ஞாயிறு, 31 டிசம்பர், 2023

பிரதம மந்திரியாக வாய்ப்பு

 

பத்தாண்டுகள் பிரதம மந்திரியாக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தால்...



* சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்பதை நிச்சயம் நிலைநாட்டி இருப்பேன்.

* விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்து பொருளாதாரத்தை வலிமை அடையச் செய்திருப்பேன்.

* மதவாத அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மத நல்லிணக்கத்திற்கு துணையாக நின்று இருப்பேன்.

* மகளிருக்கு ஆட்சிப் பணிகளில் 50 விழுக்காடு என்பதை நிலைநாட்டி இருப்பேன்.

* 15 லட்சம் உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்துகிறேன் போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளிக்காமல் கறுப்பு பணத்தை உண்மையாகவே மீட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்திருப்பேன்.

* குறைந்தபட்ச இருப்பு, எஸ்எம்எஸ் அனுப்புதல், அதிக முறை பணம் எடுத்தல் போன்ற வகைகளில் வங்கிகள் ஏழைகளிடம் சுரண்டுவதை தடுத்து இருப்பேன்.

* இந்திய துணைக் கண்டம் மத நல்லிணக்கம் உள்ள நாடு. இங்கே பல மொழி, இனம் சார்ந்த மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்தி ஒற்றுமைக்கு வழி அமைத்திருப்பேன்.

* மணிப்பூரில் நடந்த கொடூரம் போல் நடக்காமல் பெண்களின் சுய மரியாதையை நிலைநாட்டி இருப்பேன்.

* பண மதிப்பிழப்பு என்கிற பெயரில் ஏழை நடுத்தர மக்களை வாட்டி வதைக்காமல் வரி என்கிற பெயரில் மோசடி மற்றும் பெரும் சுரண்டலை தடுத்திருப்பேன்.

* மக்களின் நலனில் அக்கறை செலுத்தி பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்காமல் பொது நிறுவனங்களை பெருக்கி இருப்பேன்.

* அயல்நாட்டுத் தலைவர்கள் விருந்தினர்களாக வரும்பொழுது குடிசைப்பகுதிகளை திரையிட்டு மறைக்காமல் பூர்வக்குடி மக்களிடம் கலந்துரையாடும் அளவுக்கு அவர்களின் பொருளாதார வாய்ப்பினை ஏற்படுத்தி பெருமை சேர்த்திருப்பேன்.

* கல்விக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் நீட் போன்ற அபாயகரமான தேர்வுகளை தடை செய்து இருப்பேன்.

* வருமான வரி என்கிற பெயரில் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பல மடங்கு சுரண்டப்படுவதை தடுத்து இருப்பேன். எதற்கு எடுத்தாலும் வரி என்கிற கேவலமான நிலையில் இருந்து அவர்களை மீட்டு ஒவ்வொருவரின் வருமானத்தை இரட்டிப்பாக்க முழுமையாக துணை நின்று இருப்பேன்.

* கடவுளின் பெயரைச் சொல்லி கல்வி அறிவு அளிக்காமலும் வேலையில்லா திண்டாட்டத்தை உண்டாக்கி தன் நிலத்தில் வாழும் மக்களை வயிற்று பசிக்காக ஒவ்வொரு நிலமாக ஓடும் அவல நிலையை தடுத்து கல்வி வேலை வாய்ப்பினை வழங்கி நாடோடி வாழ்க்கையில் இருந்து மீட்டு இருப்பேன்.

* பஞ்சம் பிழைப்பதற்காக கல்வியை விட்டுவிட்டு உறவுகளை விட்டுவிட்டு வட மாநிலங்களில் இருந்து தென் மாநிலம் நோக்கி இளைஞர்கள் பெரியவர்கள் வேலை வாய்ப்புக்காக படை எடுப்பதை தடுக்கும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் சமமான வளர்ச்சியை உருவாக்கி இருப்பேன்..

* விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து வேளாண் உற்பத்தியை பல மடங்கு பெருக்குவதற்கு வழிவகை செய்து இருப்பேன். மேலும் விவசாய பெருங்குடி மக்களை தலைநகரில் அரை நிர்வாணமாய் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்க மாட்டேன்.

* கற்பு நெறி என்று வந்துவிட்டால் அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம் என்பதை உணர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் உரிய நேரத்தில் விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருப்பேன்.

* நாட்டிற்கு வருமானம் தேடித் தருகிறேன் என்கிற போலி முகத்தோடு மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு நாடு நாடாக சுற்றாமல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேலை வாய்ப்பினை பெருக்கி இருப்பேன்.

* நான் ஏழைத்தாயின் மகன் என்பதை நிரூபிக்க தேவையற்ற ஆடம்பரங்களை அகற்றி வறுமையை ஒழிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்கி இருப்பேன்.

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிர்வாகத்தில் தேவையில்லாமல் இடைத்தரகர்களை கொண்டு குறுக்கீடு செய்திருக்க மாட்டேன்.

* இந்தப் பதவி என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வாய்ப்பு எனக் கருதி அவர்களின் தேவையை உணர்ந்து ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டிருப்பேன்.

* கொரோனா பெருந்தொற்று காலங்களில் மக்களின் வாழ்வாதாரம் முடங்கி கொண்டிருக்கையில் சில நிறுவனங்கள் மட்டும் பெரும் வருமானம் ஈட்டுவதை தடுத்து இருப்பேன்.

* நன்கொடை என்கிற பெயரில் தான் சார்ந்த கட்சி மட்டும் பெரும் தொகை வசூல் செய்வதை தடுத்து இருப்பேன்.

* மக்களின் அடிப்படைத் தேவைகளான பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை உயர்வை ரூபாய் 55 க்கு மேல் உயராமல் கட்டுக்குள் வைத்திருப்பேன்.

* ஜிஎஸ்டி என்கிற பெயரில் வரியை பெற்றுக் கொண்டு அந்தந்த மாநிலத்திற்கு உரிய பங்கிடை முறையான காலங்களில் வழங்கி இருப்பேன். மேலும் அனைத்து பொருள்களுக்குமான ஜிஎஸ்டி என்பதை குறைந்தபட்சமாக நிலை நிறுத்தி இருப்பேன்.

* அனைத்து மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் அளித்து அவற்றின் வளர்ச்சிக்கு துணை நின்று இருப்பேன்.

* மனிதரில் ஏற்றத்தாழ்வு என்பது மிகப்பெரிய சனாதனம் என்பதை உணர்ந்து சனாதனம் எந்த வடிவிலும் உள் நுழையாமல் தடுத்து நிறுத்தி இருப்பேன்.

* உணவு என்பது அவர்களின் உரிமை. ஆதலால் உணவு விஷயங்களில் தலையீடு இல்லாமலும் மக்களின் ஆரோக்கியத்திற்கு எது தேவை என்பதை உணர்ந்து வழிகாட்டியாக செயல்பட்டு இருப்பேன்.

* மாநிலங்களின் சுயாட்சியில் குறுக்கீடு செய்யாமல் மாநிலங்களின் வளர்ச்சி தான் நாட்டின் வளர்ச்சி என்பதை உணர்ந்து தேசிய ஒற்றுமைக்கு வழிவகை செய்திருப்பேன்.

* அனைவருக்கும் இலவச கல்வியை உறுதி செய்து,  உயர் பொறுப்புகளுக்கு எல்லோரையும் தகுதி உடையவர்களாக மாற்றியிருப்பேன்.

* கோயில்களை சிலர் மட்டுமே ஆக்கிரமித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதை தடுத்து நிறுத்தி கோயில்களை பொதுவுடமை ஆக்கி எல்லோரும் விரும்பியபடி வழிபாடு செய்து கொள்வதற்கு துணை நின்று இருப்பேன்.

* இல்லாத ஒன்றுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்யாமல் பள்ளிகளில் மாணவர்களின் அறிவியல் வளர்ச்சி மேம்பட துணை நின்று இருப்பேன்.

* சிலைகளுக்கு 3000 கோடி செலவு செய்யாமல் அணைகளுக்கு பல கோடிகள் செலவு செய்து நதிகளை இணைத்து மண்ணை வளமை அடையச் செய்திருப்பேன்.

* சாமியார்கள் தனிமையில் தியானத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக காட்டை அழிக்காமல் காட்டிற்குள் சென்று தியான மேற்கொள்ள வழிவகை செய்திருப்பேன். மேலும் ஆட்சி அதிகாரத்தில் அவர்கள் தலையீடு இல்லாமலும் மேலும் வாக்களிக்கும் உரிமை இல்லாமலும் சட்டம் நிறைவேற்றி இருப்பேன். ஏனென்றால் சாமியார்கள் முற்றும் துறந்தவர்கள்.

* நிறைவாக, மக்களை அறிவார்ந்தவர்களாக உருவாக்கிட ஒவ்வொரு வட்டாரத்திலும் மிக உயர்ந்த நூலகத்தை அமைத்து அறிவு பசியினை போக்கி அறிவுச் சுடரை ஏற்றி இருப்பேன்.

   இன்னும் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட  அறிவார்ந்தவர்களையும் ஆற்றல் மிக்கவர்களையும் ஆலோசனை குழுவாக உருவாக்கி நாடு, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்பினை உண்டாக்கி இருப்பேன்.

            அதிகாரம் கைகளுக்கு கிடைத்தால் அதை ஆக்கபூர்வமான செயல்களுக்கு ஈடுபடுத்த வேண்டும் என்பதை தெரிவித்து வெல்லும் ஜனநாயகம் என்பதை நிலைநாட்டிட நாம் யாவரும் ஓரணியில் திரண்டு நிற்போம்.

     சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் வெல்லட்டும்.

     கற்பி ஒன்று சேர் புரட்சி செய்.

      மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்

                பேரன்பின் வழியில்

                       சோலச்சி

                        31.12.2023

வெள்ளி, 29 டிசம்பர், 2023

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் - கவிஞர் வைகறை

 

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப்படுகிறான் கவிஞர் வைகறை

 

 





   ஒரு படைப்பாளர் எந்த அளவுக்கு தனது அல்லது மற்றவர்களின் படைப்புகளை நேசிக்கின்றான் என்பதை அவனது படைப்புகளை பார்க்கின்ற பொழுது அல்லது அவனோடு பழகுகின்ற வாய்ப்புகள் கிடைக்கின்ற பொழுது அல்லது அவனைப் பற்றி தெரிந்தவர்கள் யாரேனும் எடுத்துச் சொல்லுகின்ற பொழுது நம்மால் உணர முடியும்.

   ஒரு படைப்பாளர் ஒரு கவிதையை அல்லது கதையை எழுதி முடித்துவிட்டு அதற்கு பொருத்தமான தலைப்பை எழுதுகின்றாரா..? அல்லது பொருத்தமான ஒரு தலைப்பை எழுதிவிட்டு அதற்கு ஏற்றார் போல் தனது படைப்பை எழுதுகின்றாரா..? என்பதை அந்தப் படைப்பை வாசிக்கின்ற பொழுது மட்டுமே உணர முடியும்.

   தமிழ் இலக்கிய உலகில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்த முனைந்தவன் கவிஞர் வைகறை. அவனது கவிதைகளை வாசிக்கின்ற பொழுது இப்படியும் அழகியலோடு எழுத முடியுமா என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ள முடியும். மனித வாழ்வின் எதார்த்தத்தை வாழ்வியலை தனது ரசனை கலந்த கற்பனையோடு மிக நேர்த்தியாக கவிதை புனையக்கூடிய ஆற்றல் மிக்கவன் கவிஞர் வைகறை.

   தான் மட்டும் கவிதை புனைய வேண்டும் என்று நினைக்காமல் தன்னை சார்ந்தவர்கள் கவிதை புனையும் எண்ணம் உள்ளார்களா என்பதை அறிந்து அவர்களை தூண்டும் விதமாக அவர்களது படைப்புகளை கொண்டாடி மகிழக்கூடியவன் கவிஞர் வைகறை. நிறை குறைகளை சுட்டிக் காட்டுவதற்கு ஒருபோதும் தயங்கமாட்டான். கவிதையை தனது வாழ்வின் லட்சிய நோக்கமாகவே கருதி வாழ்ந்தவன். இலக்கிய உலகில் உரைநடை, கவிதை, சிறுகதை, பெருங்கதை, நாவல் என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் கவிதைகளுக்காக மட்டுமே தனது தேடலைத் தொடங்கியவன் கவிஞர் வைகறை.

    முகம் தெரியாதவராக இருந்தாலும் எங்கோ ஓரிடத்தில் தமக்குப் பிடித்தமான கவிதையைப் பார்த்துவிட்டால் அவர் யார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்து நேரில் சென்று அல்லது கடிதம் மூலமாகவோ தனது ஆழமான கருத்துக்களை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்பவன்தான் கவிஞர் வைகறை.

    தான் படைத்த கவிதைகளையும் தான் ரசித்த கவிதைகளையும் பல கோணங்களில் ஆய்வு செய்து பேசக் கூடியவன். கவிஞர் வைகறை தூத்துக்குடி மாவட்டம் அடைக்கலபுரத்தில் பிறந்து கிருஷ்ணகிரியில் ஆசிரியர் பணி மேற்கொண்டு பின்னாளில் புதுக்கோட்டைக்கு மாறுதலாகி தன்னுடைய ஆசிரியர் பணியையும் இலக்கியப் பணியையும் நிலை நாட்டியவன்.

    புதுக்கோட்டைக்கு மாறுதலாகி வந்த சில தினங்களிலேயே புதுக்கோட்டையில் கவிஞர்களை எல்லாம் அழைத்து நகர்மன்றத்தில் கவிதைக் கூடலை ஏற்படுத்தி ஒவ்வொரு கவிஞர்களிடமும் உள்ள அவரவர் கவிதைகளை வாசிக்க சொல்லி மிகப் பெரிய ரசிகனாய் ரசித்து மகிழ்ந்தவன்.

   சில கவிதைகளை வாசித்து விட்டு அல்லது கேட்டுவிட்டு இந்த கவிதையை இப்படிப் புனைந்தால் இன்னும் நேர்த்தியாக இருக்கும் என்று சொல்லி கவிஞர்களின் வாழ்வில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியவன் கவிஞர் வைகறை. கவிதையில் மாபெரும் சக்கரவர்த்தியாக திகழ வேண்டிய கவிஞர் வைகறை ஒரிஜினல் தாஜ்மஹால், நிலாவை உடைத்த கல், ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் போன்ற கவிதை நூல்களை தமிழ் உலகத்திற்கு அள்ளித் தந்தவன்.

  கவிஞர் வைகறையின் கவிதைகள் வாசிப்பதற்கு எளிமையாகவும் இனிமையாகவும் இருக்கும். இவனது கவிதைகளை கணையாழி, புன்னகை, அருவி, கருந்துளை, செங்காந்தள், கருக்கல் விடியும், மகாகவி, தமிழ் தோட்டம், எழுத்து.காம், வசந்த வாசல் போன்ற இதழ்கள் மற்றும் தொகுப்பு நூல்களில் நிறைய நிறைவாகவே வந்துள்ளன.

   நந்தலாலா.காம் என்கின்ற இணைய இதழையும் நடத்தி வந்தவன் கவிஞர் வைகறை. இந்த இணைய இதழில் எழுதுவதற்கு எண்ணற்ற கவிஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு எழுதினார்கள் என்றால் அது மிகை ஆகாது. நந்தலாலா இணையத்திற்கு அனுப்புகின்ற கவிதைகள் அனைத்துமே இதழில் வெளியீடு செய்ய மாட்டான். காரணம் அந்த இணைய இதிலுக்கான முக்கியத்துவத்தை கருதியவன் கவிஞர் வைகறை. தேர்ந்தெடுத்த படைப்புகளை மிக நேர்த்தியாக நந்தலாலா இணைய இதழில் வெளியிட செய்து பிற கவிஞர்களையும் இதுபோல் வடிவமைப்பினை கருத்தாழமிக்க படைப்புகளை எழுத வேண்டும் என்கின்ற ஆசையை தூண்டியவன்.

  கவிஞர் வைகறையின் கவிதை விரலை பிடித்து நடந்தவர்கள் நடக்க முயற்சி செய்தவர்கள் இனியும் நடக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ஏராளம் ஏராளம் ஏராளம். காரணம், கவிஞர் வைகறையின் எழுத்து நடை என்பது யாவரும் வியக்கத்தக்க வகையில் இருக்கும். கவிஞர் வைகறையின் படைப்புகளை வாசிப்பதற்கு பெரிய தமிழ் அகராதியையோ அல்லது சொற்களஞ்சியமோ தேவையில்லை. தமது கவிதையை வாசிக்கின்ற பொழுது காட்சிப்படுத்தக்கூடிய வல்லமை படைத்தவன் கவிஞர் வைகறை.



    ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகின்றான் என்கின்ற கவிதை நூலின் தலைப்பே மிகவும் நேர்த்தியாக இருக்கும். நிச்சயமாக, இது போன்ற தலைப்புகளை வைக்கக்கூடியவன் கவிஞர் வைகறை மட்டுமாகத்தான் இருக்க முடியும். பின்னாளில் இது போன்று கவிதை தலைப்புகளை யாரேனும் வைத்திருந்தால் அவர்கள் கவிஞர் வைகறையை பின் தொடர்ந்தவர்களாகவோ அல்லது எங்கேனும் அவரது படைப்புகளை பார்த்தவராகத்தான் இருக்க முடியும்.

    ஒரு அப்பா தனது குழந்தையை எந்த அளவுக்கு நேசிக்கின்றான் ரசிக்கின்றான் என்பதை ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் என்கிற கவிதை நூலில் நாம் காண முடியும். இந்த நூல் டிசம்பர் 2014 இல் பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில் வெளியீடு செய்யப்பட்டது.

    இந்நூலை வெளியீடு செய்து இந்நூல் குறித்து திறனாய்வு செய்து பேசியவர் காக்கை சிறகினிலே  இதழின் ஆசிரியர் எழுத்தாளர் தோழர் எட்வின் அவர்கள்.  இந்நூலை ஆய்வு செய்து பேசிய தோழர் எட்வின்இப்படி எல்லாம் உன்னால் கவிதை எழுத முடியுமா என்று மேடையிலேயே கேட்டு வியந்து கவிஞர் வைகறையே உச்சி முகர்ந்து பாராட்டினார். தோழர் எட்வின் அவர்கள் கவிஞர் வைகறையின் கவிதைகளை ஒவ்வொரு கவிதையாக ரசித்து ரசித்து பேசிய விதம் அங்கிருந்தவர்களை சிலாகிக்க செய்தது.

    ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் என்கிற இந்த நூலை வாசிக்கின்ற எவருமே கவிஞர் வைகறையை உச்சி முகர்ந்து பாராட்டாமல் இருக்க முடியாது. கவிதை உலகத்திற்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியவன் கவிஞர் வைகறை.

    தன் வாழ்நாளில் பொள்ளாச்சி இலக்கிய வட்டம், கோவை இலக்கிய சந்திப்பு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் ராசிபுரம் எழுத்தாளர் நாணற்காடன், மதுரை கூழாங்கற்கள் இலக்கிய அமைப்பு, புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம் இவற்றின் மீது தீராத பாசம் கொண்டவன் கவிஞர் வைகறை.

   இதோ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகின்றான் என்கிற கவிதை நூலுக்குள் செல்வோம்.

  மொத்தம் ஐம்பத்து மூன்று கவிதைகள் கொண்ட இந்த நூல் 64 பக்கங்களை கொண்டது. ஒவ்வொரு கவிதையும் நம் உள்ளத்தோடு பேசும். நாம், நம் குழந்தைகள் மீது கொண்டாட மறந்த அல்லது கொண்டாடிய நிகழ்வுகளை மீட்டு கொண்டு வந்து நம்மை ரசிக்க வைக்கும்.

அடர் வனம்

உள் நுழையத் தயங்கும் ஜெய்குட்டி

புரட்டுகிறான் அடுத்த பக்கம்.

    என்கிற கவிதைதான் முதல் கவிதையாக ஆரம்பிக்கிறது. இக்கவிதை நூலில் ஜெய் குட்டி என்கிற பெயர் கவிஞர் வைகறையின் மகனின் பெயர். ஜெய் குட்டி வருகிற இடத்தில் எல்லாம் உங்களின் செல்லக்குட்டிகளின் பெயரை பொருத்திக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தால் கவிதையின் ரசனை அழகியல் நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்.

   இந்த முதல் கவிதையை விளக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கருதுகின்றேன். ஒரு குழந்தையாக நீங்களே மாறி அந்த கவிதையை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

   சில கவிதைகள் தலைப்புகளோடு இருக்கும்; சில கவிதைகள் தலைப்பு இல்லாமல் இருக்கும். ஆனால் எல்லாக் கவிதைகளுமே நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்கும்.

   தன் குழந்தையோடு பழகிய நாட்களை படம் பிடித்து காட்டியிருக்கிறார் கவிஞர் வைகறை. ஜெய் குட்டி என்னென்ன சேட்டை செய்கிறான் என்னென்ன வேலை செய்கிறான் என்பதை அணு அணுவாக ரசித்து கவிதையாக புனைந்து இருக்கிறார் கவிஞர் வைகறை. இன்றும் பல இடங்களில் குழந்தைகளை கொண்டாடுவோம் என்று பேசுவதற்கு மட்டுமே அழகாக இருக்கிறது. ஆனால் செயலில் பலரும் காட்ட முனைவதில்லை. சிலர் குழந்தைகளை கண்டாலே எரிச்சல் அடைகிறார்கள். சிலர் குழந்தைகளை ஏதோ கொண்டாட வேண்டும் என்கிற சம்பிரதாயத்திற்கு கொண்டாடுகிறார்கள். சிலர் உண்மையாகவே கொண்டாடி மகிழ்கிறார்கள்.

  கவிஞர் வைகறை இந்த நூல் முழுவதும் தனது மகன் ஜெய் குட்டியை ஆசை தீர கொண்டாடி மகிழ்கிறார்.

   தன் குழந்தையோடு கோவிலுக்கு செல்லும் கவிஞர் வைகறை தனது மகனின் செயல்களை உற்று நோக்கி அதை கவிதையாக படைத்திருக்கிறார். நாம் இப்போதும் குழந்தைகளை குழந்தைகளாகவே பார்ப்பதில்லை. குழந்தைகளை அவர்கள் போக்கில் அந்த வயதிற்கு ஏற்றார் போல் வாழ விடுவதில் நாம் தயக்கம் காட்டுகிறோம். இந்த கவிஞர் தனது குழந்தையின் செயல்பாடுகளை உற்று நோக்கி இவ்வாறு எழுதுகின்றார்..

 

கோரிக்கை எதுவும் வைக்காமல்

வெளியேறுகிறான்

கோவிலை விட்டு

ஒன்று அவனிடம்

பிரார்த்தனைகள் ஏதும்

இல்லாதிருக்க வேண்டும்

இல்லை

பிராத்திக்கும் தேவை ஏதும்

இல்லாத இருக்க வேண்டும்

இல்லையென்றால்

சக தோழனை அவன்

தொந்தரவு செய்யாமல்

சந்திக்க மட்டுமே வந்திருக்க வேண்டும்

அதோ

திரும்பியொரு புன்னகைத்து விட்டு

மீண்டும் நடக்கத் தொடங்குகிறான்

ஜெய்குட்டி.

     இந்த கவிதையை வாசித்த பிறகு நம்முடைய மனநிலை என்னவாக இருக்கும் என்பதை உங்களிடமே விட்டுவிடுகின்றேன். குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்க ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அவர்களது வயதை கொண்டாட தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஏதும் கோரிக்கை வைக்காமலேயே நாம் அவர்களது கருத்து சுதந்திரத்தை வாழ்வியல் சுதந்திரத்தை பிடுங்கி விட்டு அவர்களை வதைத்து கொண்டு இருக்கின்றோம் என்பதை மறுக்க முடியாது.

   அளவிட முடியாத கற்பனை. இப்படியும் கவிதை புனைய முடியுமா என்று நம்மை யோசிக்க வைக்கிறார் கவிஞர் வைகறை. மின்சாரமற்ற இரவில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது. அதை ஊதி அணைத்து விடுகிறான் ஜெய்குட்டி. வீட்டுக்குள் மீண்டும் இருள் சூழ்ந்து விடுகிறது. நாம் குழந்தையாக இருந்த பொழுது விளக்குகளை அணைத்துவிட்டு அப்பா அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறோம். ஆனால் கவிஞர் வைகறை தனது ஜெய்குட்டியை அப்படி திட்டாமல் அந்த நிகழ்வையும் ரசிக்கிறார். அந்த ரசனையின் வெளிப்பாடு தான் இந்தக் கவிதை.

 

மின்சாரமற்ற இரவு

மெழுகுவர்த்தியை ஊதியணைத்தவன்

இரவாக்குகிறான்

இரவை.

 

  இப்படி ஒரு காட்சிக் கவிதையை நம் முன்னால் நிறுத்தி நம்மையும் ரசிக்க வைக்கிறார் கவிஞர் வைகறை.

   சூரியவம்சம் திரைப்படத்தில் தாத்தா சரத்குமார் தனது பேரனை முதுகில் உட்கார வைத்து யானை நடப்பது போல் நடந்து காட்டி மகிழ்ச்சியை உண்டாக்கி தானும் மகிழ்ச்சி அடைவார். இந்த காட்சியை நம்மில் பலரும் நம் குழந்தைகளுக்கு அல்லது பேரக்குழந்தைகளுக்கோ நாம் செய்திருப்போம். இதை அவ்வளவு லாவகமாய் தன் கவிதைகளுக்குள் கொண்டு வந்து நம்முள் கிளர்ச்சி ஊட்டுகிறார் கவிஞர் வைகறை.

 

அவ்வளவு அவசரமாய்

அழைத்திருக்கிறான் என்னை

மணிச்சத்தம் கேட்டு

முன்னமே தெரிந்திருந்தால்

விழித்திருந்திருப்பேன்

அரை மணி நேரம் கழித்து

விழித்துப் பார்த்தபோது

உம்மென்று இருந்த ஜெய் குட்டி

இப்போது

யானை ஏறி மகிழ்கிறான்

என் முட்டி வலிக்க வலிக்க

நிறைவாய் வைக்கிறான் முத்தம் ஒன்றை

என் வழியின் மேல் மலரென.

   கவிதையை குழந்தையை உள்வாங்கிக் கொண்டு ரசிக்க முடிந்த நேசிக்க முடிந்த கவிஞனால் மட்டும்தான் இப்படியொரு கவிதையைப் புனைய முடியும் என்பதற்கு கவிஞர் வைகறை சாட்சியாக இருக்கின்றார்.

   வீட்டில் அரிசியை காய வைத்து இருக்கிறார்கள். அதை காகம் கொத்துகிறது. யாராவது வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்களா. ஆனால் கவிஞர் வைகறை தனது ஜெய்குட்டி வேடிக்கை பார்க்கிறான் என்பதை ஜெய் குட்டியின் உள்ளம் அறிந்து கவிதை புனைகிறார்.

   மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் ஆற்றங்கரை ஓரமாக நடந்து போகின்ற பொழுது ஆற்றில் மீன்கள் துள்ளி குதித்து தரை ஓரமாய் ஒதுங்குகின்றன. நாமாக இருந்தால் ஓடிப்போய் அந்த மீன்களை அள்ளி வந்து குழம்பு வைத்து மணக்க மணக்க ருசித்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் மக்கள் கவிஞரோ அந்த மீன்களைப் பார்த்து ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே தூண்டில்காரன் வரும் நேரமாச்சு ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சேஎன்று பாடி தனது உள்ளம் எப்படி என்பதை இந்த உலகத்திற்கு காட்டி செல்கிறார்.

   அதே நிலைப்பாட்டைத்தான் ஜெய்குட்டி தான் யார் என்பதை இந்த உலகுக்கு காட்டுவதற்காக காகத்தை விரட்டாமல் கொஞ்சம் தாமதிக்கிறான்.

 

அரிசி கொத்தும் காகம்

விரட்ட வந்த ஜெய் குட்டி

தாமதிக்கிறான் கொஞ்சம்.

 

   இந்த கவிதையின் அழகியலை பார்த்த அல்லது வாசித்த மாணவர்கள் உள்ளத்தில் நாமும் இந்த ஜெய்க்குட்டியை போல் மனிதாபிமானம் உள்ளவர்களாக வாழ வேண்டும் இரக்க குணம் படைத்தவர்களாக மிளிர வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கும்.

  

 

 

படுத்து கிடக்கும் என் கன்னத்தில்

முத்தமிடுகிறான் ஜெய் குட்டி

அது சிறு மீன் குஞ்சாய் மாறி

நீந்தத் தொடங்குகிறது

என் தலை முதல் கால் வரை.

இப்போது நான்

மீன் தொட்டியா

குளமா

கடலா

தெரியாமல் விழித்தபடி கிடக்கிறேன்.

இப்போது அவன்

என் மறு கன்னத்தில் முத்தமிடுகிறான்.

அது சிறு பறவையாகிப்

பறக்கத் தொடங்குகிறது எனக்குள்.

பூட்டிக் கிடக்கும் என் வீட்டிற்குள்

நிறைந்து கிடக்கிறேன் நான்

பாதி கடலாகவும்

பாதி வானமாகவும்

இரண்டே இரண்டு முத்தங்களால்.

     இப்படி ஒரு கவிதையை நிறைவு கவிதையாக எழுதி நம்மையெல்லாம் குழந்தைகளாக மாற்றி குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க வலியுறுத்தி ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் என்கிற கவிதை வனத்திற்குள் நம்மை அழைத்துச் சென்று நம் மனதை நிறைவுபடுத்தி இருக்கிறார் கவிஞர் வைகறை.

    இப்போதும் நாம் ஜன்னலை திறந்தால் நிச்சயம் எட்டிப் பார்க்காமல் இருக்க மாட்டோம். நம்மை புதிய உலகத்தில் எட்டிப் பார்க்க வைத்த கவிஞர் வைகறையின் கவிதைகள் தமிழ் உள்ளவரை நிச்சயம் கொண்டாடப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.



  நம்மோடு நீண்ட நாள் பயணிக்காமல் தனது கவிதைகளை மட்டுமே நமக்காக வழங்கிச் சென்று இருக்கிற கவிஞர் வைகறையை நாம் கொண்டாடி மகிழ்வோம்.

  கவிஞர் வைகறையை அவன் இவன் என்று ஆரம்பத்தில் எழுதி இருப்பேன். ஏனென்றால் அவன் என் நண்பன். அவன் என் இதயத்தில் நெருக்கமானவன். அவன் தோளில் சாய்ந்து எண்ணற்ற கவிதைகளை விவாதித்து இருக்கின்றேன். என் அன்புக் கட்டளையை ஏற்று கிருஷ்ணகிரியில் இருந்து புதுக்கோட்டை வந்தவன் சீக்கிரமாகவே இவ்வுலகத்தை விட்டு சென்று விட்டான்.

  கவிஞர் வைகறையின் கவிதைகளை தொகுப்பாக கொண்டு வர வேண்டும். ஏனென்றால், கவிஞர் வைகறை தமிழ் இலக்கியத்தின் அசைக்க முடியாத சொத்து. இன்று கவிதைகள் நிறைய வடிவம் பெற்று இருக்கிறது அது கவிஞர் வைகறையின் எழுத்துக்களால் விளைந்த வித்து என்பதை உறுதிபடச் சொல்லுவேன்.

   கவிஞர் வைகறையோடு இலக்கிய வடம் பிடித்து வலம் வந்த நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். எனது முதல் பரிசு என்கிற சிறுகதை தொகுப்பிற்கு அவன் எடுத்துக் கொண்ட பணியை எண்ணி  பார்க்கிறேன். அவனுக்கு நிகர் அவன் தான். புதுக்கோட்டை வீதி கலை இலக்கிய களம் கவிஞர் வைகறைக்கு [குடும்பத்திற்கு] துணையாக இப்போதும் இருக்கிறது.

 

   குழந்தைகளைக் கொண்டாடுவோம். ஆம், ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்.

 

[21.04.2016 வாழ்வில் மறக்க முடியாத நாள். இவ்வுலகை விட்டு அவன் கடந்து சென்ற நாள்.]

 

என்றென்றும்

கவிஞர் வைகறையின் நினைவுகளுடன்

   சோலச்சி

 

  எப்போதோ எழுத வேண்டியது. இப்போதுதான் எழுதுகின்றேன். எப்போதும் எழுதப்பட வேண்டியவன் கவிஞர் வைகறை.

 

கவிஞர் வைகறையுடன் சோலச்சி

 

 

 

 

வியாழன், 28 டிசம்பர், 2023

புரட்சிக் கலைஞருக்கு புகழ் வணக்கம் - சோலச்சி

 

புரட்சிக் கலைஞருக்கு புகழ் வணக்கம்..!






கருப்பு நிலாவாம்

அந்த கரிமேடு கரிவாயனை

மாநகரக் காவல்

புலன் விசாரணை செய்தாலும்

அந்த பூந்தோட்ட காவல்காரன்

எப்போதும்

பொன்மனச் செம்மல்தான்...!


ஊமை விழிகளால்

சட்டம் ஒரு இருட்டறை என்றாலும்

வேங்கையின் மைந்தனாய்

புது யுகம் படைக்க

புதிய தீர்ப்பு வழங்கி

எங்கள் குரலாய் ஒலித்து

நீதியின் மறுபக்கத்தை காட்டிய

எங்கள் வீரபாண்டியன்..!


சேதுபதி ஐ.பி.எஸ்ஸாக

பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டாலும்

வீரம் வெளஞ்ச மண்ணில்

தர்ம சக்கரமாய்

வாழ்ந்து வழிகாட்டிய

எங்கள்

பெரியண்ணா...!


புரட்சிக்கலைஞனாய்

கொள்கை நெறி தவறாத கேப்டனாய்

வலம் வந்ததை

பார்த்தவர்கள் சொல்லுகின்றனர்

பழகியவர்களும் 

உள்ளம் உருக உரைக்கின்றனர்..!


இல்லாதோருக்கு இயன்றதை

வழங்கச் சொன்னாய்

எப்போதும்

நியாயத்தின் பக்கமே நின்னாய்..!


தொண்டர்களாய் மாறிய ரசிகர்களை

ஏமாற்றக் கூடாது என்பதற்காகவே

அரசியலில் காலூன்றினாய்

வேரூன்றும் நேரத்திலே

எங்களை

நெஞ்சடைக்க செய்ததென்ன..?


பாரியை வள்ளல் என்று

பறம்பு மலையோ சொல்லி மகிழும்

அந்தப் பாரியே நீதான் என்று

இந்தப் பாரோ மார்தட்டி மகிழும்...!


வறுமையை ஒழித்திட எண்ணிய

உன் வலிமை நியாயமானதுதான்...

ஆட்சியாளர்கள் முயலாமையில்

இருக்கும் வரை

வறுமையும் நிலையானதுதான்...!


பிறர் செய்வது தவறு என தெரிந்தால்

நாக்கை உருட்டினாய்

கையை உயர்த்தி மிரட்டினாய்

கோபம் கொப்பளிக்க

உரக்க கத்தினாய்..

இது சதிகார உலகம்

உன்னை நக்கலடித்தே

நகர்ந்து விட்டது...!


உன் மேடைப் பேச்சு

எழுதி வைத்து பேசுவதல்ல..

எதார்த்தத்தை பேசியது..!


அப்பழுக்கற்ற மனிதராய் அரசியலில்

வெளிச்சம் போட்டு காட்டினாய்..!

சற்றே நிதானித்திருக்கலாம்

நிலை தடுமாறுவதை

தவிர்த்திருக்கலாம்...!


உன்னைப் புறம் தள்ளி

எல்லை மீறிய பிறகு

என்ன செய்வது...?


ஓ...வென அழுகின்றேன்

இரு கண்கள் போதவிலை..


காற்றும் உன்னிடம் 

உதவி கேட்டதோ...?

மூச்சுக்காற்றையே விட்டுவிட்டாயே...!


நெறஞ்ச மனசுக்காரரான

எங்கள் சொக்கத்தங்கமே

எங்கள் ஆசானே

நீயொரு சகாப்தம்...!


              - சோலச்சி அகரப்பட்டி

                  பேச : 9788210863