Sunday, 25 December 2016

காட்டு நெறிஞ்சிக்கு - கவிஞர் ஈழபாரதி

காட்டு நெறிஞ்சி

 December 25, 2016 by கவிஞர் ஈழபாரதி

 கவிஞர் ஈழபாரதி

நாம் கவனிக்கத் தவறிய, இயந்திர வாழ்க்கையில் நாம் இழந்த கிராமத்து வாழ்வியல் முறைகளை மண் வாசனையோடு தந்து இருக்கிறார் “காட்டு நெறிஞ்சி” யில் கவிஞர் சோலச்சி.

முதல் பரிசு என்ற சிறுகதை நூலின் மூலம் அறிமுகமான சோலச்சியின் இரண்டாவதுப் படைப்பாக வெளிவந்துள்ளது இந்த “காட்டு நெறிஞ்சி”.

கவிதை என்றாலே காதலைப் புறம் தள்ளிவிட்டு எழுதிவிட முடியாது. காரணம் காதல்தான் அவனின் முதல் கவிதை.

எங்குப் பார்த்தாலும்
எழுதிவிட்டுத்தான்
செல்கிறேன்
என்னோடு
உன் பெயரையும்
கள்ளிச் செடிகளில் !

எல்லோருக்கும் வாய்த்திருக்கும் கிராமங்களில் கள்ளிச் செடிகளில் ரணமான காதல் முள்ளினால் குத்திய வடுக்களால் இதயத்தின் ஆறாத வலிகளால் இன்னும் அப்படியே பதியப்பட்டு இறக்கிறது கள்ளிச் செடிகளில் காதல்.

அயர்ந்து உறங்கினேன்
ஆடை இழந்த மரத்தின்
அடியில்
பூமி சிம்மாசனத்திற்குக்
குடை பிடித்தவாறு
காளான்கள்!

வெப்பமயமாகிவரும் பூமியில், இனி என்ன மிச்சம் இருக்கப்போகிறது? என்ற ஆசிரியரின் கோபம்தான் கவிதையாக படிந்து இருக்கிறது.

கிராமத்து வயல்கள், குளங்கள், ஆறுகள் காணாமல் போய்விட்டன. மணல் இன்று அதிகாரவர்க்கத்தின் சுரண்டலாக மாறிவிட்டது. தனியார் மயமாக்கலால் கானாமல் போனது கிராமத்து வயல்கள் மட்டுமல்ல நம் தலைமுறை பிள்ளைகளின வளங்களும்தான்.

என் இனம்
அழிந்தலைத் தடுக்கத்
துப்பில்லை
தேசிய கீதம்
ஒரு கேடா…!

கிராம வாழ்வியலை முன் வைத்து நிறைய கவிதைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தாலும், ஈழம் சார்ந்தும் கவிதைகள் இத்தொகுப்பில் காணக் கூடியதாக இருக்கின்றது. இருந்தாலும் இப்படிக் கேட்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.

இந்திய இறையாண்மை மீறி எப்படி பேசலாம், எப்படி எழுதலாம் என்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு பதில் வைத்திருக்கிறார். ஒரு இனம் கொத்துக் கொத்தாக நம் கண்முன்னே செத்து வீழ்ந்துக் கிடக்கிறது, இந்நூற்றாண்டில்  நடைபெற்ற பாரீய மனித பேரவலம் ஈழத்தில், நடந்தேறிய பிறகும், ஆட்சி அதிகாரங்களுள்ள சரிவதேசங்கள் கேட்கவில்லையே என்ற ஆதங்கம் கவிஞரின் கவிதைகளில் அனலாய் எரிகின்றது.

எவ்வளவு உழைத்தாலும்
உழவுக்கு
கூலியாய்க் கிடைப்பது
வறுமை மட்டுமே!

சேற்றை
புறம் தள்ளிவிட்டு
சோற்றை மட்டுமே
ருசிக்கின்றார்கள்
சுகவாசிகள்!

இப்படி இன்னும் கவிதைகள் நிறைந்து இருக்கின்றது. கவிஞர் சோலச்சியின் தொகுப்புகள் முழுவதும் தமிழின அழிப்புக்கு எதிராக, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக, சாதி, அடக்கு / ஒழுங்கு முறைகளுக்கு எதிரான, போர்த்தொடுத்து இருக்கிறார் கவிதைகளில் கவிமதி சோலச்சி.

காணாமல் போன கிராமத்து வயல்களுக்காக, உழவுக்காக, மாடுகளுக்காக, ஆற்றுமணல் பருக்கைகளுக்காக, ஈழத்திற்கான ஆதரவாக ஒரு கிராமத்துக் குரலாய் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது காட்டு நெறிஞ்சி.

எல்லாவற்றையும்பேசும் கவிதையாக காட்சிப்படுத்தி அழகிய வடிவமைப்பில் வெளிவந்திருக்கும் கவிமதி சோலச்சியின் கவிதைகள் இலக்கியத் தளத்தின் மக்களின் வாழ்வியல் படைப்பாகும்.

14 x 21,5 செ.மீ அளவில் 128 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை :  110 INR

தொடர்புகளுக்கு மின்னஞ்சல் : nandavanam10@gmail.com
Solachysolachy@gmail.com
 நூல்கள் அறிமுகம்

5 comments:

 1. Replies
  1. மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அய்யா

   Delete
  2. மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அய்யா

   Delete
 2. Replies
  1. மிக்க மகிழ்ச்சி நன்றிங்க அய்யா

   Delete