ஞாயிறு, 31 டிசம்பர், 2023

பிரதம மந்திரியாக வாய்ப்பு

 

பத்தாண்டுகள் பிரதம மந்திரியாக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால்...



* சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதை நிச்சயம் நிலைநாட்டி இருப்பேன்.

* விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்து பொருளாதாரத்தை வலிமை அடையச் செய்திருப்பேன்.

* மதவாத அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்திற்கு துணையாக நின்று இருப்பேன்.

* மகளிருக்கு ஆட்சிப் பணிகளில் 50 விழுக்காடு என்பதை நிலைநாட்டி இருப்பேன்.

* 15 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துகிறேன் போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளிக்காமல் கறுப்பு பணத்தை உண்மையாகவே மீட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்திருப்பேன்.

* குறைந்தபட்ச இருப்பு, எஸ்எம்எஸ் அனுப்புதல், அதிக முறை பணம் எடுத்தல் போன்ற வகைகளில் வங்கிகள் ஏழைகளிடம் சுரண்டுவதை தடுத்து இருப்பேன்.

* இந்திய துணைக் கண்டம் மத நல்லிணக்கம் உள்ள நாடு. இங்கே பல மொழி, இனம் சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்தி ஒற்றுமைக்கு வழி அமைத்திருப்பேன்.

* மணிப்பூரில் நடந்த கொடூரம் போல் நடக்காமல் பெண்களின் சுய மரியாதையை நிலைநாட்டி இருப்பேன்.

* பண மதிப்பிழப்பு என்கிற பெயரில் ஏழை நடுத்தர மக்களை வாட்டி வதைக்காமல் வரி என்கிற பெயரில் மோசடி மற்றும் பெரும் சுரண்டலை தடுத்திருப்பேன்.

* மக்களின் நலனில் அக்கறை செலுத்தி பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்காமல் பொது நிறுவனங்களை பெருக்கி இருப்பேன்.

* அயல்நாட்டுத் தலைவர்கள் விருந்தினர்களாக வரும்பொழுது குடிசைப்பகுதிகளை திரையிட்டு மறைக்காமல் பூர்வக்குடி மக்களிடம் கலந்துரையாடும் அளவுக்கு அவர்களின் பொருளாதார வாய்ப்பினை ஏற்படுத்தி பெருமை சேர்த்திருப்பேன்.

* கல்விக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் நீட் போன்ற அபாயகரமான தேர்வுகளை தடை செய்து இருப்பேன்.

* வருமான வரி என்கிற பெயரில் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பல மடங்கு சுரண்டப்படுவதை தடுத்து இருப்பேன். எதற்கு எடுத்தாலும் வரி என்கிற கேவலமான நிலையில் இருந்து அவர்களை மீட்டு ஒவ்வொருவரின் வருமானத்தை இரட்டிப்பாக்க முழுமையாக துணை நின்று இருப்பேன்.

* கடவுளின் பெயரைச் சொல்லி கல்வி அறிவு அளிக்காமலும் வேலையில்லா திண்டாட்டத்தை உண்டாக்கி தன் நிலத்தில் வாழும் மக்களை வயிற்று பசிக்காக ஒவ்வொரு நிலமாக ஓடும் அவல நிலையை தடுத்து கல்வி வேலை வாய்ப்பினை வழங்கி நாடோடி வாழ்க்கையில் இருந்து மீட்டு இருப்பேன்.

* பஞ்சம் பிழைப்பதற்காக கல்வியை விட்டுவிட்டு உறவுகளை விட்டுவிட்டு வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலம் நோக்கி இளைஞர்கள் பெரியவர்கள் வேலை வாய்ப்புக்காக படை எடுப்பதை தடுக்கும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் சமமான வளர்ச்சியை உருவாக்கி இருப்பேன்..

* விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து வேளாண் உற்பத்தியை பல மடங்கு பெருக்குவதற்கு வழிவகை செய்து இருப்பேன். மேலும் விவசாய பெருங்குடி மக்களை தலைநகரில் அரை நிர்வாணமாய் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்க மாட்டேன்.

* கற்பு நெறி என்று வந்துவிட்டால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்பதை உணர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் உரிய நேரத்தில் விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருப்பேன்.

* நாட்டிற்கு வருமானம் தேடித் தருகிறேன் என்கிற போலி முகத்தோடு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நாடு நாடாக சுற்றாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேலை வாய்ப்பினை பெருக்கி இருப்பேன்.

* நான் ஏழைத்தாயின் மகன் என்பதை நிரூபிக்க தேவையற்ற ஆடம்பரங்களை அகற்றி வறுமையை ஒழிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கி இருப்பேன்.

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகத்தில் தேவையில்லாமல் இடைத்தரகர்களை கொண்டு குறுக்கீடு செய்திருக்க மாட்டேன்.

* இந்தப் பதவி என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு எனக் கருதி அவர்களின் தேவையை உணர்ந்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டிருப்பேன்.

* கொரோனா பெருந்தொற்று காலங்களில் மக்களின் வாழ்வாதாரம் முடங்கி கொண்டிருக்கையில் சில நிறுவனங்கள் மட்டும் பெரும் வருமானம் ஈட்டுவதை தடுத்து இருப்பேன்.

* நன்கொடை என்கிற பெயரில் தான் சார்ந்த கட்சி மட்டும் பெரும் தொகை வசூல் செய்வதை தடுத்து இருப்பேன்.

* மக்களின் அடிப்படைத் தேவைகளான பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வை ரூபாய் 55 க்கு மேல் உயராமல் கட்டுக்குள் வைத்திருப்பேன்.

* ஜிஎஸ்டி என்கிற பெயரில் வரியை பெற்றுக் கொண்டு அந்தந்த மாநிலத்திற்கு உரிய பங்கிடை முறையான காலங்களில் வழங்கி இருப்பேன். மேலும் அனைத்து பொருள்களுக்குமான ஜிஎஸ்டி என்பதை குறைந்தபட்சமாக நிலை நிறுத்தி இருப்பேன்.

* அனைத்து மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் அளித்து அவற்றின் வளர்ச்சிக்கு துணை நின்று இருப்பேன்.

* மனிதரில் ஏற்றத்தாழ்வு என்பது மிகப்பெரிய சனாதனம் என்பதை உணர்ந்து சனாதனம் எந்த வடிவிலும் உள் நுழையாமல் தடுத்து நிறுத்தி இருப்பேன்.

* உணவு என்பது அவர்களின் உரிமை. ஆதலால் உணவு விஷயங்களில் தலையீடு இல்லாமலும் மக்களின் ஆரோக்கியத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து வழிகாட்டியாக செயல்பட்டு இருப்பேன்.

* மாநிலங்களின் சுயாட்சியில் குறுக்கீடு செய்யாமல் மாநிலங்களின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்து தேசிய ஒற்றுமைக்கு வழிவகை செய்திருப்பேன்.

* அனைவருக்கும் இலவச கல்வியை உறுதி செய்து,  உயர் பொறுப்புகளுக்கு எல்லோரையும் தகுதி உடையவர்களாக மாற்றியிருப்பேன்.

* கோயில்களை சிலர் மட்டுமே ஆக்கிரமித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதை தடுத்து நிறுத்தி கோயில்களை பொதுவுடமை ஆக்கி எல்லோரும் விரும்பியபடி வழிபாடு செய்து கொள்வதற்கு துணை நின்று இருப்பேன்.

* இல்லாத ஒன்றுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்யாமல் பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் வளர்ச்சி மேம்பட துணை நின்று இருப்பேன்.

* சிலைகளுக்கு 3000 கோடி செலவு செய்யாமல் அணைகளுக்கு பல கோடிகள் செலவு செய்து நதிகளை இணைத்து மண்ணை வளமை அடையச் செய்திருப்பேன்.

* சாமியார்கள் தனிமையில் தியானத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக காட்டை அழிக்காமல் காட்டிற்குள் சென்று தியான மேற்கொள்ள வழிவகை செய்திருப்பேன். மேலும் ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் தலையீடு இல்லாமலும் மேலும் வாக்களிக்கும் உரிமை இல்லாமலும் சட்டம் நிறைவேற்றி இருப்பேன். ஏனென்றால் சாமியார்கள் முற்றும் துறந்தவர்கள்.

* நிறைவாக, மக்களை அறிவார்ந்தவர்களாக உருவாக்கிட ஒவ்வொரு வட்டாரத்திலும் மிக உயர்ந்த நூலகத்தை அமைத்து அறிவு பசியினை போக்கி அறிவுச் சுடரை ஏற்றி இருப்பேன்.

   இன்னும் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட  அறிவார்ந்தவர்களையும் ஆற்றல் மிக்கவர்களையும் ஆலோசனை குழுவாக உருவாக்கி நாடு, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்பினை உண்டாக்கி இருப்பேன்.

            அதிகாரம் கைகளுக்கு கிடைத்தால் அதை ஆக்கபூர்வமான செயல்களுக்கு ஈடுபடுத்த வேண்டும் என்பதை தெரிவித்து வெல்லும் ஜனநாயகம் என்பதை நிலைநாட்டிட நாம் யாவரும் ஓரணியில் திரண்டு நிற்போம்.

     சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் வெல்லட்டும்.

     கற்பி ஒன்று சேர் புரட்சி செய்.

      மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்

                பேரன்பின் வழியில்

                       சோலச்சி

                        31.12.2023

வெள்ளி, 29 டிசம்பர், 2023

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் - கவிஞர் வைகறை

 

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிஞர் வைகறை

 

 





   ஒரு படைப்பாளர் எந்த அளவுக்கு தனது அல்லது மற்றவர்களின் படைப்புகளை நேசிக்கின்றான் என்பதை அவனது படைப்புகளை பார்க்கின்ற பொழுது அல்லது அவனோடு பழகுகின்ற வாய்ப்புகள் கிடைக்கின்ற பொழுது அல்லது அவனைப் பற்றி தெரிந்தவர்கள் யாரேனும் எடுத்துச் சொல்லுகின்ற பொழுது நம்மால் உணர முடியும்.

   ஒரு படைப்பாளர் ஒரு கவிதையை அல்லது கதையை எழுதி முடித்துவிட்டு அதற்கு பொருத்தமான தலைப்பை எழுதுகின்றாரா..? அல்லது பொருத்தமான ஒரு தலைப்பை எழுதிவிட்டு அதற்கு ஏற்றார் போல் தனது படைப்பை எழுதுகின்றாரா..? என்பதை அந்தப் படைப்பை வாசிக்கின்ற பொழுது மட்டுமே உணர முடியும்.

   தமிழ் இலக்கிய உலகில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்த முனைந்தவன் கவிஞர் வைகறை. அவனது கவிதைகளை வாசிக்கின்ற பொழுது இப்படியும் அழகியலோடு எழுத முடியுமா என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ள முடியும். மனித வாழ்வின் எதார்த்தத்தை வாழ்வியலை தனது ரசனை கலந்த கற்பனையோடு மிக நேர்த்தியாக கவிதை புனையக்கூடிய ஆற்றல் மிக்கவன் கவிஞர் வைகறை.

   தான் மட்டும் கவிதை புனைய வேண்டும் என்று நினைக்காமல் தன்னை சார்ந்தவர்கள் கவிதை புனையும் எண்ணம் உள்ளார்களா என்பதை அறிந்து அவர்களை தூண்டும் விதமாக அவர்களது படைப்புகளை கொண்டாடி மகிழக்கூடியவன் கவிஞர் வைகறை. நிறை குறைகளை சுட்டிக் காட்டுவதற்கு ஒருபோதும் தயங்கமாட்டான். கவிதையை தனது வாழ்வின் லட்சிய நோக்கமாகவே கருதி வாழ்ந்தவன். இலக்கிய உலகில் உரைநடை, கவிதை, சிறுகதை, பெருங்கதை, நாவல் என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் கவிதைகளுக்காக மட்டுமே தனது தேடலைத் தொடங்கியவன் கவிஞர் வைகறை.

    முகம் தெரியாதவராக இருந்தாலும் எங்கோ ஓரிடத்தில் தமக்குப் பிடித்தமான கவிதையைப் பார்த்துவிட்டால் அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்து நேரில் சென்று அல்லது கடிதம் மூலமாகவோ தனது ஆழமான கருத்துக்களை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்பவன்தான் கவிஞர் வைகறை.

    தான் படைத்த கவிதைகளையும் தான் ரசித்த கவிதைகளையும் பல கோணங்களில் ஆய்வு செய்து பேசக் கூடியவன். கவிஞர் வைகறை தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலபுரத்தில் பிறந்து கிருஷ்ணகிரியில் ஆசிரியர் பணி மேற்கொண்டு பின்னாளில் புதுக்கோட்டைக்கு மாறுதலாகி தன்னுடைய ஆசிரியர் பணியையும் இலக்கியப் பணியையும் நிலை நாட்டியவன்.

    புதுக்கோட்டைக்கு மாறுதலாகி வந்த சில தினங்களிலேயே புதுக்கோட்டையில் கவிஞர்களை எல்லாம் அழைத்து நகர்மன்றத்தில் கவிதைக் கூடலை ஏற்படுத்தி ஒவ்வொரு கவிஞர்களிடமும் உள்ள அவரவர் கவிதைகளை வாசிக்க சொல்லி மிகப் பெரிய ரசிகனாய் ரசித்து மகிழ்ந்தவன்.

   சில கவிதைகளை வாசித்து விட்டு அல்லது கேட்டுவிட்டு இந்த கவிதையை இப்படிப் புனைந்தால் இன்னும் நேர்த்தியாக இருக்கும் என்று சொல்லி கவிஞர்களின் வாழ்வில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவன் கவிஞர் வைகறை. கவிதையில் மாபெரும் சக்கரவர்த்தியாக திகழ வேண்டிய கவிஞர் வைகறை ஒரிஜினல் தாஜ்மஹால், நிலாவை உடைத்த கல், ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் போன்ற கவிதை நூல்களை தமிழ் உலகத்திற்கு அள்ளித் தந்தவன்.

  கவிஞர் வைகறையின் கவிதைகள் வாசிப்பதற்கு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும். இவனது கவிதைகளை கணையாழி, புன்னகை, அருவி, கருந்துளை, செங்காந்தள், கருக்கல் விடியும், மகாகவி, தமிழ் தோட்டம், எழுத்து.காம், வசந்த வாசல் போன்ற இதழ்கள் மற்றும் தொகுப்பு நூல்களில் நிறைய நிறைவாகவே வந்துள்ளன.

   நந்தலாலா.காம் என்கின்ற இணைய இதழையும் நடத்தி வந்தவன் கவிஞர் வைகறை. இந்த இணைய இதழில் எழுதுவதற்கு எண்ணற்ற கவிஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு எழுதினார்கள் என்றால் அது மிகை ஆகாது. நந்தலாலா இணையத்திற்கு அனுப்புகின்ற கவிதைகள் அனைத்துமே இதழில் வெளியீடு செய்ய மாட்டான். காரணம் அந்த இணைய இதிலுக்கான முக்கியத்துவத்தை கருதியவன் கவிஞர் வைகறை. தேர்ந்தெடுத்த படைப்புகளை மிக நேர்த்தியாக நந்தலாலா இணைய இதழில் வெளியிட செய்து பிற கவிஞர்களையும் இதுபோல் வடிவமைப்பினை கருத்தாழமிக்க படைப்புகளை எழுத வேண்டும் என்கின்ற ஆசையை தூண்டியவன்.

  கவிஞர் வைகறையின் கவிதை விரலை பிடித்து நடந்தவர்கள் நடக்க முயற்சி செய்தவர்கள் இனியும் நடக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ஏராளம் ஏராளம் ஏராளம். காரணம், கவிஞர் வைகறையின் எழுத்து நடை என்பது யாவரும் வியக்கத்தக்க வகையில் இருக்கும். கவிஞர் வைகறையின் படைப்புகளை வாசிப்பதற்கு பெரிய தமிழ் அகராதியையோ அல்லது சொற்களஞ்சியமோ தேவையில்லை. தமது கவிதையை வாசிக்கின்ற பொழுது காட்சிப்படுத்தக்கூடிய வல்லமை படைத்தவன் கவிஞர் வைகறை.



    ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகின்றான் என்கின்ற கவிதை நூலின் தலைப்பே மிகவும் நேர்த்தியாக இருக்கும். நிச்சயமாக, இது போன்ற தலைப்புகளை வைக்கக்கூடியவன் கவிஞர் வைகறை மட்டுமாகத்தான் இருக்க முடியும். பின்னாளில் இது போன்று கவிதை தலைப்புகளை யாரேனும் வைத்திருந்தால் அவர்கள் கவிஞர் வைகறையை பின் தொடர்ந்தவர்களாகவோ அல்லது எங்கேனும் அவரது படைப்புகளை பார்த்தவராகத்தான் இருக்க முடியும்.

    ஒரு அப்பா தனது குழந்தையை எந்த அளவுக்கு நேசிக்கின்றான் ரசிக்கின்றான் என்பதை ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் என்கிற கவிதை நூலில் நாம் காண முடியும். இந்த நூல் டிசம்பர் 2014 இல் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில் வெளியீடு செய்யப்பட்டது.

    இந்நூலை வெளியீடு செய்து இந்நூல் குறித்து திறனாய்வு செய்து பேசியவர் காக்கை சிறகினிலே  இதழின் ஆசிரியர் எழுத்தாளர் தோழர் எட்வின் அவர்கள்.  இந்நூலை ஆய்வு செய்து பேசிய தோழர் எட்வின்இப்படி எல்லாம் உன்னால் கவிதை எழுத முடியுமா என்று மேடையிலேயே கேட்டு வியந்து கவிஞர் வைகறையே உச்சி முகர்ந்து பாராட்டினார். தோழர் எட்வின் அவர்கள் கவிஞர் வைகறையின் கவிதைகளை ஒவ்வொரு கவிதையாக ரசித்து ரசித்து பேசிய விதம் அங்கிருந்தவர்களை சிலாகிக்க செய்தது.

    ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் என்கிற இந்த நூலை வாசிக்கின்ற எவருமே கவிஞர் வைகறையை உச்சி முகர்ந்து பாராட்டாமல் இருக்க முடியாது. கவிதை உலகத்திற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவன் கவிஞர் வைகறை.

    தன் வாழ்நாளில் பொள்ளாச்சி இலக்கிய வட்டம், கோவை இலக்கிய சந்திப்பு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் ராசிபுரம் எழுத்தாளர் நாணற்காடன், மதுரை கூழாங்கற்கள் இலக்கிய அமைப்பு, புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம் இவற்றின் மீது தீராத பாசம் கொண்டவன் கவிஞர் வைகறை.

   இதோ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகின்றான் என்கிற கவிதை நூலுக்குள் செல்வோம்.

  மொத்தம் ஐம்பத்து மூன்று கவிதைகள் கொண்ட இந்த நூல் 64 பக்கங்களை கொண்டது. ஒவ்வொரு கவிதையும் நம் உள்ளத்தோடு பேசும். நாம், நம் குழந்தைகள் மீது கொண்டாட மறந்த அல்லது கொண்டாடிய நிகழ்வுகளை மீட்டு கொண்டு வந்து நம்மை ரசிக்க வைக்கும்.

அடர் வனம்

உள் நுழையத் தயங்கும் ஜெய்குட்டி

புரட்டுகிறான் அடுத்த பக்கம்.

    என்கிற கவிதைதான் முதல் கவிதையாக ஆரம்பிக்கிறது. இக்கவிதை நூலில் ஜெய் குட்டி என்கிற பெயர் கவிஞர் வைகறையின் மகனின் பெயர். ஜெய் குட்டி வருகிற இடத்தில் எல்லாம் உங்களின் செல்லக்குட்டிகளின் பெயரை பொருத்திக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தால் கவிதையின் ரசனை அழகியல் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.

   இந்த முதல் கவிதையை விளக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கருதுகின்றேன். ஒரு குழந்தையாக நீங்களே மாறி அந்த கவிதையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

   சில கவிதைகள் தலைப்புகளோடு இருக்கும்; சில கவிதைகள் தலைப்பு இல்லாமல் இருக்கும். ஆனால் எல்லாக் கவிதைகளுமே நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்கும்.

   தன் குழந்தையோடு பழகிய நாட்களை படம் பிடித்து காட்டியிருக்கிறார் கவிஞர் வைகறை. ஜெய் குட்டி என்னென்ன சேட்டை செய்கிறான் என்னென்ன வேலை செய்கிறான் என்பதை அணு அணுவாக ரசித்து கவிதையாக புனைந்து இருக்கிறார் கவிஞர் வைகறை. இன்றும் பல இடங்களில் குழந்தைகளை கொண்டாடுவோம் என்று பேசுவதற்கு மட்டுமே அழகாக இருக்கிறது. ஆனால் செயலில் பலரும் காட்ட முனைவதில்லை. சிலர் குழந்தைகளை கண்டாலே எரிச்சல் அடைகிறார்கள். சிலர் குழந்தைகளை ஏதோ கொண்டாட வேண்டும் என்கிற சம்பிரதாயத்திற்கு கொண்டாடுகிறார்கள். சிலர் உண்மையாகவே கொண்டாடி மகிழ்கிறார்கள்.

  கவிஞர் வைகறை இந்த நூல் முழுவதும் தனது மகன் ஜெய் குட்டியை ஆசை தீர கொண்டாடி மகிழ்கிறார்.

   தன் குழந்தையோடு கோவிலுக்கு செல்லும் கவிஞர் வைகறை தனது மகனின் செயல்களை உற்று நோக்கி அதை கவிதையாக படைத்திருக்கிறார். நாம் இப்போதும் குழந்தைகளை குழந்தைகளாகவே பார்ப்பதில்லை. குழந்தைகளை அவர்கள் போக்கில் அந்த வயதிற்கு ஏற்றார் போல் வாழ விடுவதில் நாம் தயக்கம் காட்டுகிறோம். இந்த கவிஞர் தனது குழந்தையின் செயல்பாடுகளை உற்று நோக்கி இவ்வாறு எழுதுகின்றார்..

 

கோரிக்கை எதுவும் வைக்காமல்

வெளியேறுகிறான்

கோவிலை விட்டு

ஒன்று அவனிடம்

பிரார்த்தனைகள் ஏதும்

இல்லாதிருக்க வேண்டும்

இல்லை

பிராத்திக்கும் தேவை ஏதும்

இல்லாத இருக்க வேண்டும்

இல்லையென்றால்

சக தோழனை அவன்

தொந்தரவு செய்யாமல்

சந்திக்க மட்டுமே வந்திருக்க வேண்டும்

அதோ

திரும்பியொரு புன்னகைத்து விட்டு

மீண்டும் நடக்கத் தொடங்குகிறான்

ஜெய்குட்டி.

     இந்த கவிதையை வாசித்த பிறகு நம்முடைய மனநிலை என்னவாக இருக்கும் என்பதை உங்களிடமே விட்டுவிடுகின்றேன். குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அவர்களது வயதை கொண்டாட தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஏதும் கோரிக்கை வைக்காமலேயே நாம் அவர்களது கருத்து சுதந்திரத்தை வாழ்வியல் சுதந்திரத்தை பிடுங்கி விட்டு அவர்களை வதைத்து கொண்டு இருக்கின்றோம் என்பதை மறுக்க முடியாது.

   அளவிட முடியாத கற்பனை. இப்படியும் கவிதை புனைய முடியுமா என்று நம்மை யோசிக்க வைக்கிறார் கவிஞர் வைகறை. மின்சாரமற்ற இரவில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது. அதை ஊதி அணைத்து விடுகிறான் ஜெய்குட்டி. வீட்டுக்குள் மீண்டும் இருள் சூழ்ந்து விடுகிறது. நாம் குழந்தையாக இருந்த பொழுது விளக்குகளை அணைத்துவிட்டு அப்பா அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறோம். ஆனால் கவிஞர் வைகறை தனது ஜெய்குட்டியை அப்படி திட்டாமல் அந்த நிகழ்வையும் ரசிக்கிறார். அந்த ரசனையின் வெளிப்பாடு தான் இந்தக் கவிதை.

 

மின்சாரமற்ற இரவு

மெழுகுவர்த்தியை ஊதியணைத்தவன்

இரவாக்குகிறான்

இரவை.

 

  இப்படி ஒரு காட்சிக் கவிதையை நம் முன்னால் நிறுத்தி நம்மையும் ரசிக்க வைக்கிறார் கவிஞர் வைகறை.

   சூரியவம்சம் திரைப்படத்தில் தாத்தா சரத்குமார் தனது பேரனை முதுகில் உட்கார வைத்து யானை நடப்பது போல் நடந்து காட்டி மகிழ்ச்சியை உண்டாக்கி தானும் மகிழ்ச்சி அடைவார். இந்த காட்சியை நம்மில் பலரும் நம் குழந்தைகளுக்கு அல்லது பேரக்குழந்தைகளுக்கோ நாம் செய்திருப்போம். இதை அவ்வளவு லாவகமாய் தன் கவிதைகளுக்குள் கொண்டு வந்து நம்முள் கிளர்ச்சி ஊட்டுகிறார் கவிஞர் வைகறை.

 

அவ்வளவு அவசரமாய்

அழைத்திருக்கிறான் என்னை

மணிச்சத்தம் கேட்டு

முன்னமே தெரிந்திருந்தால்

விழித்திருந்திருப்பேன்

அரை மணி நேரம் கழித்து

விழித்துப் பார்த்தபோது

உம்மென்று இருந்த ஜெய் குட்டி

இப்போது

யானை ஏறி மகிழ்கிறான்

என் முட்டி வலிக்க வலிக்க

நிறைவாய் வைக்கிறான் முத்தம் ஒன்றை

என் வழியின் மேல் மலரென.

   கவிதையை குழந்தையை உள்வாங்கிக் கொண்டு ரசிக்க முடிந்த நேசிக்க முடிந்த கவிஞனால் மட்டும்தான் இப்படியொரு கவிதையைப் புனைய முடியும் என்பதற்கு கவிஞர் வைகறை சாட்சியாக இருக்கின்றார்.

   வீட்டில் அரிசியை காய வைத்து இருக்கிறார்கள். அதை காகம் கொத்துகிறது. யாராவது வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்களா. ஆனால் கவிஞர் வைகறை தனது ஜெய்குட்டி வேடிக்கை பார்க்கிறான் என்பதை ஜெய் குட்டியின் உள்ளம் அறிந்து கவிதை புனைகிறார்.

   மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் ஆற்றங்கரை ஓரமாக நடந்து போகின்ற பொழுது ஆற்றில் மீன்கள் துள்ளி குதித்து தரை ஓரமாய் ஒதுங்குகின்றன. நாமாக இருந்தால் ஓடிப்போய் அந்த மீன்களை அள்ளி வந்து குழம்பு வைத்து மணக்க மணக்க ருசித்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் மக்கள் கவிஞரோ அந்த மீன்களைப் பார்த்து ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே தூண்டில்காரன் வரும் நேரமாச்சு ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சேஎன்று பாடி தனது உள்ளம் எப்படி என்பதை இந்த உலகத்திற்கு காட்டி செல்கிறார்.

   அதே நிலைப்பாட்டைத்தான் ஜெய்குட்டி தான் யார் என்பதை இந்த உலகுக்கு காட்டுவதற்காக காகத்தை விரட்டாமல் கொஞ்சம் தாமதிக்கிறான்.

 

அரிசி கொத்தும் காகம்

விரட்ட வந்த ஜெய் குட்டி

தாமதிக்கிறான் கொஞ்சம்.

 

   இந்த கவிதையின் அழகியலை பார்த்த அல்லது வாசித்த மாணவர்கள் உள்ளத்தில் நாமும் இந்த ஜெய்க்குட்டியை போல் மனிதாபிமானம் உள்ளவர்களாக வாழ வேண்டும் இரக்க குணம் படைத்தவர்களாக மிளிர வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கும்.

  

 

 

படுத்து கிடக்கும் என் கன்னத்தில்

முத்தமிடுகிறான் ஜெய் குட்டி

அது சிறு மீன் குஞ்சாய் மாறி

நீந்தத் தொடங்குகிறது

என் தலை முதல் கால் வரை.

இப்போது நான்

மீன் தொட்டியா

குளமா

கடலா

தெரியாமல் விழித்தபடி கிடக்கிறேன்.

இப்போது அவன்

என் மறு கன்னத்தில் முத்தமிடுகிறான்.

அது சிறு பறவையாகிப்

பறக்கத் தொடங்குகிறது எனக்குள்.

பூட்டிக் கிடக்கும் என் வீட்டிற்குள்

நிறைந்து கிடக்கிறேன் நான்

பாதி கடலாகவும்

பாதி வானமாகவும்

இரண்டே இரண்டு முத்தங்களால்.

     இப்படி ஒரு கவிதையை நிறைவு கவிதையாக எழுதி நம்மையெல்லாம் குழந்தைகளாக மாற்றி குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க வலியுறுத்தி ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் என்கிற கவிதை வனத்திற்குள் நம்மை அழைத்துச் சென்று நம் மனதை நிறைவுபடுத்தி இருக்கிறார் கவிஞர் வைகறை.

    இப்போதும் நாம் ஜன்னலை திறந்தால் நிச்சயம் எட்டிப் பார்க்காமல் இருக்க மாட்டோம். நம்மை புதிய உலகத்தில் எட்டிப் பார்க்க வைத்த கவிஞர் வைகறையின் கவிதைகள் தமிழ் உள்ளவரை நிச்சயம் கொண்டாடப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.



  நம்மோடு நீண்ட நாள் பயணிக்காமல் தனது கவிதைகளை மட்டுமே நமக்காக வழங்கிச் சென்று இருக்கிற கவிஞர் வைகறையை நாம் கொண்டாடி மகிழ்வோம்.

  கவிஞர் வைகறையை அவன் இவன் என்று ஆரம்பத்தில் எழுதி இருப்பேன். ஏனென்றால் அவன் என் நண்பன். அவன் என் இதயத்தில் நெருக்கமானவன். அவன் தோளில் சாய்ந்து எண்ணற்ற கவிதைகளை விவாதித்து இருக்கின்றேன். என் அன்புக் கட்டளையை ஏற்று கிருஷ்ணகிரியில் இருந்து புதுக்கோட்டை வந்தவன் சீக்கிரமாகவே இவ்வுலகத்தை விட்டு சென்று விட்டான்.

  கவிஞர் வைகறையின் கவிதைகளை தொகுப்பாக கொண்டு வர வேண்டும். ஏனென்றால், கவிஞர் வைகறை தமிழ் இலக்கியத்தின் அசைக்க முடியாத சொத்து. இன்று கவிதைகள் நிறைய வடிவம் பெற்று இருக்கிறது அது கவிஞர் வைகறையின் எழுத்துக்களால் விளைந்த வித்து என்பதை உறுதிபடச் சொல்லுவேன்.

   கவிஞர் வைகறையோடு இலக்கிய வடம் பிடித்து வலம் வந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். எனது முதல் பரிசு என்கிற சிறுகதை தொகுப்பிற்கு அவன் எடுத்துக் கொண்ட பணியை எண்ணி  பார்க்கிறேன். அவனுக்கு நிகர் அவன் தான். புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம் கவிஞர் வைகறைக்கு [குடும்பத்திற்கு] துணையாக இப்போதும் இருக்கிறது.

 

   குழந்தைகளைக் கொண்டாடுவோம். ஆம், ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்.

 

[21.04.2016 வாழ்வில் மறக்க முடியாத நாள். இவ்வுலகை விட்டு அவன் கடந்து சென்ற நாள்.]

 

என்றென்றும்

கவிஞர் வைகறையின் நினைவுகளுடன்

   சோலச்சி

 

  எப்போதோ எழுத வேண்டியது. இப்போதுதான் எழுதுகின்றேன். எப்போதும் எழுதப்பட வேண்டியவன் கவிஞர் வைகறை.

 

கவிஞர் வைகறையுடன் சோலச்சி

 

 

 

 

வியாழன், 28 டிசம்பர், 2023

புரட்சிக் கலைஞருக்கு புகழ் வணக்கம் - சோலச்சி

 

புரட்சிக் கலைஞருக்கு புகழ் வணக்கம்..!






கருப்பு நிலாவாம்

அந்த கரிமேடு கரிவாயனை

மாநகரக் காவல்

புலன் விசாரணை செய்தாலும்

அந்த பூந்தோட்ட காவல்காரன்

எப்போதும்

பொன்மனச் செம்மல்தான்...!


ஊமை விழிகளால்

சட்டம் ஒரு இருட்டறை என்றாலும்

வேங்கையின் மைந்தனாய்

புது யுகம் படைக்க

புதிய தீர்ப்பு வழங்கி

எங்கள் குரலாய் ஒலித்து

நீதியின் மறுபக்கத்தை காட்டிய

எங்கள் வீரபாண்டியன்..!


சேதுபதி ஐ.பி.எஸ்ஸாக

பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டாலும்

வீரம் வெளஞ்ச மண்ணில்

தர்ம சக்கரமாய்

வாழ்ந்து வழிகாட்டிய

எங்கள்

பெரியண்ணா...!


புரட்சிக்கலைஞனாய்

கொள்கை நெறி தவறாத கேப்டனாய்

வலம் வந்ததை

பார்த்தவர்கள் சொல்லுகின்றனர்

பழகியவர்களும் 

உள்ளம் உருக உரைக்கின்றனர்..!


இல்லாதோருக்கு இயன்றதை

வழங்கச் சொன்னாய்

எப்போதும்

நியாயத்தின் பக்கமே நின்னாய்..!


தொண்டர்களாய் மாறிய ரசிகர்களை

ஏமாற்றக் கூடாது என்பதற்காகவே

அரசியலில் காலூன்றினாய்

வேரூன்றும் நேரத்திலே

எங்களை

நெஞ்சடைக்க செய்ததென்ன..?


பாரியை வள்ளல் என்று

பறம்பு மலையோ சொல்லி மகிழும்

அந்தப் பாரியே நீதான் என்று

இந்தப் பாரோ மார்தட்டி மகிழும்...!


வறுமையை ஒழித்திட எண்ணிய

உன் வலிமை நியாயமானதுதான்...

ஆட்சியாளர்கள் முயலாமையில்

இருக்கும் வரை

வறுமையும் நிலையானதுதான்...!


பிறர் செய்வது தவறு என தெரிந்தால்

நாக்கை உருட்டினாய்

கையை உயர்த்தி மிரட்டினாய்

கோபம் கொப்பளிக்க

உரக்க கத்தினாய்..

இது சதிகார உலகம்

உன்னை நக்கலடித்தே

நகர்ந்து விட்டது...!


உன் மேடைப் பேச்சு

எழுதி வைத்து பேசுவதல்ல..

எதார்த்தத்தை பேசியது..!


அப்பழுக்கற்ற மனிதராய் அரசியலில்

வெளிச்சம் போட்டு காட்டினாய்..!

சற்றே நிதானித்திருக்கலாம்

நிலை தடுமாறுவதை

தவிர்த்திருக்கலாம்...!


உன்னைப் புறம் தள்ளி

எல்லை மீறிய பிறகு

என்ன செய்வது...?


ஓ...வென அழுகின்றேன்

இரு கண்கள் போதவிலை..


காற்றும் உன்னிடம் 

உதவி கேட்டதோ...?

மூச்சுக்காற்றையே விட்டுவிட்டாயே...!


நெறஞ்ச மனசுக்காரரான

எங்கள் சொக்கத்தங்கமே

எங்கள் ஆசானே

நீயொரு சகாப்தம்...!


              - சோலச்சி அகரப்பட்டி

                  பேச : 9788210863





சனி, 4 நவம்பர், 2023

பத்தக்கட்டை - சோலச்சி

பத்தக்கட்டை - சோலச்சி அந்த ஆற்றங்கரையில் இருக்கும் பெரிய நாவல் மரம் ஒன்றின் அடியில் கிடந்த சருகுகளை சிறிய குச்சியால் கூட்டித் தள்ளிவிட்டு தனது நீளமான சிவப்புத் துண்டினை விரித்து அதில் உட்கார்ந்த பாலவடிவேலு ஓரிடத்தில் குட்டை போல் குறுகிக் கிடந்த தண்ணீரைப் பார்த்தார். அது சில தினங்களுக்கு முன்னால் பெய்த மழையின் கடைசி நீர்த்துளிகளின் சேமிப்பாக இருந்தது.
அந்த நீர் கலங்கலில்லாமல் தெளிவாகவே இருந்தது. சிறு பூச்சிகள் மிதந்து திரிந்தன. ஒன்றிரண்டு மீன் கொத்திகள் பறந்து வருவதும் தண்ணீரைத் தீண்டி எதையோ கொத்திச் செல்வதுமாக இருந்தது. அந்தப் பள்ளத்தில் மீன்கள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அந்த மீன்கொத்திகள் பிரண்டைகளை பிடித்துச் சென்றன. காட்டாறானது கால்வாய் போல் மாறியிருந்தது. ஆங்காங்கே சிறுசிறு குட்டைகள் முளைத்திருந்தன. மாட்டு வண்டியில் மணல் அள்ளிவந்து தன் வீட்டில் மலைபோல் குவித்து வைத்திருந்து அதை லாரி வைத்திருப்பவர்களிடம் அதிகவிலைக்கு விற்ற அம்மாசியிடம் இப்போது நான்கு லாரிகளும் ஒரு ஜேசிபி இயந்திரமும் இருக்கிறது. தான் கடுமையாக உழைத்ததன் பேரில் உயர்ந்ததாக பள்ளிக்கூடம் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியபோது அதே ஊரைச் சேர்ந்த துளசியப்பன் ''திருட்டு மணல் ஏத்தி சம்பாதிச்சதுக்கு பேர்தான் கடின உழைப்போ'' என்று கூட்டத்தில் நின்றவாறு சொன்னதும் சலசலப்பு ஏற்பட பள்ளி விழா பாதியிலேயே நின்று போனது. அந்த ஆற்றில் ஏற்பட்ட பள்ளங்கள் அம்மாசியால் சுரண்டப்பட்ட மணலின் காயங்களாகவே இருந்தன. '' நேர்மையான வழில சம்பாதிச்சா பத்து செண்ட் எடம் வாங்கவே நாக்கு தள்ளிப் போயிரும்.... நம்மலும்தான் பத்து வருசமா வேல பாக்குறோம் கால்காச மிச்சப்படுத்த முடியல... கடன ஒடன வாங்கித்தான் சமாளிக்க வேண்டிருக்கு... வீடுவாச கட்டனும்னா லோன்மேல லோன் போட்டாதான் முடியுது.... காரு பங்களானு வாழுறவன மனச தொட்டு சொல்லச் சொல்லு நேர்மையா சம்பாதிச்சேனு..... ஒன்னு வங்கில கடன வாங்கி மாசமாசம் தவணை கட்டுவான். இல்லன... குறுக்கு வழிலதான் சேத்துருப்பான்....'' என்று தன்னுடன் வேலைபார்க்கும் பகவதியிடம் பாலவடிவேலு சொல்லிக்கொண்டு இருந்தபோது... '' மச்சான்... மனசாட்சிய வித்துட்டு பொழக்கிறதுக்கு பேசாம கூட்டிக்கொடுக்குற தொழிலுக்குப் போயிடலாம்..'' பகவதி சொன்னபோது வாய்விட்டு சிரித்துக்கொண்டார் பாலவடிவேலு. மீன் கொத்திகள் பிரண்டைகளை கொத்துவதையும் பிரண்டைகள் நீந்தி நீருக்குள் மறைவதையும் புதிதாக பார்த்தார். வளர்ந்த தவளைகள் கரைக்கு வருவதும் மீன் கொத்தியைக் கண்டதும் தண்ணீருக்குள் குதிப்பதுமாக இருந்தன. பரந்து விரிந்த ஆறு குட்டையாகிப் போனதை எண்ணி பலமுறை வட்டாட்சியரிடம் புகார் சொல்லியும் அவர் நடவடிக்கை எடுக்கவே இல்லை. மாறாக சம்பந்தப்பட்டவர்களிடம் போட்டுக்கொடுத்து பெரும் தொகையை வாங்கிக் கொண்டார் வட்டாட்சியர். ''உள்ளூர்க்காரன் தாலுகா ஆபிசுல வேல பாக்குறான். அவன வச்சு காரியம் சாதிச்சுக்கலாம்னு பாத்தா நீ எனக்கே ஆப்பு வைக்கிற... தாசில்தாரே கொடுக்குறத வாங்கிகிட்டு பேசாமா போறாரு. அவருக்கு கீழ வேல பாக்குற ஒனக்கு என்ன வலிக்குதுங்குறேன். நீ என்ன ஏம்புட்டு சாதிக்காரனா... வேற சாதிக்காரப்பயல தொட்டா வேறமாறி வந்துரும்னுதான் கழுத்தறுக்காம போறேன். ஏம்புட்டு சாதிக்காரன இருந்திருந்த அறுத்துப் போட்டுட்டு போயிருப்பேன். இப்பவும் கெட்டுப் போகல... லஞ்சம் வாங்குனானு சொல்லி ஆளுகள தயார் பண்ணி வேலயவே தூக்கிப்புடுவேன்.... '' அலுவலகத்திலேயே மிரட்டிச் சென்ற அம்மாசியை யாரும் எதுவும் கேட்கவில்லை. பகவதிதி மட்டுமே பாலவடிவேலுவின் தோளில் கைபோட்டு ஆறுதல் சொன்னார். அப்போது அலுவலகத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணவாணன் அம்மாசியை உட்கார வைத்து உபசரித்து அனுப்பியதை எண்ணி பகவதியிடம் பலமுறை பாலவடிவேலு வருத்தப்பட்டதுண்டு. '' அட விடு மச்சான்... நேத்து இன்னக்கா நம்ம பழக்கம். ஒன்பதாவதுல இருந்து ஒன்னுக்குள்ள ஒன்னா பழகி வர்றோம். இந்தச் சில்லறைப் பசங்களாலதான் நம்ம ஆபிசயே வெளிய கழுவிக்கழுவி ஊத்துறானுக. அன்னக்கி ஒரு வயசான அம்மா எடத்த அளக்க பணம் கட்டிப்புட்டு சர்வேயருக்கு மொய்யும் எழுதிருக்கு. அந்த ஆளு.... இது பத்தாது. இன்னும் கொடுத்தாதான் இந்த எடத்தவிட்டே நகருவேனுட்டான். அந்த அம்மா மண்ணவாரி தூத்திட்டுப் போகுது. இவனுக எப்பவுமே இப்படித்தான் மச்சான்.....'' உறவுமுறை வைத்துதான் இருவரும் நீண்டகாலமாக பழகி வருகிறார்கள். '' ஓம்புட்டு மாப்புள்ளய கலைக்டராக்கி இந்தக் காவாளி பயலுகளுக்கு ஒரு முடிவு கட்றேன் மச்சான். எம்மருமக புள்ளயவும் கலைக்டருக்குப் படிக்க வையிய்யா... நீ அருமை மைத்துனர் மட்டும் இல்லைய்யா. வருங்கால சம்பந்தியும் நீதான்ய்யா... '' பாலவடிவேலு சொன்னபோது, '' ஓம்...மருமக வேற யாரு வீட்டுக்கு மச்சான் போகப்போகுது... ரெண்டு பேரும் சம்பந்தியாகி தோள்ள கைபோட்டு நடக்குறத இந்த ஆபிசுல உள்ளவங்களே பொறாமபடனும் மச்சான்...'' இருவரும் பட்டு வேட்டி சட்டை அணிந்து வருவது போல் தோன்றியது பாலவடிவேலுக்கு. '' மச்சுனே.... ஏந்தங்கச்சி என்னய்யா கொழம்பு வச்சுச்சு...'' பாலவடிவேலு கேட்க '' ஓந்தங்கச்சிய கட்டுனா நல்லாதானய்யா... சமைக்கும்...'' பகவதி நக்கலடித்தபோது...'' போனாப் போகுதுனு ஏந்தங்கச்சிய கட்டிவச்சா.... வாயி ரொம்பதானய்யா நீளுது... ஓந்தங்கச்சி சமைக்கிறத விட ஏந்தங்கச்சி நல்லாதானய்யா சமைக்கும். புடிக்கலனா விட்ரு. நான் சாப்புட்டுக்குறேன்... ஓம்...அருமை தங்கச்சி சமச்சத நீயே சாப்டுக்க...'' பாலவடிவேலு சாப்பாட்டுக் கூடையை பகவதி பக்கம் நகர்த்தி வைத்தார். மதியம் சாப்பிடும் போதெல்லாம் இந்த நக்கலும் கிண்டலும் இருவரிடமும் தன்னையறியாமலேயே ஒட்டிக்கொண்டது. இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள்தான் என்றாலும் இரண்டு ஊர்களுக்கும் இடையில் ஐந்து கிலோமீட்டர் தூரம் இருக்கும். இரண்டு வீட்டுக்காரர்களும் ஒன்னுக்குள் ஒன்னாகவே பழகி வந்தனர். '' ஏப்பா...பாலு.... வாய்க்கிவாயி மச்சுனே...மச்சுனேங்கிறீகளே... வெறும் பேச்சு மட்டும்தானே....'' பகவதியின் அப்பா சொன்னபோது ''எம்மகள எம்மாப்புள்ளக்கிதான் கட்டிக் கொடுக்குறது....'' பகவதி அழுத்தமாக சொன்னார். அவரது அப்பாவோ முகம் சுழித்துக் கொண்டார் . ஆற்றில் மண் அள்ளும்போது நிறைய தாழம்பூ மரங்கள் அழிக்கப்பட்டு அவை தீவைக்கப்பட்டன. எஞ்சியிருந்த மரங்களும் உள்நாட்டுப் போரில் கைவிடப்பட்ட கைக்குழந்தைகள் போல் காட்சியளித்தன. முருகேசனும் சந்திரனும் ஆற்றங்கரையில் எஞ்சியிருந்த நான்கைந்து தாழம்பூ மரங்களில் தேறிய ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தனர். மரத்தை வெட்டும் சத்தம் கேட்டு படுத்திருந்த பாலவடிவேலு திரும்பிப் பார்த்தார். அந்தத் தண்ணீரில் அந்த மரம் ஆடுவது அப்படியே தெரிந்தது. அந்த மரம் பாலவடிவேலுவின் கால்களைப் பிடித்துக்கொண்டு என்னை வெட்டவேண்டாம் என்று சொல்லச் சொல்கி கெஞ்சுவதாக இருந்தது. '' முருகேசண்ணே.....'' என்றழைப்பதற்குள் அந்த மரம் தனது கைகளை நெஞ்சில் அடித்துக் கொண்டு தொப்பென்று விழுந்தது. தாழம்பூ மரத்தில்தான் பத்தக்கட்டை செய்வார்கள். தண்ணீரை தேக்கி வாய்க்கால் அமைத்து அதன் குறுக்கே துளையிடப்பட்ட பத்தக்கட்டையை வைத்து அதன் ஒரு நுனியில் சிறிய பானை ஒன்றை மண்ணுக்குள் புதைத்து வைப்பார்கள். துள்ளி வரும் அயிரை கெண்டை மீன்கள் துளைக்குள் சென்று குதித்து விளையாடும் போது பானைக்குள் விழுந்து விடும். அப்படி மீன் பிடிப்பதற்காக அந்த தாழம்பூ மரத்தை வெட்டிய அவர்களிடம் '' என்னண்ணே... மழையே பேஞ்சாலும் தண்ணி எதுல போறதுனு தெரியாம ஊருக்குள்ள வரப்போகுது... பத்தக்கட்டய எங்க பதிச்சு வைக்கிறது...'' பாலவடிவேலுவின் குரலை கேட்காதவர்களாக இருந்தார்கள். ஆற்றங்கரையில் கண்களை மூடியபடி படுப்பதும் வானத்தை உற்று நோக்குவதும் பிறகு தண்ணீரைப் பார்ப்பதுமாய் இருந்தார். அந்தத் தண்ணீரில் குதிரைகள் நீந்திக் கொண்டிருந்தன. மயில் ஒன்று தோகை விரித்து ஆடிக் கொண்டிருந்தது. அப்போது வீசிய பெருங்காற்று அந்த மேகக் கூட்டத்தை ஒரு சேர தள்ளிக்கொண்டு சென்றது. குதிரைகளும் மயிலும் கலைந்து போயின. தலை சாய்த்து படுத்த பாலவடிவேலு பழைய நினைவுகளில் மூழ்கிப்போனார். ஆனந்தன் யாரோ ஒரு பெண்ணுடன் சுத்துவதைக் கேள்விப்பட்டு பலமுறை கண்டித்திருக்கிறார். யாருடன் பழகுகிறான் என்றும் அவரால் யூகிக்க முடியவில்லை. அவர் மனைவியோ ''எதுக்கு இந்த மாறி அவன காச்சி எடுக்குறீக. விடுங்க இந்தக் காலத்துலயும்...." அணுசியா பேச்சை இழுத்தாள். "எந்தக் காலத்துல ஓம் புருசன் சாதி சம்பிரதாயம் பாத்துருக்கான். அவனுக்குப் பேரு வச்சதே எங்க அம்மா ஆனந்தி ஞாபகமாதான். இன்னக்கிவரக்கிம் அவனுக்கு சாதகம் கூட எழுதல. என்னோட கோபம் அவனோட காதல்ல இல்ல அணு.." " நேரம் வரும்போது நானே கேட்டுச் சொல்றேன் " அணுசியாவின் பேச்சில் சமாதானம் ஆனார் பாலவடிவேலு. '' எங்க வம்சத்துலயே நான்தான் மொதமொதனு காலேஜு வரைக்கும் படிச்சு தாலுகா ஆபிசுக்கு வேலக்கி வந்துருக்கேன். இருபது வருசத்துக்குப் பிறகுதான் இந்த வீடே என்னால கட்ட முடிஞ்சுச்சு. அவனும் முன்னுக்கு வர வேண்டாமா..'' என்றபோது அவரது கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது. '' நமக்குனு சொத்து சொகம் அவன விட்டா வேற என்ன இருக்கு. என்னம்மோ எட ஒதுக்கீடுங்கிறது நமக்கு மட்டும்தானு பலபேரு புரியாம பேசிக்கிட்டு இருக்க நேரத்துல அவனும் ஏதாச்சும் வேலக்கி போனாதான் அவன் குடும்பத்தயே அவனால பாக்க முடியும். அரசாங்க வேலக்கித்தான் போகனும்னு இல்ல. அடுத்தவன்கிட்ட கைகட்டி நிக்காம சொந்த ஒழப்புலயாச்சும் நிக்கனும்ல. இந்தக் காலத்துல அறிவாளிகள விட புத்திசாலிகளாலதான் வாழ்க்கய ஓட்ட முடியுது .. ஏதாவது ஒரு தொழில்ல முன்னுக்கு வரட்டும். இது காதலிக்கிற வயசுதான். ஆனா கல்யாண வயசு இல்லயே.. அதுக்கான நேரம் வரும்போது எப்பேர்ப்பட்ட ஆளு மகளா இருந்தாலும் எப்புடியாச்சும் கட்டி வச்சர்றேன். நா பட்ட செரமம் நம்ம புள்ள படக் கூடாதுல...." பாலவடிவேலு தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். ஆனந்தன் வீட்டுக்கு வந்தான். "நில்லுப்பா. ஒங்க அப்பாவுக்கு தெரியாம அவரும் நானும் அவன் பேசிக்கிட்டத போன்ல ரெக்கார்டு பண்ணி வச்சுருக்கேன். அத கேளுய்யா. ஒனக்கே புரியும். அப்பாதான் உன்னோட ப்ரண்டுனு சொல்லுவ. இப்ப எதுக்குய்யா வெலகிப்போற." அதை வாங்கிக்கொண்டு தனது அறைக்குள் போனவன் சற்று நேரத்தில் திரும்பி வந்தான். தோசை சுட்டு தட்டில் வைத்திருந்தாள். அவன் இரண்டு தோசை மட்டும் சாப்பிட்டான். அவனுக்குள் ஏதோ மாற்றம் உருவாகியிருந்ததை அவளால் உணர முடிந்தது. தன் மகனால் ஒருபோதும் தலைக்குனிவு ஏற்படாது என்று பாலவடிவேலு மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். கணேசன் ஐஏஎஸ் அகாடமியில் ஆனந்தனும் பவானியும் மாலை நேர பயிற்சி வகுப்புக்கு சென்றுவந்தார்கள். யாருமில்லாத அறையில் இருவரும் தீவிரமாக ஆளுக்கொரு புத்தகத்தை வாசித்துக்கொண்டு இருக்கும்போது அந்த பெருமழை கொட்டித் தீர்த்தது. மின்தடையில் அந்த நகரமே மூழ்கியிருந்தது. அந்த மின் தடையில் எந்தத் தடையும் இல்லாமல் முத்தக்குளியலில் மூழ்கியிருந்தார்கள். குருவிமுத்தம் அதிகமாகவே பரிமாறிக் கொண்டார்கள். அது என்ன குருவி முத்தம். தாயக்குருவி தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டி மகிழும் அந்தக் காட்சிதான் குருவி முத்தம். இருவரும் வெளிச்சுவர்களை சூடாக்கிக்கொண்டார்கள். கீர்த்தனா மெழுகுவர்த்தியை கொண்டுவந்த போதுதான் தங்களை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். அவள் மெழுகுவர்த்தியை வாசலிலேயே வைத்துவிட்டு வெளியேறினாள். சிறிது நேரத்தில் மின்தடை நீக்கப்பட்டிருந்தது. கற்கும் இடத்தில் முத்தக்குளியல் போட்டது தவறு என்பதை உணர்ந்ததால் இருவரும் அங்கு வருவதையே நிறுத்தி விட்டனர். ஆனந்தன் தொடக்கக்கல்வி அதிகாரியாகவும் பவானி காளன்குடி கிராமநிர்வாக அதிகாரியாகவும் பணியில் சேர்ந்தனர். " என்னங்க அவன் காதலிக்கிறது பகவதியண்ணே மக பவானியவாம்.. இத்தன நாளா கேட்டதுக்கு இப்பதான் சொல்றான். மாமன் மச்சானுதானே பழகுறீக. அந்த அண்ணன்கிட்ட பேசுங்களே....'' அணுசியா சொன்னபோது பகவதியின் அப்பா ஒருமுறை பேச்சுவாக்கில் கேட்டது அவர் முன்னால் வந்து நின்றது. அலுவலகத்தில் முதல் ஆளாய் நின்றிருந்த பகவதியிடம் பேசுவதற்கே தயங்கினார் பாலவடிவேலு. ஆனால் கட்டியணைத்துக் கொண்ட பகவதி '' என் அருமை மைத்துனரே... ஏம்புட்டு மாப்ள எங்கய்யா.... ராத்திரிதான் ஓம்மருமக எல்லாத்தையும் சொன்னுச்சு. சீக்கிரமா நம்ம புள்ளைகள மணக்கோலத்துல பாக்கனும்னு ஆசையா...இருக்குய்யா...'' "மச்சான்........." கண்ணீரோடு பகவதியை இறுக அணைத்துக்கொண்டார் பாலவடிவேலு. நண்பர்களுடன் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் நல்லடி மிதிக்க பகவதியின் வீட்டுக்குச் சென்றனர். பகவதியும் லெட்சுமியும் வரவேற்க காத்திருந்தனர். மணமக்களின் கார் வாசலில் வந்து நின்றது. மணமக்களோடு பாலவடிவேலுவும் அணுசியாவும் இறங்கினார்கள். வீட்டின் பின்புறம் கட்டியிருந்த பசுமாடுகள் என்றைக்குமில்லாமல் அளவுக்கதிகமாக கத்தின. '' அம்மாடி நீங்க வர்றத கேள்விப்பட்டு நம்ம வீட்டு மாடுக கத்தி வரவேற்குது....'' என்று சொல்லிக்கொண்டு வரவேற்க வந்தபோது மாட்டுத் தொழுவத்திற்குள் இருந்து நான்கு பேர் பகவதியை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். துடிதுடித்து இறந்தார் பகவதி. தாம்பூலத் தட்டை கீழே போட்டபடி கதறினாள் லெட்சுமி. ''முன்னாடிதான்டா அவனுகள வெட்டுனது. இப்பெல்லாம் ஒங்கள வெட்டுனாத்தான் அடுத்த சாதிக்காரனுகளுக்கு பொண்ணு கொடுக்கவே பயப்படுவானுக ... பொடலங்கா புரட்சிய பண்றீகளோ.....'' குருதியில் குளித்த அந்தக் கும்பல் மேற்கு பக்கமாக ஓடி மறைந்தது. அனைவரது கதறலும் நெருப்புக்காடாய் மாறிப்போயிருந்தது. நினைவுகளை சுமந்தபடி கண்களை மூடி திறந்தார் பாலவடிவேலு. கண்ணீர் தோள்பட்டையை நனைத்துக் கொண்டிருந்தது. முருகேசனும் சந்திரனும் தாழம்பூ மரத்தை செதுக்கித் தோளில் தூக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். கலைந்து சென்ற மேகம் காரிருளை காட்டத் தொடங்கியது...... ************

வியாழன், 21 செப்டம்பர், 2023

கதையல்ல - சோலச்சி

 

 

 

 

 

 

                   கதையல்ல     – ( சோலச்சி 9788210863 )

 

 

 

   வழக்கம் போல் இரவு உறங்கச் சென்றேன். உறக்கத்தில் விழித்த என் குழந்தைகள் எப்போதும் போல் ஆளுக்கொரு பக்கமாய் என்மீது கால்களை தூக்கிப் போட்டுக்கொண்டு என் முகத்தைப் பார்த்தனர். அந்தப் பார்வையின் அர்த்தம் புரியாதவனா நான். கதை கேட்காமல் ஒருநாளும் உறங்கியதில்லை என்பதை நான் அறிவேன். சில நேரங்களில் நான் உறங்க நள்ளிரவு ஆகிவிடும். கேட்காமல் விட்டுப் போன கதைகளை மறக்காமல் சேர்த்து மறுநாள் இரண்டு கதைகளாக சொல்ல வேண்டும். ஆனால் எங்களுக்கு ஒரு ஒப்பந்தம் உண்டு. நான் இரண்டு கதைகள் சொன்னால் அவர்கள் ஆளுக்கொரு கதை சொல்ல வேண்டும். அவர்கள் சொல்லும் பெரும்பாலான கதைகள் நான் சொன்ன கதைகளாகவே இருக்கும். அதில் ஒரு மாற்றம் என்னவென்றால் பெயர்கள் மட்டுமே மாறி இருக்கும். யானை கதை சொன்னால் அவர்கள் பூனை என்று பெயர் மாற்றி சொல்லுவார்கள். நான் கதை சொல்லத் தொடங்கினேன்.  

 


   ''ஒரு பெரிய காடு இருந்துச்சாம். அந்தக் காட்டுல பெரிய யானை இருந்துச்சாம். அது தலையதலைய ஆட்டி நடந்து போகும்போது குட்டி யானை ஒன்னு வந்துச்சாம். அது பின்னாடியே இன்னொரு குட்டி யானை வந்துச்சாம்.....'' இப்படி ஆரம்பித்தேன். இப்படியான கதைகளே அவர்களுக்குப் பிடிக்கும். எனக்கு என் அப்பா பத்தாம்வகுப்பு படிக்கும்வரை கதை சொன்னார். ஆனால் அவருக்காக நான் ஒரு கதை கூட சொன்னதில்லை. ஆனால் என் குழந்தைகள் எனக்காக நிறையவே சொல்லியிருக்கிறார்கள். 

 

   மூத்தவள் தன்யா நான்காம் வகுப்பு படிக்கிறாள். குட்டி குட்டி கதைகளை எழுதி பெட்டி நிறைய வைத்திருக்கிறாள். அந்தக் கதைகளில் சொற்கள் குறைவாக இருக்கும். அனைத்தும் படக்கதைகளாகவே இருக்கும். படங்களில் காடுகள் நிறைந்திருக்கும். பறவைகளும் விலங்குகளும் அவளது கதைகளில் மகிழ்ச்சியோடு வாழ்ந்தன. வீட்டைச் சுற்றிலும் பறவைகளுக்காவே நிறைய மரங்களை நட்டு வளர்த்து வந்தாள். அவை அவளை விட பலமடங்கு பெரிதாக இருக்கிறது. விலங்குகள் வாழ்வதற்கான காடுகளை வளர்க்க முடியாவிட்டாலும் பறவைகளாவது வந்து தங்குகிறதே என்று பேரானந்தம் கொள்வாள்.    

 

   இளையவள் ஓவியா இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். அவளால் கதைகளை எழுத முடியாது என்றாலும் பொம்மைகளை கையில் வைத்துக்கொண்டு கதை சொல்வதில் கெட்டிக்காரி. அவள் கதை சொல்லத் தொடங்கிவிட்டால் ஒவ்வொரு முறையும் " அடடா அழகுடா.... ரொம்ப அழகுடா... ம் அப்பறம்... சூப்பர்.... சூப்பர் '' என்று இடையிடையே சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அது அவள் கதைக்கான அங்கீகாரமாகவே கருதுகிறாள். கதை சொல்லி முடித்ததும் எனது பாராட்டுக்கு பரிசாக எனது கன்னங்களில் முத்தமிட மறந்ததே இல்லை. ஆனால் மூத்தவளுக்கு கதையிடையே "ம்.... ம்....'' உச்சரித்தால் போதும்.   தடையில்லாமல் தனது கதையை சொல்லிக்கொண்டே போவாள். காடுகளையும் யானையையும் பற்றிய எனது கதையை சொல்லி முடிப்பதற்குள் இருவருமே உறங்கிவிட்டனர். ஏனென்றால் உறக்கத்தில் விழித்து கதை கேட்டால் நீண்ட நேரம் விழித்திருக்க வாய்ப்பேது. 

 

   பகலில் நடந்த நிகழ்வுகளை அசை போட்டேன். சின்னத்தம்பி அண்ணன் என்னிடம் பந்தயம் கட்டியது நினைவுக்கு வந்தது. 

 

 


   ''இல்ல தம்பி... வந்தாலும் வரலாம் என்றார். மழையே ஒழுங்கா வராத நம்ம ஊர்ல கஜா புயல் எங்கண்ணே வரப்போகுது. புதுக்கோட்டைனாலே வறட்சி மாவட்டம்னு தானே பேரு'' என்றேன். ''அப்படினா ஐநூறு ரூபாய் பந்தயம்'' என்றார். நான் சிரித்துக்கொண்டே சம்மதம் தெரிவித்தேன். இரவு உறக்கத்திலும் அதை நினைத்து சிரித்துக் கொண்டேன். மணி பன்னிரண்டு முடிந்து அதிகாலை தொடக்கமாயிருந்தது. நினைவுகளை மறந்தவனாய் கண்களை மூடி உறங்க தொடங்கினேன். உறக்கம் என் சொர்க்க வாசலுக்குள் நுழைந்து என்னை ஏந்திக் கொண்டது. 

 

   படபடவென இறக்கைகள் அடித்துக்கொள்ளும் சத்தமும் கறுக் கறுக் என எதையோ கடிக்கும் சத்தமும் கேட்டது. வீட்டோரத்தில் இருக்கும் கொய்யா மரத்திலிருந்து அந்த சத்தம் வருவதை உணர்ந்தேன். வீட்டின் தெற்குப்பக்கமாகத்தான் தோட்டம் இருக்கிறது. தென்பக்க சன்னலை மெதுவாக திறந்தேன். நிலவொளியில் மரங்கள் பளிச்சென தெரிந்தன.   

 

   ''அப்பா.... வௌவால வெரட்டாதீக. அது தின்னுட்டுப் போவட்டும். அதுவும்தான் என்னோட பிரண்டு'' மூத்தவள் தன்யா தூக்கத்திலும் கண்களை விழிக்காமல் என்னிடம் சொன்னாள். அவள் உறக்கத்திலும் தோட்டத்தின் நினைப்போடுதான் இருக்கிறாள். ''ச்சு....ச்சு...'' உச்சுக்கொட்டி அவளை உறங்க வைத்தேன்.   

 

   இரண்டு கனிதின்னும் வௌவால்கள் கொய்யா மரத்தின் கிளையில் தலைகீழாய் தொங்கியவாறு தனது இறக்கைகளை அடித்துக்கொண்டு கனியை உண்டு மகிழ்ந்தன. அவை உண்ண உண்ண வயிற்றின் மேல்நோக்கிச் சென்றது. பலநேரங்களில் வௌவால்கள் உண்ணுவதைப் பார்த்திருந்தாலும் அன்று ஏதோ புதிதாக பார்ப்பதுபோல் தோன்றியது.  

 

   கொய்யா காய்களையும் மாங்காய்களையும் நான் ஒருநாள் கூட பறித்தது கிடையாது. ஒருமுறை மாமரத்தில் மாங்காய் பறிப்பதற்காக ஏறுவதற்கு தயாராகினேன்.

 

     ''அப்பா... கீழ எறங்குங்க. அது என்னோட பிரண்டு. நீங்க ஏறுனா அதுக்கு வலிக்கும்ல''

 

   ''அப்பறம் யாரும்மா பறிக்கிறது''

 

   '' நான்தான் பறிப்பேன். அது என்னய ஒன்னும் சொல்லாது''

 

     தன்யாவின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட நான் அன்றுமுதல் மரத்தில் ஏறுவதே இல்லை. அனைத்து மரங்களிலும் அவள்மட்டுமே ஏறுவாள். கறிவேப்பிலை வேண்டும் என்றாலும் அவளிடம்தான் கேட்பேன். அவள்தான் ஏறி ஓடிக் கொடுப்பாள். ஓடித்த இடம் மரத்திற்கு வலிக்கக் கூடாது என்பதற்காக அந்த இடத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டே மன்னிச்சுக்க.... மன்னிச்சுக்க என்பாள். என் மகளின் இளகிய குணத்தையும் மரங்கள் பறவைகள் மீது கொண்ட பாசத்தையும் எண்ணி மகிழ்ந்து போவேன்.  

 

   எங்கள் ஊரில் மொத்தமே பதினைந்து வீடுகள்தான் இருக்கிறது. அதில் எங்கள் வீடு மட்டுமே எப்போதும் பசுமையாக இருக்கும். பக்கத்தில் இருக்கும் அடிகுழாயிலிருந்து குடத்தில் தண்ணீர் கொண்டு வந்துதான் மரங்களுக்கு ஊற்றுவது. என் குழந்தைகளுக்கும் மிகச்சிறிய குடங்களை வாங்கிக் கொடுத்திருந்தேன். அதில் தண்ணீர் கொண்டுவந்து மரங்களுக்கு ஊற்றுவார்கள்.  

 

   ''ஏய்... விடுப்பா. இல்ல... டீச்சர்கிட்ட சொல்லிருவேன். சட்டைய விடு... விடு....'' வாய் உளறிக் கொண்டு இருந்தாள் ஓவியா. வகுப்பில் நடந்தது ஏதோ நினைவுக்கு வர அவள் அவ்வாறு உளறிக்கொண்டிருந்தாள். ''யாருடா அது... விடுறியா அடிப்போடவா'' நான் சத்தமிட்டதும் ''அப்பா.. என்கிட்ட படுப்பா...'' தூங்கிக்கொண்டே பேசுகிறாள்.

 

   மெதுவாக சன்னலை சாத்த முயற்சித்தேன். ஆனாலும் டப்பென சத்தம் கேட்டு வௌவால்கள் பறந்தன. அவைகள் பறக்கும் சத்தம் கேட்டு மரத்தில் இருந்த பறவைகளும் பறந்தன. பறவைகள் பறக்கும்போது எழுந்த காற்றில் மரங்கள் அசைந்து பெருங்காற்றை உருவாக்குன. அந்தப் பெருங்காற்று சன்னலில் மோதி திரும்பிச் சென்றது.

 

   மனிதர்களுக்கு பெயர் வைப்பது போல் மரங்களுக்கும் பெயர் வைத்து அழகு பார்த்தாள் தன்யா. அதனால்தான் மரங்களை தன் நண்பர்களாகவே பாவித்தாள். அவள் மரங்களோடும் பறவைகளோடும் பேசும்போதெல்லாம் எனக்குள்ளும் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும். ''அப்பா எதுக்குத் தெரியுமா காய்களை கொஞ்சமா புடுங்குறது. பாவந்தானே பறவையெல்லாம். அதுகளுக்கு தங்குறதுக்கு ஒழுங்கான வீடுகளே இல்ல. சாப்பாடு இல்ல. நம்ம தோட்டத்துல இருக்கதால அதுக வந்து வயிறு முட்ட சாப்புடுதுங்க'' அவளின் குழந்தை மொழி தேனினும் இனியதாகவே இருந்தது. 

 

   மீண்டும் சன்னல் கதவை மெதுவாக திறக்கிறேன். ஒன்றிரண்டு பறவைகள் மேலே பறப்பதும் மரங்கள் அசைவதுமாக இருந்தன. இளங்காற்று என் முகத்தில் மோதி முத்தமழை பொழிந்தன. விழிகளை திறந்தும் மூடியும் அந்த உணர்தலை ரசிக்கின்றேன். சன்னலை மூடிவிட்டு என் குழந்தைகளின் நடுவே உறங்கினேன். 

 

   மரங்கள் அசைவதும் பறவைகளின் பாட்டுக் கச்சேரியையும் என் செவிகளுக்கு எப்போதும்போல் விருந்தளித்தன. காற்றின் தாலாட்டில் என்னை முழுவதுமாய் அர்ப்பணித்துக் கொண்டேன். அமைதியாக உறங்கும் பாறையைப் போல் எந்தச் சலனமும் இல்லாமல் உறங்கினாலும் மனசுக்குள் நாளை புயல் வருவதாக வானிலை ஆய்வாளர்களும் அரசும் சொன்னார்களே என்ற நினைப்பும் இருந்தது.

 

   ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சூறைக்காற்று சுழன்று வீசியது. மணி இரண்டு இருக்கும். ஆழிப்பேரலை பொங்கியது. ம்ம்ம்ம்ம்ம்......என அழுத்தமாக வீசிய புழுதியை வாரி இறைத்தது. அந்தப் பெருங்கடல், காற்றுக்கு வேகத்தைச் செலுத்தியது. வேகத்தைக் கூட்டுவதற்காக அலைகளை சுழல விட்டன. சுழன்று எழுந்த அலைகள் பல கிலோமீட்டர் வேகம் கொண்ட பெருங்காற்றை வீடுகளுக்குள் செலுத்தியது.   அந்தக் காற்று மரங்களுக்குள் புகுந்து பல கிலோமீட்டர் வரை சென்றது. காப்பாத்துங்க.... காப்பாத்துங்க... என்று மரங்கள் கத்தின. வீட்டின் கூரைகள் காற்றைத் தடுக்க முடியாமல் அலறி அடித்துக்கொண்டு பறந்தன. புயலின் நினைப்போடு உறங்கியதால் இவை கனவு என்றிருந்தேன். சிறிது நேரத்தில் என் மீது இலைகளும் மண் துகளும் விழுந்தன. ஆகா... கனவு இல்லை நிசம் என்று உணர்ந்து விழித்தேன். என் வீட்டின் ஓடுகள் பறந்து கீழே விழுந்தன. வான வெளிச்சம் வீட்டுக்குள் புகுந்தது. 

 

   புகை மண்டலமாய் வானவெளி காட்சியளித்தது. என் குழந்தைகளை தூக்க முயற்சித்தேன். இரண்டு ஓடுகள் பறந்து எங்கள் அருகில் விழுந்தது. குழந்தைகளை விருட்டென என் பக்கமாக இழுத்துக் கொண்டேன். சடச்சடவென மழைத்தூறல் விழுந்ததும் ''அப்பா .... அப்பா.... '' என்றவாறே என் குழந்தைகள் எழுந்து விட்டனர். அதற்குள் பத்துப்பதினைந்து ஓடுகள் காற்றில் பறந்து சிதறின. துணிகள் மழையில் நனைந்தன. பாயை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தைகளோடு பக்கத்து அறைக்குள்   சென்று மின் விளக்குப் பொத்தானை அழுத்தினேன். மின் இணைப்பு காற்று வரும்போதே மின்வாரிய ஊழியர்களால் ஏற்கனவே துண்டிக்கப்பட்டிருந்தன. எமர்சன்சி விளக்கினை தேடினேன். வீசிய சுழல் காற்றில் அலமாரியில் இருந்த அவ்விளக்கு கீழே விழுந்து நொறுங்கிக் கிடந்தது. தீப்பெட்டி நனைந்து போயிருந்தது. விளக்கேற்றுவதற்கும் வழியில்லை. என் குழந்தைகள் என்னை இறுக அணைத்துக்கொண்டனர். இந்த அறையில் இருக்கும் ஓடுகள் சரிந்துவிடக் கூடாதென்று நினைத்துக் கொண்டேன். 

 

   இந்த அறையில்தான் பீரோவும் புத்தகங்களும் இருக்கின்றது. ஓவியா என் மார்போடு ஒட்டிக்கொண்டு ஒரு குரங்குக் குட்டியைப்போல் காட்சியளித்தாள். ''அப்பா.. கடவுள் இல்லதானப்பா. ஆமடா தங்கம். பொய்யிப்பா கடவுள் இருக்காரு'' தன்யா சொன்னதைக் கேட்டு அந்தப் புயலிலும் ஆச்சரியமாக இருந்தது. அவள் மேலும் தொடர்ந்தாள். ''நீங்கதானப்பா எங்க காப்பாத்துறீங்க. அப்ப நீங்கதான் கடவுள்'' அவளின் இந்தப் பேச்சால் நான் ஒரு நொடி உறைந்து போனேன். இந்த வயதில் எவ்வளவு அறிவார்ந்தப் பேச்சு. இது புரியாமல் கடவுள் பேர் சொல்லி பிழைப்பு நடத்துவதும் கலவரம் செய்வதும் கீழ்த்தரமான செயல் இல்லையா இந்தச் சமூகத்தைப் பார்த்து நானே கேட்டுக்கொண்டேன். 

 

     இந்த அறையின் ஓடுகளும் பறந்தால் வேறு எங்கு செல்வது என்ற நினைப்பில் அந்த அறைக்குள் இருக்கும் இரண்டு பெரிய அலமாரியிலும் இருந்த சில்லறை சாமான்களை ஒரே அலமாரியில் அடுக்கினேன். ஒரு அலமாரியை துணியால் துடைத்து சுத்தம் செய்தேன். என் குழந்தைகளை அந்த அலமாரிக்குள் உட்கார வைத்தேன். மீண்டுமொரு காற்று பெரும் இரைச்சலுடன் வருகை புரிந்தது. அப்போது வானம் விடியத் தொடங்கும் நேரமாக இருந்தது. பறவைகள படபடவென பறந்து சென்றன. தூறல் மழையாக பெய்யத் தொடங்கியது.

 

   ஏழெட்டு ஓடுகள் உடைந்து வெளியேயும் உள்ளேயும் விழுந்தன. அப்பா.... உள்ள வந்துரு என்று என் குழந்தைகள் கத்துகிறார்கள். அலமாரிக்குள் நான் எப்படிச் செல்வது. என் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே என்னுள் இருந்தது. மழையில் நனைந்தவாறே வேட்டி ஒன்றை எடுத்து சாரல் அடிக்காமல் அலமாரியில் போத்தினேன். அதையும் விலக்கிக் கொண்டு அவர்கள் கத்திக் கொண்டு இறந்தார்கள். ஒன்னுல்லம்மா... தைரியமா இருங்க... சொல்லிக்கொண்டே இரண்டு பாய்களை எடுத்து புத்தகங்கள் இருக்கும் இரும்பு அலமாரியை மூடினேன்.   

   மழை நீர் பாயில் விழுந்து வீட்டுக்குள் கெண்டைக்கால் அளவுக்கு நிரம்பியது. அறையிலிருந்து நீர் வெளியேறும் ஓட்டை வழியாக கைகளால் தண்ணீரைத் தள்ளினேன். அவை சுழன ற்று வீசும் பெருங்காற்றால் வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே வந்தது. கரப்பான் பூச்சிகளும் பாச்சைகளும் நீரில் நீந்தி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள என் மேல் ஏறின. அவைகளை தட்டி விட்டேன். அவை மீண்டும் என் மீது ஏறின. மீண்டும் தட்டிவிட மனமில்லை. அவை நீந்தி அலமாரிக்குச் சென்றுவிட்டால் என் குழந்தைகள் நிலை என்னாவது எண்ணிக்கொண்டேன். அப்போது வாசலில் தொப்பென்று ஏதோ விழுந்தது. மெதுவாக கதைவைத் திறந்தேன். அப்பா....தெறக்கதீக காத்து ரொம்ப அடிக்குது என்று இருவருமே கத்தினர். தலையில் வழியும் நீரை துடைத்துக்கொண்டே வாசலைப் பார்த்தேன்.      

 

   நான்கு வீடு தள்ளி இருக்கும் வேப்ப மரத்தின் பெரிய கிளையொன்று முறந்து வந்து வாசலில் கிடந்தது. நான்கு வீடுகளைக் கடந்து எப்படி வந்து விழுந்திருக்கும். வெளியில் யாரும் நிற்பதாக தெரியவில்லை. வெளியில் நான் வந்திருந்தால் என்னவாயிருக்கும் நினைத்தாலே பயமாக இருந்தது. வீதியில் சென்ற மின்சார கம்பியில் கருவைமரம் சாய்ந்து அறுந்து கிடந்தது.     மின்சார வாரிய ஊழிகள் என் கண்முன்னே வந்து சென்றனர். இரு கரங்களால் அவர்களை வணங்கினேன். கதவைச் சாத்திவிட்டு மழையில் நனைந்தவாறே தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். மரங்கள் சுழன்று சுழன்று வீசின. மரங்களின் கூக்குரல் கேட்டுத்தான் காப்பாற்ற முடியாமல் வானம் அழுவதாக எண்ணினேன். தலையிலிருந்து முகத்தில் வழிந்த நீரை கைகளால் துடைத்துக் கொண்டேன். என் குழந்தைகள் சாரல் விழாமல் போத்தியிருந்த வேட்டியை விலக்கிக் கொண்டு என்னைப் பார்த்தவாறு தேமித்தேமி அழுது கொண்டிருந்தனர். அடுக்கி வைத்திருந்த புத்தகங்கள் பாதி சாரலில் நனைந்தன. அவற்றை முழுவதுமாக மூடுவதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. இப்படி ஒரு புயல் வருமென்று யாரும் எதிர்பார்த்ததே இல்லை.  

 

   பொழுது விடிந்தது. மழை விட்டது. ஆனால் காற்றின் கோரப்பசி நிற்கவில்லை. அப்பா சோட்டாபீம் கீழ படுத்து கெஞ்சுதுப்பா. அதக் கொல்ல வேண்டாமுனு காத்துக்கிட்ட சொல்லுப்பா என்று தன்யா கதறுகிறாள். மாமரத்தைதான் அவள் சோட்டா பீம் என்கிறாள். அவள் கண்முன்னே மாமரம் வேறோடு பிடுங்கி ஏறியது. அப்பா... என் பிரண்டு பாவம்ப்பா. நான் பொறந்தப்போ வச்சதுனு சொன்னியே. அதுல இருந்த குட்டி மாங்காய் எல்லாம் விழுந்துருச்சே. அந்த ஏலைக எல்லாம் துடிக்குதே என்று கத்தினாள். என்னை அறியாமல் அழுகை வந்தது.  அப்பா ரத்தம் வருது என்று ஓவியா கத்தினாள். பதறிப்போய் எதுலயும் இடிச்சுக்கிட்டியம்மா அவளைத் தூக்கினேன். அப்பா ஓம்மொகத்துலப்பா என்று என் முகத்தை துடைத்தாள். அவளின் இரண்டு கைகளிலும் இரத்தம் வழிந்தது. மேலிருந்து விழுந்த ஓடுதான் சதி செய்திருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். புயலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் என்மீது விழுந்ததால் வலி தெரியாதவனாய் இருந்தேன். என் குழந்தைகள் மீது விழுந்திருந்தால் அர்த்த ராத்திரியில் என்னால் என்ன செய்ய முடியும்.  

   

   பெருங்காற்றில் வேரோடு சாய்ந்த பலா மரம் ஒன்று தனது இலைகளை தரையில் அடித்துக்கொண்டு எங்களை விட்டு கதறியது. கோபம் தீராத காற்று, சுழன்று வீச அந்த மரத்தை பக்கத்து வீட்டு வாசலில் தூக்கிச் சென்று போட்டது. அவர்கள் கதவைத் திறந்தாலும் வெளியில் வரமுடியாது. வெளியில் இருப்பவர்கள் அந்த மரத்தை அப்புறப்படுத்தினால்தான் அவர்களால் வெளியில் வர முடியும். 

 

     எங்கள் ஊருக்கு காவலாய் இருந்த பனை மரங்கள் சுழன்று வீசிய பெருங்காற்றினை தடுக்க எவ்வளவோ முயற்சித்தும் பனைமரங்களிடம் சாக்கு போக்கு காட்டிவிட்டு மற்ற மரங்களையும் கூரை வீடு, ஓட்டு வீடு, ஆஸ்பெட்டாஸ் வீடுகளின் கூரைகளை புடுங்கி எறிந்தன. அய்ந்தாறு மருத மரங்கள் ''திரும்பிப் போ. எல்லோரையும் விட்டுவிடு'' என்று தரையில் வீழ்ந்து கெஞ்சின. அந்தப் பெருங்காற்று எதையும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. மருத மரங்களை விட்டுவிட்டு மற்ற மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து தனது கோபத்தை தீர்த்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார். 

 

   படுகொலையை நிகழ்த்திவிட்டு சென்ற புயல் காற்றை '' இனி வராதே... வராதே...'' என்று வீழ்ந்து கிடந்த மரங்கள் தனது மிகப்பெரிய இலைகளைக் கொண்டு விரட்டிக் கொண்டே தனது உயிரை விட்டன.

 

   ஒவ்வொரு மரமாக சென்று என் குழந்தைகள் கட்டி அணைத்து கதறுகிறார்கள். ''அப்பா... இனி பறவையெல்லாம் எங்க போயி தங்கும். இனிமே இந்த மரத்தையெல்லாம் பாக்க முடியதா'' என்று அழுது கொண்டே ''ஜாக்கிஜான் எந்திரி... ஜாக்கிஜான் எந்திரி......'' என்று கொய்யா மரத்தின் கிளைகளைப் பிடித்து தூக்கினாள் தன்யா. அவளின் கண்ணீரில் நனைந்து போகிறது ஜாக்கிஜான். என் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டு தேமித்தேமி அழுகிறாள் ஓவியா. கைவிடப்பட்ட அகதியைப் போல் எல்லாவற்றையும் விரக்தியோடு பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.

 

     என்னிடம் பந்தயம் கட்டிய சின்னத்தம்பி அண்ணனின் கூரை வீட்டின் கீற்றுகள் பறந்து வந்து எங்கள் வாசலில் கிடந்தன. அவரின் வீடு முழுவதும் நாசமாய்ப் போயிருந்தது. அவரின் மனைவி ஒப்பாறி வைத்துக்கொண்டு இருந்தார். நான் அவரைப் பார்க்கிறேன். அவர் என்னைப் பார்க்கிறார். இருவரும் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றோம்.

                   *********************

 

ஓவியங்கள்: எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம்

நன்றி : அக்கினிக்குஞ்சு இணைய இதழ்