திங்கள், 27 ஜூன், 2022

மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் கைகளில் கருப்புச்சட்டையும் கத்திக் கம்புகளும்

 நெஞ்சம் நிறைந்த நன்றி


இன்று மாலை (27.06.2022) ஆசிரியர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டார்.


சார் வணக்கம்.  ''கருப்புச் சட்டையும் கத்திக்கம்புகளும்'' ங்குற நூல் நீங்க எழுதுனதுதானே.


ஆமாம் நான் எழுதுனதுதான். 


உங்களுக்கு வாட்ச்அப்ல ஒன்னு அனுப்பிருக்கேன். பாருங்க சார் என்று சொல்லிக்கொண்டே இணைப்பைத் துண்டித்தார்.


என்னவாக இருக்கும் என்ற யோசனையில் வாட்ச்அப்பை திறந்து பார்த்தேன். எனக்கே ஆச்சரியமாக இருந்தது.



பிறகு நானே தொடர்பு கொண்டேன்.


எனக்கே தெரியாது சார். என் பையன்தான் உங்களோட நூலை கொடுத்துருக்கான். போட்டோ காட்டுனப்பதான் அது நீங்க எழுதுனதாச்சேனு உங்கள தொடர்பு கொண்டேன்  என்றார். மகிழ்ச்சியும் நன்றியும் கூறினேன்.

திருச்சிராப்பள்ளி Nandavanam Chandrasekaran இனிய நந்தவனம் பதிப்பகம் வெளியீடு செய்த "கருப்புச்சட்டையும் கத்திக் கம்புகளும்'' ராஜபாளையம் மணிமேகலை மன்றம் மற்றும் புதுவை தமிழ்ச்சங்கம் விருது பெற்ற நூல். புதுக்கோட்டை அரசு கலைஞர் கருணாநிதி மகளிர் கல்லூரி முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கு பாடத்திட்டமாக இருக்கும் இந்நூல் தற்போது சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களின் திருக்கரங்களில் தவழுகிறது. 


நம்மை யாரோ எங்கோ தமிழ்கூறும் நல்லுலகில் கரம் பிடித்து அழைத்துச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.


நன்றி


தமிழ்திரு. ஷீபா ஆசிரியர் மற்றும் அவரது மகன் ஹெரால்டு நிக்கேஷ்


(குறிப்பு : சில தினங்களுக்கு முன் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு முனைவர்.தொல்.திருமாவளவன் கைகளில் எனது ''விரிசல்'' நூல் கிடைக்கப்பெற்று ,அதன் பின் நடந்த நிகழ்வுகளையும் பதிவு செய்திருந்தது குறுப்பிடத்தக்கது.)


பேரன்பின் வழியில்

சோலச்சி அகரப்பட்டி

ஞாயிறு, 26 ஜூன், 2022

வேலை பார்த்துக்கொண்டே முதல்மதிப்பெண் எடுத்த மாணவர்

 

   வேலை பார்த்துக்கொண்டே முதல்மதிப்பெண் எடுத்த மாணவர்



எங்கள் ஊர் 
அகரப்பட்டியைச் சேர்ந்த திரு.இரா.பொன்னையா - இராஜேஸ்வரி இவர்களின் மூத்தமகன் பொ.இராஜதுரை , 2021-2022  கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 439 மதிப்பெண்கள் எடுத்து அரசினர் மேல்நிலைப்பள்ளி வயலோகத்திற்கும் எங்கள் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்தாண்டு இப்பள்ளியின் முதல்மதிப்பெண் பெற்ற மாணவர் இவர்தான்.



    இவரின் தந்தை எலக்ட்ரானிக் வேலை பார்த்து வருகிறார். பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தந்தைக்கு துணையாக பல இடங்களுக்கும் சென்று எலக்ட்ரானிக் வேலை பார்த்துக்கொண்டே  பாடங்களையும் படித்து இருக்கிறார். வேலை பார்த்துக்கொண்டே படித்து ஊருக்கு பெருமை சேர்த்த இராஜதுரையை எங்கள் ஊர் அகரப்பட்டி கொண்டாடி மகிழ்கிறது. மாணவர் இராஜதுரையின் கல்விக்கு அரசு உதவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. தந்தையைப் போலவே அமைதியின் மொத்தவடிவமாய் திகழும் மாணவர் பொ.இராஜதுரையை நேரில் சந்தித்து மனசார பாராட்டி மகிழ்ந்தேன்.

செவ்வாய், 21 ஜூன், 2022

எழுச்சித்தமிழர் கைகளில் கிடைத்த சோலச்சியின் நூல்கள்

 நெகிழ்ச்சியான நிகழ்வு


காலம் தாழ்த்திய பதிவுதான் என்றாலும் காலத்துக்கும் ஏற்ற பதிவு.


2022 மே மாதத்தின் முதல் வாரத்தில் ஓர் அலைபேசி அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இவர் எதற்காக என்னிடம் பேசுகின்றார் என்ற நினைப்போடு பேச்சைத் தொடர்ந்தேன்.



 2022 மே மாதம் முதல் வாரத்தில் சிதம்பரம் நாடாளுமன்றம் உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிவகங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் புதுக்கோட்டை சிப்காட் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. 


      வரவேற்பின்போது அதே பகுதியான ஊரப்பட்டியைச் சேர்ந்த தோழர் பாக்யராஜ் அவர்கள் எனது ''விரிசல்'' என்கிற கவிதை நூலினை எழுச்சித்தமிழர் அவர்களிடம் வழங்கியுள்ளார். நூலினை ஆவலோடு பார்த்துவிட்டு,  இந்நூல் சோலச்சியின் நூலாச்சே. நான் வாசித்திருக்கின்றேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி  என்று கூறிக்கொண்டே அருகில் இருந்த விசிக வின் மண்டல அமைப்புச் செயலாளர் அண்ணன் பெரம்பலூர் இரா. கிட்டு அவர்களிடம் கொடுத்து , இதை வாசித்துவிட்டு எழுத்தாளரிடம் பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறார். 


    மண்டல அமைப்புச் செயலாளர் அண்ணன் பெரம்பலூர் இரா.கிட்டு அவர்களும் நூலினை முழுவதுமாக வாசித்துவிட்டு ,ஏற்கனவே முதல்பத்தியில் சொன்னது போல் அலைபேசியில் தொடர்பு கொண்டு சில கவிதைகள் குறித்து சிலாகித்துப் பேசினார். பேசியதோடு நிறுத்திக்கொள்ளாமல் "சோலச்சி... எத்தன நூல் எழுதிருக்கீங்களோ அதுல மொத்தமா நூறு பிரதி கொடுங்க''  என்றார். 


  நூறா...என்று சற்றே புரியாமல் தயக்கம் கொள்ள,  உரிய விலை கொடுத்து வாங்கிக்கிறேன் என்று சொல்லி நூறு பிரதிகளையும் உரிய விலை கொடுத்து பெற்றுக்கொண்டதில் கூடுதல் மகிழ்ச்சி.  



  தான் மட்டும் வளராமல் தன்னோடு இருப்பவர்களையும் அறிவார்ந்தவர்களாக ஆக்குவதிலும் , நான் இந்த நூலை வாசித்திருக்கின்றேன் நீங்களும் வாசியுங்கள் என்று சொல்லி படைப்பாளர்களை உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பேராற்றல் படைத்த எழுச்சித்தமிழர் அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் ஆளுமையைக் கண்டு வியக்கின்றேன். பெருமை கொள்கிறேன். 


    எழுச்சித்தமிழர் அண்ணன் முனைவர் தொல்.திருமா அவர்களுக்கும்  மண்டல அமைப்புச் செயலாளர் அண்ணன் பெரம்பலூர் இரா.கிட்டு அவர்களுக்கும் நூறு பிரதிகளையும் பெறுவதற்கான பணிகளை செய்த தோழர் பெரம்பலூர் நீதி பூங்கா அவர்களுக்கும் எனது நூலை  தலைவர் அவர்களிடம் கொண்டு சேர்த்த தோழர் ஊரப்பட்டி பாக்யாராஜ் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.


தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி.

அமைப்பாய் திரள்வோம்


பேரன்பின் வழியில்

சோலச்சி அகரப்பட்டி

வியாழன், 9 ஜூன், 2022

தாக்கத்தை ஏற்படுத்திய தாக்கம் கவிதை நூல் - சோலச்சி

 

''கவிஞர் சசிக்குமாரின் தாக்கம் கவிதை நூல் குறித்து சோலச்சி''

    


தமிழின் கவிதை  உலகில் எண்ணற்ற நூல்கள் பெருகி வருவது உள்ளபடியே பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தாக்கம் இருக்கும்.  அதைக் கவிதையாக்கி நூலாக வெளியிடுவார்கள்.  இங்கு கவிஞர் ஒருவர் ''தாக்கம்'' என்ற பெயரிலேயே கவிதை நூலை வெளியிட்டு தமிழுக்கு பெரும் புகழைச் சேர்த்திருக்கிறார். முப்பத்து நான்கு பக்கங்களைக் கொண்ட கவிதை நூலில் பதினாறு கவிதைகளை புனைந்து வெளியிட்டு இருக்கும் கவிஞர் இளங்கவி பெ.சசிக்குமார் அவர்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன். அது என்ன பதினாறு ...?

கலையாத கல்வி,
கபடமற்ற நட்பு,
குறையாத வயது,
குன்றாத வளமை,
போகாத இளமை,
பரவசமான பக்தி,
பிணியற்ற உடல்,
சலியாத மனம்,
அன்பான துணை,
தவறாத சந்தானம்,
தாழாத கீர்த்தி,
மாறாத வார்த்தை,
தடையற்ற கொடை,
தொலையாத நிதி,
கோணாத செயல்,
துன்பமில்லா வாழ்வு.
     - இவையே பெருவாழ்வு வாழ்வதற்கான பதினாறு.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்த கவிஞர் சசிக்குமார் அவர்கள் தாக்கம் கவிதை நூலின் முதல் கவிதையே முதுமை என்கிற தலைப்பில் வைத்துள்ளார். முதுமையை பற்றி ஒருவன்  சிந்திக்கிறான் என்றால் நிச்சயமாக அவன் முதிர்ச்சி அடைந்தவனாகத்தான் இருப்பான். பாலூட்டி சீராட்டி வளர்த்த பெற்றோர, முதுமை காலத்தில் எத்தனை பிள்ளைகள் பேணிப் பாதுகாக்கிறார்கள் என்பதை அவரவர் மனசாட்சிக்கே விட்டு விடுகின்றேன். தாகத்திற்கு உதவாத தண்ணீரைப் போலவா நாம் இருப்பது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

முதல் கவிதையே முதுமை என்கிற தலைப்பில் வைத்து நம் கண்களில் கண்ணீர வரவழைக்கிறார் கவிஞர் சசிக்குமார் அவர்கள்.

சாவு வர மறுக்குது
ஒரு வாய்
சோத்த எதிர்பார்த்து என் பொழப்பு ஓடுது...
   - என்று வயதான தாய் புலம்புவதாக படைத்திருக்கிறார் கவிஞர் சசிக்குமார். எத்தனையோ பெற்றோர்கள் தெருக்களில் பிச்சை எடுப்பதை பார்த்திருக்கின்றோம். அவர்களுக்கெல்லாம் குடும்பங்கள் இல்லையா....? அவர்கள் பெற்ற பிள்ளைகள் எங்கே...? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நின்று யோசிக்கக் கூட நேரமில்லாமல்தான் நாம் ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே. - என்று புறநானூற்றுப் பாடலில் மாங்குடிக்கிழார் பாடுகிறார். நம்முடைய குலசாமிகளை வயதான காலத்தில் கண்கலங்க விடலாமா....?



வண்ணத்துப்பூச்சி என்கின்ற கவிதையில்....

எள்ளு போன்ற வயிற்றுக்கு
எல்லை தாண்டிப் போகிறாய்... என்று நயமாக சொல்லி நற்றமிழுக்கு புகழ் சேர்க்கிறார். எல்லை தாண்டி சென்றாலும் அதன் இனத்தோடு விரைவில் சேர்ந்து விடுகிறது.  அளவுக்கு அதிகமாக எதையும் சேர்த்து வைத்துக்கொள்வதில்லை. ஆனால் மனிதன் அப்படி இல்லை.  ஒருசாண் வயிற்றை நிரப்ப வாழ்நாள் முழுவதும் அயல்நாடுகளிலேயே வேலை பார்த்து ஓடாய் தேய்ந்து ரசமற்ற கண்ணாடியாக திரும்பி வருகின்றான். குடும்பம் என்கிற இன்பக்கடலில் மூழ்கி திளைக்க வழியில்லாமலேயே போய்விடுகிறது பலரது வாழ்க்கை. நாம் நம்மைச்சுற்றி உள்ள சின்னஞ்சிறு பூச்சிகளிடம் கற்றுக்கொள்வது நிறையவே இருக்கிறது.

ஆசிரியர் பற்றிய கவிதையையும் படைத்திருக்கின்றார் கவிஞர் சசிக்குமார் அவர்கள்.

எல்லோரையும்
முன்னுக்கு கொண்டு வருபவர்களை
பின்னுக்கு தள்ளி பிடரியில் அடிக்கிறது
அதிகாரம்...... இது என்னுடைய (சோலச்சி) கவிதை.  ஆசிரியர்களை அரசாங்கம் எவ்வாறு நடத்துகிறது என்று இப்படி கவிதை எழுதியிருப்பேன். ஒரு நாட்டின் மூல ஆதாரம் விவசாயமும் கல்வியும்தான். விவசாயிகளைகளையும் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களையும் ஆட்சியாளர்களும் பொதுமக்களும் எள்ளி நகையாடுகிறார்கள். எவ்வளவு அநாகரிகமாக நடத்த முடியுமோ அந்த அளவுக்கு நடத்துகிறார்கள்.  இப்படியிருந்தால் நாடு உருப்படுவது எப்போது..? மருத்துவர், அரசியல்வாதி, ஆட்சியர்,  பொறியாளர் ,இன்ன பிற....,என அனைவரையும் உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்தான். அனைவரையும் உணவளித்து வாழ வைப்பவர்கள் விவசாயிகள் . இருவரையும் ஒரு நாடு அவமதிக்குமானால் அந்த நாட்டை பேய்கள் ஆளும் நாடாககவும் பிசாசுகள் வாழும் பூமியாகவும் கருதப்படும்.

அளவான கண்டிப்பும்
அளவற்ற அக்கறையும்...
-  கொண்டவர்கள் ஆசிரியர்கள் என்று கவிஞர் சசிக்குமார் அவர்கள் தனது தாக்கத்தை பதிவு செய்கிறார்.  இதற்காகவே அவரை மனசார பாராட்டி மகிழலாம்.

காத்திருக்கும் காதலன் என்கிற தலைப்பில்....

போராடித்தான் காதல் கிடைக்குமென்றால்
போராடுவோம் காதல் கிடைக்கும்வரை... காதலுக்கு பச்சைக் கொடி ஏந்தி உலா வருகிறார். காதலை கொண்டாடத்தவறியதன் விளைவுதான் சாதிய மோதல்களும் மதவாத பிரச்சனைகளும். ஒரே மதம் என்பார்... அதற்குள் ஓராயிரம் சாதிகளை வைத்துக்கொண்டு நாட்டைச் சீரழிப்பார். கேட்டால் நால்வர்ணத்தையும் சாதிய உட்கட்டமைப்பையும் கடவுளே படைத்தார். கடவுளே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பார். பிறகு நாமெல்லாம் ஒரே மதம்.... ஓடி வாங்க.... ஓடி வாங்க என்று சனாதன கும்பல் இரத்தத்தில் குளிர்காய்கிறது. நாம் காதலைக் கொண்டாட மறந்தால் நமக்கு பிறகான தலைமுறை வாழ்வின் வழிமுறைகள் தெரியாமல் மண்டை பிய்த்துக்கொண்டு மாண்டு போவார்கள்.



தற்கொலை தீர்வல்ல என்கிற தலைப்பில்.....

முள்மரத்தில் கூடு கட்டி
முயன்று வாழும் குருவி கூட
இரை தேட பறந்தாலும்
எண்ணம் யாவும் கூட்டில் உண்டு...
     - என்று தன்னம்பிக்கை ஊட்டுகிறார். தமிழின் கரம் பிடித்து தரணியில் கவிதைத் தேர் ஓட்ட வந்திருக்கும் கவிஞர் சசிக்குமார் அவர்கள் இன்னும் ஆழமான கவிதைகளை எழுத வேண்டும் என வாழ்த்தி மகிழ்கின்றேன்.
                        பேரன்பின் வழியில்
                        சோலச்சி அகரப்பட்டி.

நூலாசிரியர்
கவிஞர் சசிக்குமார் : +919047369096