத்தா வொன்கு என்னாச்சு..." கத்திக்கொண்டு வந்தாள் மகள் லெட்சுமி. "ஆத்தாள பாத்துக்க பணத்துக்கு ரெடி பண்ணிட்டு வர்றோம். கண்விழிச்சா ... பக்கத்துல இருக்க முனியங்கடையில் சாப்பாடு வாங்கிக் கொடு...." இருவரும் புறப்பட்டனர். பாட்டி நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தார். "மயக்கம் தெளிஞ்சவுடனேயே சோறு கொடுக்கனுமே...."அவள் மகள் என்னிடம் "எங்க ஆத்தால பாத்துக்கங்க சாப்படு வாங்கிட்டு வந்தர்றேன்...." என்று தேமிய குரலோடு பேசிவிட்டுச் சென்றாள். மயக்கம் தெளிஞ்சு எந்திருச்ச அந்தப் பாட்டி " நா எவ்ளோ கஸ்டப்பட்டு வளத்தேன். நாயா பேயா ஒழச்சு காப்பாத்துனேன். என்னய அனாத மாறி தூக்கிப் போட்டுட்டு எல்லோரும் போயிட்டாங்களே.... நல்லா இருப்பாங்களா..." புலம்ப ஆரம்பித்தாள். அந்தப் பாட்டிக்கு தன் பிள்ளைகள் தனக்காக கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியாது. நான் உண்யை எடுத்துச் சொன்னேனஸ. உடனே அவள் "ஏம் புள்ளங்க மாறி முடியுமா...." என்று பெருமையாக சொல்லிக்கொண்டே அந்தப் பழைய சேலையால் கண்ணீரை துடைத்துக் கொண்டாள். தன் தாயின் முகத்தில் ஏதோ வெளிச்சம் தெரிவதாய் உணர்ந்தாள் உள்ளே வந்த லெட்சுமி.

              ---------&--------
            கவிமதி சோலச்சியின்
"முதல் பரிசு " என்ற சிறுகதை நூலிலிருந்து...
பேச : 9788210863
மின்னஞ்சல் : solachysolachy@gmail.com

Sunday, 19 November 2017

என் தாயும் தந்தையும் - கவிமதி சோலச்சி

நல்லவர் என்று சொல்லுவார் என்றா
நானும் பொறந்தேன் போடி....

நானிலம் செழிக்க நான் துணையாவேன்
நம்பினால் நீ வாடி.....!

என் தாயும் தந்தையும் தரமாகத்தானே
என்னைப் பெற்று வளர்த்தாங்க
நான் தலைவனாக வேண்டுமென்றே
தினமும் பாடு பட்டாங்க....

நான் தொண்டனாகவே வாழ்ந்து மகிழ்கின்றேன்
இதுதான் உண்மை புரிஞ்சுக்கடி.....!

விவசாயம் செத்துப்போச்சு - அந்த
விளைச்சல் என்ன ஆச்சு

தரிசா கிடந்தால் கூட
வேலிக்கருவை வெளஞ்சு நிற்கும்
மண்ணும் முழுசா மனையாச்சு
மனுசன் செத்தே வாழுறான் பாரு - இத
திருத்தலேனா திருடு போகும் இந்த பாரு....!

ஆடு மாடு ஒண்ணா மேஞ்சு
குட்டி போட்டது அந்தக் காலம்
ஊசிமூலம் குட்டி வளருது
பாலும் பெருக ஊசி குத்துது....

மருந்து மூலம் எல்லாம் நடக்குது
மனித கருவும் குடுவையில் வளருது....

இயற்கையை நாசம் பண்ணுனதாலே
எல்லாம் சிதைஞ்சு நடக்குது....!

வீட்டுக்கொரு மரம் வளர்த்தால்
நாம பிழைக்கலாம் ...
இருக்கும் விளைநிலம் குளத்த
கட்டிக்காத்தா நம் சந்ததி தொடரலாம்...

இருக்கும் மரத்தை வெட்டவும் வேணாம்
செயற்கை ஆடம்பர வாழ்க்கையும் வேணாம் ...

மனசு விட்டு பேசி மகிழ்ந்தால் இன்பம் இன்பம்தான்
என் பேச்சை மறுத்து வாழ்க்கை அமைச்சா
நாளும் துன்பம்தான்....!!!

      - சோலச்சி புதுக்கோட்டை
         பேச : 9788210863

Sunday, 12 November 2017

அந்தக் காலங்கள் என்று வருமோ... கவிமதி சோலச்சி

என்னுயிரே ஆருயிரே
உன்னைத்தான் நானும் இங்கே
மானே.!  தான் இழந்து வாடுறேனே

தன்னந்தனியே உன்னை சுமந்து
நானும் ஏதேதோ பாடுறேனே
அந்த காலங்கள் இன்று வருமா
மானே சோகங்கள் தான் தீருமா.....

அந்தக் கண்மாய் நடுவினிலே
நீர் கொட்டைதான் முளைச்சிருக்கு
நீயும் நானும் தாவணியில்
அயிரை மீனும்தான் பிடிச்சு வந்தோம்  - அன்று
அயிரை குழம்பாச்சு இன்று
என் கண்கள் குளமாச்சு....

பஸ் ஸ்டாண்டில் பைக்கினிலே
நான் உனக்காக காத்திருக்க
பை தூக்கி நடந்து வந்த நானும்
பலாச்சுளை வாங்கி தந்தேன் - அன்று
பாலாச்சுளை இனிப்பாச்சு இன்று
பாதையெல்லாம் முள்ளாச்சு.....

பரபரப்பாய் சாலையிலே
யாரும் பாராமல் பயணிக்க
என் மார்போடு கட்டியணைச்ச
கோடை மார்கழி ஆனதென்ன - அன்று
சூரியன் குளிர்ந்ததடி மானே
உன் நினைவு வாட்டுதடி.....

ஆறு கடந்து கோட்டை போனோம்
அழகே அதை ரசிக்க
மலை மீது ஏறிப்போயி அங்கே
மாறிமாறி கொஞ்சிக்கிட்டோம் - இன்றும்
கோட்டை என்னை தழுவுதடி நாளும்
என் உசுரு நழுவுதடி.....

அந்த சாலையோரம் இளநீரு
வாங்கித் தர நீ ருசிச்ச
உதட்டில் தேன் வழிய நான் ருசிச்சேன்
விழியோடு ஒத்தடம்தான் மானே
வேண்டும்படி கொடுத்துக்கிட்டோம்
அந்த காலங்கள் என்று வருமோ
இழந்த இன்பங்கள் தான் தருமோ......

    - கவிமதி சோலச்சி புதுக்கோட்டை
       பேச : 9788210863

Wednesday, 8 November 2017

நாலாபக்கமும் சாதியம் - கவிமதி சோலச்சி

அம்மாடி இது என்ன நாடு
இது யாருக்கு இப்ப தாய்த்திருநாடு.....(2)

கிழக்குப் பக்கம் வங்கக் கடலு
அந்தமான் நிகோபர் அதன் உடலு
தெற்குப் பக்கம் இந்தியப் பெருங்கடலு
அதில் இல்லையே சொந்தமா திடலு

தமிழர்களை குட்டிநாடு அடிச்சு விரட்டுது
அவங்களோடதான் இந்த நாடு கொஞ்சி மகிழுது.....

மேற்கு பக்கம் அரபிக் கடலு
இருக்கு ஒன்றிரண்டு தீவுத் திடலு
மூனு பக்கம் சேர்ந்திருக்கு நீரு
நாலாபக்கமும் சாதியம்தான் பாரு

ஒற்றுமைங்கிற சொல்லில் உண்மை இல்லேங்க
இஸ்லாம ஓரங்கட்ட சதியும் நடக்குது....

ஆணி வேரு பூமிய சுத்துது
கிளைகள் யாவும் ஏதேதோ கத்துது
ஒரே நாடா இருக்க ஆசைதானே
ஒரே மொழி  இது சாத்தியமா

உடம்பில் ஓடும் இரத்தமெல்லாம் சிவப்பு தானங்க
உயர்வு என்ன தாழ்வு என்ன உணர வேணுங்க....

யார்யாரோ இங்கு பொழப்பு நடத்துறான்
பூர்வ குடிய கொன்னு புதைக்கிறான்
ஒடுக்கப்பட்டவர் முன்னேறக் கூடாதா
ஓஞ்சாதிக்கு மட்டும் ஒருலிட்டர் கூட ஓடுதா

ஆணவமும் சாதியமும் நாட்ட ஆளுது
அத அடிச்சு ஒடுக்க பெருங்கூட்டம் இதோ வருகுது.....

   - கவிமதி சோலச்சி புதுக்கோட்டை
  பேச : 9788210863

Wednesday, 25 October 2017

ஊரு உலகம் மெச்ச - சோலச்சி

ஊரு உலகம் மெச்ச நானும்
ஊட்டி வளர்த்த செல்ல மகள
ஒத்தையடிப் பாதையிலே தவிக்க வச்சேனே....
நான் தவிக்க வச்சேனே...

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே.....

சிட்டா திரிஞ்ச ஏம் பொண்ண
சிங்கப்பூரு மாப்பிள்ளைனு கட்டி வச்சேனே
சீர் வரிசையோடு சீதனமா
மாடிவீடும் கட்டிக் கொடுத்தேனே - இப்ப
மாடிவீடும் காலியாச்சு
மார்வாடி கடைக்கு போயிருச்சு
நகையெல்லாம் கொடுத்துப்புட்டு
அழுகையோடு தவிக்கிறா...
மாப்பிள்ளை தண்ணியிலே மிதக்கிறார்....

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே.....

காடு கரையெல்லாம் வித்துப்புட்டேன் - அந்த
காசுக்கு பைக்கும் வாங்கி தந்தேன்
காரு ஓட்டும் நெனப்புலதான்
காத்தா பறக்கிறார்...
எம்மக தினமும் பதறுறா....

சிங்கப்பூர் செண்டும் தீர்ந்துருச்சாம்
முக்கால் டவுசர் பேண்ட்ட போட்டு
நல்லா மினுக்குறார்...
எத்தன நாளைக்கு இந்தக் கூத்து
மகளோட கண்ணீர பார்த்து
நாளுபூரா நானும் ஏங்குறேன்....

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே.....

வெளிநாட்டு மோகத்திலே
வேலைக்குப் போறத நிறுத்திட்டார்
"எப்ப விசா வந்து நீங்க கிளம்பி போவீகளோ
கூலி வேலை செய்யத்தானே
கடல் கடந்து போற மச்சான்...
இங்கே நாமும் வேலை செஞ்சு நாள கடத்தலாம்"
எம்மக சொல்லி முடிக்கையிலே
சோத்துப்பானை உடைஞ்சு சிதறுது
பொண்ணப் பெத்த எம்மனசு புலம்பித் தவிக்குது.....

நான் போட்டோ பார்த்தேன்
பொருத்தம் பார்த்தேன் - இது
பொருந்துமானு குணத்த பாக்கலையே...... சிட்டா திரிஞ்ச.....

    - சோலச்சி புதுக்கோட்டை
       பேச : 9788210863

Wednesday, 18 October 2017

அம்மாடி உன் நெனப்பு - சோலச்சி

அம்மாடி உன் நெனப்பு
அடங்கலடி இன்னும் தவிப்பு
சும்மாடி நான் மொறச்சேன்
சுத்தி வருது உன் சிரிப்பு  - இப்ப
தாவணிய தான் மறந்து
சேலையத்தான் சொருவிக்கிட்ட

ஆத்தாடி கெரங்கி போறேன்
அழகு கொலுசோரம் இறங்கி வாரேன்......!

கண்ணாடி உன் உடம்பு
கண்டபடி மினுக்குதடி
என்னடி நீயும் செஞ்ச
எம்மனசு தவிக்குடி  - இப்ப
ஊரோரம் ஆத்தங்கரை
வறண்டு போயி கெடக்குதடி

வேகமாக ஓடிவாடி நீயும் - நீ
வந்தா தானே அதுல தண்ணி பாயும்.......!

விஞ்ஞான உலகமிங்கே
விறுவிறுனு போகுதடி
வீதியில வந்து பாரு
விதவிதமா தெரியுதடி - இன்னும்
அந்தக்கால நெனப்புலதான்
இங்கே நீயும் சுத்திவார

உன் முத்து விழிகள் எனக்காக திறக்கட்டும்
சித்தன்னவாசல் ஓவியம்போல நம்காதல் சிறக்கட்டும்......!

       _ சோலச்சி புதுக்கோட்டை
        பேச :9788210863

Thursday, 12 October 2017

நொண்டாங் கால் கொலுசு - சோலச்சி

உன் நொண்டாங் கால் கொலுசு
நொண்டி அடிக்குது
உன் சோத்தாங்கால் கொலுசு
சுண்டி இழுக்குது...!

எடது கண்ணு ஏற இறங்க பாக்குது
வலது கண்ணு வாஞ்சையோடு சேர்க்குது....!

அந்தி நேரம் நானும் பார்த்தேன்
ஒதுங்கி போன...
ஆசையோடு பேசும்போது
அதட்டி போன

உள்ளுக்குள்ள பூட்டிவச்சு
ஏன்டி மறைக்கிற...
உன் உள்ளமெல்லாம்  நான்தானே
ஏன்டி மறுக்குற...!

வெட்டவெளி பொட்டலப்போல்
காத்து வாங்குது...
வெட்டிடாத என் மனசு
உன்னுள் வாழுது...!

உன் சேலை மடிப்ப ரசிக்கிறேன்டி
எட்டி நடக்குற...
சோலையாட்டம் தலையிலதான்
பூவ கொட்டி வைக்கிற....!

தூங்காமலே கண்ணு முழிச்சு
கனவு காணுறேன்...
நீ தொடாமலே பறந்து போக
கலங்கி வாடுறேன்...!

சூரியனைப்போல் ஓ நெனப்பு
சுட்டுப் பொசுக்குது...
சுத்தி வந்து கொஞ்சிக்கடி
எல்லாம் தவிக்குது....!

     - சோலச்சி புதுக்கோட்டை
      பேச : 9788210863

Tuesday, 10 October 2017

பொதிந்து கிடந்த புன்னகை - புதுகை பூவண்ணன்

"பொதிந்து கிடந்த புன்னகை "
             
  - கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்களின் நூல் குறித்து.... சோலச்சி

  இன்றைய தமிழ் உலகில் எண்ணற்ற நூல்கள் புதிது புதிதாய் உதயமாகிக்கொண்டு இருக்கின்றன. அவற்றில் கவிதை நூல்களே முதலிடத்தில் உள்ளன.  ஆனால், ஏனோ கவிஞர்களை நாம் கொண்டாட தயங்குகிறோம். கவிதைகளை கொண்டாட மறுக்கிறோம்.  காலத்தை எடுத்துச் சொல்வதிலும்  மொழியை முன்னெடுத்துச் செல்வதிலும் கவிஞர்களும் கவிதைகளும் முக்கிய பங்காற்றுகின்றன. எளிய நடை,  எளிய பதம் என்பது முண்டாசு கவிஞர் பாரதியின்‌ இலக்கணம்.  அந்த வகையில் அமையப் பெற்ற அற்புதமான நூல்களில் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்களின் "பொதிந்தி கிடந்த புன்னகை " யும் ஒன்று.

  இந்நூலில் காதல் மரம் படந்து வளர்ந்து இருக்கிறது.  அதில் காய்களை விட கனிகள் நிறைந்து கிடக்கின்றன. வாழ்வின் இலக்கணம் ஆங்காங்கே குவிந்து இருக்கிறது. பொதுவுடமை பேசும் மார்க்ஸ் அழகாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். விதைகள் கொட்டி அவை வேகமாய் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. நடப்பு அரசியலை துவைத்து பல இடங்களில் காயப் போட்டிருக்கிறார். விவசாயத்தை செழிக்க வைக்க போராடுகிறார். அவர்களுக்காக கண்ணீர் சிந்துகிறார். இந்தக் காட்சிகளை எல்லாம் பொதிந்து கிடந்த புன்னகைக்குள் நிரப்பி வைத்திருக்கிறார் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள்.

  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் புதுக்கோட்டை நகர் மன்றத்தில் 202 கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம் கவிஞர் மு.மேத்தா முன்னிலையில் நடைபெற்றது. அதில் விலை வாசி உயர்வைப் பற்றிய கவிதை ஒன்று....

"சூடாக டீ கேட்க
சுட்டது விலை ....?"
  
    இந்தக் கவிதையை எழுதியவர் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள்தான். முத்திரைக் கவிதைகளை படைக்க வேண்டும் என்பதைவிட புறம்போக்குகளின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்தக் கவியரங்கத்தில் நானும் கவிதை பாடினேன் என்பது வரலாறு.

     முதல் கவிதை இவ்வாறு நிறைவு பெறுகிறது....

"எனக்குள் எனக்காய்
நீ
எப்போது மாறிடுவாய்....?

ஒரு காதலனோ அல்லது காதலியோ தனது காதலில் உருகுவதை நம் கண் முன்னால் காட்சிபடுத்தி நம்மை அக்காதல் தேசத்திற்குள் அழைத்துச் செல்கிறார்.

  எதார்த்த உலகில் மதத்தை சாதியை எவ்வாறு கணிக்கிறார்கள் என்பதை இப்படி சொல்கிறார்...

"பெயர்
தெரிந்த நொடியில்
முடிவாகிப் போகிறது
மதம் எதுவென...."

அப்துல்லா என்றால் இசுலாமியர்,  அலெக்ஸ் என்றால் கிறித்துவர், அடைக்கலம் என்றால் இந்து... பிறகு ஊர் தெரு பெயர் கேட்டால் எல்லாம் தெரிந்து விடும். மதமும் சாதியும் மனிதனை கட்டிக்கொள்ளவில்லை. மனிதன்தான் கட்டிக் கொண்டு அலைகிறான்.

  விதை என்ற தலைப்பில் ஒரு அழகான கவிதை ...

"இது
வேரின் வீரியம் அல்ல
விதையின் வீரியம்....!

விதைகள்
உறங்குவதில்லை
உயித்தெழும்...."

   என்று நம்மை தட்டி எழுப்புகிறார். வாய்ப்புகள் கிடைக்கவில்லை,  சாதிக்க வழி தெரியவில்லை என்பவர்களுக்கு கவிஞரின் விதை என்ற கவிதை ஒரு பாடமாக அமைகிறது. பொதிந்து கிடந்த புன்னகை என்ற தலைப்பில் உள்ள கவிதை கவிஞருக்கும் பூவுக்குமான உரையாடல்.  கவிஞர் பூக்களிடமும் பேசும் வல்லமை பெற்றவர் என்பதை நம்மால் உணர முடிகிறது.

  துண்டு என்கிற கவிதையில் இத்தேசத்தில் துண்டாடப்பட்டு நசுக்கப்பட்டு கிடக்கும் மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கிறது....

"காலம் கடந்து
தோளில் ஏற்றிய
துண்டை சுமந்து
கௌரவ மிடுக்காய்
சுகமாய் நட...
சுத்தமாகட்டும் வீதிகள்...!"

    என்று அந்த மக்களுக்காக குரல் கொடுப்பதிலிருந்து தாம் ஒரு சமூகப் போராளி என்பதை நிலை நிறுத்துகிறார். நம் சக தோழர்களான திருநங்கைகள் பற்றி கூறும்போது ....

"பேச்சிலும்
எழுத்திலும்
பிழைகள் இருக்கலாம்
பிறப்பிலுமா....????

  என்று கண்ணீர் வடிக்கிறார் கவிஞர். பிள்ளைகளின் பெரும் கடமை பெற்றோர்களை கவனித்துக் கொள்வதுதான். நவீனம் என்று பிதற்றித் திரியும் இந்த உலகில் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடுவதையே தலையாய நோக்கமாக கருதுகிறார்கள். முதியோர் இல்லமும் இல்லையென்றால் அவர்கள் பாடு பெரும்பாடுதான். அதனால்தான் முதியோர் இல்லங்கள் வாழ்க என்று கவிஞர் ஒருவர் பாடினார்.

"என் இல்லத்தில்
எவரெவருக்கோ
இலை போட்டு
உணவளித்து மகிழ்ந்த
இந்த கை....

கை நீட்டுகிறது
ஆதரவற்றவளாய்
முதியோர் இல்லத்தில்...."

என்று "இந்த கை " என்ற தலைப்பில் ஒரு தாய் சொல்வது போல் படைத்திருக்கிறார். ஒருநிமிடம் இறந்து போன என் தாய்க்காக அழுதுவிட்டுத்தான் அடுத்த கவிதையே வாசிக்கச் சென்றேன் கனத்த இதயத்தோடு.....

நான் சாகும் போது
பக்கத்தில் இரு.... என்கிற கவிதைகளிலெல்லாம் நம்மை ஏதோ இனம்புரியாத தாக்கத்தை நிகழ்த்திவிட்டுச் செல்கிறார் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள். ஒவ்வொரு பக்கமும் நம் பக்கம் அமர்ந்து உறவாடும்படியான அற்புதமான கவிதைகளை படைத்து இத்தேசத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கிட முயலும் கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்களை மனசார வாழ்த்துகிறேன். 

  நூலினை மேன்மை பதிப்பகம் மணி அவர்கள் மிகச் சிறப்பாக கையாண்டு வடிவமைத்திருக்கிறார். பதிப்பகத்தாருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்நூலுக்கு தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்கள், தமிழ் இந்து நாளிதழ் முதன்மை இணையாசிரியர் தோழர் மு.முருகேஷ், சிந்தனைக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், தோழர் மு.அன்பரசு அவர்கள் என மிகப்பெரிய ஆளுமைகள் அணிந்துரை வழங்கி அழகு சேர்த்திருக்கிறார்கள். கவிஞர் புதுகை பூவண்ணன் அவர்கள் இன்னும் நூல்கள் பல வெளியிட்டு தமிழ்த்தாயின் செல்லப் பிள்ளையாக வலம் வர வாழ்த்தி மகிழ்கின்றென்.

விலை ரூபாய் 80/-
பதிப்பாசிரியர் : 044 - 28472058

நூலாசிரியர் : 9443531981

                        வாழ்த்துகளுடன்
                      அன்பு பண்பு பாசம்
                         நட்பின் வழியில்
                 சோலச்சி புதுக்கோட்டை