ஞாயிறு, 24 மே, 2020

முதல் பரிசு - சோலச்சி- ஒரு பார்வை - பொன்.குமார்




உண்மையை உரக்கச் சொன்னதற்காக நெஞ்சம் நிறைந்த நன்றி தோழர் பொன்.குமார் அவர்களுக்கு, 




முதல் பரிசு - சோலச்சி - ஒரு பார்வை - பொன்.குமார்



   சின்ன சின்ன கவிதைகள் மூலம் தமிழ் இலக்கியத்திற்குள் அறிமுகமானவர் கவிஞர்சோலச்சி. சின்ன சின்ன கதைகள் அடங்கிய தொகுப்பு மூலம் சிறு கதை உலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் சோலச்சி. 

   இவரின் இயற் பெயர் தீ. திருப்பதி. ஊர் பெயருடன்
அகவை தீ. திருப்பதி என்றானார். அறிவியல் ஆசிரியையும் வறுமையைப் போக்கி வயிற்றுக்குச் சோறிட்டவருமான சோலச்சி என்பவரின் பெயரை தன் புனைப் பெயராக நன்றியுடன் வைத்துள்ளார். ஒவ்வொருவரின் புனைப் பெயருக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கும். இது சற்றே வித்தியாசமானது. இத் தொகுப்பிலும் புனைப் பெயருக்கான காரணத்தைக் குறிப்பிடும் வகையில் ' வாய்ப் பார்த்தான்' கதை ஒன்றும் உள்ளது. பெண் பெயரில் எழுதும் ஆண்கள் மீது ஒரு குற்றச் சாட்டு உண்டு. இது குற்றச் சாட்டுக்கு அப்பாற்பட்டது. 


  சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'முதல் பரிசு'. 2002ஆம் ஆண்டில் ஒரு துணுக்கு எழுதி ' முதல் பரிசுத் தொகை ' பெற்றுள்ளார். இதுவே சோலச்சியை எழுதத் தூண்டியுள்ளது.  துணுக்கு எழுதியவர் சிறு கதை எழுதும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளார். இத்தொகுப்பில் ' ரெண்டாவது ரகம்' என்னும் கதையை எழுதியுள்ளார். எழுத்தாளன் ஒருவன் முதல் பரிசு பெற்றதானது. எழுத்தாளன் இறந்த பிறகே அவன் பரிசு பெற்ற விவரம் தெரிய வருகிறது. இது சோகமானது. ' 


   முதல் பரிசு'  கதை மூலம் சிறிய குடும்பமே சந்தோசம் தரும் என்னும் பாடத்தைக் கற்பிக்கிறது. திருமண வயது வந்து விட்டால் காதலுக்கு எவரும் தடையாக இருக்க முடியாது என்கிறது ' ஆட்டுக்கார ஆறுமுகம்'. இத்தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்த 04.10.2015 அன்று கேவிகே என்னும் குறுஞ்செய்தியில் சோலச்சியின் ஷார்ட் ஸ்டோாரி என்று ஆட்டுக் கார ஆறுமுகம் கதை அறிமுகப் படுத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு வயது 'பதினெட்டு' ஆன பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று உணர்த்துகிறது  'மன்னிப்பு'. 

   குடும்ப சூழ்நிலையால் பெற்றோர் மற்றோர் செய்த தவறால் சிறு வயதிலேயே திருமணம் செய்யப்படும் ஒரு சிறுமியின் நிலையைை ' நிழல் பேசுகிறது ' என்று எழுதியுள்ளார்.


    ' பெண்மை' பெண்ணியம் தொடர்பானது. ஆண்களுக்கு அறிவுரை வழங்கும் கதை. ஒருவனுக்கு ஒருத்தியே என்னும் தத்துவத்தை உபதேசிக்கிறது. ' அப்பாவுக்கு ஒரு கடிதம்...' கதை மிக உருக்கமானது. கணவனை இழந்த பெண் மாமியார் வீட்டில் எதிர் கொள்ளும் பிரச்சனையைப் பேசுகிறது.


  பேத்திக்கு எப்பாடு பட்டாவது பாவாடை சட்டையை வாங்கித் தர போராடும் ஒரு பாட்டியைப் பற்றியது' சாமக் கோழி '.
சினிமா ஆசையில் சீரழிந்து போகும் ஓர் இளைஞனைய் பற்றிய கதையாக ' அவனும் ஆசையும்'பதிவாகி உள்ளது. இதற்கு மாறாக உள்ளது ' என்னவளே நீயிருக்க'.


   இளைஞர்கள் பால் வினையால் பாதிக்கப் படுவதுடன் சிறுமிகளையும் பாதிக்கச் செய்வதைப் பற்றி கூறுகிறது" நஞ்சு போன பிஞ்சு". மகன் கெடுத்தாலும் வேலைக் கார பெண்ணை மருமகளாக ஏற்றுக்கொள்ளும் மாமியாரின் பாத்திரம் சிறப்பு.
தாயின் கோரிக்கையை மகன் செவி மடுக்காததால் அவள் இறந்து விடக் காரணமாக  இருந்ததை எண்ணி வருந்தும் மகனைக் காட்டுகிறது 'உச்சிப் பொழுதில் அவள்'.


  தொகுப்பில் எதிர் பாராத ஒரு கதை 'எதிர் பாராத யுத்தம்'. இராணுவ வீரன் ஒரு யுத்தத்தில்  இறந்து விட்டதாக அவனைக் காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்யப் படுகிறது. ஆனால் இராணுவ வீரன் சாக வில்லை. அவளோ அவன்  நினைவில் தற்கொலைச்செய்து கொள்கிறாள். காதலின் வலிமையைக் காட்டுகிறது.


   ' ஆட்டுக்கறி ' சாப்பிடும் ஆசையில் கணவன் வாங்கி வர இருவரும் சாப்பிடும் முன் நாய் சாப்பிட்டு விடுகிறது. ஆசை நிராசையாய்ப் போனது அனுதாபப் பட வைக்கிறது.


  விடா முயற்சியும் சகிப்புத் தன்மைமயும் வெற்றிப் பெற வேண்டும் என்னும் எண்ணமும் இருந்தால் சாத்தியப் படும் என்கிறது ' பட்ட மரம்'.  'விடியல்' கதைத் தீண்டாமையைப் பேசுகிறது. சமத்துவத்திற்கு சமர் புரிய தயாராகி விட்டனர் என்கின்றனர். ஆனாலும் அது ஒரு கனவாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.' தீஞ்ச பனியாரம்' கதை தீண்டாமை இன்னும் தொடர்வதையே காட்டுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் தன் நிலையை உணராமலே உள்ளனர் என்கிறார். 'பெரிய மனசு' ம் இவ்வாறே உள்ளது. 

  'சாம்பல்' சற்று கடுமையாகவும் கொடுமையாகவும் உள்ளது. உயர் சாதி பெண் தாழ்த்தப் பட்டவனைக் காதலித்தாள் என்பதற்காக இருவரையும் உயிருடன் இருக்கும் போதே அடித்து உதைத்து எரித்து சாம்பலாக்கி விடுகின்றனர் சாதி வெறியர்கள். சாம்பலாக்கப் பட்டாலும் இன்னும் சாதி வெறி பல ஊர்களில் அணையாமல் எரிந்து கொண்டுதான் உள்ளது என்கிறார். ஆனால்' பிச்சாயி மகன்' சாதி ஒழியும் என்று நம்பிக்கை ஊட்டியுள்ளா். புதிய தலை முறையினரிடையே ஒரு மாற்றம் தெரிகிறது என்று நம்பிக்கை ஒளி பாய்ச்சியுள்ளார்.


   நாட்டில் 'வினாக் குறி 'யாக பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் ஒன்று சிறுவர்கள் பணிக்கு அமர்த்தக் கூடாது என்பதாகும். குழந்தைத் தொழில் தொடர்வதை 'வினாக்குறி 'யில் தெரிவித்தள்ளார்.


   கோவில் உண்டியலில் காசு போடுவதை விட கையேந்துபவருக்கு காசு போடுவதே 'புண்ணியம்' என்கிறது ஒரு சிறுத்த கதை.
தமிழ் மொழியின் படைப்புகளை பிற மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் என்பதைக் கூறும் கதையாக உள்ளது' வாய்ப் பார்த்தான் ', இதில் இ்ன்னொரு விசயமும் உண்டு. புனைப் பெயர் எவ்வாறு வைத்துக் கொள்ளப் படுகிறது என்பதையும் சொல்கிறது.


    'கீரி மலை'' ஒரு நல்ல கதை. மலைகள் குவாரியாக்க அழிக்கப் பட்டு வருவதை விவரித்துள்ளது. மக்கள் ரசிக்கவும் மலை தேவை என்கிறது.


  பக்கத்து வீட்டு ஆயாவிற்கு வேண்டா வெறுப்பாக உதவி செய்ய சென்றவன் அவளின் அன்பில் நெகிழ்ந்து விடுகிறான். உண்மையிலேயே அவளை ஆயாவாக பார்க்கத் தொடங்குகிறான். 'புதிதாய் மலர்ந்தான்' என்னும் கதை மூலம் வாசிப்பவரையும் புதிதாக மலரச் செய்துள்ளார்.


   உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்களை வறுமை விடாது என்று ' வரக் காப்பி' கதை மூலம் உணர்த்தியுள்ளார். இதன் மொழி வித்தியாசமாக உள்ளது. தந்தையின் உழைப்பைச் சுரண்டி வாழும் ஒரு மகனை ' திருந்திய உள்ளம் ' கதையின் மூலம்
அடையாளம் காட்டியுள்ளார். தந்தையை எமாற்றிய மகனை ஒரு பெண் எமாற்றி திருந்தச் செய்து விடுகிறாள்.


     'முதல் பரிசு ' என்னும் தொகுப்பு மூலம் ஒரு சிறுகதையாளராக பரிணாமம் பெற்றுள்ளதற்காக கவிமதி சோலச்சிக்கு பாராட்டுக்கள். சிறு கதைகளும் உண்டு. சிறுத்த கதைகளும் உண்டு. சமூக பிரச்சனைகளை பேசும் கதைகளும் உண்டு. சாதாரண கதைகளும்
உண்டு. கதைகளின் எண்ணிக்கையைக் குறைத்து கனமான கதைகளை மட்டும் தொகுத்திருந்தால் முதல் பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். சோலச்சி அனைத்துத் தர மக்களையும் கதைகளில் உலாவ விட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்
சோலச்சியை நிறுத்தி பாரர்க்க முடியவில்லை. எதார்த்த வலைக்குள்ளளேயே எல்லா கதைகளும் சிக்கியுள்ளன. அனைத்து கதைகளையும் ஆசிரியரே கூறுவதாக எழுதப்பட்டுள்ளது. வடிவத்தில் மாற்றம் இல்லாததால் வாசிப்பில் சலிப்பு எற்படுவதை உணர முடிகிறது. 

பொன்.குமார்


   ஒவ்வொரு சிறு கதையின் முடிவிலும் அக் கதையின் போக்கை பிரதிபலிக்கும் வகையில் அதன் இறுதி அமைத்திருப்பது சிறப்பு. கவிமதி சோலச்சியின் முயற்சி வரவேற்பிற்குரியது. தொடர்ந்து முயன்று ' முதல் பரிசு' பெற வாழ்த்துக்கள்.

வெளியீடு
இனிய நந்தவனம் திருச்சி 620 003

பொன், குமார்
9003344742


       நூலாசிரியர்  சோலச்சி : 9788210863