புதன், 25 ஜூலை, 2018

கோடு மறையவில்லை...(ஆர்க்கிமிடிஸ்) கவிமதி சோலச்சி

........கோடு மறையவில்லை.... (ஆர்க்கிமிடிஸ்)
                                - கவிமதி சோலச்சி புதுக்கோட்டை 

அழகாய் காத்தடிக்கும்
அலைகடலோ கூத்தடிக்கும்....!
சிசிலி தீவின்
கடல் அலை ...
சிரகாஸ் நகர் ஈன்ற
அறிவு மழை...!

விண்ணுக்கு வான சூரியன்
மண்ணுக்கு ஞான சூரியன்....!
வாளால் வீழ்த்த முடியும்
அறிவால் ஆள முடியும் ...!
கிரேக்கத்தின்
கணித மேதை...
பாரேத்தும்
புனித விதை ....!

ஆய்வின்போது
மற்றதை மறந்திடுவார்...
அறிவுக்காக
பெற்றதை துறந்திடுவார்....!
ஆய்வு பல
கண்டவர்...
ஆர்க்கிமிடிஸ் எனும்
பெயர் கொண்டவர்....!

காலங்கள் மாறும்
கணித மேதையின்
புகழையே கூறும் ...!
செல்வக் குடிலில்
பிறந்தவர்...
செல்வாக்கை துறந்தவர்...
பிடியாஸ் என்பவரே
தந்தை...
வான சாஸ்திரமோ
சிந்தை...!

அலெக்சாண்டிரியா
நகரம்...
சர்வகலாசாலைகளின்
சிகரம்...!
எகிப்து நாட்டில் இருந்தது
சின்னக்குருவியோ
சிறகடித்து பறந்தது...!
கல்வி கற்க பயணித்தார்
ஆய்விலேயே தியானித்தார்...!

நீர் இறைக்கும் கருவியை
கண்டு பிடித்தார்...
எகிப்து மனங்களில்
இடம் பிடித்தார்....!
ஆய்வுகள் தொடர்ந்தன
புகழும் படர்ந்தன...!
கல்வி முடிந்தவுடன்
தாய்நாடு திரும்பினார்...
சிசிலி மன்னன் ஹைரோ
இவரைக்
காண விரும்பினார் ....!

அரசியலில் ஈடுபாடு
கொள்ளவில்லை ...
ஆராய்ச்சிகளே
அறிஞரின் எல்லை....!
நிமிடங்களை கழிக்காமல்
நினைவுகள்
ஆராய்ந்து கொண்டே இருக்கும் ...
அவரின் கண்கள்
ஆய்வை
உற்று நோக்கிக் கொண்டே இருக்கும்...!

சில நேரங்களில்
தன்னை மறந்து
சிறுநீர் கழித்திடுவார்...
பலரும் இவர் செயலை
பழித்திடுவர்....!
அறிவால்
அகிலத்தையே நகர்த்தலாம்
அரசனிடம் உரையாற்றினார்...
பலரையும்
அறிவுக் கரையேற்றினார்....!

அரசனுக்கும் மக்களுக்கும்
அளவில்லா கருவிகளை
செய்து தந்தார்....
அரசன் ஹைரோ
புகழ்மாலையே ஈந்தார்....!
செயல்முறைகளை
எழுதி வைத்ததே இல்லை ...
ஏனோ அவர் மனம்
அதை நினைத்ததே இல்லை ....!
ஆயுள் முழுவதும்
ஆய்வில் ஈடுபட்டார்....
அறிவு வளர்ச்சிக்கு
பாடுபட்டார்....!

கணித ஆராய்ச்சியில்
வான ஆராய்ச்சியில்
புவி ஆராய்ச்சியில்
புதுமை கண்டவர்...
எளிய வாழ்க்கை
கொண்டவர்....!
அகந்தை அறியாதவர்
ஆடம்பரம் தெரியாதவர்....!
உணர்ந்ததை
நண்பர் கோனனிடம்
நாளும் காட்டுவார்....
நம்பிக்கையையே
நெஞ்சில் தீட்டுவார்....!

வயதாகிப் போனார்
விஞ்ஞானி....
வாலிப ஆய்வு கண்ட
மெஞ்ஞானி....!
ரோம் தளபதி
மார்செலஸ்
சிசிலியை
முற்றுகையிட்டான் ...
மன்னன் ஹைரோ
மன்னவனிடம்
முறையிட்டான் ....!
வேண்டியதை
விரைவில் செய்து தந்தார்....

யுத்தம் நடந்தது
நாட்கள் கடந்தது....!
ஹைரோ
வெற்றி கண்டான்....
அறிஞரால்
ஆனந்தம் கண்டான்....!
சின்ன அறைக்குள்
சிந்தனையில் மூழ்கினார்...
மாதங்கள் கடந்தன....
மார்செலஸ்
ஹைரோவை
கைது செய்தான்...
சிறைபிடிக்கப்பட்டது
சிசிலி
சூழ்ச்சியால் .....!

மார்செலஸின் கண்கள்
மாமேதையைக் காண
நீச்சல் போட்டது....
அவனது உதடுகள்
ஆணையிட்டது
அறிஞரை
அழைத்து வாருங்கள் என்று....!
அவருக்கு சூட்ட வேண்டும்
புகழ்மாலை ...
இதுதான் என் முதல் வேலை ....!

காவலன் ஒருவன்
தேடினான்...
காணாமல் தினம்
வாடினான்....!
மார்செலஸின் கரங்கள்
அணைக்க காத்துக் கொண்டிருந்தன
ஆர்க்கிமிடிஸை.....!
சின்னக் குடிலொன்றில்
எண்ணச் சிறகுகளை
ஓட்டில் வரைந்து கொண்டே இருந்தார் .....

நரை விழுந்த முடி
திரை விழுந்த முகம்
சிந்தனையில் ஆழ்ந்த கண்கள்....!
முதியவர் இவரே அவர் என
எண்ணினான்....
ஏளனச் சொற்களை
தமக்குள் பின்னினான்....
'' என்ன வரைகின்றீர்
என் தலைவர் மார்செலஸ்
அழைக்கின்றார்....''
காவலன்  உதடுகள் உச்சரித்தன
கடுமையாக எச்சரித்தன....!
காவலன் பேச்சோ
அவருக்கு கேட்கவில்லை ...
தன்னுள் வேறெதையும்
அவர் ஈர்க்கவில்லை....!

காவலன் கத்தினான்
மெதுவாக சாய்த்தார்
முகத்தை .....
உதடுகள் பேசின
நீ யார் என்று....!
அவருக்கு தெரியாது
ஆட்சி மாற்றம் .....
அவருக்கோ
முதிர்ந்த தோற்றம்....!
''சிந்தனையை தடுக்காதே
வெளியேறு....''
கணித மேதையின் பேச்சு
காவலனுக்கு
கடங்கோபத்தை தந்தது...
அவன் மனம்
நொந்தது....


 

யோசிக்கவில்லை
அவர்
கழுத்தை வெட்டினான்....
களிப்போடு நெஞ்சை
தட்டினான்.....!
கோடுகள்  குருதியில்
நனைந்தது....
காலச்சுவடுகள்
கண்ணீரைப் புனைந்தது....!

செய்தி
மார்செலசுக்கு கிட்டியது....
கண்கள்
கோபத்தை கொட்டியது.....!

புதிய கீதத்தை
புதைத்துவிட்டாயே.....
உடைவாளை உருவி
காவலன் கழுத்தை
வெட்டினான்....
கண்ணீரையே கொட்டினான்....!

நாயகன் உடலை
நல்லடக்கம் செய்தான் ....
நாளும் அவர் குடும்பத்திற்கு
நன்மை செய்தான்....!
மார்செலஸின்
முகத்தில் படிந்தது தூசி...
அகத்தில் குத்தி்கொண்டே
இருந்தது ஊசி....!

ஆர்க்கிமிடிஸைக் காண
துடித்த கண்கள்
அவர் நினைவில்
அழுதே உயிர் நீத்தது....!

தரணியின் தத்துவப் பாத்திரம்
அறிவுக்கடலின்
நேத்திரம்....
ஆர்க்கிமிடிஸ் மறைந்தார்
மறையவேயில்லை
அவரின் எண்கோடு....


        ************