வியாழன், 10 மார்ச், 2016

எனது " முதல் பரிசு " சிறுகதை நூல் பற்றி கவிஞர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள்...

முதல்பரிசு சிறுகதைத் தொகுப்பு நூலாசிரியர் சோலச்சி அவர்களுக்கு முதலில் வாழ்த்துகள்..தமிழ் இலக்கியச் சோலையில் இனிய மணம் கமழும் சிறுகதை மலர்க்கொத்தினை அணிகலனாய்ச் சேர்த்தமைக்கு.

146 பக்கங்களுக்குள் 43 சிறுகதைகளை அழகுறப் படைத்துள்ள தங்களின் முதல் முயற்சிக்குப் பாராட்டுகள்.

நூலின் அட்டைப் படமும்   வடிவமைப்பும் பார்த்தவுடன் வாங்கவும், வாங்கியதும் படிக்கவும் தூண்டும் வண்ணம் நேர்த்தியாக அமைந்துள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கதைகளோடு புதிய பல கதைகளும் இந்நூலில் அணிவகுத்துள்ளமை சிறப்பு.

அத்தனை கதைகளையும் திரும்பத் திரும்ப வாசித்த பின்னரே எனது கருத்தினைத் தங்களோடு பகிர முற்பட்டேன்.

பொதுவாக ஒரு இலக்கியம் என்பது சமகாலச் சமூக நிகழ்வுகளை, படைப்பாளனின் இலக்கினை கற்பனை கலந்து இயம்புவதாக இருக்க வேண்டும் என்பார் புதுமைப் பித்தன். அந்த வகையில் இந்நூலில் பெரும்பாலான கதைகள்  கிராமிய வாழ்வியல் கூறுகளை கருவாகக் கொண்டு அந்தந்த வட்டார வழக்கிலேயே உரையாடல்களை அமைத்து மண்மணம் கமழச் செய்துள்ளமை சிறப்பு.

எல்லாக் கதைகளைப் பற்றியும் விவரிக்காமல் பானைச் சோற்றில் பதம் பார்த்த சில பருக்கைகளை மட்டும் பகிர விழைகிறேன்.

பாலியல் வன்கொடுமைக்கு  ஆளாகிப் பாழாகும் இளந்தலைமுறைக்குப் பாடமாக அமைந்த “நஞ்சுபோன பிஞ்சு” 

இடரிலும், துயரிலும், வாட்டும் வறுமையிலும் மனம் தளராது,  தன்னம்பிக்கையுடனும், சகிப்புத் தன்மையோடும் விடாமுயற்சியோடும்  முனைந்தால் முன்னேற்றம் நிச்சயம் என்பதை உணர்த்தும் “ பட்டமரம்“,

சிறுகுடும்ப நெறி பற்றிப் பள்ளி இலக்கிய மன்ற பேச்சுமூலமாக மகன் தந்தைக்கு அறிவுறுத்துவதாக அமைந்த “முதல் பரிசு” 

இளம் வயதுத் திருமணத்தால் மகப்பேற்றில் மகளிர் அடையும் நலக்கேட்டினை உணர்த்தும் “மன்னிப்பு” 

பேய் பற்றிய மூடநம்பிக்கையைத் தகர்க்கும் ” ஞானஒளி” மழைபெய்ய வழிபாடுகளினும் மந்திரங்களினும் மேல் மரக்கன்று நடுதலே என்பதை சர்வ மதத்தினருக்கும் உரத்துச் சொல்லும் ” மரம்நடுவோம்”, 

”எல்லா மனைவியும் தன்னைப்போலவே தான் புருசனும் இருக்கணுமுன்னு நெனைக்கிறது தப்பா?” என்னும் தேவியின் சாட்டை வீச்சின் மூலம் பெண்சமத்துவம் கூறும் “ பெண்மை” 

மூத்த குடிமக்களை மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ” பெருசுகள்” 

கவுரவக் கொலைகளைக் கண்டிக்கும் “ சாம்பல்” 

சாதிக்கும் நட்பிற்கு சாதி இல்லை எ்னபதைச் சித்தரிக்கும் “பிச்சாயி மகன்” ஆகிய கதைகள் நல்ல சமூக மாற்றத்திற்கான படைப்புகள். பாராட்டுகள்.

அறுசுவை அமுத விருந்தாயினும் இலையில் கிழிசல் இருப்பின்  அவ்விருந்தின் சுவை குறைவது போல  இந்நூலில் நிறைய அச்சுப் பிழைகள் தவிர்த்திருக்கலாம். 

நிறைய ஒற்றுவிடுதல்கள்,லகர,ளகர, டன்னகர றன்னகர பிறவல்கள்,( எ-டு - வேண்டும் என்பதன் பேச்சுவழக்கு வேணும், திருந்தவேண்டும் என்பது திருந்தணும் என்றுதான் வரும்) காற்புள்ளி, அரைப்புள்ளி, மேற்கோள்குறி, வினாக்குறி ஆகியன அதற்குரிய இடங்களில் இடப்படாதது வாசகனின் வாசிப்பு ஆர்வத்திற்குத் தடையாகவே அமையும்.

அதேபோல ஒருபக்க, இரண்டு பக்கச் சிறுகதைகளில் இயற்கை வருணனைகள் பொருத்தமான இடங்களில் மட்டும் அமைந்தால் சிறப்பு.

ஒரு சிறுகதை என்பது பந்தயக்குதிரையின்  பாய்ச்சலைப் போல இருக்கவேண்டும். எடுப்பு, தொடுப்பு, முடுக்கம், திருப்பம், முடிப்பு என்னும் படிநிலையில் அமைந்தால் விறுவிறுப்பும் கதையின் சுவையும் குறையாது.

எல்லாக் கதையும் ஒரு தீர்வைச் சொல்ல வேண்டுமென்பதில்லை. சிலவற்றை வாசகனின் முடிவுக்கேகூட விட்டுவிடலாம்.  

ஒருவாசகன் என்ற முறையில் எனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளேன்,  அடுத்தடுத்த படைப்புகள் மேலும் மெருகுபெறவேண்டுமென்னும் நல்லெண்ணத்தோடு. 

தொடர்ந்து படையுங்கள்... வாழ்த்துகள்.  

                                                    பாவலர் பொன்.கருப்பையா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக