சனி, 4 பிப்ரவரி, 2023

சனவரி2023 இனிய நந்தவனம் இதழில்

 நந்தவனம் சந்திரசேகரன் அவர்களின் கவிதை குறித்து....

இலக்கிய உலகில் சிற்றுதழ்களின் வளர்ச்சி கேள்விக்குறியாகவே இருக்கிறது என்றும் அதை தொடர்ந்து நடத்தமுடியவில்லை என்றும் பரவலான கருத்து இருக்கிறது.  இந்த மாத இதழை பொண்டாட்டி தாலியை அடகு வைத்துதான் கொண்டு வந்தேன் என்று சொல்லும் பலரைப் பார்த்திருக்கின்றேன். எதையுமே சாதித்துக் காட்டுவதென்பது சவலானதுதான். குறிக்கோளில் உறுதியாய் இருந்து உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து வெளிவரும் இனிய நந்தவனம் இதழின் ஆசிரியர் என் இனிய நண்பர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்களைச் சான்றாகச் சொல்லுவேன்.



      இதழைத் தொடர்ந்து நடத்துவதற்கு புதிய புதிய உத்திகளை கடைபிடித்து தொய்வில்லாமல் இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெற்று இருபத்தாறாம் ஆண்டில் வெற்றிநடை போடுகிறது இனிய நந்தவனம்.
     ஊருக்கொரு கவிஞர் என்ற நிலைமை மாறி இல்லம்தோறும் கவிஞர்கள் என்றாகிவிட்டது. எல்லோருமே தங்களுக்கான நடையொன்றை உருவாக்கி அவரவர் படைப்புகளில் மேலோங்கி நிற்கின்றனர். படைப்பாளிகள் எல்லோருமே தங்கள் படைப்புகள் பிறரால் கவனிக்கப்படாதா என்றே எண்ணுகின்றனர். அந்த எண்ணம் ஏற்புடையதுதான்.
    இனிய நந்தவனம் இதழை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற வகையில் நண்பர் சந்திரசேகரன் அவர்களின் கவிதைகளையும் தொடர்ந்து கவனித்து வருகின்றேன். அவை நாளுக்குநாள் மெருகேற்றி மிளிர்கின்றன. இனிய நந்தவனம் இதழில் கடைசி பக்கத்தில் இடம்பெறும் அவரது கவிதைகள் பலராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது.

சனவரி 2023 இதழின் கடைசி பக்கம் இடம்பெற்ற கவிதைகளை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
    இந்த பிரபஞ்சம் கடவுள் என்ற ஒற்றைச் சொல்லில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. சொல் என்பது வெறும் சொல் மட்டுமே. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இப்போது வரை தெரியவில்லை.  தெரியவும் வாய்ப்பில்லை.  காரணம், கொரணா பெருந்தொற்று காலம் வரை கடவுளின் செயல்பாடுகளை கவனித்துவிட்டோம். இருந்தாலும் கடவுள் பற்றிய அரசியல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.  இருக்கு என்று நம்புகிறவர்களுக்காவது கடவுள் நல்லது செய்யட்டும் என்பதே நமது எண்ணம்.


 
    கடவுளை வைத்துதான் முதல் கவிதையை படைத்திருக்கிறார். கவிஞர்,  கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறார். அப்போது கடவுள் அவரைக் கடந்து போனதாக உணருகிறார். ஒருவேளை அவர் கடவுள்தானா என்ற ஐயம் கவிஞருக்குள் எழுகிறது. ஏன் அவர் கடவுளாக இருக்கக்கூடாது என்று கவிஞருக்குள் தோன்றுகிறது.  கடவுளை வணங்குபவர்களிடம் கேட்டால் ''இவ்வளவு பெரிய சாதனையை நான் எங்கே செய்தேன். கடவுள்தான் செய்தார் என்பார்கள். எடுத்தது தொடுத்தது எல்லாவற்றுக்கும் கடவுளையே சாட்டுவார்கள். அந்தளவுக்கு கடவுளின் மீது கொண்ட பேரன்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
     கடவுளை யாரெல்லாம் பார்த்திருக்கின்றீர்கள் என்று  கேள்வியும் எழுப்புகிறார் கவிஞர். இந்தக் கேள்வியை நாம் யாரிடமாவது கேட்போமானால் நம்மை திமிர் பிடித்தவன் என்றும் நாத்திகன் என்றும் இவனுக்கெல்லாம் பட்டால்தான் புத்தி வரும் என்று சொல்வார்கள்.  கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொல்லுவார்கள்.
      எது எப்படியோ..... "கடவுளின் வாசனை எங்கும் வியாபித்திருந்தது" என்று நிறைவாக முடித்துள்ளார் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் அவர்கள். 
    
       இந்தியாவைப் பொறுத்தவரை கடவுளின் அரசியல்தான் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. அந்த கடவுளின் அரசியலில் மதநல்லிணக்கம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
     மற்றொரு கவிதை பிரபஞ்சத்தின் காலடியில் என்ற தொடங்குகிறது.  இரண்டாவது கவிதையின் ரசனையை வாசித்து உணர முடியும். சிறப்பான படைப்புகளால் இலக்கிய உலகில் இடைவிடாது இயங்கிக்கொண்டு இருக்கும் இனிய நந்தவனம் சந்திரசேகரன் அவர்களை நெஞ்சார பாராட்டுகின்றேன்.
                   பேரன்பின் வழியில்
                 சோலச்சி அகரப்பட்டி



தொடர்புக்கு:

இனிய நந்தவனம்
த.சந்திரசேகரன்
த.பெ.எண் 214, நம்பர் 17,
பாய்க்காரத் தெரு , உறையூர்,
திருச்சிராப்பள்ளி - 620003
பேச: 9443284823
மின்னஞ்சல்: nandavanam10@gmail.com