ஞாயிறு, 26 மார்ச், 2023

மயிலாடுதுறை க. ராஜசேகரனின் தாய்ப்பால் உறவு - சோலச்சி

 மயிலாடுதுறை க. ராஜசேகரன் அவர்களின் தாய்ப்பால் உறவு - சோலச்சி 


   கதை எழுதுவதும் கதை விடுவதும் காலம் காலமாய் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாகும். கதை எழுதுவது காலத்திற்கும் நிலைத்து நிற்கும். கதை விடுவதும் காலத்திற்கும் நிலைத்திருக்கும். கதை எழுதுவது நடந்த நிகழ்வினை ஒருவேளை இப்படி நடந்திருக்கலாம் என்கிற நிகழ்வினை கற்பனைக்கு எட்டக்கூடிய வகையில் எழுதக் கூடியதாகும். கதை விடுவது என்பது கற்பனைக்கும் எட்டாத ஒரு கதையை உருவாக்குவது. எடுத்துக்காட்டாக,  கதாநாயகி நெருப்பில் குதித்து உயிரோடு திரும்பினால் என்பதும் பூமியை பாய் போல் சுருட்டினான் என்பதும் கதை விடுவது ஆகும்.



  வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய வகையில் வாழ்வியல் முறைகளை தொகுத்து ஒரு பாடமாக தாய்ப்பால் உறவு மூலம் தந்திருக்கிறார் எழுத்தாளர் மயிலாடுதுறை க.ராஜசேகரன் அவர்கள். மொத்தம் 15 கதைகள். எந்த கதையையும் புறந்தள்ளிவிட்டு நகர்ந்து செல்ல முடியாத வகையில் கதையால் வாசிப்பாளனை இறுக கட்டி போடுகிறார் எழுத்தாளர். ஒவ்வொரு கதையையும் வாசிக்கின்ற பொழுது காட்சிகள் கண் முன்னே ஓடுகிறது. ஒரு கதையை வாசிக்கின்ற பொழுது காட்சிகள் வாசிப்பாளனை பார்க்கும் வண்ணம் தூண்டுகிறது என்றால் அந்த கதை வெற்றி பெறுகிறது.  எதார்த்தமான நடை வர்ணனைகள் அதிகம் இல்லாத கதாபாத்திரங்கள் என தாய்ப்பால் உறவுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.


  முதல் கதை தாய்ப்பால் உறவு. அஞ்சலையின் கதாபாத்திரம் இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா என்று வியக்க வைக்கிறது. நான் உண்மை அதுதான். கிராமங்களில் அஞ்சலை போன்ற தாய்மார்கள் நிறைய பேர் வாழ்ந்திருக்கிறார்கள் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. டாக்டருக்கு படிக்கப் போகும் தன் பேரன் சங்கர்,  இனிமேல் பெரியப்பூ வீட்டுக்கு மாட்டுச்சாணி அல்ல போகாதே என தடுக்கிறான். ஆனால் அதற்கு ஒரு காரணத்தையே வைத்திருக்கிறாள் அஞ்சலை. தான் ஆடாவிட்டாலும் தன் சதுரம் ஆடும் என்பது கிராமத்து பழமொழி. இந்தப் பழமொழிக்கு ஏற்றார் போல் பெரியப்பூ மற்றும் அஞ்சலையில் உறவு இருக்கிறது.

  பெரியப்பூ பிறந்திருந்த பொழுது அவனது அம்மா மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்து வந்தாள். அந்த நேரத்தில் தனது தாய்ப்பாலை கொடுத்து பெரியப்பூவை வளர்த்தவள்தான் அஞ்சலை. அஞ்சலைதான் தனது தாய்ப்பாலை கொடுத்து வளர்த்தாள் என்கிற செய்தி பெரியப்பூக்கு தெரிந்தோ தெரியாமலோ அஞ்சலை மீது தனி பாசம் வைத்திருந்தான் பெரியப்பூ. அதனால்தான் அஞ்சலை தனது தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் விழுந்த போது மருத்துவமனை வரை தூக்கிச் சென்று காப்பாற்றினான் பெரியப்பூ. ஒருவேளை அந்த தாய்ப்பால்தான் இவ்வளவு தூரம் உறவாக கொண்டு வந்து விட்டிருக்குமோ என்று நமக்கு எண்ணத் தோன்றுகிறது. இன்றைய நவீன காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் பெண்களும் உண்டு. தாய் பால் கொடுக்க நேரமில்லாமல் தவிக்கும் பெண்களும் உண்டு. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும் உறவுகளின் முக்கியத்துவத்தையும் சொல்லியிருக்கும் விதம் உணர்வுகளின் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்தாளருக்கு முதல் கதைக்கே மிகப்பெரிய பாராட்டை தெரிவித்து மகிழலாம். பாராட்டுகள் வாழ்த்துகள். 


   வெவசாயி  என்கிற கதையை வாசிக்கின்ற பொழுது புதுக்கோட்டையில் வாழ்ந்து வரும் மூத்த எழுத்தாளர் செம்பை மணவாளன் அவர்களுடைய தவம் என்கிற சிறுகதைதான் நினைவுக்கு வந்து சென்றது. வெவசாயி என்கிற கதை கொரோனா காலத்தின் நினைவுகளை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது. கொரோனா காலத்தில் தன் மகள் பூப்பெய்து விடுகிறாள். தன் தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காயை கொண்டு சென்று விற்றால்தான் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வர முடியும் என்கிற சூழ்நிலை கதிரேசனுக்கு உருவாகிறது. 

   உரம் போடாத நல்ல கத்திரிக்காயை உற்பத்தி செய்திருக்கும் கதிரேசன் வழக்கம்போல் கத்தரிக்காயை விற்கும் சாரங்கபாணியிடம் கொண்டு செல்கிறான். கொரோனா காலம் என்பதால் பல்வேறு காரணங்களை சொல்லி தட்டிக் கழிக்கிறான் சாரங்கபாணி. வேறு கடைகளில் கொண்டு போய் விற்றாலும் அடிமாட்டு விலைக்கு கேட்கிறார்கள். அதுவும் இரண்டு நாள் கழித்துதான் பணம் தருவதாகவும் சொல்லுகிறார்கள். வேறு வழியில்லாமல் திரும்பும் கதிரேசனுக்கு ஒரு பொறி தட்டுகிறது. குழாய் அடியில் கூடியிருந்த பெண்களிடம் கத்திரிக்காயை பற்றி சொல்லுகின்றார். அவர்கள் ஒரு விலையைச் சொல்ல கதிரேசன் ஒரு விலையை சொல்லுகிறார். ஒரு கட்டத்தில் பெண்களுக்கு ஏற்ற விலையை சொன்னதும் எல்லோரும் கத்திரிக்காயை வாங்கி சென்று விடுகிறார்கள். சாரங்கபாணியிடம் கொடுத்திருந்தால் கூட இவ்வளவு பணம் கிடைத்திருக்காது. கூடுதலாகவே பணம் கிடைத்து மகிழ்ச்சியாக செல்கின்றார் கதிரேசன். விவசாயிகளின் துயரமும் முதலாளிகளின் ஆதிக்கத்தையும் மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார் எழுத்தாளர். கொரோனா காலத்தில் மக்கள் உணவில்லாமல் தவித்ததையும் விவசாயிகள் தான் உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாமல் துயரப்பட்டதையும் கதைக் கருவாக வைத்து மிகச் சிறப்பாக எழுதி இருக்கும் எழுத்தாளருக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


  எல்லாமே இலவசம் என்கிற கதை புதுவிதமான தளத்தை உருவாக்கி இருக்கிறது. இலவசம் என்று சொன்னதும் அரசியல்வாதிகள் தரும் வாக்குறுதிகள் என்றோ அல்லது பெரும் முதலாளிகள் விரிக்கும் வலை என்றோ நினைத்துதான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் வாழ்க்கையை மிக உருக்கமாக படம் பிடித்து எல்லாமே இலவசம் என்கிற கதை மூலமாக புதுவிதமான கருவை படைத்திருக்கிறார் எழுத்தாளர். சுப்பிரமணியன் என்கிற கதாபாத்திரம் மூலம் உலகில் உள்ள ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு எந்த விதமான பிரதிப் பலனும் எதிர்பார்க்காமல் சேவை செய்ய வேண்டும் என்கிற உந்துதலை காட்சிப்படுத்திருக்கின்றார் எழுத்தாளர்.

  

  சியாமளா என்கிற கதை சமகாலத்தில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு கதையாகும். திருநங்கைகளை எள்ளி நகையாடிய நேரத்தில் அவர்களை கொண்டாட வேண்டும் என்கிற நோக்கில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் திருநங்கைகள் என பெயரிட்டு அரசுணையும் வெளியிட்டார்கள். தற்போது திருநங்கைகள் அனைத்து துறைகளிலும் சாதித்து இந்த சமூகத்திற்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கின்றார்கள் என்றால் வியப்பேதுமில்லை.  சியாமளா என்பவர் திருநங்கை என்கிற விஷயமே கதையின் முடிவில் தான் தெரிய வருகிறது. திருநங்கை சியாமளா தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் சேவை ஆற்றுவதை மிக நுட்பமாக காட்சிப்படுத்தி இருப்பார் எழுத்தாளர். இன்னும் திருநங்கைகள் குறித்த தவறான புரிதல் இந்த சமூகத்தில் புரையோடி கிடைக்கிறது. அவ்வாறான புரிதலுக்கு சியாமளா போன்றவர்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என நம்புகின்றேன்.


கணவன் மனைவிக்குள் உண்டாகும் பிரச்சனைகளை மனநல மருத்துவர் மூலமாக மகிழ்ச்சியின் திறவுகோல் என்கிற கதையில் கொண்டு வந்திருப்பார்கள் எழுத்தாளர். சொகுசு வாழ்க்கை பணம் இவற்றை தேடி அலையும் மனித வாழ்க்கையில் கணவன் மனைவிக்குள் ஒரு நெருக்கத்தை உருவாக்குவது இல்லறம் என்கிற தாம்பத்தியம் தான். தாம்பத்தியத்தை ஒரு பொருட்டாக கருதாமல் ஏனோ தானோ என்று வாழ்பவர்களால் தான் மகிழ்ச்சியின் திறப்புகளை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.  கணவன் மனைவிக்குள் ஒரு நெருக்கத்தை உருவாக்குவது அன்பு கலந்த தாம்பத்தியம் தான்.  கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் என்கிற நெருக்கம் இல்லாததால் மனம் முறிவு வரை சென்று விடுகிறது. மனம் உருவினை தடுத்து புதிய வாழ்க்கையை ஏற்படுத்தி தருகிறார் மனநல மருத்துவர். மகிழ்ச்சியின் திறவுகோல் என்கிற கதை தான் பல குடும்பங்களில் நடந்து வருகிறது.



   நூலில் இடம் பெற்றுள்ள நிறைய கதைகள் வார இதழ்களிலும் மாத இதழ்களிலும் மின்னிதழிலும் வெளிவந்துள்ளன. சில கதைகள் பரிசு பெற்ற கதைகளாகவும் இருக்கின்றன. கடைசி பெட்டி என்கிற சிறுகதையை வாசித்து விட்டு நான் கண்ணீர் சிந்தினேன். வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்துவிட்டு பிறகு சொந்த ஊருக்கு செல்கின்ற பொழுது படும் துயரங்களை கடைசி பெட்டி சிறுகதை விவரிக்கிறது. கடைசி பெட்டியில் வரும் அந்த சின்னஞ்சிறிய குழந்தை என் கண்களை விட்டு இன்னும் அகலவே இல்லை.

வாழ்க்கையை படம் பிடித்து 15 கதைகள் மூலமாக தமிழ் உலகிற்கு தாய்ப்பால் உறவு என்கிற சிறுகதை தொகுப்பினை வழங்கி இருக்கும் எழுத்தாளர் மயிலாடுதுறை க ராஜசேகரன் அவர்கள் மென்மேலும் உயரிய படைப்புகளை வழங்கி எழுது உலகின் உச்சம் தொட வாழ்த்துகிறேன்.

162 பக்கங்களை கொண்ட இந்நூலினை சந்தியா பதிப்பகம் வெளியீடு செய்திருக்கிறது.  சந்தியா பதிப்பகம் மூலமாக வெளியிடும் நூல்கள் மிகவும் நேர்த்தியாக வடிவமைப்பு செய்யப்பட்டு வெளிவருவது பாராட்டுக்குரியது. 

விலை ரூபாய் 160/-

எழுத்தாளர் மயிலாடுதுறை க ராஜசேகரன் அலைபேசி எண் : 9080687670


பதிப்பக முகவரி:

சந்தியா பதிப்பகம்

புதிய எண் 77 , 53 வது தெரு, 9வது அவென்யூ,

அசோக் நகர், சென்னை-  600083

தொலைபேசி: 044 24896979


                  வாழ்த்துகளுடன் சோலச்சி அகரப்பட்டி 9788210863


2 கருத்துகள்: