"தனது தோழனை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய தமிழ்நாடு கலை இலக்கிப் பெருமன்றம்"
![]() |
சோலச்சியின் முட்டிக்குறிச்சி நாவல் மணப்பாறை சௌமா இலக்கிய விருது பெற்றமைக்காக 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்கோட்டை எம்.ஐ கல்வி நிறுவனத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாவட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு மாநிலக்குழு உறுப்பினர் எழுச்சிக்கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்கள் திருச்சியிலிருந்து கலந்து கொண்டது நிகழ்வினை மேலும் சிறப்பு செய்தது. மாநில குழு உறுப்பினர் எழுத்தாளர் கோவில் குணா, பேராசிரியர் சிவகவி காளிதாஸ், எழுத்தாளர் சி.பாலையா, எழுத்தாளர் கொத்தமங்கலம் சிவானந்தம், கவிஞர் சின்ன கனகு, என ஆளுமைகள் பலரும் முட்டிக்குறிச்சி நாவல் குறித்து பேசினார்கள்.
எழுச்சிக்கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்களின் புரட்சிகரமான உரை தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் தோழர்களின் இதயங்களை மேலும் வலுவாக்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் மாதவன் அவர்கள், கவிஞர் ஜீவாதாசன், பாடகர் பெருமாள் பட்டி அடைக்கலம், எழுத்தாளர் பாலஜோதி இராமச்சந்திரன், கவிஞர் அழகுநிலவன், கவிஞர் பெர்னாட்ஷா, இந்திய கம்யூனிஸ்ட் தோழர் பாண்டியராஜன் உட்பட தோழர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது.
"முட்டிக்குறிச்சி" நாவல் முழுவதையும் அழகான கவிதையாக்கி எல்லோரும் பாராட்டும்படி வாசித்தார் கவிஞர் சின்ன கனகு.
கவிஞர் சின்ன கனகு அவர்கள் முட்டிக்குறிச்சி நாவல் குறித்து வாசித்த கவிதை உங்கள் வாசிப்புக்கு.....
பொய்யாய் முரண்டு பிடித்த
பெட்டைக்கோழி சேவலுடன்
கூடிமகிழும் காட்சி
காளைக்கோழி மலையின்
திமிழ் கொண்டைபிடித்த
மகிழ்ச்சி
மனிதத் தோலின் நிறம்
சிகப்பு சீக்கென்பதால்
அழகப்பன் பிறப்பு
அழுஞ்சிப் பழத்துடன்
ஒப்பீடு சிறப்பு
கட்டாந்தரையொரசி
காரைமுள்ளெடுத்து கீறி
சுவைக்கும் கத்தாழம்பழத்தை
ஈட்டியுள்ள
செவத்தப்பயலுகலாக பயமுறுத்தும்
முரணருமை
பட்டவன் முனியன்
நாட்டார் தெய்வங்கள்
இடமாறிய சிவன்
தடமாறா பதிவு
ஜாதி வன்ம
சின்னச்சாமிக்கு
நூதன தண்டனை அளித்து
தப்பித்த தடையமழிப்பு
கருப்பையாவுடன்
காதல் கொண்டதால்
பயங்கோலி வெள்ளாளச்சிக்கு
பெருமலையும் கடுகானகாட்சி
ஊரையே ஒதுக்கிவைத்தது சாட்சி
முட்டுச்சேலை
ஒரு சமூகம்
தொட்டுத் தந்தால்
தீட்டோடிப்போகும்
கேள்விப்பட்டிருக்கிறேன்
முட்டுக்குறிச்சியில்
இத்தனை துன்பங்கள்
கலங்கி தவிக்கிறேன்
பார்வதி கண்டவனார்
காராளவேந்தன் காவண்ணா
இருந்தென்ன
அன்று
வயநாட்டில்
இன்று
வங்காளத்தில்
வளனார்கள்
மாரியம்மாக்களை
சூறையாடிக்கொண்டேயுள்ளனர்
வேரறுக்க கரம்கோர்ப்போம்
நேற்றைய நிகழ்வுகளை
நாளைய தலைமுறையடைய
இன்று
கற்பனை கலப்பில்லா
வட்டார மொழி சிதைவில்லா
கற்றாலை
அட்டைப்பட முகப்புடன்
முட்டிக்குறிச்சி
மூலிகை நூல்படியமைத்த
விருதாளர் இன்னும் பல
படைப்புகள்கண்டு
விருதுகள்
பெற வாழ்த்துகிறேன்...
அன்புடன்
சின்ன💊கனகு
மாவட்டத் தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் நிகழ்ச்சி தொகுப்பு என சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு கவிஞர் சிவகுமார் அவர்கள் நன்றிபாராட்டினார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட பொருளாளராகிய சோலச்சியின் நூலைக் கொண்டாடுவது என்பது தனது தோழனை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய நிகழ்வாகும். பேரன்பின் தோழமைகளுக்கு பேரன்பு நிறைந்த மகிழ்ச்சியை தெரிவித்து மகிழ்கின்றேன்.
பேரன்பின் வழியில்
சோலச்சி