Thursday, 31 March 2016

பயணம் .....

   "கடல் பயணத்தில்
    தனியே இயக்கி
    மகிழ்ந்து திரிந்தேன்
    அந்தக் கப்பலில் ....

    நானும் மாலுமிதான்
    என்றபடி
    ஏறிக்கொண்டாய்....!

    நம்பிக்கையோடு
    ஏற்றுக்கொண்டேன்...!

    பயணத்தின் போது
    இயக்கி மகிழ்ந்தாய்
    உன் போக்கில்...!

    பயணம் தொடர்வதெண்ணி
    பின் தொடர்ந்தேன்....!

    பயணத்தின் போது
    பயணியர் இருவர்
    வந்து சேர
    தொடர்ந்தது பயணம் ....!

     காணாமல்
     போய்விடுவாய்
     அவ்வப்போது.....!

     பார்த்திருக்கிறேன்
     பல நேரங்களில் ....!

     இயங்கிக்கொண்டிருப்பாய்
     வேறு சில கப்பல்களில்
     நான் பார்க்கவில்லை
     என்றெண்ணி...!

     எனது கப்பலை
     இயக்கவே
     வேண்டிக்கொண்டேன்
     பல நேரங்களில் ....!

     செவி சாய்த்ததாய்
     தெரியவில்லை ....!

     இப்போதும்
     காணாமல் நீ....!

     எனக்குத் தெரியும்
     ஏதாவது ஒரு கப்பலில்
     இயங்கிக்கொண்டிருப்பாய்..!

     கூட வருவதாய்
     சொன்னதால்தான்
     கூடியிருந்தேன்
     உன்னோடு.....!

     இடமாறும் உன்னை நம்பி
     அல்ல
     எனது கப்பல் ....!

     நடுக்கடலில்
     இப்போது
     நான்....

      அந்த
      பயணியர் இருவருடன்
      கரையை நோக்கி.....!

              - சோலச்சி
                 புதுக்கோட்டை

Tuesday, 22 March 2016

மகிழ்ச்சி ....

நெகிழ்ச்சி .......

     இன்று வழக்கம் போல் எழுந்து சமையல் செய்வதற்கு காய்கறி நறுக்கிக்கொண்டு இருந்தேன். எதிர்பாராத விதமாக கத்தி விரலை பதம் பார்த்து விட்டது.  இரத்தம் வழிந்து கொண்டு இருப்பதைக்கண்ட என் சின்ன மகன் (ஆதவன்)......

      "அப்பா  வெரல சப்புப்பா... வெரல சப்புப்பா... " என்று சொல்லிக்கொண்டே எனது விரலை எடுத்து சப்பச் சொன்னவன், அவனது வாயால் ஊதிவிட்டான்.

    நெகிழ்ந்து போன எனக்கு வலி காணாமல் போய்விட்டது .....

    சின்னவனாக நான் இருந்தபோது விளையாடும்போது தடுமாறி விழுந்துவிட்டேன்.  இடது முழங்காலில் சிராய்ப்பு ஏற்பட்டுவிட்டது. "கண்ண பொடனிலய வச்சுருக்க பாத்து வெளையாட வேண்டியதுதானே. தெங்கனதன திரிஞ்சா இப்புடித்தான் " என்று சொல்லிக்கொண்டே என் அம்மா என் முதுகில் அவரது கைவரிசையை காட்டியது (தர்ம அடி  கொடுத்தது) நினைவுக்கு வர சிரித்துக்கொண்டேன்.

Sunday, 20 March 2016

அரட்டையில் ......

                 பேச்சு வாக்கில்.......

      அன்றொருநாள்,

       நானும் என் அண்ணனும் திருமலைக்கு சென்று விட்டு ரயிலில்‌ வந்து கொண்டு இருந்தோம். வரும் வழியில் அரக்கோணத்தில் ரயில் நின்றது.  என் அண்ணன் ரயில் நிலையத்தை சுட்டிக் காண்பித்து இதுதான்‌  "அரக்கோணம் " என்றார்...

        உடனே நான்
" மீதிக்கோணம் " எங்கே என்றேன்.

        அவர் சற்று யோசித்தவர் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தார் ...

        என் அண்ணனோடு சேர்ந்துவிட்டால் எப்போதும் கலகலதான்......
     
     - சோலச்சி
     
புதுக்கோட்டை

Tuesday, 15 March 2016

ஏற்றம் இல்லை ... தாழ்வும் இல்லை ....

   "அவன் இவன் என்ற
    சாதியை மறந்திடடா...
    அண்ணன் தம்பி  மாமன் மச்சான்
    உறவினை தொடர்ந்திடடா.....!

     உலகை நோக்கி ஓடிட வேண்டாம்
     உன் பின்னால்  வர வேண்டும் ...!
     காலச்சக்கரம் சுழலும்  தானாய்
     முன்னேற வேண்டும் ..! - இது
     அவசர உலகமடா - உன்
     அறிவால் நிலைத்திடடா....!

      குனிந்து குனிந்து ஒடிந்தது போதும்
     முதுகை நிமிர்த்திடடா...!
      தலைவர் ஒருவரே அறிவுலக மேதையே
     அண்ணல் வழியில் நடந்திடடா...! - இது
      களவாணி உலகமடா - உன்னுள்
      களங்கம் வராமல் பாத்துக்கடா....!

      பிறர் துணியை துவைத்தே வெளுத்தே சாகும்
      வேதனை  உனக்கில்லையா...
      மனித கழிவினை மனிதன் அள்ளும்
      கொடுமை புரியலையா - இது
      பொல்லாத உலகமடா - நீ
      பொங்கி எழுந்திடடா....!

       முடியை திருத்தி அழகுற செய்யும்
       மனிதன் முன்னேறக் கூடாதா...
       ஏற்றம் இல்லை  தாழ்வும் இல்லை
       இழி சொல்லை ஒழித்திடடா...  இங்கு
       வாழ பிறந்தோமடா - இதில்
       வெறுப்புகள் ஏனடா....!"

                   - சோலச்சி
                    புதுக்கோட்டை

     13.03 2016 அன்று திருப்பூர் மாவட்டம் உடுமலை கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் சங்கர் (22) படுகொலை செய்யப்பட்டார். இந்த சமூகம் சாதியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆணவக் கொலைகளை அரங்கேற்றி வருகிறது. அரசு வேடிக்கை பார்க்கிறது.... நீதிமன்றங்கள் .......?

   சாதி வெறி பிடித்த வெறியர்களை வன்மையாக கண்டிக்கிறேன்...

         நெஞ்சு பொறுக்குதில்லையே.....
           -முண்டாசு கவிஞர் பாரதி

Sunday, 13 March 2016

பத்தாம் வகுப்பு மாணவர்களிடம்....

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனுபவம்  :

    விடுதியில் தங்கி  நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த பொழுது சித்திவிநாயகர் திரையரங்கில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரையிடப்பட்டிருந்தது. அப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுக்கொண்டு இருந்தது.  பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஆசை. அன்று  புதன் கிழமை.  அதனால் சனி ஞாயிறும் படம் ஓடும் ..  சனிக்கிழமை மதியக் காட்சி பார்த்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் வியாழக்கிழமை காலையில் இன்று இப்படம் கடைசி என்று ஒட்டிவிட்டார்கள். இனிமேல் பார்க்க முடியாதே என்ற நோக்கில் அன்று இரவே இரண்டாவது காட்சிக்கு நானும் நண்பன் பாண்டியன் என்பவனும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டோம். விடிந்தால் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு.  படம் பார்த்துவிட்டு வந்து படுத்தவர்கள் காலை 7.00 மணிக்குதான் எழுந்தோம். எதார்த்தமாய் எழுந்து எப்போதும் பள்ளிக்கு செல்வது போல் எந்த சலனமும் இல்லாமல் சென்று வந்தோம். எதார்த்தங்கள்தான் எப்போதும் வெற்றி பெறும்.  பிறகு மதியம் விடுதி காப்பாளர் அவர்களிடம் திட்டு வாங்கியது எல்லாம் நடந்தேறியது...

      இன்று என்னைச் சந்தித்து வாழ்த்து பெற வந்த என்னிடம் ஐந்தாம் வகுப்பு வரை படித்த (இப்போது பத்தாம் வகுப்பு)  மாணவர்களிடம் என் கதையைச் சொல்லி எதார்த்தமாய் இருங்கள். பதட்டப்படாமல் வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லுங்கள்.  தெரிந்ததை எழுதுங்கள்.. உங்களால் வெற்றி பெற முடியும் என்று வாழ்த்து கூறி அனுப்பினேன்.

    ஆசிரியருக்கு மட்டும்தான் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் கிடைக்கும்...... மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ....

   கடைசியில் சந்தியா என்ற மாணவி (என் மூத்த மகனுக்கு ஆரியா என்று பெயர் வைத்தது இந்த மாணவிதான்)   அய்யா உங்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்டார்.  நான் 342 மதிப்பெண் என்றேன். கடைசிவரை யாரும் நம்பவில்லை....
ஆசிரியர் மேல் இருந்த உயர்ந்த நம்பிக்கைதான் காரணம்....
   
மாணவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....

தலித் வன்கொடுமை....

      தலித்துகள் தொடர்ந்து தாக்கப்பட்டு  படுகொலை செய்யப்பட்டு  வருவது வேதனை அளிக்கிறது. இதற்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது கண்டன குரலை பதிவு செய்யவில்லை என்பது வெட்கி தலை குனிய வேண்டிய ஒன்று ....

     பகிரங்கமாக சாதி மாநாடு நடத்துகிறது. நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது. அந்த கட்சியோடு கூட்டணி வைக்க பல கட்சிகள் வெட்கமின்றி போட்டியும் போடுகிறது.

     தலித்துகளுக்கு எதிராக செயல்படும் எந்த கட்சி வேட்பாளர்களும் வாக்கு கேட்டு வீதிக்கு வந்தால் விரட்டியடிப்போம். தலித்துகளுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படாத யார் வந்தாலும் துரத்தியடிப்போம்.
   
       சாதிய வன் கொடுமைகளுக்கு எதிராக இன்று வரை எந்த கட்சியும் ஒருதீர்மானம் கூட கொண்டு வரவில்லை.  தலித்துகளுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை என்று அறிவிக்க கூட திராணியற்ற முதுகெலும்பற்ற கட்சிகள்தான் இன்று நம் இந்திய தேசத்தில் ....

     இப்படி இருந்தால் எப்படி உருப்படும் தேசம்....?

    தோழர்களே..... தலித் இனத்தைச் சார்ந்தவர்களும் மனிதர்கள்தான் என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்...

        - சோலச்சி
         புதுக்கோட்டை

Thursday, 10 March 2016

எனது " முதல் பரிசு " சிறுகதை நூல் பற்றி கவிஞர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்...

முதல்பரிசு சிறுகதைத் தொகுப்பு நூலாசிரியர் சோலச்சி அவர்களுக்கு முதலில் வாழ்த்துகள்..தமிழ் இலக்கியச் சோலையில் இனிய மணம் கமழும் சிறுகதை மலர்க்கொத்தினை அணிகலனாய்ச் சேர்த்தமைக்கு.

146 பக்கங்களுக்குள் 43 சிறுகதைகளை அழகுறப் படைத்துள்ள தங்களின் முதல் முயற்சிக்குப் பாராட்டுகள்.

நூலின் அட்டைப் படமும்   வடிவமைப்பும் பார்த்தவுடன் வாங்கவும், வாங்கியதும் படிக்கவும் தூண்டும் வண்ணம் நேர்த்தியாக அமைந்துள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கதைகளோடு புதிய பல கதைகளும் இந்நூலில் அணிவகுத்துள்ளமை சிறப்பு.

அத்தனை கதைகளையும் திரும்பத் திரும்ப வாசித்த பின்னரே எனது கருத்தினைத் தங்களோடு பகிர முற்பட்டேன்.

பொதுவாக ஒரு இலக்கியம் என்பது சமகாலச் சமூக நிகழ்வுகளை, படைப்பாளனின் இலக்கினை கற்பனை கலந்து இயம்புவதாக இருக்க வேண்டும் என்பார் புதுமைப் பித்தன். அந்த வகையில் இந்நூலில் பெரும்பாலான கதைகள்  கிராமிய வாழ்வியல் கூறுகளை கருவாகக் கொண்டு அந்தந்த வட்டார வழக்கிலேயே உரையாடல்களை அமைத்து மண்மணம் கமழச் செய்துள்ளமை சிறப்பு.

எல்லாக் கதைகளைப் பற்றியும் விவரிக்காமல் பானைச் சோற்றில் பதம் பார்த்த சில பருக்கைகளை மட்டும் பகிர விழைகிறேன்.

பாலியல் வன்கொடுமைக்கு  ஆளாகிப் பாழாகும் இளந்தலைமுறைக்குப் பாடமாக அமைந்த “நஞ்சுபோன பிஞ்சு” 

இடரிலும், துயரிலும், வாட்டும் வறுமையிலும் மனம் தளராது,  தன்னம்பிக்கையுடனும், சகிப்புத் தன்மையோடும் விடாமுயற்சியோடும்  முனைந்தால் முன்னேற்றம் நிச்சயம் என்பதை உணர்த்தும் “ பட்டமரம்“,

சிறுகுடும்ப நெறி பற்றிப் பள்ளி இலக்கிய மன்ற பேச்சுமூலமாக மகன் தந்தைக்கு அறிவுறுத்துவதாக அமைந்த “முதல் பரிசு” 

இளம் வயதுத் திருமணத்தால் மகப்பேற்றில் மகளிர் அடையும் நலக்கேட்டினை உணர்த்தும் “மன்னிப்பு” 

பேய் பற்றிய மூடநம்பிக்கையைத் தகர்க்கும் ” ஞானஒளி” மழைபெய்ய வழிபாடுகளினும் மந்திரங்களினும் மேல் மரக்கன்று நடுதலே என்பதை சர்வ மதத்தினருக்கும் உரத்துச் சொல்லும் ” மரம்நடுவோம்”, 

”எல்லா மனைவியும் தன்னைப்போலவே தான் புருசனும் இருக்கணுமுன்னு நெனைக்கிறது தப்பா?” என்னும் தேவியின் சாட்டை வீச்சின் மூலம் பெண்சமத்துவம் கூறும் “ பெண்மை” 

மூத்த குடிமக்களை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ” பெருசுகள்” 

கவுரவக் கொலைகளைக் கண்டிக்கும் “ சாம்பல்” 

சாதிக்கும் நட்பிற்கு சாதி இல்லை எ்னபதைச் சித்தரிக்கும் “பிச்சாயி மகன்” ஆகிய கதைகள் நல்ல சமூக மாற்றத்திற்கான படைப்புகள். பாராட்டுகள்.

அறுசுவை அமுத விருந்தாயினும் இலையில் கிழிசல் இருப்பின்  அவ்விருந்தின் சுவை குறைவது போல  இந்நூலில் நிறைய அச்சுப் பிழைகள் தவிர்த்திருக்கலாம். 

நிறைய ஒற்றுவிடுதல்கள்,லகர,ளகர, டன்னகர றன்னகர பிறவல்கள்,( எ-டு - வேண்டும் என்பதன் பேச்சுவழக்கு வேணும், திருந்தவேண்டும் என்பது திருந்தணும் என்றுதான் வரும்) காற்புள்ளி, அரைப்புள்ளி, மேற்கோள்குறி, வினாக்குறி ஆகியன அதற்குரிய இடங்களில் இடப்படாதது வாசகனின் வாசிப்பு ஆர்வத்திற்குத் தடையாகவே அமையும்.

அதேபோல ஒருபக்க, இரண்டு பக்கச் சிறுகதைகளில் இயற்கை வருணனைகள் பொருத்தமான இடங்களில் மட்டும் அமைந்தால் சிறப்பு.

ஒரு சிறுகதை என்பது பந்தயக்குதிரையின்  பாய்ச்சலைப் போல இருக்கவேண்டும். எடுப்பு, தொடுப்பு, முடுக்கம், திருப்பம், முடிப்பு என்னும் படிநிலையில் அமைந்தால் விறுவிறுப்பும் கதையின் சுவையும் குறையாது.

எல்லாக் கதையும் ஒரு தீர்வைச் சொல்ல வேண்டுமென்பதில்லை. சிலவற்றை வாசகனின் முடிவுக்கேகூட விட்டுவிடலாம்.  

ஒருவாசகன் என்ற முறையில் எனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன்,  அடுத்தடுத்த படைப்புகள் மேலும் மெருகுபெறவேண்டுமென்னும் நல்லெண்ணத்தோடு. 

தொடர்ந்து படையுங்கள்... வாழ்த்துகள்.  

                                                    பாவலர் பொன்.கருப்பையா.

எனது "முதல் பரிசு " சிறு கதை நூல் பற்றி கவிஞர் சுகன்யா ஞானசூரி

நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)

FRIDAY, OCTOBER 23, 2015

முதல் பரிசு-சிறுகதைத் தொகுப்பு-வாசிப்பு அனுபவம்

"முதல் பரிசும் சிறுகதைக்கான எனது முதல் பதிவும்"
- சுகன்யா ஞானசூரி.

கவிமதி சோலச்சியின் "முதல் பரிசு" சிறுகதைத் தொகுப்பு இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இந்நூல் கவிஞரின் முதல் நூலும் கூட. சிறுகதையை முதல் தொகுப்பாக வெளிக்கொண்டு வந்த கவிஞருக்கு முதலில் எனது வாழ்த்துகள்..... 43 சிறுகதைகள்... நூல் முழுமையும் நிறைய பாத்திரப் படைப்புகள்.... பாக்யா வார இதழ், தாழம்பூ இதழ் ஆகியவற்றில் பிரசுரமான கதைகளும் அடக்கம்.
புதுக்கோட்டை மண் மணம் மாறாத பாத்திரப் படைப்புகள். சமூகத்தில் பீடித்திருக்கும் வறுமை, சாதியக் கொடுமை போன்றவைகள் இவரது சிறுகதைகளில் விரவிக் கிடக்கிறது. விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாகவும் சில சிறுகதைகள் படைத்துள்ளார்.
இத்தொகுப்புக்கு "சாம்பல்" அல்லது "கீரிமலை" எனப் பெயர் சூட்டியிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. முதல் தொகுப்பு என்பதால் சென்டிமென்ட் கருதி தலைப்பை மாற்றியிருக்கக் கூடுமென கருதுகிறேன். இது ஆசிரியரின் உரிமை.
43 சிறுகதைகளில் என் மனதைத் தொட்டவை, தைத்தவை மொத்தம் 28 கதைகளே. மற்றக் கதைகள் பிடிக்கவில்லை என்பது அர்த்தமில்லை.... பெரிதாக எனக்கு தாக்கத்தை உண்டுபணவில்லை. அவ்வளவே. சில கதைகளை வேகமாக முடித்து விடுகிறார். "ஆட்டுக்கறி" கதையை இன்னும் சற்று நீட்டி விடமாட்டார எனும் ஆர்வத்தை வாசிப்பாளனிடம் தூண்டவும் செய்கிறார். இதுதான் சிறந்த கதையாளனுக்கான உக்தி.
"கீரிமலை" கதையில் வரும் இரவி கதாபாத்திரம் இன்றைய தலை சிறந்த மனிதர் சகாயம் அவர்களை பிரதிபலிக்கிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் எதையும் விட்டுச் செல்லப் போவதில்லை எனும் ஆதங்கம் மேலிடுகிறது. அந்த கீரிமலையும் மேலூர் கீழவளவு மலையும் ஒன்றாகவே வாசிக்கும் என் மனதுக்குள் படர்கிறது.
கவுரவக் கொலைகளில் பலியான இளவரசன், கோகுல்ராஜ் போன்றவர்கள் இப்படித்தான் இரையாகிப் போயிருப்பார்கள் என்பதை "சாம்பல்" சிறுகதை உணர்த்துகிறது. அந்த மீனாட்சியின் கதறல் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது எரியும் நெருப்பின் ஜுவாளைகளினூடாக. அடக்கியாளும் சமூகத்தின் காதுகளுக்கு அவளின் கதறல் கேட்பதில்லை.
இதுபோன்ற இன்னும் நிறைய சிறுகதைகளை யாக்குவதற்கு கவிஞர் சிறுகதைகளின் முன்னோடிகளின் எழுத்துகளை நிறைய வாசிக்க வேண்டும். சில கதைகள் சிறுகதை வரையறைக்குள் வராமல் குறுங்கதை, ஒரு நிமிடக் கதையின் தொனியிலும் வருகிறது. இவற்றைச் சரிசெய்து இன்னுமொரு சிறப்பான தொகுப்பைத் தருவார் நண்பர் கவிமதி.சோலச்சி எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
புதுக்கோட்டை மண் பல படைப்பாளிகளை உருவாக்கும் கலைக்கூடம்.... அந்தக் கலைக்கூடத்தின் முதல் படியில் சோலச்சி தனது தடத்தை பதித்து விட்டார் என்றால் மிகையல்ல. புதிய படைப்பாளர்களின் பதிப்புகளை வெளியிட்டு அறிமுகம் செய்கின்ற இனிய நந்தவனம் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.....உங்கள் எழுத்து சிறக்க வாழ்த்துகள் சோலச்சி.....
(பின்குறிப்பு: இது விமர்சனம் அல்ல; எனது வாசிப்பு அனுபவக் கருத்தே)
நூல் : முதல் பரிசு (சிறுகதைகள்)
ஆசிரியர் : சோலச்சி
முதல் பதிப்பு : ஜூலை 2015
வெளியீடு : இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி.
விலை : ரூ 80/-
தொடர்புக்கு பேச : 9443284823 (பதிப்பகம்), 9788210863 (ஆசிரியர்).

Wednesday, 9 March 2016

எனது படைப்புகளை வெளியிட்ட இதழ்கள் ....

   எனது படைப்புகளை வெளியிட்டு (அச்சில்)  பெருமைப்படுத்திய வார, மாத நாளிதழ்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள்.......

             ஏழைதாசன்
  
             இனிய நந்தவனம்

              பஞ்சாயத் எகஸ்பிரஸ்

              பாக்யா

              கவிக்காவிரி

              தாழம்பூ

              பொதிகைமின்னல்

              தமிழ் முரசு

             ஆனந்த விகடன்

              நடுநிசி

             அரசியல் தர்பார்
  
             கருப்பை

             படைப்பாளிகள்

              வான்மலர்

              சிகரம்

             புதிய "ழ "

             வார முரசு

             புதிய பாரதம்

              பாவையர் மலர்

              அமுதம்

               தினகரன்

              குடும்ப மலர்

               வளரி

                நீல நிலா

                கல்கண்டு

                புதிய உறவு

                புதுகை தந்தி

                வெற்றி முனை
   
        புதுவை கவிதை வானில்
    
        தமிழக கவிஞர் கலை இலக்கிய சங்கம்

     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

      உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்

    கோவை வசந்தவாசல் கவி மன்றம்

     திசைகள் கலை இலக்கிய பெரு மன்றம்

         அனைத்து இதழ்களுக்கும் இலக்கிய அமைப்புகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி.....

             - நட்பின் வழியில்

              சோலச்சி
           
              புதுக்கோட்டை