வியாழன், 6 அக்டோபர், 2022

எங்கள் தமிழாசான் அவர்களுக்கு பிறந்த நாள் விழா

                   இனிய பிறந்தநாள் 

                  வாழ்த்துகள் அய்யா


நான் பார்த்து வியந்த தமிழாசிரியர்களில் எங்கள் கவிஞர் , பேச்சாளர் அய்யா எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றியவர். பள்ளியில் நடைபெறும் இலக்கிய விழாக்களில் இவர்தான் கதாநாயகன்.  ஒவ்வொரு நபரையும் பேசுவதற்கு அழைக்கும்போதும் பேசி முடித்த பிறகும் அவர்களின் உரையின் தன்மையை கவிதையில் சொல்லி அலங்கரித்து ஆச்சரியமூட்டுபவர். 



     நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழா இலக்கிய நிகழ்விற்கு பேச்சாளர் குழந்தைக்கவிஞர் சுபாஸ் சந்திர போஸ் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். யாருக்குமே தெரியாமல் மேடையின் ஓரமாய் நாற்காலியில் அமர்ந்து கவிதை நடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த எங்கள் தமிழாசான் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கவிதை நடையில் மயங்கிய குழந்தைக்கவிஞர் அவர்கள் , எங்கள் தமிழாசான் அவர்களை வெகுவாகப் பாராட்டியதோடு நில்லாமல் ''நீங்கள் முன்னுக்கு வர வேண்டியவர்கள் '' என்று கூறி முன்வரிசை அருகே அமர வைத்தார்கள். 


     விரைவில் உங்களின் கவிதை நூலினை எதிர்பார்க்கிறேன் என்று 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் கூறிச் சென்றார்.  நாங்களும் அந்த நூலினை எதிர்பார்த்து இந்நாள்வரை காத்திருக்கின்றோம். தற்போது தமிழர்களைக் கொண்டாடும் தகைசால் பூமியாம் சிங்கப்பூரில் எங்கள் தமிழாசான் வசித்து வருகிறார்கள்.


  இனிய பிறந்த நாளில் எங்கள் தமிழாசான் அவர்கள் இன்னும் இனியன எல்லாம் பெற்று இதமாய் வாழ வாழ்த்தி மகிழ்கின்றேன்.

1 கருத்து: