ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

இலுப்பூர். அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் இலக்கிய கூட்டம்  (11.8.18) நடைபெற்றது.
  புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் கே.ஆர்.தர்மராஜன் தலைமை வகித்தார். கோகிலா ஆங்கிலப்பள்ளியின் தாளாளர் மீரான்மொய்தீன் அவர்கள் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் கவிமதி சோலச்சி அவர்கள்  வரவேற்புரை வழங்கி நிகழ்வினை  தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள் செம்பை மணவாளன், கவிஞர் மலையப்பன்,கவிஞர்  ராகவ் கிருஷ்ணா, விதைக்கலாம் பாலாஜி, மாங்குடி சிவகுமார், நடன கலைஞர் மாங்குடி பிரபு, ராபர்ட், சேக் அப்துல்லா போன்ற ஆசிரியர்களும், மாணவி லெட்சுமிப்ரியா, நதிகள் இணைப்பு போராளி புதூர் அடைக்கலம், பாரதி ஏகலைவன் போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முதலாவதாக முந்நாள் முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு மேல்நிலைப் பள்ளிகளில் இலக்கிய அரங்குகளை நடத்தி மாணவர்களிடையே இலக்கியத்தைக் கொண்டு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராசிபுரம் கவிஞர் நாணற்காடன் பேசும்போது '' இந்திய அரசியல் மற்றும் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை புறந்தள்ளிவிட்டு நகர்த்துதல் என்பது இயலாத ஒன்றாகும். ஏனெனில் அவர் இல்லாமல் எதுவும் கிடையாது. மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு பெருந்தலைவர் காமராசரின் எண்ணங்களை நிறைவேற்றியவர்.  ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியவர். அரசியல் மட்டுமல்ல இலக்கியத்திலும் அவர் சாதித்த உயரங்களை இனி யாரும் தொட்டுவிட முடியாத அளவிற்கு சாதித்து காட்டியவர். அவரது திரையுலக வசங்கள் காலத்திற்கும் அழியாதது. தனது பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் பெரியாரின் சிந்தனைகளை கொண்டு வந்தவர். தனது கருத்துகளை எடுத்துச் சொல்வதில் தயங்காதவர். மேலும் இன்றைய படைப்பாளர்கள் எளிய மக்களின் வாழ்க்கையை எடுத்துச் சொல்லும் விதமாக அவர்களுக்கான படைப்புகளை எழுத முன்வர வேண்டும்.  தன்னுடைய கருத்துகளில் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. தோழர் ஜீவா அவர்கள் கலை இலக்கியத்திற்காகவும் மக்களின் நலனுக்காகவும் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அடித்தட்டு மக்களின் நலனுக்கு எது தேவையோ அதை எழுதுங்கள். கலை இலக்கியத்தை கிராமங்கள்தோறும் கொண்டு செல்லுங்கள்.  கிராமங்களில்தான் இன்னும் எழுதப்படாத இலக்கியங்கள் ஏராளம் குவிந்து கிடக்கின்றன.  அவற்றையெல்லாம் இந்த மக்கள் சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற படைப்பாளிகளுக்கு இருக்கிறது '' என்று பேசினார். நிகழ்வின் நிறைவில் மாங்குடி கவிஞர் சிவகுமார் நன்றி கூறினார்.

1 கருத்து: