ஞாயிறு, 29 மே, 2022

சோலச்சிக்கு சமூக எழுத்தாளர் விருது - புதுகை வரலாறு நாளிதழ்

 

சோலச்சிக்கு சமூக எழுத்தாளர் விருது - புதுகை வரலாறு நாளிதழ்

புதுக்கோட்டை மாவட்டம் புதுகை வரலாறு நாளிதழ் நடத்திய இரண்டு நாள் கல்வி கண்காட்சி விஜய் பேலஸில் 2022 மே28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற்றது.




 விழாவின் நிறைவு நாளில் சாதனை புரிந்தோருக்கான விருதுகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அவர்கள்,  காரைக்குடி அழகப்பா மேனாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா அவர்கள்,  தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள், இலக்கிய தாளாளர் டாக்டர் சலீம் அவர்கள்,  கலைஞர் தமிழ்சங்கம் அண்ணன் சந்திரசேகர் அவர்கள், திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் அவர்கள், எங்கள் பேராசான் பேராசிரியர் விஸ்வநாதன்  அவர்கள், மரம் நண்பர்கள் சமூக ஆர்வலர் கார்த்திக்மெஸ் மூர்த்தி அவர்கள்,  எழுத்தாளர் இராமுக்கண்ணு, புதுகை பண்பலை நிறுவனர் அன்புச் சகோதரர் டாக்டர் விஜிக்குமார் அவர்கள், உலகக் கவிஞர் பீர்முகமது அவர்கள், அன்பு நண்பர் சிகரம் சதீஸ்குமார் அவர்கள்,  அன்புத் தம்பி கவிஞர் மலையப்பன் அவர்கள்,  இயன்முறை மருத்துவர் கோவிந்தசாமி அவர்கள், திருக்குறள் கழகம் இராமையா அவர்கள்  மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட இலக்கிய சமூக ஆளுமைகள் பலரும் கலந்து கொண்டனர்.    விழாவின் ஏற்பாடுகளை புதுகை வரலாறு நாளிதழின் நிறுவனர் தோழர் சிவசக்திவேல் அவர்கள் மிகச்சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். 




விழாவில் சோலச்சிக்கு ''சமூக எழுத்தாளர் விருது'' வழங்கி பெருமை செய்யப்பட்டது. நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

வியாழன், 26 மே, 2022

கவிஞர் விஜய் ஆனந்த் -இன் போன்சாய் மனங்கள் - சோலச்சி

 வான சூரியன் தெரியும் திசையெங்கும் - சோலச்சி



விஜய் ஆனந்தின் எளிமையான, வளமையான,  வலிமையான, ரசனையான இந்தத் தொகுப்பின் 82 கவிதைகளும் கடும் கோடையில் நதிக்கரையோரத்து ஆலமரத்தின் நிழலில் தென்றலை முகத்தில் வாங்கும் உணர்வைத் தந்தன.

ஒரு சிறந்த கவிதைக்கு என்னவெல்லாம் அடையாளம் ? பொருள் எளிதில் புரிதல், வார்த்தைகளின் கோர்ப்பில் கவித்துவம்,  உணர்வுகளை வாசிப்பவர்களுக்கு கடத்தும் திறன், படித்தபின் புன்சிரிக்க / இமைகளில் ஈரம் உணர வைத்தல்..... இந்தக் கவிதைகள் இவையெல்லாம் கொண்டிருக்கின்றன என்று எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் முன்னுரை வழங்குவதிலிருந்து இந்நூலை வாசிக்க வேண்டும் என்கின்ற ஆவலை நம்முள் ஏற்படுத்திவிடுகிறது.

எதையாவது எழுதி பக்கங்களை நிரப்பி தானும் ஒரு கவிஞன்தான் என அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத கவிஞர் விஜய் ஆனந்த் ஒவ்வொரு பக்கத்திலும் உணர்வுபூர்வமான கவிதைகளை நடவு செய்து தன்னை தமிழ்கூறும் நல்லுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாய்  முத்திரை பதித்து கவிதை நடை போட்டுக்கொண்டிருக்கின்றார். ''போன்சாய் மனங்கள்'' எனும் கவிதைச் சுரங்கத்தை வழங்கிய கவிஞர் விஜய் ஆனந்த் அவர்களுக்கு என வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பூடகமாய் எழுதி கவிதைக்குள் கவிதை வைத்து வாசிப்பவனை பொருள் புரியாமல் திணறடித்து குழப்பாமல் எளிய நடையில் எல்லோருக்கும் புரியும்படியான மொழியில் கவிதைகளை படைத்திருக்கிறார். தான் சொல்ல விரும்பும் செய்தியை அழகாய் சொல்லியிருக்கிறார்.

வலுத்தவன்
வயிறு நிறைய
இளைத்தவன் வயிறு
முட்டக் குடிக்கிறான்......

என்று சமூகத்தின் மீதான பார்வையை பதிவு செய்கிறார் கவிஞர்.  பணக்கார வர்க்கம் எங்காவது குடித்துவிட்டு தெருவில் கிடந்து பார்த்திருக்கின்றோமோ...? மதுவில் மிகப்பெரிய அரசியல் நாடகமே அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.  இது தெரியாமல் உடம்பு வலிக்கு குடிக்கிறேன் ; மனசு சரியில்லை குடிக்கிறேன் என்று உள்ளதை தொலைத்துவிட்டு அம்மணமாய் தெருவில் கிடக்கிறான்.

நவீன இந்தியா, டிஜிட்டல் இந்தியா, பாரத் மாதா கீ ஜே...... என்று மார்தட்டிக்கொண்டு இருக்கும் இவ்வேளையில்தான் அயல்நாட்டு அதிபர்கள் வந்தால் குடிசைப்பகுதிகளை தட்டிகொண்டு மறைப்பதும் குடிசைகளை அப்புறப்படுத்த அடியாட்களை ஏவுவதும் வெட்கமில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இருபத்தோராம் நூற்றாண்டிலும் வீடு இல்லாமல் உணவு இல்லாமல் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் சாலையோரத்திலும் தெருக்களிலும் முடங்கிக் கிடப்பதை காண முடிகிறது.  இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் ; எதற்காக இங்கே தங்கி அல்லல்படுகிறார்கள்; இவர்களின் வாழ்வாதாரம் என்ன என்று ஆட்சியாளர்களே யோசிக்க வாய்ப்பு இல்லாதபோது நாம் எப்படி யோசிக்க முடியும் என்று நம்முள் கேள்வி எழுவது என்னவோ உண்மைதான். அதற்காக அப்படியே கடந்து போக முடியுமா...?

பேருந்து நிலைங்களிலும் ரயில் நிலையங்களிலும் எங்கெல்காம் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் டோலக்கையோ தவிலையோ வைத்துக்கொண்டு வித்தைகாட்டி பிழைக்கும் மனிதர்களைப் பற்றி சிந்திக்கின்றார் கவிஞர் விஜய் ஆனந்த். கவிதையை வாசிக்கும்போது இந்த தேசம் பதில் ஏதும் பேசாமல் வெட்கித் தலைகுனிந்து நிற்பதை காண முடிகிறது.

தட்டும் கரண்டியும் கொண்டு
தப்புத் தாளங்கள்
வாசிக்கும் இந்த
தொம்பன்குடியின்
வாழ்க்கைப்பாட்டை கைதட்டி
ரசிக்குது ஒரு கூட்டம்.....

....வெகு அருகில்
காதைக்கிழித்தபடி கடந்து
செல்கிறது மெட்ரோ
ரயில் இம்மாநகரத்தின் நவீனங்களை
சுமந்தபடி....

சமூகத்தின் மீதான தனது பார்வையை விரிவடையச் செய்திருக்கும் கவிஞர் விஜய் ஆனந்த், குழந்தை, காதல், பாசம்,  பெண்ணியம் என அனைத்தையும் பேசுகின்றார். வான விரிப்பினை வண்ணக் காகிதங்களாக மடித்துக் கொடுத்தால் அனைத்துப் பக்கங்களிலும் இச்சமூகம் விழிப்பு பெற முத்தாய்ப்பான கவிதைகள் படைத்தளிப்பார் என்பதில் ஐயமில்லை.

மனிதன் வீரம் படைத்தவனாக இருக்க வேண்டும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரத்தில் ஈரம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும். காலங்காலமாக காதல் கொண்டாடப்பட வேண்டும்.  எங்கோ நடக்கும் ஒரு தவறை நாடக்காதல் என்று சொல்லி ஒட்டுமொத்தமாக காதலை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்.  காதல் ஒன்று மட்டும் இல்லையென்றால் இந்த உலகம் என்றோ அழிந்து போயிருக்கும். காதலின் வாசத்தை உணராதவர் என்று எவருமில்லை. வரட்டு கௌரவம் என்கிற பெயரில் ரசிப்பதும் இல்லை ; ஏற்பதும் இல்லை என்றால் என்னத்துக்க வாழனும்னு கேட்கத் தோன்றுகிறது. காதலின் வாசத்தை கவிஞர் விஜய் ஆனந்த் இப்படி எழுதுகிறார்...

சில சூடான முத்தங்களை
சமைத்துச் சுவைத்துவிட்டு
நகர்கையில்
வீடெங்கும் மணத்துக்கிடக்கிறது
நம் காதலின் வாசம்....

அடுக்களையில் எனக்கான
பிரியங்களை
சமைத்துக்கொண்டிருந்தாய்
நீ....

என்னும் கவிதையை வாசிக்கும்போது தவறவிட்ட வாசங்களை சுவாசிக்கத் தோன்றுகிறது.  காதல் என்றால் ஆபத்து, அது மோசமான ஒன்று என்று பொய்யுரைகளை பரப்பிக்கொண்டு இருப்பவர்களிடம் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்களின் கவிதைகளை கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும்.  நிச்சயமாக ஒருவன் வாசித்து முடித்தால் அவன் மனிதனாக தலை நிமிர்வான் என்பது உண்மை. 

அறிவார்ந்த சமூகத்தின் ஆற்றல் மிகுந்த புலவர் அய்யன் திருவள்ளுவர்

உணலினும் உண்டல் அறல்இனிது; காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

என்கிறார். இவை காதல் வயப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.  வாழ வேண்டும் என்பதற்காக வாழ்ந்துவிட்டு போகக்கூடாது.  வாழ்தலில் இனிது எது ? அறம் எது ? எனத் தெரிந்து மனதை கனமாக இறுக்கமாக வைத்துக்கொள்ளாமல் வாழ வேண்டும்.

என் எழுத்தின் நதிமூலம்... ஊற்றுக்கண்... தொடக்கப்புள்ளி எல்லாமே அப்பாவின் திடீர் மறைவுதான் என்று கூறும் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்கள் அப்பாவின் கவிதைகளில் நம்மையும் மூழ்கடித்து ஏதோ செய்து  விடுகிறார்.

வான வீதியில் மேகங்கள் கூட நின்று நிதானித்து பயணிக்கிறது. நமக்கோ நிற்க நேரமில்லை; தூங்க நேரமில்லை. திங்கக் கூட நேரமில்லை என அலைந்து தொலைந்து கொண்டிருக்கின்றோம். குழந்தைகளோடு நேரம் செலவழிக்க மனமில்லாமல் ஆலாய் பறந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்கள் வாழ்க்கையை வாழச் சொல்கிறார் குழந்தைக்கு நிலாச்சோறு ஊட்டுகிறார். நம்மையும் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும் என தூண்டுகின்றார்.



உலகக் கவிஞர்களை

 மேற்கோள்

 காட்டுகின்றோம். அப்படிக் காட்டினால்தான் நம்மை அறிவாளிகளாக நம்புவார்கள் என்ற மாய பிம்பத்திற்குள் மூழ்கிக் கிடக்கின்றோம். உள்ளூர் படைப்பாளிகளை கொண்டாடி உலகக்கவிஞர்களாக அடையாளப்படுத்துவோம். வான சூரியன் தெரியும் திசையெங்கும் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்களின் கவிதை ஒளி வீசும்.

கொரணா காலத்து கவிதைகள் என சமகாலத்து அரசியலை அழகாய் படம்பிடித்துக் காட்டும் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்கள் இந்நூலை டிசம்பர் 2020 இல் வெளியீடு செய்திருக்கிறார்.

80 பக்கங்கள் கொண்ட போன்சாய் மனங்கள் என்னும் இக்கவிதை நூலை இருவாட்சி வெளியீடு செய்திருக்கிறது. அழகான வடிவமைப்பினைக் கொண்ட இந்நூலின் விலை ரூபாய் 100/-

நூல் வெளியீட்டு முகவரி :

இருவாட்சி
(இலக்கியத் துறைமுகம் )
41, கல்யாணசுந்தரம் தெரு,
பெரம்பூர்,
சென்னை - 600011
பேச: 94446 40986

நூலாசிரியர் கவிஞர் விஜய் ஆனந்த் அவர்களிடம் பேச : 97917 57087


பேரன்பின் வழியில்
சோலச்சி அகரப்பட்டி
பேச : 9788210863



புதன், 18 மே, 2022

செவந்த ரோசாவே - சோலச்சி அகரப்பட்டி

 


ஆலம் விழுதிலே என்னை ஆட்டி விட்டவளே
நடுச்சாமத்திலே சோறு ஊட்டிவிட்டவளே
அந்தக களத்து மேட்டிலே என்னை வருடிப் போனவளே
யாரும் பார்க்குமுன்னே நெஞ்சை திருடிப் போனவளே....

படிக்கும் காலத்திலே அந்த நெனப்பு தோணலயே
பழக பழகத்தான் இப்ப என்னைக் காணலயே
அரும்பு மீசையிலே அந்த அருவி கொட்டயிலே
குறும்பு பண்ணயிலே அந்தக் குருவி சேட்டையிலே
சுடிதாரு மாட்டலையே சில்க் சேலை கட்டுறீயே
கூரைப் புடவைக்குள் என்னை சுத்துறீயே.......

நெஞ்சுக் குழியிலே உன்ன தச்சு வச்சுருக்கேன்
மூவஞ்சு வயசிலே உன்ன முடிச்சு வச்சுருக்கேன்
ஆசை வார்த்தையிலே என்னை அணச்சுக் காப்பவளே
ஒட்டுப் பசையப்போலவே ஒட்டி கோர்ப்பவளே
ஆசை வச்சவளே நாளும் ஆசை வச்சேனே
வேசமில்லாமல் உசுர வச்சேனே.....

செவந்த ரோசாவே சிரிக்கும் மல்லிகையே
உன்னத் தவிரத்தான் உள்ளே யாருமில்லையே
ஆத்தங்கரையிலே நாம மறஞ்சு பேசயிலே
நவ்வா மரத்திலே நாம கொஞ்சி பேசயிலே
மடியில் தூங்க வச்ச என்ன நொடியில் ஏங்க வச்ச
இப்ப ஒன்னா சேரத்தான் தேதி நல்லா குறிச்சு வச்ச....

        - சோலச்சி அகரப்பட்டி

சனி, 14 மே, 2022

வாழ வேண்டும் முறைப்படி - சோலச்சி

 சத்தியமா புத்தியிருந்தா

பொழச்சுக்க தம்பி - இது

சத்தியவான்கள் வாழ்ந்த பூமி

உண்மையை நம்பி

குமரி முதல் இமயம் வரை இருக்குது நாடு

பண்பாட்டை விளக்கிச் சொன்ன

இந்தியத்திருநாடு.....


அரசாங்க வேலையத்தான் நம்பிட வேண்டாம்  - நீ

அடாவடி செய்துதானே

வாழ்ந்திட வேண்டாம்

காசிருந்தா கடவுளையும் வாங்கிட முடியும் - நம்ம

துன்பங்களும் பூமியிலே எப்படா முடியும்.....


ஏசியிலே வாழுறது நாம இல்லடா - இங்கே

ஏசியத்தான் செய்யுறோமே நம்ம கையிலடா

பாடுபட்டு உழைக்கிறோமே பஞ்சம் தீரல

பஞ்சப்படி ஏதும் இல்லே நெஞ்சம் ஆறல....


இலவச சலுகைகளை வழங்குது அரசு

இடையில் லட்சம்தானே கொட்டுது முரசு

தகுதி திறமை மோசடியும் நடக்குது தம்பி

தரம் பார்த்து நடக்கலனா ஆகிடுவ வெம்பி....


சாதிய மோதல்களை தூண்டி கெடுக்குறான்

நீதியை நிதி கொடுத்து நிலையை ஒடுக்குறான்

நிலைகெட்ட பூமியிலே நிற்பதெப்படி - நாம

நேயத்தோடு வாழ வேண்டும் முறைப்படி.......


          - சோலச்சி அகரப்பட்டி