Thursday, 28 July 2016

அண்ணல் அம்பேத்கர்

பகிர்வு செய்தி...
(உண்மையை உணர்வோம்)

அம்பேத்கர் சா'தீய' தலைவரா...
போடா முட்டாள்!
நீங்கள்..
என்றைக்காவது பாடசாலையில் கோணிப் பையில் தனியாக அமர வைக்கப்பட்டிருக்கிறீர்களா?

ஆடு மாடுகள் குடிக்கும் குளத்தில் தாகத்திற்காக தண்ணீர் குடித்த போது துரத்தியடிக்கப் பட்டிருக்கிறீர்களா?

ரோட்டோர வீட்டில் மழைக்கு ஒதுங்கியதற்காய் உதைத்து தள்ளப்பட்டிருக்கிறீர்களா?

என்றைக்காவது அரைகுறையாய் முடி வெட்டிய தலையோடு விரட்டி அடிக்கப்பட்டிருக்கிறீர்களா?

தலித் என்பதற்காகவே நீங்கள் பயணம் செய்த‌ வண்டிகள் கவிழ்க்கப்பட்டு இருக்கின்றனவா?

அமெரிக்காவில் டாக்டர் பட்டம் வாங்கி வந்து அதிகாரி ஆன‌ பிறகும் உங்களுடைய‌ வேலையாளே உங்கள் மீது தீண்டாமை பாய்ச்சி இருக்கிறானா?

மலத்தை வாயில் திணிக்கப்பட்ட மக்களுக்காக நீதிக் கேட்டு 'துராத்மா'க்களால் ஒரு முறையாவது நீங்கள் அவமதிக்கப்பட்டு இருக்கிறீர்களா..?

''இல்லை'' என்றால்......

நிச்சயமாக,உங்களுக்கு அம்பேத்கரின் அருமை தெரியாது!
அன்றைக்கு தொட்டால் தீட்டு,பட்டால் தீட்டு என பழித்துரைக்கப்பட்ட அம்பேத்கர் தான் இன்று உலகமே உச்சி முகரும் இந்திய அரசிலமைப்பு சட்டத்தை தீட்டு தீட்டுவென தீட்டியவர்.அந்த தீண்ட தகாதவனின் வியர்வை சிந்திய‌ அரசியலமைப்பு சட்டத்தை தீண்டாமல் இந்தியாவில் ஜனாதிபதி,பிரதமர்,முதலமைச்சர் என எந்த அதிகார மையத்தாலும் ஒரு நொடிக் கூட செயல்பட முடியாது.அடுத்த வல்லரசு 'இந்தியா' தான் என பீற்றி திரியும் சூரப்புலிகளுக்கு,'இந்தியாவின் பொருளாதாரத்தை தீமானிக்கும் 'ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா' யாருடைய உழைப்பால் உருவானதென எப்படி தெரியும்? தேசிய கொடி உருவாக்கத்தின் போது மூவண்ண கொடிக்கு மத்தியில் நயவஞ்சகமாக யோசித்த உங்கள் தேசதந்தை காந்தி,காங்கிரசின் சின்னமான 'ராட்டையையும்',சவார்க்கர் இந்துக்களின் அடையாளமான 'ஓம்' முத்திரையும் தான் போட வேண்டும் என அடம்பிடித்த போது 'அனைவரும் சமம்' என பறைச்சாற்றும் 'அசோக சக்கரத்தை' தான் போட வேண்டும் என வலியுறுத்திய அம்பேத்கரை,இன்றைக்கு தேசிய கொடியை சட்டையில் குத்தி கொண்டு திரியும் 'ஜெய்ஹிந்த்'களுக்கு எப்படி தெரியும்? வேண்டுமானால் 'அவனின்றி அணுவும் அசையாது' என்ற சொல்லாடல் பொய்யாக இருக்கலாம்.ஆனால் இந்தியாவில் 'அம்பேத்கர் இன்றி அணுவும் அசையாது'என்பதே பேருண்மை!
அரசியல்,பொருளாதாரம்,சமூகம்,சட்டம்,வணிகம்,வரலாறு,தத்துவம்,கல்வி,மொழியியல்,இதழியல்,சமயம் என அனைத்து துறைகளிலும் கற்றறிந்த ஒரே மேதை இந்தியாவிலே அம்பேத்கர் மட்டுமே.ஆனால் அவரை பற்றி உப்பு சப்பில்லாமல் அரைப்பக்கத்திலே கடந்து போகிறது நமது பாடத்திட்டம்.'வர்க்க பேதத்திற்கு எதிராக அறிவாயுதம் ஏந்திய மார்க்ஸ்,லெனினினுக்கு அடுத்து லண்டன் மியூஸிய நூலகத்தை முழுமையாக கரைத்து குடித்தவர் பிறவி இழிவான சாதிய வர்க்கத்திற்கு எதிராக போராடிய‌ அம்பேத்கர் மட்டுமே.ஆனால் அவர் எழுதிய பல கட்டுரை தொகுதிகளை மறைத்து வைத்து இன்னமும் பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறது 'பூணூல்' இந்தியா.
''ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழே.ஆதலால் இந்தியை விட தமிழுக்கே இந்தியாவின் தேசிய மொழியாகும் எல்லா அருகதையும் இருக்கிறது''என எந்த பச்சை தமிழனும் பேசாததை,உரத்த குரலில் பாராளுமன்றத்தில் வெடித்த‌ அம்பேத்கரின் சிலைக்கு செருப்பு மாலை போடாத கிராமங்களே தமிழகத்தில் இல்லை.''நாய்களை விடவும்,பன்றி விடவும் கேவலமாக எம்மக்களை நடத்தும் இந்து மதத்தையும்,இந்த நாட்டையும் எப்படி எங்களின் சொந்த மதமாகவும், சொந்த நாடாகவும் கருத முடியும்?''என காந்திக்கு எதிராக வீசப்பட்ட அம்பேத்கரின் முதல் கேள்விக்கு இதுவரை எந்த மகாத்மாவும் பதிலும் சொல்லவே இல்லை.தீண்டாமையை,சாதியை ஒழிக்க முற்பட‌வில்லை.இந்திய திருநாடு என ஜால்ரா அடிப்பதையும் நிறுத்தவில்லை!
''இந்தியாவில் காலந்தோறும் மகாத்மாக்கள் வந்தார்கள்.மகாத்மாக்கள் மறைந்தார்கள்.ஆனால் தீண்டப்படாதவர்கள் மட்டும் தீண்டப்படாதவர்களாகவே இருக்கிறார்கள்''என லண்டன் வட்டமேஜை மாநாட்டில் மகாத்மாக்களை அம்பேத்கர் வறுத்தெடுத்த‌ போது,மிஸ்.ஸ்லேடுடன் கடலை போட்டுக்கொண்டிருந்த காந்தி 'மகாத்மா'வானார்.ஒட்டுமொத்த இந்திய மக்களுக்காகவும் துடித்த அம்பேத்கருக்கு 'துரோகி,ஆங்கிலேயனின் கைக்கூலி,மகர் நாய்' என்ற பட்டங்களை பம்பாயில் வழங்கி,உருவ பொம்மையையும் கொளுத்தியது காந்தியின் ஹரிஜன சேவா சங்கம்.ஒரு கட்டத்தில் தேசிய அரசியலில் அம்பேத்கரின் வளர்ச்சியை தாங்க முடியாமல் அம்பேத்கர் 'தலித்தே' இல்லை என தலித்துகளின் வாயாலே சொல்ல வைத்தது காந்தியின் காங்கிரஸ்.'அப்படியென்றால் எங்களை ஹரிஜன சேவா சங்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள்'என ஹரிஜன மக்கள் கேட்ட போது,' நாங்கள் ஹரிஜன மக்களுக்காக போராடுவோம்.அவர்களை உறுப்பினர்களாக எல்லாம் சேர்த்து கொள்ள மாட்டோம்'என உடனே பல்டியடித்தார் தேசபிதா.இது தான் உண்மையிலே சத்திய சோதனை!
கார்ல் மார்க்ஸை வர்க்கத் தலைவர்' என்றும் 'அம்பேத்கரை சாதீய தலைவர்' என குறுகிய வட்டத்திற்குள் அடைக்க முயல்பவன் உலகிலே பெரிய முட்டாள்.
-gemsvathiyar

Monday, 25 July 2016

திரு. காந்தி - அண்ணல் அம்பேத்கர்

பகிர்வு செய்தி....

இந்த காட்சி படிமங்கள் உணர்த்தும் அரசியல் நுணுக்கமானது .....உண்மையை புரிஞ்ச]

;ஒருவன் கபாலியை கொண்டாடுவான்....உண்மையை எதிர்கொள்ள முடியாதவன்{கபாலியோட மொழியில் சொன்னா ஆண்டைகள்}தலித்  அல்லாதோர் கூட்டியக்கம் கட்டி குடிசைகளை தேடி அலைவான் கொளுத்தி போட.......சரி கபாலிக்கு வருவோம்....இப்படத்தில் ஒருவசனம் வருகிறது.....காந்தி சட்டைகூட போடாமல் தன்னை ஒரு எளிய வாழ்க்கை வாழும் மகாத்மாவாக காட்டிக்கொண்டதற்கும், அம்பேத்கர் கோட்-சூட் அணிந்துகொண்டதர்க்கும் பின்னாடி ஒருஅரசியல் இருக்கு என்று கபாலி பேசுவார்....இந்த நூறாண்டுகால இந்திய சினிமாவிலும், எழுவது ஆண்டுகால தமிழ் சினிமா வரலாற்றிலும் இப்படி ஒரு உரையாடைலை நான் கேட்டதில்லை....அதுவும் கதையின் நாயகன் பேசுவதாக...காந்தி, அம்பேத்கர் என்கிற இரண்டு  ஆளுமைகள் வெளிப்படுத்திய நுட்பமான அரசியலை பொது ஊடக வெளியின் விவாதத்திற்கு உட்படுத்திய இயக்குனரின் நேர்மை கவனிக்கப்படவேண்டியது...காந்தியின் துறவு{ அதாவது சட்டையை கூட ஆடம்பரம் என்று கருதி நிராகரிக்கும் மகாத்மாவின்மனநிலை} பற்றி பேசுவோம்...காந்தி தான் எப்போதும் ஏழையினும் ஏழையாக வாழ விரும்புவதாக கூறியே வந்திருக்கிறார்....என்னுடைய கேள்வி இதுதான்...ஏழ்மை என்பது வெறும் உணவோடும் , பணத்தோடும், வாழிடத்தோடும் மட்டுமே சம்மாந்தப்பட்டதா? சாப்பிட வழியில்லாமல் இருப்பதும் , உடுத்த உடைஇல்லாமல் இருப்பதும் மட்டுமே ஏழ்மையா? ஏழ்மைஎன்பது இவைகள் இருப்பது, இல்லாமல் இருப்பதை பற்றிஅல்ல...அது.அதிகாரத்தோடு சம்மந்தப்பட்டது....௨௦௦௦ ஆண்டுகளாக கூலிகளாக, கொத்தடிமைகளாக, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாக, விலங்கினும் கீழாக நடத்தப்பட்டவர்களாக, எதிர்த்து கேள்வி எழுப்ப அனுமதிக்கபடாதவர்களாக, கல்வி மறுக்கப்பட்டவர்களாக, தங்களின் உடலுழைப்பை சுரண்டி,  கையளவு நெல்மணிக்காக வீட்டின் புழக்கடை பக்கம் நிறுத்திய ஆண்டைகளின் கருணைக்காக? தன்மானம் இழந்தவர்களாக, தெருக்களில் எச்சில் துப்பினால் தண்டிக்கப்படுபவர்களாக, மாராப்புசேலை உடுத்தினால் மார்பு அருக்கப்படுபவர்களாக, இப்படி மகாத்மா எப்போதும் கைகளில் வைத்திருக்கும் பகவத்கீதை போதித்த மனுதர்ம வாழ்வியல் நெறிகளுக்கு? உட்பட்டே வாழ வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டவர்களாக , இருத்தலுக்காக மாபெரும் துயரங்களை வரலாறு நெடுகிலும் சுமந்து வந்த,,,, ஒரு சமூகம் அதிகாரத்தை விட்டு நெடுந்தூரம் தள்ளி வைக்கப்பட்ட சமூகம்.....ஏழ்மை என்பது வெறும் பணத்தோடு சம்மந்தப்பட்டதுஅல்ல...அது அதிகாரமற்று இருப்பது....அனால் காந்தி ஒருஅரசியல்வாதியாக அதிகாரத்தை கைக்கொள்ளவே விழைந்தார்....அதை சிறப்பாகவே செய்தார்....1930.களில் இந்தியாவின் மிகஅதிகாரம் படைத்தவராகவே காந்தி இருந்தார்...நீங்கள் அதிகாரம் படைத்தவராக இருந்தால் எளிமையாக வாழலாம்...ஆனால் ஒருபோதும் ஏழையாகமுடியாது...இந்த சமூகத்தில் பஞ்ச பராரிகள் அரைநிர்வாணமாக அலைவது யாருடைய கருணைக்கும் உகந்ததுஅல்ல...ஆனால் அதிகாரத்தோடு தொடர்புடைய பெரும் கோடீஸ்வரர்கள் கதர்சட்டை போட்டுக்கொண்டிருப்பதுதுதான்....இங்கு எப்போதும் பொதுபுத்தியை கவரும்.....அம்பேத்கர் ஏழையாகவே பிறந்தார் அவரிடம் துறப்பதற்குஉடமைகள் எதுவும் இல்லை....காந்தியிடம் துறப்பதற்கு நிறைய உடமைகள்இருந்தன....அதனாலே காந்தியின் துறவும் , எளிமையும் அவரை , அவரின் மகாத்மா பிம்பத்திற்கு வலிமை சேர்த்தன.....காந்தி தன்னை எளியவனாக , ஏழ்மையாக வைத்திருக்க தென்ஆப்பிரிக்காவில் பலஏக்கர் விலைநிலங்களும் , இயற்கைவழியிலான பழ மரங்களும் தேவைப்பட்டன.....இந்த எளிய வாழ்க்கைக்கு நிதி அளிப்பவர்களாக அவரின் நெருங்கிய நண்பர்கள் பிர்லாவும், பணக்காரகட்டிடக்கலை நிபுணர் ஹர்மன் அவர்களும் அவருக்கு உதவியாக இருந்தார்கள்...காந்தி தொடங்கிய பத்திரிகையின் முக்கிய புரவலர் பிர்லா..ஹர்மன் அவர்கள் ஜோகன்ச்பெர்கில் 110 ஏக்கர் நிலத்தை தந்து காந்தியின் எளிமைக்கு துணை நின்றார்....ஆனால் அம்பேத்கர் கோட்-சூட் அணிவதை எதிர்ப்பு அரசியலின்குறியீடாகத்தான் வெளிப்படுத்தினார்...அம்பேத்கர் எளிமையாக வாழ முயற்சி மேற்கொண்டதில்லை,,சுயமரியாதையோடு வாழவே போராடினார்...ஏனெனில் அம்பேத்கர் ஒருபோதும் தன்னை சுற்றி மகாத்மா பிம்பத்தை கட்டிஎழுப்ப விரும்பியவர் இல்லை..ஒருகையில் பகவத்கீதையை வைத்துக்கொண்டே  சமத்துவம் பேசும் மகாத்மாவை எதிர்த்து தனது வாழ்நாளெல்லாம் கத்திமுனை கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தவர் அவர்.சுயமரியாதை என்பது நான் என்னஉடுத்த வேண்டும், என்னசாப்பிடவேண்டும் என்று நீ தீர்மானிக்ககூடாது....அது எனது விருப்ப உரிமையோடு தொடர்புடையது என்று சொல்லித்தான் தன்னை வெளிப்படுத்தினார்.....உரிமையும் தன்மானமும் ஒன்றுக்கொன்று நேரடி தொடர்புடையவை......தனமானம் வேண்டுபவன் சாதி இழிவை ஏற்க்க மாட்டான்.....சாதிஇழிவை எதிர்ப்பவன் இந்து மதத்தை ஏற்க்க மாட்டான்.....ஆனால் காந்தி ஒரு நல்லஇந்துவாகவே இருக்க  ஆசைப்பட்டார்.....அம்பேத்கர் இந்துவாக சாக விரும்பவில்லை......காந்தியின் எளிமை அவரால் அவர்மீது வலிந்து திணித்து கொள்ளப்பட்டது....அம்பேத்கரின் கோட்-சூட் மானுட சமத்துவத்திற்கான அடையாளம்....அவரின்உடல்மொழி அடக்குமுறைக்கான எதிர் வினை.....ஆண்டைகளுக்கான எதிர்ப்பு அரசியல்.....இதுதான் கபாலி மின்வைக்கும் அரசியலாக பார்க்கிறேன்....மகிழ்ச்சி.....

Sunday, 24 July 2016

தமிழ்நாடு மாவட்டங்கள்

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💕❤💕❤❤
தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் வரலாறு

1.அரியலூர் மாவட்டம் 2001 ஜனவரியில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட அரியலூர், 2002-ல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் நவம்பர் 23, 2007-ல் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் 3 முக்கிய நகரங்களாக அரியலூர், உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன. இவற்றில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் நிலக்கரி படிமங்களாக கிடைக்கிறது.

2.இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்துக்காக புகழ்பெற்ற இராமேஸ்வரம் நகரம் இராமநாதபுரம் மாவட்டத்தில்தான் அமைந்திருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்துக்கு வடக்கே சிவகங்கை மாவட்டமும், மேற்கே மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக இராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன. 

3.ஈரோடு மாவட்டம் பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் ஈரோடை எனப்பெயர்பெற்று பின்னர் அதுவே ஈரோடு ஆனது. ஈரோடு மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, 1979-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது.

4.கடலூர் மாவட்டம் உப்பனாறு, பரவனாறு போன்ற நதிகள் இங்கு கடலோடு கூடுவதால் கூடலூர் என்று பெயர்பெற்று அதுவே பின்னர் 'கடலின் நகரம்' என்ற பொருளில் கடலூர் என்று அழைக்கப்படலாயிற்று. புகழ்பெற்ற சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம் காடுகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கடலூர் மாவட்டத்தில் தான் அமைந்திருக்கின்றன.

5.கரூர் மாவட்டம் 1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கரூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக கரூர் மற்றும் குளித்தலை நகரங்கள் அறியப்படுகின்றன.

6.கன்னியாகுமரி மாவட்டம் குமரித் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் மார்சல் நேசமணியின் தலைமையில் நடந்த விடுதலை போராட்டத்தின் வெற்றியாக நவம்பர், 1956-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட 4 நகராட்சிகளை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும். 

7.காஞ்சிபுரம் மாவட்டம் அறிஞர் அண்ணா பிறந்த இடம், பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகர், பட்டுப்புடவை என்று பற்பல விஷயங்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் புகழோடு அறியப்படுகிறது. இந்த மாவட்டத்தில் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட ஆலயங்கள் உள்ளன.

8.கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாட்டின் 30-வது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக ஓசூர் நகரம் அறியப்படுகிறது.

9.கோயம்புத்தூர் மாவட்டம் பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் சிறுவாணி ஆற்றின் நீர் உலகிலேயே 2-வது சுவையான நீராக கருதப்படுகிறது.

10.சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி ஆகிய 7 வட்டங்களை உள்ளடக்கியது. இவற்றில் காரைக்குடி நகரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது.

11.சென்னை மாவட்டம் தமிழகத்தின் தலைநகரம் சென்னையை மையமாக கொண்டு அமையப்பெற்ற சென்னை மாவட்டத்துக்கு என்று தனியாக தலைநகரம் எதுவும் கிடையாது. சென்னை மாவட்டம் மெரினா கடற்கரை, பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்றவருக்காக புகழ்பெற்றது.

12.சேலம் மாவட்டம் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேலத்திலிருந்து பிரிக்கப்படுவதற்கு முன் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் மாவட்டமே அறியப்பட்டு வந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கிவரும் மேட்டூர் அணை, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.

13.தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாட்டின் அரிசிக்கின்னம் என்று அறியப்படும் தஞ்சாவூர் மாவட்டம் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திரப் புகழ் வாய்ந்த மாவட்டம். உலகப்புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றுக்காக தஞ்சை மாவட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக திகழ்ந்து வருகிறது.

14.தர்மபுரி மாவட்டம் கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் தர்மபுரி மாவட்டம் கோயில்களுக்காகவும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இவற்றில் சென்றாய பெருமாள் கோயில், ஒகேனக்கல் அருவி ஆகியவை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாகும்.

15.திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1985-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக கொடைக்கானல் திகழ்ந்து வருகிறது. இதுதவிர முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் 

16.திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சி மாவட்டம் வடக்கில் சேலம் மாவட்டத்தையும், கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தையும், தெற்கில் மதுரை மாவட்டத்தையும், மேற்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான அணையாக கருதப்படும் கல்லணை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.

17.திருநெல்வேலி மாவட்டம் 1790-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ல் திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. தாமிரபரணி ஆறு பாயும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் ஆலயம், அகஸ்தியர் அருவி ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

18.திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம். 2008-ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதன் பிறகு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.

19.திருவண்ணாமலை மாவட்டம் 1989-ஆண்டு வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை சம்புவரயர் மாவட்டம் மற்றும் வ. டஆற்காடு அம்பேத்கர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் 1996-ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது

20.திருவள்ளூர் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாக பிரித்தபோது திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

21.திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம் சோழர்களால் 1-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தியாகராஜஸ்வாமி திருக்கோயிலுக்காக மிகவும் புகழ்பெற்றது.

22.தூத்துக்குடி மாவட்டம் துறைமுக நகரம் என்றும், முத்துக்களின் நகரம் என்றும் சிறப்பித்து கூறப்படும் தூத்துக்குடி நகரத்தை தலைநகரமாக கொண்டு தூத்துக்குடி மாவட்டம் செயல்பட்டு வருகிறது.

23.தேனி மாவட்டம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஜூலை 25, 1996-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மேகமலை, சுருளி நீர்வீழ்ச்சி, போடி மெட்டு ஆகியவை அறியப்படுகின்றன.

24.நாகப்பட்டினம் மாவட்டம் 1991-ஆம் ஆண்டு, அக்டோபர் 18-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம் மிகுந்த மாவட்டம் என்று அறியப்படுகிறது

25.நாமக்கல் மாவட்டம் 1997-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில், கொல்லிமலை ஆகியவை அறியப்படுகின்றன.

26.நீலகிரி மாவட்டம் மலைகளின் ராணி ஊட்டியை தலைநகரமாக கொண்டு நீலகிரி மாவட்டம் செயல்பட்டு வருகிறது. ஊட்டியை தவிர குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

27.புதுக்கோட்டை மாவட்டம் ஜனவரி 14, 1974-ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக சித்தன்னவாசல், விராலிமலை ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.

28.பெரம்பலூர் மாவட்டம் 1995-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

29.மதுரை மாவட்டம் திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. மதுரை மாவட்டம் மீனாட்சியம்மன் கோயில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, திருப்பரங்குன்றம், திருமலை நாயக்கர் மஹால், பழமுதிர்ச்சோலை ஆகியவற்றுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலம்.

30.விருதுநகர் மாவட்டம் தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், வடமேற்கில் தேனி மாவட்டமும் விருதுநகர் மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களாக சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகியவை அறியப்படுகின்றன.

31.விழுப்புரம் மாவட்டம் 1993-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வரலாற்று புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.

32.வேலூர் மாவட்டம் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே வேலூர் இருந்தது. பின்னர் 1989-ல் வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996-ல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺