சனி, 4 நவம்பர், 2023

பத்தக்கட்டை - சோலச்சி

பத்தக்கட்டை - சோலச்சி அந்த ஆற்றங்கரையில் இருக்கும் பெரிய நாவல் மரம் ஒன்றின் அடியில் கிடந்த சருகுகளை சிறிய குச்சியால் கூட்டித் தள்ளிவிட்டு தனது நீளமான சிவப்புத் துண்டினை விரித்து அதில் உட்கார்ந்த பாலவடிவேலு ஓரிடத்தில் குட்டை போல் குறுகிக் கிடந்த தண்ணீரைப் பார்த்தார். அது சில தினங்களுக்கு முன்னால் பெய்த மழையின் கடைசி நீர்த்துளிகளின் சேமிப்பாக இருந்தது.
அந்த நீர் கலங்கலில்லாமல் தெளிவாகவே இருந்தது. சிறு பூச்சிகள் மிதந்து திரிந்தன. ஒன்றிரண்டு மீன் கொத்திகள் பறந்து வருவதும் தண்ணீரைத் தீண்டி எதையோ கொத்திச் செல்வதுமாக இருந்தது. அந்தப் பள்ளத்தில் மீன்கள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அந்த மீன்கொத்திகள் பிரண்டைகளை பிடித்துச் சென்றன. காட்டாறானது கால்வாய் போல் மாறியிருந்தது. ஆங்காங்கே சிறுசிறு குட்டைகள் முளைத்திருந்தன. மாட்டு வண்டியில் மணல் அள்ளிவந்து தன் வீட்டில் மலைபோல் குவித்து வைத்திருந்து அதை லாரி வைத்திருப்பவர்களிடம் அதிகவிலைக்கு விற்ற அம்மாசியிடம் இப்போது நான்கு லாரிகளும் ஒரு ஜேசிபி இயந்திரமும் இருக்கிறது. தான் கடுமையாக உழைத்ததன் பேரில் உயர்ந்ததாக பள்ளிக்கூடம் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது அதே ஊரைச் சேர்ந்த துளசியப்பன் ''திருட்டு மணல் ஏத்தி சம்பாதிச்சதுக்கு பேர்தான் கடின உழைப்போ'' என்று கூட்டத்தில் நின்றவாறு சொன்னதும் சலசலப்பு ஏற்பட பள்ளி விழா பாதியிலேயே நின்று போனது. அந்த ஆற்றில் ஏற்பட்ட பள்ளங்கள் அம்மாசியால் சுரண்டப்பட்ட மணலின் காயங்களாகவே இருந்தன. '' நேர்மையான வழில சம்பாதிச்சா பத்து செண்ட் எடம் வாங்கவே நாக்கு தள்ளிப் போயிரும்.... நம்மலும்தான் பத்து வருசமா வேல பாக்குறோம் கால்காச மிச்சப்படுத்த முடியல... கடன ஒடன வாங்கித்தான் சமாளிக்க வேண்டிருக்கு... வீடுவாச கட்டனும்னா லோன்மேல லோன் போட்டாதான் முடியுது.... காரு பங்களானு வாழுறவன மனச தொட்டு சொல்லச் சொல்லு நேர்மையா சம்பாதிச்சேனு..... ஒன்னு வங்கில கடன வாங்கி மாசமாசம் தவணை கட்டுவான். இல்லன... குறுக்கு வழிலதான் சேத்துருப்பான்....'' என்று தன்னுடன் வேலைபார்க்கும் பகவதியிடம் பாலவடிவேலு சொல்லிக்கொண்டு இருந்தபோது... '' மச்சான்... மனசாட்சிய வித்துட்டு பொழக்கிறதுக்கு பேசாம கூட்டிக்கொடுக்குற தொழிலுக்குப் போயிடலாம்..'' பகவதி சொன்னபோது வாய்விட்டு சிரித்துக்கொண்டார் பாலவடிவேலு. மீன் கொத்திகள் பிரண்டைகளை கொத்துவதையும் பிரண்டைகள் நீந்தி நீருக்குள் மறைவதையும் புதிதாக பார்த்தார். வளர்ந்த தவளைகள் கரைக்கு வருவதும் மீன் கொத்தியைக் கண்டதும் தண்ணீருக்குள் குதிப்பதுமாக இருந்தன. பரந்து விரிந்த ஆறு குட்டையாகிப் போனதை எண்ணி பலமுறை வட்டாட்சியரிடம் புகார் சொல்லியும் அவர் நடவடிக்கை எடுக்கவே இல்லை. மாறாக சம்பந்தப்பட்டவர்களிடம் போட்டுக்கொடுத்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டார் வட்டாட்சியர். ''உள்ளூர்க்காரன் தாலுகா ஆபிசுல வேல பாக்குறான். அவன வச்சு காரியம் சாதிச்சுக்கலாம்னு பாத்தா நீ எனக்கே ஆப்பு வைக்கிற... தாசில்தாரே கொடுக்குறத வாங்கிகிட்டு பேசாமா போறாரு. அவருக்கு கீழ வேல பாக்குற ஒனக்கு என்ன வலிக்குதுங்குறேன். நீ என்ன ஏம்புட்டு சாதிக்காரனா... வேற சாதிக்காரப்பயல தொட்டா வேறமாறி வந்துரும்னுதான் கழுத்தறுக்காம போறேன். ஏம்புட்டு சாதிக்காரன இருந்திருந்த அறுத்துப் போட்டுட்டு போயிருப்பேன். இப்பவும் கெட்டுப் போகல... லஞ்சம் வாங்குனானு சொல்லி ஆளுகள தயார் பண்ணி வேலயவே தூக்கிப்புடுவேன்.... '' அலுவலகத்திலேயே மிரட்டிச் சென்ற அம்மாசியை யாரும் எதுவும் கேட்கவில்லை. பகவதிதி மட்டுமே பாலவடிவேலுவின் தோளில் கைபோட்டு ஆறுதல் சொன்னார். அப்போது அலுவலகத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணவாணன் அம்மாசியை உட்கார வைத்து உபசரித்து அனுப்பியதை எண்ணி பகவதியிடம் பலமுறை பாலவடிவேலு வருத்தப்பட்டதுண்டு. '' அட விடு மச்சான்... நேத்து இன்னக்கா நம்ம பழக்கம். ஒன்பதாவதுல இருந்து ஒன்னுக்குள்ள ஒன்னா பழகி வர்றோம். இந்தச் சில்லறைப் பசங்களாலதான் நம்ம ஆபிசயே வெளிய கழுவிக்கழுவி ஊத்துறானுக. அன்னக்கி ஒரு வயசான அம்மா எடத்த அளக்க பணம் கட்டிப்புட்டு சர்வேயருக்கு மொய்யும் எழுதிருக்கு. அந்த ஆளு.... இது பத்தாது. இன்னும் கொடுத்தாதான் இந்த எடத்தவிட்டே நகருவேனுட்டான். அந்த அம்மா மண்ணவாரி தூத்திட்டுப் போகுது. இவனுக எப்பவுமே இப்படித்தான் மச்சான்.....'' உறவுமுறை வைத்துதான் இருவரும் நீண்டகாலமாக பழகி வருகிறார்கள். '' ஓம்புட்டு மாப்புள்ளய கலைக்டராக்கி இந்தக் காவாளி பயலுகளுக்கு ஒரு முடிவு கட்றேன் மச்சான். எம்மருமக புள்ளயவும் கலைக்டருக்குப் படிக்க வையிய்யா... நீ அருமை மைத்துனர் மட்டும் இல்லைய்யா. வருங்கால சம்பந்தியும் நீதான்ய்யா... '' பாலவடிவேலு சொன்னபோது, '' ஓம்...மருமக வேற யாரு வீட்டுக்கு மச்சான் போகப்போகுது... ரெண்டு பேரும் சம்பந்தியாகி தோள்ள கைபோட்டு நடக்குறத இந்த ஆபிசுல உள்ளவங்களே பொறாமபடனும் மச்சான்...'' இருவரும் பட்டு வேட்டி சட்டை அணிந்து வருவது போல் தோன்றியது பாலவடிவேலுக்கு. '' மச்சுனே.... ஏந்தங்கச்சி என்னய்யா கொழம்பு வச்சுச்சு...'' பாலவடிவேலு கேட்க '' ஓந்தங்கச்சிய கட்டுனா நல்லாதானய்யா... சமைக்கும்...'' பகவதி நக்கலடித்தபோது...'' போனாப் போகுதுனு ஏந்தங்கச்சிய கட்டிவச்சா.... வாயி ரொம்பதானய்யா நீளுது... ஓந்தங்கச்சி சமைக்கிறத விட ஏந்தங்கச்சி நல்லாதானய்யா சமைக்கும். புடிக்கலனா விட்ரு. நான் சாப்புட்டுக்குறேன்... ஓம்...அருமை தங்கச்சி சமச்சத நீயே சாப்டுக்க...'' பாலவடிவேலு சாப்பாட்டுக் கூடையை பகவதி பக்கம் நகர்த்தி வைத்தார். மதியம் சாப்பிடும் போதெல்லாம் இந்த நக்கலும் கிண்டலும் இருவரிடமும் தன்னையறியாமலேயே ஒட்டிக்கொண்டது. இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள்தான் என்றாலும் இரண்டு ஊர்களுக்கும் இடையில் ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும். இரண்டு வீட்டுக்காரர்களும் ஒன்னுக்குள் ஒன்னாகவே பழகி வந்தனர். '' ஏப்பா...பாலு.... வாய்க்கிவாயி மச்சுனே...மச்சுனேங்கிறீகளே... வெறும் பேச்சு மட்டும்தானே....'' பகவதியின் அப்பா சொன்னபோது ''எம்மகள எம்மாப்புள்ளக்கிதான் கட்டிக் கொடுக்குறது....'' பகவதி அழுத்தமாக சொன்னார். அவரது அப்பாவோ முகம் சுழித்துக் கொண்டார் . ஆற்றில் மண் அள்ளும்போது நிறைய தாழம்பூ மரங்கள் அழிக்கப்பட்டு அவை தீவைக்கப்பட்டன. எஞ்சியிருந்த மரங்களும் உள்நாட்டுப் போரில் கைவிடப்பட்ட கைக்குழந்தைகள் போல் காட்சியளித்தன. முருகேசனும் சந்திரனும் ஆற்றங்கரையில் எஞ்சியிருந்த நான்கைந்து தாழம்பூ மரங்களில் தேறிய ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தனர். மரத்தை வெட்டும் சத்தம் கேட்டு படுத்திருந்த பாலவடிவேலு திரும்பிப் பார்த்தார். அந்தத் தண்ணீரில் அந்த மரம் ஆடுவது அப்படியே தெரிந்தது. அந்த மரம் பாலவடிவேலுவின் கால்களைப் பிடித்துக்கொண்டு என்னை வெட்டவேண்டாம் என்று சொல்லச் சொல்கி கெஞ்சுவதாக இருந்தது. '' முருகேசண்ணே.....'' என்றழைப்பதற்குள் அந்த மரம் தனது கைகளை நெஞ்சில் அடித்துக் கொண்டு தொப்பென்று விழுந்தது. தாழம்பூ மரத்தில்தான் பத்தக்கட்டை செய்வார்கள். தண்ணீரை தேக்கி வாய்க்கால் அமைத்து அதன் குறுக்கே துளையிடப்பட்ட பத்தக்கட்டையை வைத்து அதன் ஒரு நுனியில் சிறிய பானை ஒன்றை மண்ணுக்குள் புதைத்து வைப்பார்கள். துள்ளி வரும் அயிரை கெண்டை மீன்கள் துளைக்குள் சென்று குதித்து விளையாடும் போது பானைக்குள் விழுந்து விடும். அப்படி மீன் பிடிப்பதற்காக அந்த தாழம்பூ மரத்தை வெட்டிய அவர்களிடம் '' என்னண்ணே... மழையே பேஞ்சாலும் தண்ணி எதுல போறதுனு தெரியாம ஊருக்குள்ள வரப்போகுது... பத்தக்கட்டய எங்க பதிச்சு வைக்கிறது...'' பாலவடிவேலுவின் குரலை கேட்காதவர்களாக இருந்தார்கள். ஆற்றங்கரையில் கண்களை மூடியபடி படுப்பதும் வானத்தை உற்று நோக்குவதும் பிறகு தண்ணீரைப் பார்ப்பதுமாய் இருந்தார். அந்தத் தண்ணீரில் குதிரைகள் நீந்திக் கொண்டிருந்தன. மயில் ஒன்று தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. அப்போது வீசிய பெருங்காற்று அந்த மேகக் கூட்டத்தை ஒரு சேர தள்ளிக்கொண்டு சென்றது. குதிரைகளும் மயிலும் கலைந்து போயின. தலை சாய்த்து படுத்த பாலவடிவேலு பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார். ஆனந்தன் யாரோ ஒரு பெண்ணுடன் சுத்துவதைக் கேள்விப்பட்டு பலமுறை கண்டித்திருக்கிறார். யாருடன் பழகுகிறான் என்றும் அவரால் யூகிக்க முடியவில்லை. அவர் மனைவியோ ''எதுக்கு இந்த மாறி அவன காச்சி எடுக்குறீக. விடுங்க இந்தக் காலத்துலயும்...." அணுசியா பேச்சை இழுத்தாள். "எந்தக் காலத்துல ஓம் புருசன் சாதி சம்பிரதாயம் பாத்துருக்கான். அவனுக்குப் பேரு வச்சதே எங்க அம்மா ஆனந்தி ஞாபகமாதான். இன்னக்கிவரக்கிம் அவனுக்கு சாதகம் கூட எழுதல. என்னோட கோபம் அவனோட காதல்ல இல்ல அணு.." " நேரம் வரும்போது நானே கேட்டுச் சொல்றேன் " அணுசியாவின் பேச்சில் சமாதானம் ஆனார் பாலவடிவேலு. '' எங்க வம்சத்துலயே நான்தான் மொதமொதனு காலேஜு வரைக்கும் படிச்சு தாலுகா ஆபிசுக்கு வேலக்கி வந்துருக்கேன். இருபது வருசத்துக்குப் பிறகுதான் இந்த வீடே என்னால கட்ட முடிஞ்சுச்சு. அவனும் முன்னுக்கு வர வேண்டாமா..'' என்றபோது அவரது கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது. '' நமக்குனு சொத்து சொகம் அவன விட்டா வேற என்ன இருக்கு. என்னம்மோ எட ஒதுக்கீடுங்கிறது நமக்கு மட்டும்தானு பலபேரு புரியாம பேசிக்கிட்டு இருக்க நேரத்துல அவனும் ஏதாச்சும் வேலக்கி போனாதான் அவன் குடும்பத்தயே அவனால பாக்க முடியும். அரசாங்க வேலக்கித்தான் போகனும்னு இல்ல. அடுத்தவன்கிட்ட கைகட்டி நிக்காம சொந்த ஒழப்புலயாச்சும் நிக்கனும்ல. இந்தக் காலத்துல அறிவாளிகள விட புத்திசாலிகளாலதான் வாழ்க்கய ஓட்ட முடியுது .. ஏதாவது ஒரு தொழில்ல முன்னுக்கு வரட்டும். இது காதலிக்கிற வயசுதான். ஆனா கல்யாண வயசு இல்லயே.. அதுக்கான நேரம் வரும்போது எப்பேர்ப்பட்ட ஆளு மகளா இருந்தாலும் எப்புடியாச்சும் கட்டி வச்சர்றேன். நா பட்ட செரமம் நம்ம புள்ள படக் கூடாதுல...." பாலவடிவேலு தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். ஆனந்தன் வீட்டுக்கு வந்தான். "நில்லுப்பா. ஒங்க அப்பாவுக்கு தெரியாம அவரும் நானும் அவன் பேசிக்கிட்டத போன்ல ரெக்கார்டு பண்ணி வச்சுருக்கேன். அத கேளுய்யா. ஒனக்கே புரியும். அப்பாதான் உன்னோட ப்ரண்டுனு சொல்லுவ. இப்ப எதுக்குய்யா வெலகிப்போற." அதை வாங்கிக்கொண்டு தனது அறைக்குள் போனவன் சற்று நேரத்தில் திரும்பி வந்தான். தோசை சுட்டு தட்டில் வைத்திருந்தாள். அவன் இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டான். அவனுக்குள் ஏதோ மாற்றம் உருவாகியிருந்ததை அவளால் உணர முடிந்தது. தன் மகனால் ஒருபோதும் தலைக்குனிவு ஏற்படாது என்று பாலவடிவேலு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். கணேசன் ஐஏஎஸ் அகாடமியில் ஆனந்தனும் பவானியும் மாலை நேர பயிற்சி வகுப்புக்கு சென்றுவந்தார்கள். யாருமில்லாத அறையில் இருவரும் தீவிரமாக ஆளுக்கொரு புத்தகத்தை வாசித்துக்கொண்டு இருக்கும்போது அந்த பெருமழை கொட்டித் தீர்த்தது. மின்தடையில் அந்த நகரமே மூழ்கியிருந்தது. அந்த மின் தடையில் எந்தத் தடையும் இல்லாமல் முத்தக்குளியலில் மூழ்கியிருந்தார்கள். குருவிமுத்தம் அதிகமாகவே பரிமாறிக் கொண்டார்கள். அது என்ன குருவி முத்தம். தாயக்குருவி தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டி மகிழும் அந்தக் காட்சிதான் குருவி முத்தம். இருவரும் வெளிச்சுவர்களை சூடாக்கிக்கொண்டார்கள். கீர்த்தனா மெழுகுவர்த்தியை கொண்டுவந்த போதுதான் தங்களை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். அவள் மெழுகுவர்த்தியை வாசலிலேயே வைத்துவிட்டு வெளியேறினாள். சிறிது நேரத்தில் மின்தடை நீக்கப்பட்டிருந்தது. கற்கும் இடத்தில் முத்தக்குளியல் போட்டது தவறு என்பதை உணர்ந்ததால் இருவரும் அங்கு வருவதையே நிறுத்தி விட்டனர். ஆனந்தன் தொடக்கக்கல்வி அதிகாரியாகவும் பவானி காளன்குடி கிராமநிர்வாக அதிகாரியாகவும் பணியில் சேர்ந்தனர். " என்னங்க அவன் காதலிக்கிறது பகவதியண்ணே மக பவானியவாம்.. இத்தன நாளா கேட்டதுக்கு இப்பதான் சொல்றான். மாமன் மச்சானுதானே பழகுறீக. அந்த அண்ணன்கிட்ட பேசுங்களே....'' அணுசியா சொன்னபோது பகவதியின் அப்பா ஒருமுறை பேச்சுவாக்கில் கேட்டது அவர் முன்னால் வந்து நின்றது. அலுவலகத்தில் முதல் ஆளாய் நின்றிருந்த பகவதியிடம் பேசுவதற்கே தயங்கினார் பாலவடிவேலு. ஆனால் கட்டியணைத்துக் கொண்ட பகவதி '' என் அருமை மைத்துனரே... ஏம்புட்டு மாப்ள எங்கய்யா.... ராத்திரிதான் ஓம்மருமக எல்லாத்தையும் சொன்னுச்சு. சீக்கிரமா நம்ம புள்ளைகள மணக்கோலத்துல பாக்கனும்னு ஆசையா...இருக்குய்யா...'' "மச்சான்........." கண்ணீரோடு பகவதியை இறுக அணைத்துக்கொண்டார் பாலவடிவேலு. நண்பர்களுடன் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் நல்லடி மிதிக்க பகவதியின் வீட்டுக்குச் சென்றனர். பகவதியும் லெட்சுமியும் வரவேற்க காத்திருந்தனர். மணமக்களின் கார் வாசலில் வந்து நின்றது. மணமக்களோடு பாலவடிவேலுவும் அணுசியாவும் இறங்கினார்கள். வீட்டின் பின்புறம் கட்டியிருந்த பசுமாடுகள் என்றைக்குமில்லாமல் அளவுக்கதிகமாக கத்தின. '' அம்மாடி நீங்க வர்றத கேள்விப்பட்டு நம்ம வீட்டு மாடுக கத்தி வரவேற்குது....'' என்று சொல்லிக்கொண்டு வரவேற்க வந்தபோது மாட்டுத் தொழுவத்திற்குள் இருந்து நான்கு பேர் பகவதியை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். துடிதுடித்து இறந்தார் பகவதி. தாம்பூலத் தட்டை கீழே போட்டபடி கதறினாள் லெட்சுமி. ''முன்னாடிதான்டா அவனுகள வெட்டுனது. இப்பெல்லாம் ஒங்கள வெட்டுனாத்தான் அடுத்த சாதிக்காரனுகளுக்கு பொண்ணு கொடுக்கவே பயப்படுவானுக ... பொடலங்கா புரட்சிய பண்றீகளோ.....'' குருதியில் குளித்த அந்தக் கும்பல் மேற்கு பக்கமாக ஓடி மறைந்தது. அனைவரது கதறலும் நெருப்புக்காடாய் மாறிப்போயிருந்தது. நினைவுகளை சுமந்தபடி கண்களை மூடி திறந்தார் பாலவடிவேலு. கண்ணீர் தோள்பட்டையை நனைத்துக் கொண்டிருந்தது. முருகேசனும் சந்திரனும் தாழம்பூ மரத்தை செதுக்கித் தோளில் தூக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். கலைந்து சென்ற மேகம் காரிருளை காட்டத் தொடங்கியது...... ************