திங்கள், 1 ஜூன், 2020

கொரணா ஊரடங்கு - சோலச்சி

கொரணா ஊரடங்கில் ....... சோலச்சி






ஒவ்வொரு பேரிடரும் ஏதாவது ஒரு உண்மையை உலகுக்கு உணர்த்தி விட்டுத்தான் போகின்றது.  விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் உயர்ந்து நிற்கிறது என மார்தட்டிக்கொள்ளும் நாம் வைரஸ் தொற்றுகளுக்கு மருந்த கண்டுபிடிக்க முடியாமல் அல்லாடுகிறோம். 




அன்னவாசல் காவல்துறையுடன் இணைந்து சமூக இடைவெளி பாதுகாப்பு பணியில் வயலோகம் வங்கியில்


https://youtu.be/I6bgVvKJMrE


அன்னவாசல் காவல்துறையுடன் இணைந்து சமூக இடைவெளி பாதுகாப்பு பணி பெருமாநாடு மற்றும் புல்வயல்                                                ரேசன் கடைகளில்

                                               https://youtu.be/OqEI_0he6qA
           ஒவ்வொரு பேரிடரும் மனித நேயத்தை மண்ணில் வேரூன்றி வளரச் செய்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.  சுனாமி உலகை ஆட்டிப்படைத்தபோது எங்கெல்லாம் மனித இனம் இருக்கின்றதோ அங்கிருந்தெல்லாம் மனித நேயம் குவியத் தொடங்கியது.  அதேபோல் கஜா புயலால் மனித வாழ்வு சுருண்டபோது தன்னெழுச்சியாக பலர் திரண்டு துயரினை துடைக்க தங்களால் இயன்ற உதவிகளை வாரி வழங்கினர். 



புதுகை செல்வா அவர்களுடன் புதுக்கோட்டை அரிசி ஆலையில்





   அரசாங்கம் செய்ய வேண்டும் என காலத்தை தள்ளிப் போடாமல் நினைத்த மாத்திரத்தில் கரம் கோர்த்து உதவிட எண்ணிலடங்கா இதயங்கள் இம்மண்ணில் இன்னும் இருக்கின்றன என்பதை இந்த கரோணா ஊரடங்கு காலத்திலும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றார்கள். கரோணா ஊரடங்கால் வெளியில் வந்தால் நோய்தொற்று ஏற்பட்டு இறக்க நேரிடும் என்று உணர்ந்த போதும் துணிச்சலோடு எதிர்கொண்டு களம் காண புதுக்கோட்டை தோழர்கள் தயாராகினர்.




https://youtu.be/Ey3BXb_cb4o

            வனத்துறை அதிகாரி பி.தாமோதரன் அவர்களுடன்


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் சித்தூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரில் உள்ள கலையரங்கத்தில்



     வெளியில் வரமுடியாமல் வேலை இழந்து பசியால் வாடும் நிலை உணர்ந்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யவும் நல்ல உள்ளம் படைத்தவர்களிடம் உதவிகளைப் பெற்று இல்லாதவர்களுக்கு வழங்கவும் புதுக்கோட்டை தோழர்கள் தம்பி மலையப்பன் ஒருங்கிணைப்பில் வாட்ச்அப் குழு ஒன்றை உருவாக்கி பணிகளைத் தொடங்கினர். அதே நேரத்தில் நாங்கள் (சோலச்சி) ,தாமோதரன், செங்குட்டுவன், நெய்வேலி முருகேசன் நால்வரும் வேலை இழந்து வாடுவோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன் வந்தோம். எங்களுக்கு துணையாக நின்றவர்கள் புதுக்கோட்டை தோழர்களான கவிஞர் மலையப்பன், கவிஞர் அப்துல் ஜலீல்,  புதுகை செல்வா, ஐங்கரன் அருண்மொழி, கவிஞர் கீதா, கவிஞர் கஸ்தூரிரெங்கன், மதியநல்லூர் தயாநிதி என தோழர்களின் பட்டியல் நீளும். 









    சாதி மதங்களைக் கடந்து எங்கெல்லாம் மக்கள் துன்பப்படுகின்றனரோ அங்கெல்லாம் ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டினோம். மனிதனின் பிறவிப்பயன் இதுதானே. அரிசி, மளிகை பொருட்கள்,  காய்கறிகளை வழங்கி நாங்களும் உங்களோடு இருக்கின்றோம் என அவர்களின் துயரில் பங்கு பெற்றோம். 



   எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் நால்வரும் பயணித்த ஊர்களான  அன்னவாசல், அகரப்பட்டி, குன்னக்குடிப்பட்டி, திருவள்ளுவர்நகர், நெறிகிப்பட்டி, சுந்தரப்பட்டி, சித்தூர், தெத்தினாம்பட்டி, வேலங்குடிப்பட்டி, மாங்குடி, ஊரப்பட்டி, பிராம்பட்டி, விளத்துப்பட்டி, கீழக்குறிச்சி, நார்த்தாமலை, மாணிக்கம்பட்டி, வாகைப்பட்டி, நல்லூர், அரசமலை, கீரங்குடி, குலமங்களம், சாத்தனூர், நெய்வேலி, வாழைக்குறிச்சி, இடையாத்தூர், வடமலாப்பூர், ஐடிஐ காலனி,  மேலத்தானியம், உசிலம்பட்டி, காரச்சூராம்பட்டி, தாழம்பட்டி, பித்தகுடி, நடுவிப்பட்டி,  பொன்னமராவதி,  தச்சம்பட்டி, கருப்புக்குடிப்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, பொட்டப்பட்டி, வலசைப்பட்டி, அம்மாபட்டி, கொன்னத்தான்பட்டி, மருத்துவக்குடிப்பட்டி, வேலங்குடி, துவார், பூலாங்குறிச்சி, ராங்கியம், சுந்தரசோழபுரம் , ஆலவயல், பிடாரம்பட்டி என ஊர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். 



   பாதிக்கப்பட்ட உறவுகளைத் தேடி பயணிக்கின்ற தருணத்தில் நிறைய நிகழ்வுகளைச் சந்தித்தோம். வலசைப்பட்டிக்கு சென்றிருந்தபோது நாங்கள் எதிர்பார்த்திராத வகையில் எங்களுக்கு மதிய உணவு அளித்ததோடு விட்டுவிடாமல் என்னையும் உங்களோடு உதவ இணைத்துக் கொள்ளுங்கள் என்று உணர்வு பூர்வமாக உரிமையோடு இணைத்துக்கொண்டார் வலசைப்பட்டி துரை அவர்கள். தனது தோட்டத்தில் விளைந்த ஐம்பது கிலோவுக்கு குறையாமல் கத்தரிக்காயையும் இரண்டு மூடை அரிசியையும் வழங்கி மெய்சிலிர்க்க வைத்துவிட்டார் வலசைப்பட்டி துரை அவர்கள்.  



  மேலப்பனையூர் கலைராஜன், மேலப்பனையூர் காமராஜ் ஆசிரியர், பூவலாக்குடி முனைவர் கருப்பையா தலைமையாசிரியர் , புவனேஸ்வரன் ஆசிரியர், கட்டுக்குடிப்பட்டி சந்திரசேகர், உசிலம்பட்டி இராமநாதன் ஆசிரியர், ராராபுரம் செல்வம், ராராபுரம் அய்யாச்சாமி, குலமங்களம் அம்பேத்கர் இளைஞர் மன்றத்தின் உறவுகள், ஆத்தங்காடு இரா.வெள்ளைச்சாமி ஆசிரியர், கீரனூர் சுந்தரி ஆசிரியர், மரிங்கிப்பட்டி அருண்குமார், காரைக்குடி ஓய்வுபெற்ற ஆசிரியர் சோலச்சிஇராமநாதன், நெடுஞ்சாலைத்துறை நல்லூர் வீரன், குலமங்கலம் சண்முகம்,  கீழக்குறிச்சி சி.பாலசுப்பிரமணியம், குலமங்கலம் ராமசாமி, பொன்னமராவதி சிவசுப்பிரமணியன் என உதவிக்கரம் நீட்டினார்கள். 






நிவாரண பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும்போது எனது இல்லத்திற்கு வருகை தந்து நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை அண்ணன் ஜெயபிரகாஷ் அவர்கள் வழங்கி ஆலோசனை வழங்கினார்.


 வாய்கிழியப் பேசுகிறவர்கள் களத்தில் நின்று மக்கள் பணியாற்றிட வரமாட்டார்கள்.  நாமும் நம்மோடு இணைந்திருக்கும் உறவுகளும் அப்படியல்ல.  மக்கள் பணியாற்றவே பிறந்துள்ளோம். ஒவ்வொரு நாளும் நீண்ட தூரம் பயணிக்க எம்மோடு துணை நின்றவர் அன்புத்தம்பி அரசமலை பி.தாமோதரன்.  தனது மகிழுந்தை கொரணா பணிக்காகவே முழுமையாக அர்ப்பணித்தார். 


ஒரு ஊரில் நல உதவிகள் செய்துகொண்டு இருக்கும்போது ஒருவர் எங்களைப்பார்த்துக் கேட்டார் ''ஊருக்கு வெளியில எதுக்கு திருட்டுத்தனமா கொடுக்குறீங்க'' என்று. அவரால் இந்த மண்ணுக்கும் மனித இனத்துக்கும் எள்ளளவும் நன்மை பயக்குமா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும். இங்கு இல்லாதவர்களை விட இருப்பவர்கள்தான் உதவிகள் என்று வந்து விட்டால் முதலில் கை ஏந்துகிறார்கள்.  அவர்களிடமிருந்து தப்பிக்கவே சில நேரங்களில் வறுமையுற்றவர்களை வரவழைத்து தனியாக வழங்கினோம்.


               தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 
   அன்னவாசல் கிளை  பொறுப்பாளர்களுடன் இலுப்பூரில்

ஒரு தாய் சொன்னார் " சாமி ஒங்களோட சேர்ந்த அத்தன பேரும் நல்லா இருக்கனும் '' என்று சொல்லி கண்ணீர் வடித்தார். இன்னொருவர் சொன்னார் " இன்னக்கி எங்க கொலசாமிதாய்யா ஒங்கள இங்க கொண்டு வந்து விட்ருக்கு '' என்றார்.  இந்த வலி மிகுந்த வரிகள் என் நெஞ்சை துளைத்துக்கொண்டே இருக்கின்றன.  எங்களுடைய நோக்கம் நல்லவர்கள் ஒன்று கூடினால் நாங்களும் ஓடிவந்து ஒட்டிக் கொள்வோம் உங்களோடு பயணிக்க. நாங்கள் முன்னெடுத்துப் பயணிக்கின்றோம் இனியும் காலம்தாழ்த்தாது எங்களோடு எப்போதும் கரம் கோர்ப்பீர்கள் என்று நம்புகின்றோம். 



   புதுக்கோட்டை தோழர்களான பாலாஜி ஆசிரியர், அப்துல் ஜலீல் ஆசிரியர், புதுகை செல்வா, ஐங்கரன் அருண்மொழி, தம்பி மலையப்பன் இவர்கள் பல குழுக்களாக பயணித்து ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் மனநிலை பாதித்தவர்களுக்கும் வழிதவறியவர்களுக்கும் உதவிகள் வழங்கியதன் பட்டியல் நீளும். 



  இந்த கொரணா ஊரடங்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. சேமிக்கவும் மற்றவர்களுக்கு கொடுத்து உதவும் பண்பினையும் வழங்கி இருக்கிறது. ''மதுவுக்கு எதிராகவும்  புகைப்பழக்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுப்பாயானால் நீயே என் தோழன்" என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

     எங்களிடம் பொருளாகவும் பணமாகவும் கொடுத்து மற்றவர்களுக்கு உதவிட முன் வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனசார நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றோம்.



 என் ப்ரிய்திற்குரிய உறவுகளே மக்கள் பணியாற்றிட தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்போம். நல்லவர்களாலும் நல்ல உள்ளங்களாலும் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகின்றது.

பின்குறிப்பு : கொரணா உதவிக்கரம் என்றொரு வாட்ச்அப் குழுவை ஆரம்பித்தேன். அதில் ஆசிரியர்களையும் மற்ற நண்பர்களையும் இணைத்தேன். எதிர்பாராதவிதமாக எனது குழுவிலிருந்து விலகிவிட்டது. இன்னொரு ஆசிரியர் தானாகவே அட்மின் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ''நானே கொரணாவுல ரொம்ப சிரமப்படுறேன். குழுவுல சேர்க்கிறேன். உதவி செய்றேனு தேவை இல்லாமல் எதுக்கு என்னை குழுவில் சேர்த்தாய்''  என்று அலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக பேசினார். அந்த ஆசிரியர் வசதியாகத்தான் இருக்கிறார். என்ன செய்வது புரிதல் இல்லாதவர்களையும் சிரித்துக்கொண்டே கடந்து 
போக வேண்டியிருக்கிறது. 

3 கருத்துகள்: