திங்கள், 24 செப்டம்பர், 2018

கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும் - ந.பிச்சம்மாள்

    ''கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும்''

    வகை: சிறுகதை

     நூலாசிரியர் : கவிமதி சோலச்சி

     நூல்விமர்சகர் : ந.பிச்சம்மாள்

    விலை : ரூபாய் 110/-

    நூலாசிரியரிடம் பேச:9788210863

   வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்,
                         திருச்சிராப்பள்ளி
.
  கருப்பச் சட்டையும் கத்திக்கம்புகளும் சிறுகதை தொகுப்பை வாசிக்க ஆரம்பித்து எனக்கு தெரிந்த வகையில் பதிவு செய்கிறேன்.
  ''குருவிக்காடு'' - இக்கதை விவசாயிகளின் பிரச்சினைகளை கொண்டுள்ளதாக உள்ளது. காவிரியாற்றின் கரையிலுள்ள குருவிக்காடு கிராம மக்களின் ஒற்றுமை நன்கு வெளிப்படுகிறது. ஒவ்வொரு முறையும் அரசாங்க அதிகாரிகள் வந்து மிரட்டியும் ஆண்களும் பெண்களும் ஒற்றுமையாக இருந்து விவசாய நிலங்களை அழிக்கவிடாமல் செய்கிறார்கள். முத்தையன் என்ற பெரியவர்,  இவர்களை நெறிப்படுத்தும் முறை அற்புதம். நாம் என்னதான் போராடினாலும் எந்த அரசும் நம்மைக் கண்டு கொள்ளாது என்று அவர் ஆதங்கப்படுவது நெஞ்சை விட்டு அகலவில்லை. வேலுப்பிள்ளையின் உறுதியான பேச்சு எல்லோரையும் ஈர்த்து விடுகிறது. அவன் சொன்ன ஒரு வார்த்தையில் , புரட்சியின் போது தான் செத்தாலும், என் உடலை வைத்து கடைசி வரை போராடுங்கள் என்று கூறும்போது என் கண்களும் என்னையறியாமல் கலங்கிவிட்டன. இந்த போராட்டத்தால் நம் ஊர் மட்டுமல்ல உணர்வு உள்ள ஒவ்வொருவரும் நமக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பிக்கையுடனும், உறுதியுடனும் கிராமம் முழுவதும் விடியலில் ரயில் நிலையத்தை நோக்கி நடந்து பிரதமர் அலுவலகம் செல்ல ஆயத்தமானது அபாரம். நிச்சயம் அவர்கள் வெற்றியடைவார்கள் என்பது இந்த குடிமகளின் ஆவல்.

  '' அலோ....நா....ஐ...ச்சி பேசறேன்''  -ஹெட் கிளார்க்காக இருக்கும் முத்துச்சாமி சிடுமூஞ்சி என்று அவரை அனைவரும் கேலி பண்ணுவதும் , தன்னுடைய நிலையை தெரியாமல் இவர்கள் பேசுவதை நினைத்து மேலும் கடுப்பாவதும் அவரது மேலாளர் கருணா,  கூப்பிட்டவுடன் செயற்கையான முகமலர்ச்சியுடன் அவரைப் பார்த்து வணக்கம் சொல்வதும்,  அதைப் புரிந்து கருணா முத்துச்சாமியை தன் வீட்டிற்கு அழைப்பதும் அருமை. இவருடைய இந்த மனோநிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.







  அங்கே போனவுடன்,  கருணாவின் மனநலம் குன்றிய சகோதரி,  படுக்கையில் இருக்கும் அவரது தந்தையை அவர் விசாரித்து அவரது மூத்திரப்பையை கொண்டு போய் பாத்ரூமில் விட்டு கழுவி வந்து தந்தைக்கு மாட்டி விடுகிறார். (என் கணவர் படுத்த படுக்கையாக இருந்தபோது,  இதே மாதிரி  தினமும் நான் செய்தது ஞாபகத்திற்கு வந்தது. இப்போது அவர் உயிரோடு இல்லை). பிறகு கருணா தன் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் சிரித்த முகத்தோடு விளையாடி மகிழ்வதை பார்த்து முத்துசாமி மனம் மாறுவதை நமக்கு கண்கூடாக காட்டியிருக்கிறார் ஆசிரியர். பாராட்டுக்கள்.

  '' கதவு'' - இக்கதையில் தன் மனைவியுடன் எப்போதும் சுகத்தை எதிர்பார்க்கும் பழனிவேலுக்கு, அவள் கீழே விழுந்து அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்த பிறகு அவள் நல்லபடியாக திரும்பி வரவேண்டும் என்று நினைப்பது, தான் செய்த தவறை ( அதாவது அவளை ஒரு போதைப் பொருளாக நினைத்து வாழ்ந்ததை)  உணர்ந்து அவள் முதல்நாள் பேசிய பேச்சால் அவன் மனம் மாறுவதும் அருமை. தன் மனம் புரிந்து நடந்து கொண்ட அவளை தான் புரிந்துகொள்ளவில்லையே என்று நினைத்து தான் அவளுக்கு சாமியில்லை. அவள்தான் தன் சாமி என்று நினைத்து அவனுடைய மனக்கதவு நன்றியுடன் திறந்து கொண்டது அற்புதம்.

  '' வம்சத்தை தேடி '' படித்த இளைஞனான மணி பக்கத்து ஊரான மல்லாமலையின் இளம்பெண் ஒருத்தியை கைபிடித்து இழுத்ததால் இவனைத் தேடி அவ்வூர்காரர்கள் வருகிறார்கள். அவனை ராசாத்தி ஒளித்து வைக்கிறாள். இரண்டு ஊர்காரர்கள் பாசத்தோடு பழகியிருந்தாலும், மணி செய்த செய்கையால் அவர்கள் வெகுண்டு எழுந்து வருகின்றனர்‌.  இதனால் இது ஊர்களுக்கும் விரோதம் ஏற்படுகிறது.

  பஞ்சாயத்தில் மணியின் பெற்றோர்கள் மன்னிப்பு கேட்பதும், அவர்கள் மன்னித்தாலும் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொள்வதால் மணியின் வாழ்க்கையில் ஓர் வெறுமை ஏற்படுகிறது. அண்ணா என்று செல்வி கூப்பிட்டாலும் தான் செய்த தவறு அவனை உறுத்துகிறது. அவனுக்கு மன வாழ்க்கை கொடுத்து வம்சத்தை பெருக்க அவன் அம்மா நினைப்பது ஓர் தாயின் ஆதங்கம் தெரிகிறது. ( இக்கதையில் சாதி வேற்றுமை மறைந்திருப்பதை ஆசிரியர் எடுத்துக் கூறியிருக்கும் பாங்கு அருமை. ) 

  '' அம்மனக்கட்டை '' - ஊரில் நல்ல உயர்ந்த நிலையில் வாழ்ந்த குடும்பம் பாஸ்கர் குடும்பம். தன்னைத் தேடி வருபவர்களுக்கெல்லாம் வயிராற கூழ் வார்த்த குடும்பம். ஆகவே அவர்களின் கூழ்வார்த்த குடும்பத்தைச் சேர்ந்த வாரிசு பாஸ்கர் வீட்டிற்கு ஆம்புலன்ஸ் வருவதும்,  அனைவரும் பதைபதைத்து அங்கு செல்வதும்,  அக்குடும்பத்தைப் பற்றி தங்கள் நினைவுகளையும்,  அவர்கள் உரையாடல்கள்,  சாதி பிரச்சினைகளை தீர்ப்பவர்கள் என்று கூறுவதும் அற்புதம். கடைசியில் அந்த பாஸ்கர்தான் நெஞ்சு வலியால் இறந்துவிட்டார் என்று தெரிந்தவுடன் அனைவரும் திகைத்து நிற்கின்றனர். பாஸ்கர் அவர்களின் இறப்பு அவர்களை ஊமையாக்கிவிட்டது. மரணத்தை விட ஒரு கொடிய நோய் வேறு எதுவும் இல்லை  என்பதை அவர்கள் உணருகிறார்கள். மரணம் என்பது வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துகிறது என்பது ஒரு நிதர்சனமான உண்மை. சமூகம் எத்தனை படோபடமாக இருந்தாலும் மனதளவில், ( அம்மணமாக)  ஒன்றுமில்லாமல் இருப்பதாக அழகாக முடித்துள்ள ஆசிரியர் பாங்கு அருமை.

  '' பிச்சை புகினும் " - குடும்பத்தலைவன் குடிகாரனாக இருந்தால் அந்த குடும்பம் எந்த நிலைமைக்கு வந்து விடும் என்பதை மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளார் ஆசிரியர். குடிக்காக மகளையே பிச்சை எடுக்க வைக்கும் அந்த குடிகாரனை என்னவென்று சொல்வது?  அந்தக் காட்சியை பெற்று தாய் புலம்பும்போது,  என் கண்ணிலும் நீர் நிறைந்தது. அதனால் அவளுக்கு ஏற்படும் கோபம் சொல்லி மாளாது. அன்றைக்கு சிலம்போட நியாயம் கேட்டது போல்,  இன்று மாரியக்கா....... இறந்து போன குடிகார கணவனை தலைமை முடியை பிடித்து இழுத்துக்கொண்டு கண்ணகிபோல் தெருவில் சென்றது அவளின் மன திடம் தெள்ளத் தெளிவாகிறது. ( குடிசை மாற்று வாரிய பகுதியில் வேலை செய்ததால் இத்தகைய குடிகார குடும்பங்களை சந்தித்திருக்கின்றேன். அப்பேர்ப்பட்ட குடிகாரனையும் திருத்தியுள்ளேன் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். )

  '' அம்மா'' - கருப்பாயி சிறு வயதில் பேரழகுடன் திகழ்ந்தவள் இன்று நோய்வாய்ப்பட்டு கயிற்றுக் கட்டிலில் கிடக்கிறாள். அவளை பராமரிக்க போராடும் மகனின் வேதனையை தத்ரூபமாக எடுத்துக் கூறி நம் மனதை மிகவும் கலங்க வைத்துவிட்டார் ஆசிரியர். எலும்புருக்கி நோய் வந்து அவள் படும்பாடு சொல்லி மாளாது. தன் அம்மா கடுமையாக இருந்தாலும் மனதில் அவள் பாசத்துடன் வளர்த்ததை நினைத்துப் பார்க்கிறான் சாமிக்காளை. அவனை எழுதவிடாமல்,  அவள் கத்துவதை பார்த்து,  அவளை தூக்கி தண்ணீரில் கழுவிவிட்டு, மறுபடியும் கட்டிலைப் பார்த்தபோது அதில் புழு நெளிவதைப் பார்த்து கட்டிலையும் நன்றாக சுத்தம் செய்து, அம்மாவை எப்படியாவது பக்கத்திலிருந்த பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தானவ அவனிடம் மேலோங்கி இருப்பது அற்புதம். ( இக்காலத்தில் பெற்ற தாயை யார் இவ்வாறு பார்த்துக் கொள்கிறார்கள்?  விரல்விட்டு எண்ணி விடலாம்)  பழனியம்மாள் படுத்திருந்த நார் கட்டில் கூட நாளை தன்னையும் தூக்கி வெளியே எரிந்து விடுவார்கள் என்று யதார்த்தமாக ஆசிரியர் முடித்திருக்கும் பாங்கு அருமை.

  '' ஊமச்சி '' - முத்தம்மாள் தன் குடும்பத்தை காப்பாற்ற என்னவெல்லாம் பாடுபடுகிறாள் என்றும், மற்றவர்களின் பேச்சுகளையும் சட்டை செய்யாமல்,  தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது,  ஒரு ஏழைத்தாயின் வாழ்க்கையை ஆசிரியர் நம் கண் முன்னே கொண்டு நிறுத்தியுள்ளார். அற்புதம். அவளுக்கு உதவியாக சின்னவன் பாக்கியராஜின் செயலும், ஓர் உணர்வை தூண்டுவதாக இருந்தது.  அவன் அழும்போது நம் கண்களும் கலங்கி விடுகின்றன. நாட்டில் நடக்கும் வறுமை என்ற பேயை அந்த அழுகுரல் சாடியிருக்கிறது என்பதும் என் கருத்து. ,( ஊமச்சி நத்தை போல் இருக்கும் என்பதை இப்பொழுதுதான தெரிந்து கொண்டேன். வாய் பேச முடியாத ஊமச்சி கதையோ என்று நினைத்தேன்.) 

  '' தட்டு வண்டியும் தங்கராசும் " - தன் தகுதிக்கு தகுந்தவாறு தங்கராசு திருமணம் செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. வாழ்க்கையில் கல்வி, அழகு போன்றவை ஒரு மனிதனுக்கு தேவை. அது இல்லாவிட்டால் தங்கராசு போல் பாடுபட வேண்டும். இவைகள் இல்லாவிட்டாலும் அவன் பொறுமையின் சிகரம். சிறந்த உழைப்பாளி.  தன் இரண்டு பெண் குழந்தைகளுக்காக அவன் உழைப்பதை பார்த்து அந்த கிராமமே அங்கலாய்க்கிறது. தன் சிநேகிதனுடன்  தொலைபேசியில் எப்போதும் பேசிக்கொண்டேயிருப்பதும் , தன் குழந்தைகளைக் கூட மறந்து மற்றொருவனுடன் சென்று விடுகிறாள் என்று படிக்கும்போது வேதனையடைகிறது. அவள் பெண் வர்க்கத்திற்கே இழுக்கு ஏற்படுத்துகிறாள். இக்காலத்தில் சில பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் விவாகாரத்து அதிகமாக நடக்கிறது.  கணவனின் அன்பை புரிந்து கொள்ளாமல் அவனை அலட்சியப்படுத்துவது நமக்கு வெறுப்பாக இருந்தது.  தன் குழந்தைகளை தட்டு வண்டியில் வைத்துக்கொண்டு ஓட்டும்போது ஒருநாள் அவன் விபத்யில் சிக்கி கிடக்கும்போது அவள் மனைவி வேறொருவருடன் போகிறாள். இககதையிலிருந்து சமூகம் பல விஷயங்களில்  எவ்வளவு தவறாக புரிந்து கொண்டுள்ளது என்பது புலனாகிறது.  இக்கதை உண்மையிலேயே மனதை வருத்தும்படி இருந்தது.

  '' சொன்னபடி வாழு'' - இது கவிஞர் செல்வராசின் கதை.தன் மனைவியிடம் அன்பாக இருப்பார். ஆனால் தன் குழந்தைகளிடம் மிகவும் கடுமையாக இருப்பார். ஒருநாள் அகிலாபுரத்தில் ரோட்டர கிளப்பில் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்காக கருத்தரங்கம் வைத்திருந்தார்கள்.  அதில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து பேச வைக்க ஏற்பாடு செய்திருந்தனர்.  அந்த கருத்தரங்கில் அவருடைய மகளும் கேட்க வந்திருந்தது அவருக்கு தெரியவில்லை.  அவருடைய பேச்சால் எல்லா மாணவர்களும் உற்சாகமாக இருந்ததை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்து அவருக்கு ஒரு கவரையும் கொடுத்தனர். வீட்டிற்கு வந்தவுடன் தன் சுபாவத்தை காட்டினார்.  மகள் உள்ளே போய் கதவை சாத்திக்கொண்டு இருந்தாள.  தாய் எவ்வளவு கூப்பிட்டும் வெளியே வரவில்லை.  வெகுநேரம் கழித்து அவளே வெளியே வந்து அன்று பேசிய பேச்சாளர் பேச்சை அப்படியே சொன்னதும், தன் பேச்சை அவள் கேட்டிருப்பதால்,  அதை உணர்ந்து தான் செய்த தவறை நினைத்து வருந்யுவதும் அருமை.

  மேடையில் வாய்கிழிய பேசும் பேச்சாளர்கள் உண்மையில் அதற்கு எதிராகத்தான் நடந்து கொள்வர் என்பது நிதர்சன உண்மை.  கல்வியை முதலீடாக வைத்து வருங்கால சந்ததியர்கள் பணம் காய்ச்சி மரங்களாக பெற்றோர்களால் மாற்றப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் ஆணித்தரமாக கூறியிருக்கிறார் அருமை. பாராட்டுக்கள்.

  '' கருப்புச் சட்டையும் கத்தக் கம்புகளும்'' - இதில் சேரி மக்களிடம் பாசம் காட்டும் நசீர்பாய். பகுத்தறிவை போதித்து அவர்களை மற்ற மனிதர்கள் மதிக்க வைக்க வேண்டும் என்று பாடுபடுவது அருமை. ஆனால் மேல் சாதிக்காரர்கள் இவர்களை இழிவுபடுத்தி பேசுவதும் தங்களின் அடிமைகளாகவே இருக்க விரும்புவதும் ஆசிரியர் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். அற்புதம்.சாதி வெறியர்கள் இன்னும் நாட்டில் உள்ளனர்.

  தவராசா, சாமிக்கண்ணு, சுப்ரமணியன் என்ற மூன்று இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கண்டு பெரியார் தொண்டர்,  அவர்களை மருத்துவமனையில் சேர்த்த லாரி டிரைவர் சுந்தரத்தை போலீஸ் அதிகாரிகள் அவனிடம் கேள்வி கேட்க,  அவனும், இந்த மூன்று இளைஞர்களை அடித்து விட்டு பலபேர் ஓடியதை தன் லாரி வெளிச்சம் மூலம் பார்த்ததும்,  உடனடியாக காப்பாற்ற மருத்துவமனைக்கு அழைத்து வந்ததையும் கூறுகிறான். அவனது மனிதாபிமானம் நன்கு வெளிப்படுத்துகிறது.

  சாதிய வன்மத்தை இக்கதை தெளிவுபடுத்துகிறது.  குழந்தைகளை கல்வி கற்பதற்கும் கைத்தொழில் கற்க உதவி செய்யும் நசீர்பாய் என் மனதில் உயர்ந்து நிற்கிறார். மேலும் சாதி வெறியர்களை ஒழிக்க ஒரு சிறுவன் புறப்பட்டு ஆயுதங்களோடு வருவதும், அவனுக்கு புத்திமதி கூறி நசீர்பாய் அரவணைப்பதும் அருமையிலும் அருமை. மாவட்ட ஆட்சியரும் ,நியாயமாக பேசும் மாவட்ட எஸ்.பியும் என் மனதில் உயர்ந்துள்ளனர். ( எனது மூத்த பையனும் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். அவர் பணிபுரியும் ஊரில் உள்ள அரசாங்க பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ) 

  இச்சிறுகதை தொகுப்பில் சாதி கொடுமை பொருளாதார நிலை,  பகுத்தறிவு, வறுமை, மதுவின் தீமை, பிறருடன் அன்புடன் நடப்பது, தான் பேசும் பேச்சுக்கும் செயலுக்கும் மாறுபட்ட தன்மை,  குடும்பத்தில் ஏற்படும் மனப் பிளவுகள் ஆகியவற்றை ஆசிரியர் கொடுத்திருப்பது அருமையிலும் அருமை. கதைகளின் ஆங்காங்கே மண் வாசனையும் தெரிகிறது.  சமூக அக்கறையை இந்த தொகுப்பு வெளிப்படுத்துகிறது. 

  இம்மாதிரியான சமூக அக்கறை கொண்ட கதைகளை படைக்குமாறு இந்த வாசகி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.  தங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
                 இப்படிக்கு
             ந.பிச்சம்மாள்,
         ( உரத்த சிந்தனை) 
நங்கநல்லூர், சென்னை -600061
             பேச : +919790702927

திங்கள், 17 செப்டம்பர், 2018

மழைக்காலம் - சோலச்சி

                        மழைக்காலம்

வீட்டினுள் நுழைந்த
வெள்ளத்தை
விரட்டிக்கொண்டு
இருந்தான் அவன்.....!
மழையாய் விழுந்து
மழலை வெள்ளமாய் மாறிய
அந்த
நீர்க்குழந்தை
மீண்டும்
அத்துமீறியபடியே.....
அணைகட்டி தடுத்தும்
அமைதியாகவில்லை.....
பொறுமையாய்
விளையாடிய
அந்தக் குழந்தை
பேச தொடங்கியது ....



'' என்
அரியணையில் நீ......
வெளியேற்றப்பட வேண்டியதும்
நீயே.....!
தாராளமாய்
தங்க வேண்டிய நான்
தரிகெட்டு அலைகிறேன்
தார்ச்சாலையெங்கும்.....
எனது இல்லங்கள்
இருந்திருந்தால் - நீ
நிர்வாணமாய்
நிவாரணம் கேட்கும்
நிலை எதற்கு.....?
நீர்க்குமிழியின்
நீள உரை கேட்டு
திடுக்கிட்டான்.....!
நீர்நிலைகளும்
வயல்காடும்
கட்டடங்களைச் சுமந்தவாறு......
அனாதையாய்
ஓடிக்கொண்டிருந்த
அந்த
நீர்க்குமிழிக்குள்
மண்டியிட்டு முத்தமிட்டான்.....
"உன்
அரியணையில் நான்...."
மன்னிப்பு கேட்பவனாய்....
விழியின்றி தவித்தபடி
நகர வீதிகளில்
மழைக்காலம்.....!!!
              - சோலச்சி
                பேச : 9788210863

பக்குவமாய் மனசு - சோலச்சி


பக்குவமாய் மனசு....
எதற்கோ
பயந்து ஓடுவதாகவே
உணர்ந்தேன்
இதுநாள் வரை.....

ஓடி ஓடி மறைந்தபோதும்
துரத்தி அடிக்கிறாய்
உன் துப்பட்டாவால்
அந்த மேகத்தை....!

நீ
ஓய்வு எடுப்பதன்
உச்சநிலைதானோ
அமாவாசை ........!

வெல்வதும்
பின் வாங்குவதுமான
நிலையில்
தொடர்ந்தபடி....!

மகிழ்ச்சியின் உச்சத்தில்
முழு நிலவாய்.......
தேய்ந்து
மறைந்த போதும்
பணியைத் தொடர்ந்தபடி
நீ.....!

மகிழ்ச்சியின் உச்சத்தில்
மகிழ்வதும்....
தொய்வின் நிலையில்
தொலைந்து
போவதுமாய் நான்.....

எனக்குள்ளும்
இருக்கிறது
உணரத் தொடங்குகிறேன்....
பக்குவமான
என்மனதை
ரசித்தபடி......!
           - சோலச்சி
[ எனது காட்டு நெறிஞ்சி கவிதை நூலிலிருந்து ]

ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

தாயே வணங்குகிறேன் - சோலச்சி

தாயே வணங்குகிறேன் .....
கல்வியின் பயனைக் கற்றபோது
கையில் காசு இல்லை ....

கைவிட்டு விடலாமா கல்வியை
கலங்கி நின்றேன்......!
கல்வியில் தேவதையொன்று
கண்முன் காட்சி தர
களிப்பு வரப்பெற்றேன்....!

எழுதுகோல் முதற்கொண்டு
எல்லாச் செலவும் ஏற்று
என்னில் ஒளியேற்றிய
ஏற்றமிகு தாய்தான்
திருமதி.எஸ்.சோலச்சி அவர்கள் ...
பள்ளிக்கு ஆசானாய்
எனக்குத் தாயுமாய்....!

பத்து தொடங்கி பனிரெண்டாம் வகுப்பு
என மூன்றாண்டு செலவுகள்
புனிதத் தாயினைச் சேரும்...

வாழ்க்கைப்
பிரச்சினையில் தள்ளாடி
நின்று தவித்தபோது - எங்கள்
தாகம் தீர்த்த தர்மத்தாய்...!

உணவு முதற்கொண்டு
உலை வைக்கப் பாத்திரம்
தட்டு முதல் என் தாய்க்கு
சேலை வரை....!

அரிவாள்மனை முதல்
அயர்ந்து உறங்கப் போர்வை என
வீட்டுச் சாமான்கள்
விதவிதமாய் தந்து - எங்களை
வாழ வைத்த ஒளிவிளக்கு...!

நான் ஆசிரியராக வரவேண்டும்
என ஆவல் கொண்டு
ஏழைச் சின்னவன்மீதும்
ஏற்றமிகு பாசம் கொண்டு....!

ஆளாக்கிய புனிதமே
பாத மலர்களில் என்னைச்
சமர்ப்பித்தேன்....
தாயே வணங்குகிறேன்
தாயே வணங்குகிறேன் ...!

        - சோலச்சி
[ எனது காட்டு நெறிஞ்சி -மே 2016 கவிதை நூலிலிருந்து .....]

ஆயுத எழுத்து - சோலச்சி

ஆயுத எழுத்து......

சோத்துக்கு இல்லையெனினும்
சொம்படிக்கும் வித்தைகளை
கற்றுத்தராதே.....

மாத்திக்க துணி இல்லையெனினும்
மண்டியிடும் நிலையினை
பெற்றுத்தராதே....

உழைப்பைச் சுரண்டும் ஊதாரிகளின்
கொட்டம் அடக்கும் சூத்திரம்
கற்றுக் கொடு.....

பொய்யுரைப்போர் மனங்களெல்லாம்     
பொசுக்கும்படியான கவிதைகளை
அளவின்றி அள்ளிக்கொடு....

சாத்திர பொய்யர்களின்
கதாபாத்திரங்கள் கட்டுக்கதையென
உலகறியச் செய்துவிடு....

பாசாங்கு இல்லாத
என் எழுத்து
இந்த பாருக்கோர்
ஆயுத எழுத்து...!!!

            -சோலச்சி

ஸ்டெர்லைட் - சோலச்சி

வாழ்வாதாரம் காக்க போராடினோமே


வாசல் கதவை உடைப்போமென்றோமே


வழியில் துணிந்து சென்றோமே


விரைந்து மூடச் சொன்னோமே...

இடைமறித்து ஏந்தி நின்றாயே


விடைதெரியாது விழித்தோமே


இமைக்கும் நேரத்திலே


இதயமின்றி சுட்டுக்கொன்றாயே....

ஏன் சுட்டாய் கேட்டோமே -இந்தியக்


கடல் பொங்க கண்ணீர் விட்டோமே


ஆடத்தெரியாதவன் தெருக்கோணலென்ற


கதையாய் அளக்கின்றாயே....

கூலிகளைக் கொன்று குவிக்க


கைக்கூலியாக போன உன்னை


அய்யோ பார்த்து கெட்டோமே


அன்று அறியாது இயந்திரம் தொட்டோமே....

எதிரே இருப்பவனும் அன்று சுட்டானென்று


புள்ளி விபரம் காட்டுகின்றாய்


கரும்புள்ளியைக் கூட்டுகின்றாய்....

சுதேசி கப்பல் விட்ட மண்


சுக்குநூறாய் போனதென்ன....

திக்கற்று தேசம் போவதற்குள்


இக்கணமே எழுவீரே


இனமான தோழர்களே......

-சோலச்சி


சனி, 15 செப்டம்பர், 2018

கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும்- சி.அண்ணாத்துரை திருச்சிராப்பள்ளி

எனது கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும் நூல் வாசிப்புக்குப் பின் திருச்சிராப்பள்ளியில் வசித்துவரும் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் திரு. கே.வி.சி.அண்ணாத்துரை அவர்களின் கருத்தளிப்பு......(மின்னஞ்சலில் அனுப்பியது- 14.09.2018)




Comrade's review of my book

Dear Kavimathi              

I have gone through your book " KARUPPUCHATTAIYUM KATHIKKAMBUKALUM"

I am very sorry to  accept the bitter fact that I have never gone through  many Thamizh Novels. If I am correct, I had completed only one book written by Rajagopaalachri about Mahabharatham at my very earlier stage and I could not recollect as to why I had gone through  the book and another one by Dr MU VA ." Karithundu" 

 

I am wondering how I have completed your book !  Is it because you are my relative or to know about you as an interested person in the Konaadu Sangam. I think both them might have been the reason by which  I should have been motivated to read the book. 

 

I am really impressed by  the subject you have taken for witting the way in which you have  narrated the  incidents and the language is very casual and familiar to you  on your way and almost like a water fall without any stoppage. After completion of the book, I have come to a conclusion that you are very capable and talented. My hearty congratulations and wish you a bright future  in both the social and literature  world.  Keep it up.

 

I am ashamed of the fact that I had been ignorant of our THAMIZH language and I have wasted all my life time  in running  after English for my livelihood and I find it very difficult to spare my time for our own language. All my worthy and valuable life time had been taken over by my job as I wanted myself to be  perfect  and at par with the performance of the other  higher caste brothers .

 

With one request I would like to conclude my appreciations for you- please  try to educate our youngsters and try to have more youngsters in the Sangam. Please start very meeting with one " Thirukural " and make it is mandatory for our school going children. English is important for their livelihood and Thamizh is also equally important to preserve their identity in future. As was rightly observed by our leader Baabashib Ambedlar  education with excellence is only the way out for all of us to come out of caste stigma painted on us.

 

with regards and wishes from

KV Chinnaiha Annadurai. Trichy,  Tamil Nadu.