வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஏப்ரல் மாத இனிய நந்தவனம் மாத இதழில் எனது கட்டுரை ....


நெடுவாசல் புரட்சி ... 

இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட புரட்சி போராட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தைச் சொல்வார்கள். அதனைத் தொடர்ந்து எண்ணற்ற போராட்டங்கள் வெடித்து கிளம்பிய போதும் அரசியல் சாயம், சாதி மத இனம் என ஏதோவொரு சாயம் பூசப்பட்டு அவை முடக்கப்பட்டது. இருந்தபோதும் அவ்வப்போது தன்னெழுச்சியாக ஆங்காங்கே போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 

இந்தப் போராட்டங்கள் நமக்கு எதைக் காட்டுகின்றன. மக்கள், போராட்டத்தின் பயனை அறிந்திருப்பதையும், இனி போராடினால்தான் மண்ணில் வாழ முடியும் என்பதையுமே முன்னிருத்துகிறது. போராட்டத்தால் மட்டுமே வெல்ல முடியும். போராட்டங்களில் ஆயுதம் ஏந்துதல், அமைதியை தாங்குதல் என்று இரண்டு வகையான உண்டு. வடமாநிலங்களில் பல இடங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப ஆயுதம் ஏந்திய போராட்டங்களே பல நேரம் அரங்கேறுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை அமைதியை தாங்குதல் என்ற முறையில் அறப்போராட்டம்தான் நடந்தேறுகிறது. இந்த அறப்போராட்டங்களை காவல்துறையை வைத்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது அரசின் கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. 

ஈழத்தில் நம் தொப்புள் கொடி உறவுகள் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்ட போது தமிழகத்தின் போராட்டங்கள் அடக்குமுறைகளால் முடக்கப்பட்டன. அந்த அடக்குமுறைகளின் கொடுமை தாங்க முடியாமல் தோழர்கள் முத்துக்குமார், செங்கொடி போன்றவர்களை நாம் இழந்ததும் பெரும் கொடுமை ....

இதேபோல் தமிழக கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் அழிக்கப்பட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு கைக்கூலிகளாக செயல்பட மத்திய மாநில அரசுகளின் நரித்தந்திரமான செயல்தான் ஜல்லிக்கட்டு தடை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக போராட்டங்கள் வெடித்த போதும், மெரினா புரட்சி என்று மார்தட்டியபோதும் உலகமே உற்று நோக்கிக்கொண்டிருந்த நேரத்தில் அரசு, அடக்குமுறையை ஏவி போராட்டத்தை கொச்சைப்படுத்தியது. இந்த செயல்கள் யாவும் தமிழரையும் தமிழ் மண்ணையும் நடுவணரசு அழிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறதோ....????? அதற்கு துணையாக மாநில அரசு துணை போகிறதோ என்ற எண்ணமே தோன்றுகிறது. 

வறண்டு பாலைவனமாக கிடந்த புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியை நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்குள் விவசாய பெருமக்கள் தங்களது கடின உழைப்பால் பசுமை நிறைந்த பகுதியாக மாற்றினார்கள். முக்கிய ஆறுகளில் ஒன்றான காவேரி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எட்டாக்கனிதான். குளத்து பாசனம் இல்லாமல் வானத்தை மட்டுமே நம்பி வானம் பார்த்த பூமியாகத்தான் இன்றும் இப்பகுதி உள்ளது. ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நந்தவனமாய் மாற்றி இருக்கிறார்கள். அப்படி உருவாக்கிய பகுதியைத்தான் ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் பாலைவனமாக்க துடிக்கிறது நடுவண் அரசு ......

2006இல் இப்பகுதியில் ஹைட்ரோகார்பன் இருக்கிறது என்பதை செயற்கைகோள் மூலம் கண்டறிந்த நடுவண் அரசு, நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு நில உரிமையாளர்களிடம் கட்டாயப்படுத்தி மிரட்டி நிலத்தை ஒப்பந்தம் செய்து குறிப்பிட்ட பெரும் தொகையையும் வழங்கி இருக்கிறது. ஒப்பந்தப்படி மண்ணெண்ணெய்தானே எடுக்கப்போகிறார்கள் ; எடுத்ததும் சில ஆண்டுகளில் மீண்டும் நிலத்தை தம்மிடம் ஒப்படைத்து விடுவார்கள் என்றும் நம்பினர்.

விளைவு வேறு விதமாய் அமைந்தது.2007இல் இராட்சத குழாய்கள் மூலம் ஆழ்துளை கிணற்றை ஆறாயிரம் அடிக்கு மேல் அமைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு என்ன செய்கிறார்கள் என்பதை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக சுற்றுச்சுவர் மற்றும் முள்வேலி அமைக்கப்பட்டு ஒரு இராணுவ ஆட்சியே அரங்கேறியிருக்கிறது. ஒருசில ஆண்டுகள் ஆய்வினை மேற்கொண்ட அந்நிறுவனம் ஆறாயிரம் அடிக்கு கீழ் எடுத்த கச்சா எண்ணெய் கழிவுகளை அருகிலேயே மிகப்பெரிய சிமெண்ட் தொட்டி அமைத்து அதில் நிரப்பிவிட்டு சென்றுவிட்டார்கள். பத்தாண்டுகளைக் கடந்தும் அந்தக் கழிவுகள் அப்படியே கிடக்கின்றன.

ஆறாயிரம் அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தால் அருகிலிருக்கும் விவசாய ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை தலைதூக்க ஆரம்பித்து இருக்கிறது. விவசாய தொழில் சிறப்பாக நடைபெற்ற அப்பகுதி , கச்சா எண்ணெய் ஆய்வு மேற்கொண்ட காலங்களிலிருந்து விவசாயத்தில் பின்னடைவையே சந்தித்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் மழையின் அளவும் குறைந்து போனதால் விவசாயத்தின் பின்னடைவுக்கு காரணம் வானம் பொய்த்து போனதுதான் என்று நம்பியுள்ளனர். பிறகு அந்தப்பகுதியில் பொறியியல் படிப்பு படித்த இளைஞர்கள் வெளிமாநிலங்களில் வேலைக்கு சென்ற போது அங்கு ஹைட்ரோகார்பன் பற்றி அறிந்து வந்ததால்தான் உண்மையான காரணத்தை இப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். 

(1)





தொடர்ச்சி.........


பக்கத்துவீட்டுக்காரர் நூற்றைம்பது அடியில் ஆழ்துளை கிணறு அமைத்தால் அடுத்த வீட்டுக்காரர் ஐம்பது அடி சேர்த்து ஆழ்துளை கிணறு அமைக்கும்போது ஆறாயிரம் அடியில் இராட்சத குழாய்கள் பொருத்தி ஆழ்துளை கிணறு அமைத்தால் அருகில் எத்தனை கிலோமீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் இல்லாமல் போகும் என்பதை எல்லோராலும் உணர முடியும்.

ஒரு கிணறு அமைத்தாலே நிலத்தடி நீர்மட்டம் இல்லாமல் போகும்போது நல்லாண்டார் கொல்லையை சுற்றி மொத்தம் ஐந்து இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஆழ்துளை கிணறு அமைக்க நடுவணரசு முடிவு செய்தபோதுதான் மக்கள் விழிக்க ஆரம்பித்தனர். அதன் வெளிப்பாடுதான் தன்னெழுச்சியாக அமைந்த தர்ணா போராட்டம். 

நல்லாண்டார் கொல்லை, வானக்கம்காடு, கள்ளிக்கொல்லை, கோட்டைக்காடு மற்றும் நெடுவாசல் இந்த ஐந்து இடங்களில்தான் நடுவணரசு ஹைட்ரோகார்பன் எடுக்க இருக்கிறது. அதையும் கடந்து அருகிலுள்ள வடகாட்டிலும் ஆழ்துளை கிணறு அமைத்துவிடலாம் என்ற நோக்கில் நடுவணரசு பகல் கனவு காண்கிறது. கூடங்குளம் அணுஉலை போராட்டம் போல் எங்கள் போராட்டம் இருந்துவிடாது வென்றே தீருவோம் என்று போராட்ட கள தோழர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு துணையாக அனைத்து ஊடகங்களும் மற்றவர்களும் இருக்க வேண்டும் என்பது அவர்களது அன்பான வேண்டுகோள்.

ஏற்கனவே பருவ மழையும் குறைந்து போனதால் ஆலங்குடி, வடகாடு, நெடுவாசல் சுற்றுவட்டாரத்தில் செழித்து வளர்ந்து வந்த முந்திரி காடுகள் தானாய் அழியத் தொடங்கி இருக்கின்றன. அழிந்து கொண்டிருக்கும் முந்திரிக்காடுகளை அரசு காப்பாற்றாமல் அதில் ஆர்எஸ்பதி என்கிற தைலமரக் காடுகளை உருவாக்கி வருகிறது. இவ்வகை மரங்கள் பூமியின் மறுபக்கத்திற்கே சென்று நிலத்தடி நீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. தைலமரக்காடுகளையும் உடனடியாக அழித்து நிலத்தடிநீர் சேமிப்பை அரசு உறுதி செய்திட வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கைகளில் ஒன்று. 

நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று சிலர் அறிக்கை விடுவதும் பேட்டி கொடுப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. நாம்தாம் விவசாயிகளை சார்ந்துள்ளோம் ; விவசாயிகளை காப்பாற்றுவதன் மூலம் நாம் உயிர் பிழைக்கிறோம் என்பதே உண்மை. விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் அரிசியை அதில் டவுன்லோடு செய்ய முடியாது என்பது உண்மைதானே. அப்படியானால் மண்ணின் உயிர்நாடி விவசாயத்தை நம்பியே இருக்கிறது.  வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் தொழில் கொடிகட்டிப் பறந்தாலும் சொகுசு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தாலும் உயிர்வாழ உணவு என்று வருகிறபோது அயல்நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைதான் உருவாகிறது. அந்த நிலையை நடுவணரசு தமிழகத்தில் உண்டாக்க பார்க்கிறது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் நடுவணரசு கொண்டு வராது என்று நடுவணரசு தூதுவர்கள் அவ்வப்போது சொல்லிவந்தாலும் அதை நாடாளுமன்றத்தில் அறிவிக்கவோ அல்லது பிரதம மந்திரி வாய் திறக்கவோ மறுக்கும் நோக்கம் தெளிவாக தெரிகிறது. பேச்சுவார்த்தை நடத்துவதன் உள்நோக்கமே திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும் என்பதுதான். அந்த திட்டத்தை முறியடிக்க வேண்டியது நெடுவாசல் பகுதி மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் அத்திட்டத்திற்கு எதிராய் கிளர்ந்தெழ வேண்டும். அப்போதுதான் முறியடிக்க முடியும். மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடுவணரசை பணிய வைக்க வேண்டும். 

போராட்ட களத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கர்ப்பிணிப் பெண்கள் முதல் வயது முதிர்ந்த பாட்டிகள் வரை உணர்வுபூர்வமாக பங்கெடுத்து வருகின்றனர். "வாடிவாசலை திறந்தோம் ; நெடுவாசலை மறப்போமா ; நெடுவாசலை மீட்கும்வரை வீடுவாசல் செல்ல மாட்டோம் " என்கிற முழக்கங்கள் விண்ணை அதிரச் செய்கிறது. "எடும் எடும் என எடுத்ததோர் இகல் ஒலி கடல் ஒலி இகைக்கவே - என்று போர்க்கள காட்சியை செயங்கொண்டார் கலிங்கத்து பரணியில் சொல்லி இருப்பார். அந்தப் போர்க்கள காட்சிதான் தற்போது நடைபெற்று வருகிறது. 

விளைநிலங்களை பாலைவனமாக்கிவிட்டு வெறும் மண்ணையும் கல்லையுமா உண்ண முடியும். இல்லை விஞ்ஞானத்தைதான் விழுங்க முடியுமா .....? இந்தியா மக்களாட்சி நாடு என்பது உண்மையானால் மக்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்க்க வேண்டும். இல்லையென்றால் இந்தியா ஓர் சர்வாதிகார நாடு என்று அறிவிக்க வேண்டும். மக்கள் விரோத போக்கை மத்திய அரசு தொடர்ந்து செய்துகொண்டே இருக்குமானால் சோவியத்யூனியன் துண்டாடப்பட்டது போல் இந்திய தேசம் துண்டாடப்படும் நிலை உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...... 


- சோலச்சி புதுக்கோட்டை 
ஏப்ரல் 2017


1 கருத்து: