ஞாயிறு, 13 மார்ச், 2016

பத்தாம் வகுப்பு மாணவர்களிடம்....

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய அனுபவம்  :

    விடுதியில் தங்கி  நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த பொழுது சித்திவிநாயகர் திரையரங்கில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரையிடப்பட்டிருந்தது. அப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றுக்கொண்டு இருந்தது.  பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஆசை. அன்று  புதன் கிழமை.  அதனால் சனி ஞாயிறும் படம் ஓடும் ..  சனிக்கிழமை மதியக் காட்சி பார்த்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் வியாழக்கிழமை காலையில் இன்று இப்படம் கடைசி என்று ஒட்டிவிட்டார்கள். இனிமேல் பார்க்க முடியாதே என்ற நோக்கில் அன்று இரவே இரண்டாவது காட்சிக்கு நானும் நண்பன் பாண்டியன் என்பவனும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களிடம் சொல்லிவிட்டு சென்றுவிட்டோம். விடிந்தால் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு.  படம் பார்த்துவிட்டு வந்து படுத்தவர்கள் காலை 7.00 மணிக்குதான் எழுந்தோம். எதார்த்தமாய் எழுந்து எப்போதும் பள்ளிக்கு செல்வது போல் எந்த சலனமும் இல்லாமல் சென்று வந்தோம். எதார்த்தங்கள்தான் எப்போதும் வெற்றி பெறும்.  பிறகு மதியம் விடுதி காப்பாளர் அவர்களிடம் திட்டு வாங்கியது எல்லாம் நடந்தேறியது...

      இன்று என்னைச் சந்தித்து வாழ்த்து பெற வந்த என்னிடம் ஐந்தாம் வகுப்பு வரை படித்த (இப்போது பத்தாம் வகுப்பு)  மாணவர்களிடம் என் கதையைச் சொல்லி எதார்த்தமாய் இருங்கள். பதட்டப்படாமல் வழக்கம்போல் பள்ளிக்குச் செல்லுங்கள்.  தெரிந்ததை எழுதுங்கள்.. உங்களால் வெற்றி பெற முடியும் என்று வாழ்த்து கூறி அனுப்பினேன்.

    ஆசிரியருக்கு மட்டும்தான் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் கிடைக்கும்...... மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ....

   கடைசியில் சந்தியா என்ற மாணவி (என் மூத்த மகனுக்கு ஆரியா என்று பெயர் வைத்தது இந்த மாணவிதான்)   அய்யா உங்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன என்று கேட்டார்.  நான் 342 மதிப்பெண் என்றேன். கடைசிவரை யாரும் நம்பவில்லை....
ஆசிரியர் மேல் இருந்த உயர்ந்த நம்பிக்கைதான் காரணம்....
   
மாணவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.....

        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக