சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - காலத்தால் அழியாத காவிய படைப்பு.
கவிஞர் க.சிவக்குமார்
கண்களால் வாசித்ததை...
இதயங்களால் நேசித்து...
மனதால் யோசித்து கரம்பிடித்து எழுதுகிறேன்.
சேற்றில் மலர்ந்த செந்தாமரை மலர்போல் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் அகரப்பட்டியில் பிறந்து சிகரத்தை தொட்டுவிட துடிக்கும்
புரட்சியாளர்...
சமூக சிந்தனையாளர்
படைப்பாளி
உழைப்பாளி
எழுத்தாளர்
போராளி
அகரம் முதல் சிகரம் வரை தோள் கொடுக்கும் உன்னதமான அன்புமிக்க தோழர் சோலச்சி.
தமிழைச் சீண்டுவோர் கதி கலங்கி ஓடட்டும்
என்ற வரிகளை இடி முழங்கச் சொல்லியுள்ளார்...
முதல் பக்கத்திலே இப்படி என்றால் அடுத்த பக்கங்களில் எப்படி இருக்குமென்று கதிகலங்கிப்போனேன்.
பிணத்தை எரிச்சப்ப
காத்து பெருக்கெடுத்து வீச
புகைபூரா கோயிலுக்குள்ள
பூந்து விளையாடுச்சு
இனிப் பொறந்தா
புகையாதான் பொறக்கணும்னு
போறபோக்குல
இங்க செத்தாதான் சாமியவே பார்க்கமுடியுமுனு
எங்கப்பா சொன்னது
இப்பவும் கேட்குது.....
என்ற தீண்டாமை எவ்வளவு தாண்டவம் ஆடுகிறது என்பதை வாசிக்கும் பொழுது உணரமுடிகிறது.
உழைக்கும் வர்க்கத்தையும்
போராடும் வர்க்கத்தையும்
தோழா ழோழா என தோள்தட்டி எழுப்பியதையும் தனது கவிதை வரி சொற்களால் தட்டி எழுப்பியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.
கிராமத்து வீட்டு வாழ்க்கை...
விடுதி வாழ்க்கை...
வயல் வாழ்க்கையையும்...
பட்டணத்தில்தான் பட்ட
இன்னல்களையும்
வெளிப்படையாகவே எழுதியுள்ளார்...
காதலும் கடந்து போகும்...
சாதல் என்பது நினைவில் நின்று விடும்
என்பதை தனது அம்மாவின் இறப்பை இன்று வரை நினைவில் கொண்டுள்ளதை அடக்க முடியாத அழுகையால் படைத்துள்ளார்.
நீர் நிலம் கண்மாய் பனை மரங்கள்
பறவைகள் மலைகள்...
காற்று மழை புயல் இவைகளுடன் தான் வாழ்ந்த வாழ்வை அற்புதமாக கூறியுள்ளார்...
நீயும் அதுதான்
நானும் அதுதான்...
ஒரு நூல் இடைவெளிதான்
என்கிற கவிதையில் நால்வர்ணத்தை நெற்றியில் அடித்தார் போல் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்...
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் இந்த கவ நூலை வாங்கி வாசிக்கும்பொழுது அதன் உண்மை தன்மையை உணரலாம்.
கூடடைய வேண்டிய பறவையொன்று யாருமற்ற சாமத்தில் பயணிக்கிறது என்ற வரிகளை வாசித்தபோது, சாமத்தில் கூட சத்தமின்றி பறவைகள் பயணிக்குமா என பயந்துப் போனேன்.
கூட்டமாய் விளக்கேற்றி கொஞ்சி விளையாடும் வின்மீன்கள் எனும் கவிதையின் வீச்சைக்கண்டு வியந்துப்போனேன்.
அப்பாையால வாங்கிய அடி சோலச்சி அவர்களுக்கு வலித்ததோ என்னவோ தெரியல. ஆனால், ஆத்தா எழுந்து வா என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவி வரிகளை வாசிக்கும்போது என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் கொட்டிவிட்டன. புத்தகம் நனைந்து விட்டது.
சிரித்த முகத்தோடு வாழும் மனிதர்கள் சிலரின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சோகங்களையும் துயரங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுமா என்றும் கலங்கிப்போனேன். தாயின் இழப்பு எந்த அளவிற்கு மனதைப்பாதிக்கும் என்பதை மனம் உருக எழுதியுள்ளார். தாயின் அருமையை உணர்த்தியுள்ளார்.
மோகன் வாத்தியாரும் குழந்தைவேல் வாத்தியாரும் பள்ளிக்கு வராமல் மாணவர்கள் கோவில்களில் விழுந்து அழுது புரண்டுள்ளனர். சொல்லியுள்ளார். அதை வாசிக்கும்போது எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன்.
பள்ளிப்பருவ காதலை பக்குவமாய் பத்திரப்படுத்தி வைத்து மறவாமால் இன்றுவரை நினைவில் வைத்திருப்பதை ஆட்டோகிராப் சினிமாவில் பார்ப்பதைப்போல் தான் கடந்து போகும் வந்தான் காலங்களை கண்ணீர்மல்க எழுதியுள்ளார்.
பலருடைய வாழ்க்கை ஆட்டோகிராப் போலவே நகர்ந்து செல்வதை தனது கவிதை வரிகளால் நினைவுபடுத்தியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
படி....படி....படி என்ற தலைப்பில் தன் வாழ்வில் கற்றவற்றை பிறருக்கு பயனுறும்படி பயனுறபடி படி படி என படிபடியாக உரக்கச்சொல்லியுள்ளார்.
தூங்கி கெடக்குடா தேசம்...நலிஞ்சுப்போச்சுடா தூக்கி நிறுத்துடா என்று நாட்டுப்பற்றுடன் தூங்காமல் கனத்த இதயத்தோடு கவலையுடன் எழுதியுள்ளார்.
இயற்கையின் படைப்பையும்
செயற்கையின் ஆணவத்தையும்
பெண்களின் பெருமையையும்...
பெண் படும் கொடுமைகளையும்
தடைகளை உடைத்தெறிந்தவற்றையும் சிறிதும் தயக்கமில்லாமல் எழுதியுள்ளார்.
இல்லை இல்லை இல்லை என்ற சொல்லை மறந்தால் தொடருமா தொல்லை என்ற சொல்லை தொல்லையில்லாமல் எழுதியுள்ளார்.
முடியாது என்பவனுக்கு எதுவும் முடியாது. முடியும் என்பவனுக்கு எதுவும் சாத்தியமே என்றும் விழிப்புடன் விழித்தெழுந்து உயிர்த்தெழ வேண்டும் என்று உரக்கச்சொல்லியுள்ளார்.
இளமையில் கல்வி கற்பதே தனது உயிர் மூச்சாக கருதியுள்ளார். தான் கற்றதன் பயனாக இன்று பிறருக்கு கற்பித்தலை தனது தலையாய கடமையாக கருதி செயலாற்றுகிறார்.
களத்தில் இறங்கிப் போராடுவது எவ்வளவு கடினம் என்பதை வலியுடனும் வேதனையுடனும் கூறியுள்ளார்.
மூச்சுக்கும் பேச்சுக்கும் நாம் வரி செலுத்துவதை வரியாக விவரித்துள்ளார்.
அடடா தோழா எழடா நீயும் ஆழ்ந்த உறக்கம் இன்னும் ஏனடா என்ற வரிகளால் தோழர்களை தட்டி எழுப்பியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இளைப்பாறுவதற்கும்
களைப்பாறுவற்கும்
சாய்ந்து கொள்வதற்கு சிலருக்கு சில சாய்வுகள் தேவை என்பதை சாய்வில்லாமல் சாய்வு என்ற தலைப்பில் எழுதியவற்றை எண்ணிப்பார்க்க வைக்கிறது. நண்பர்கள் சாய்ந்து கொள்வதற்கு நட்பு எனும் நாற்காலி தேவைப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.
பெண்ணின் வீரத்தையும்
மன வலிமையையும்
தைரியத்தையும்
நம் நாட்டுக்காக
இரத்தம் சிந்தி மாண்டுப்போன
பெண்களின் புரட்சியை புரியும்படி எளிமையாக எழுதியுள்ளார். நாஞ்செலி எனும் வீரத்தாய் என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை வலி நிறைந்தது. பெண்களின் தன்மானத்தை காப்பதற்காக அந்த தாய் எடுத்த முடிவுதான் பின்னாளில் பேரழுச்சியை ஏற்படுத்தியது.
பறவைகளின் காதலையும் உணர்வுகளையும் தன் இருப்பிடம் நோக்கி திரும்பும் அந்த பற்றுதலையும் நன்கு உணர்ந்து எழுதப்பட்டுள்ளது. ரசனை மிக்க கவிதை.
ஆணவம் மேலோங்கும் அதிகாரத்தை அதிரச்செய்யும்படியான படைப்புகளை நிறைய படைத்துள்ளார்.
விசாலமான பார்வை இருந்தால் போதும் வீசும் காற்று கூட தென்றலாய் மாறும் என்ற கவி வரிகளை வாசிக்கும்போதே தென்றல் வீசுகிறது.
எழுதுகோல்களுக்கும் துப்பாக்கிகளுக்கும் இடையிலான சக்தியை தன் கவி வரிகளால் விவரித்துள்ளார். இனம் மொழி சாதி மதங்கள் ஏற்படுத்தும் விபரீதங்களை தன் ஆதங்கமாக அள்ளி வீசியுள்ளார்...
சட்டங்கள் என்றவுடன் சாமியும் சத்தமில்லாமல் உறங்கி விட்டனவோ என்று சாடியுள்ளார்...
சொற்களுக்கும் மணம் உண்டு என்பதனை மனம் மகிழும் படி கூறியுள்ளார்...
வாழ்க்கையை இழந்த ஒரு பெண்ணின் துயரத்தை பட்டமரத்தோடு ஒப்பிட்டு எழுதியுள்ளதை வாசிக்கும்போது மனதில் வலியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது அப்படி ஒரு வரிகள். தாயின் பாசத்தையும் இழப்பையும் வேறு எவராலும் இப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை...
ஆண்ட பரம்பரையும்
ஓர் நாள் மாண்டு போகுமோ...
அதிகார திமிரை
அரை நிர்வாணமாக்குவோம்
என்பதை தலை நிமிர்ந்து
நெஞ்சை நிமிர்த்தி உரக்கச்சொல்லியுள்ளார்...
கோடி கோடியாய் சேர்த்தாலும்...
கோவணமின்றி பிறக்கிறார்கள்...
கொடித்துணியோடு
எரிக்கிறார்கள்...
எதுவும் சொந்தமில்லை
என்பதனை சில வரிகள்
உணர வைக்கின்றன...
மழை பெய்தபோது
வானத்திற்கு வேர்த்தது போல...
புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது...
எனது கண்களுக்கு வேர்த்து விட்டன...
நீ இளைப்பாறினால்(மரம்)
நாங்கள் களைப்பாறுவோம் (காற்று)
அப்பாையால ஒரு அடி
கவிதை நூலை வாசிக்கும் வரை எனது வாழ்கையில் நடந்த சம்பவங்களே மிகவும் துயரமானதாகவும் உயரமானதாகவும் கடினமானதாகவும் நினைத்திருந்தேன். வாசித்தப்பிறகு மிகவும் யோசித்துப்பார்க்கிறேன்.
இதற்குமேல் என்னால் புத்தகத்தில் உள்ள வரிகளின் வலிகளை தாங்கிக்கொண்டு தொடர்ந்து எழுதமுடியவில்லை
இது எனது ஆழ்மனதின் பதிவாகும்...
![]() |
| கவிஞர் க . சிவக்குமார் |
வானம் மழையைப் பொழியும்பொழுது
மேகத்திற்கே வேர்த்தது போல...
இந்நூலை வாசிக்கும்போது எனக்குள்ளே
ஓர் உணர்வு தோன்றியது ஏனோ...
புத்தகத்தை வாங்கி வாசிப்பாருங்கள்
காலத்தால் அழியாத காவியப் படைப்பை வழங்கிய எழுத்தாளர் சோலச்சி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
கவிஞர் க.சிவக்குமார்
புதுக்கோட்டை
98659 80793
வெளியிடு:
செங்காந்தள் சோழன் பதிப்பகம்
மணப்பாறை
தமிழ்நாடு
+91 98657 80742
விலை ரூ 150/-
சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி – காலத்தால் அழியாத காவிய படைப்பு…. ஒரு பார்வை... கவிஞர் க.சிவக்குமார்
https://akkinikkunchu.com/?p=352040/


