ஞாயிறு, 25 ஜூன், 2023

திரைப்பட பாடலாசிரியர் பாவலர் அறிவுமதியின் வெள்ளைத் தீ - சோலச்சி

 

         பாவலர் அறிவுமதியின் வெள்ளைத் தீசோலச்சி

 

 

    கதை கேட்கும் பழக்கம் இப்போதெல்லாம் குறைந்துவிட்டது என்றும் கதையெல்லாம் யார் இப்போது சொல்கிறார்கள் என்று வருத்தப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . கதை கேட்பதற்கும் சொல்லுவதற்கும் பலரும் தயாராகத்தான் இருக்கிறார்கள் . நாம்தாம் அதற்குள் செல்லாமல் தனித்தே நிற்க பழகிவிட்டோம் . இணையத்தின் ஆதிக்கம் அதிகரித்தபிறகு அதனூடே செல்ல துணிந்துவிட்டோம் . மனிதர்களோடு உறவாடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டதால்தான் நிறைய வாழ்வியல் நெறிகளிலிருந்து நாம் விலகிப் போய்க்கொண்டே இருக்கிறோம் . வாசிப்பதற்கும் பிறரை நேசிப்பதற்கும் நேரம் ஒதுக்கி மகிழ வேண்டும் .



   சமகாலத்தில் எழுதுவதற்கென்று எண்ணற்ற படைப்பாளிகள் பெருகிவிட்டனர் . இவை தமிழுக்குக் கிடைத்த பெரும் வரமாகவே கருதுகின்றேன் . எல்லோருக்கும் அங்கீகாரம் கிடைக்கின்றதா என்றால் அதுதான் கிடையாது . அங்கீகாரம் என்று நாம் எதைச் சொல்லுகின்றோம் ..? அங்கீகாரம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான வரையறைகளை வைத்திருப்பார்கள் . நாம் அதற்குள் போகவிரும்பவில்லை . ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் பெயர் வரலாற்றில் பொன்னேடுகளில் பொறிக்கப்பட வேண்டும் என்று எண்ணியே கடினமாக உழைக்கிறார்கள் .

    சமகாலத்தில் எழுதி வரும் நிறைய படைப்பாளர்களை நான் நன்கு அறிவேன் . நானொன்றும் பெரும்படைப்பாளி அல்ல என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன் . எப்போது தோணுகிறதோ அப்போதுதான் எழுதுவது ; வாசிப்பது எல்லாமே ..!

     தற்கால படைப்பு இலக்கியத்தில் இயங்கிவரும் எழுத்தாளர்களான ராசிபுரம் நாணற்காடன் மற்றும் சேலம் கூரா அம்மாசையப்பன் இவர்களை இந்த தமிழ்கூறும் நல்லுலகம் எந்தளவுக்கு அறிந்திருக்கிறது என்பது எனக்கு தெரியாது . ஆனால் இவர்களோடுதான் நான் சமகால இலக்கியம் குறித்தும் அரசியல் குறித்தும் அதிகமாக உரையாடுவது . ராசிபுரத்திற்குச் சென்றால் விடியவிடிய உள்ளுர் இலக்கியத்திலிருந்து உலக இலக்கியத்தையும் அதே அரசியலையும் நாணற்காடன் பேசபேச கேட்டுக்கொண்டிருப்பேன் . அவ்வப்போது விவாதமெல்லாம் நடக்கும் உண்பதை மறந்து உறக்கத்தை மறந்து உரையாடிக்கொண்டு இருப்போம் . மேலும்தான் சேலம் கூரா . அம்மாசையப்பன் இல்லத்திற்கு நான் சென்றதில்லை என்றாலும் எப்போது பேசினாலும் பயனுள்ள வகையில் பலமணி நேரம் உரையாடுவது வழக்கம் .இந்த இரண்டு ஆளுமைகளையும் தமிழ் கொண்டாடி மகிழ வேண்டும் .

    அப்படி ஒருசமயம் ராசிபுரத்திற்குச் சென்றிருந்தபோதுதான் எழுத்தாளர் நாணற்காடன் , வெள்ளைத்தீ என்கிற சிறுகதை நூலைக்கொடுத்து இதை இப்போதே வாசித்துவிடு என்று நீட்டினார் . எழுபது பக்கங்கள் கொண்ட சிறியபுத்தகம்தான் ஆவலோடு வாசிக்கத்தொடங்கினேன் . வேகமாய் வாசித்துமுடித்த என்னால் வேறு சிந்தனைக்குள் செல்லமுடியவில்லை . அன்று இரவு முழுவதும் வெள்ளைத்தீயுடனும் அதனைச் சுற்றியும்தான் எங்களுடைய உரையாடல் நடந்தது . நாணற்காடனை பேசினால் போதும் மணிக்கணக்காக குறிப்பேதும் எல்லாம் சுவைபட பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர் . மனசில் கள்ளம்கபடம் இல்லாத மனுசன் . இப்போது வெள்ளைத்தீ நூலுக்குள் வருவோம் .   

    முத்தமிழே ... முத்தமிழே ...

    முத்த சத்தம் ஒன்னு கேட்பதென்ன

    முத்த தமிழ் வித்தகியே ...

    என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன ..

     - என்ற திரைப்படப் பாடலை இப்போது கேட்டாலும் மனசு இளகி நயகரா நீர்வீழ்ச்சியில் நீந்தி வெண்ணிலவில் ஓய்வெடுக்கச் சென்றுவிடும் . அந்தளவுக்கு நம்மில் இரண்டறக்கலந்த பாடல் அது . 

 

     மதுரை வீரன்தானே

     அவன உசுப்பிவிட்ட வீணே

     இனி விசிலு பறக்கும்தானே

     எம்பேராண்டி மதுரை வீரன்தானே ....

       - தூள் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலைக் கேட்டால் நமக்கும் எழுந்து நின்று சண்டைபோடத் தோன்றும் .   

 

 

     நீண்ட நீண்ட காலம்

     நீ நீடு வாழ வேண்டும்

     வானம் தீண்டும் தூரம்

     நீ வளர்ந்து வாழ வேண்டும் ..

 

  - என்ற பிறந்தநாள் வாழ்த்துப்பாடலைப் பாடினால் நம்மையும் மறந்து வாரிவழங்கும் வள்ளலாய் மாறி விடுவோம் . இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே செல்லலாம் என்ற புகழுக்குச் சொந்தக்காரர் அன்பிற்கினிய அண்ணன் திரைப்பட பாடலாசிரியர் பாவலர் அறிவுமதி அவர்களால் எழுதப்பட்ட அறிவுப் பெட்டகம்தான் வெள்ளைத் தீ என்கிற சிறுகதை நூல் . கவிதை எழுதும் கவிஞனுக்குள் நெஞ்சை உருக்கும் சிறுகதைகளை எழுத முடியும் என்பதை தமிழ் உலகிற்கு காட்டியுள்ளார் . பலராலும் வாசிக்கப்பட்டு பேசப்பட்ட வெள்ளைத் தீ சிறுகதை நூலினை நானும் நேசிக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் .    




    பதினொரு தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கிறது . பதினொன்றாவது தலைப்பு கட்டுரை வடிவில் இருந்தாலும் மீதி பத்து கதைகளிலும் கவிதை உள் நுழைந்து சரளமாக விளையாடியிருக்கிறது . எல்லா கதைகளுமே குட்டிக்குட்டி கதைகள்தான் என்றாலும் நம்மோடு நீண்ட நேரம் பேசக்கூடிய கதைகள் . இப்படியும் கதைக்களத்தை உருவாக்க முடியுமா ..? இப்படியெல்லாம் எழுதலாமா ...? என்ற கேள்விகளில் ஆம் முடியும் என்றே வெற்றி காண்கிறார் .

    அடமானம் , தெளிவு , உயிர்ப்பேசி , உயிர்விடும் மூச்சு , காதல் படிக்கட்டுகள் , கிணறு , வெள்ளைத் தீ , களை , வானவில் பார்த்தல் , நீந்தும் பாறைகள் , தார் குளிர்ந்த ஆற்றங்கரையில் என பல தலைப்புகள் உள்ளன . ஒவ்வொரு தலைப்புக்குள்ளும் உயிர் இருக்கிறது . அந்த உயிரினை கதையாக்கி நம்மோடு உறவாட விட்டிருப்பது உண்மையிலேயே நாம் கொண்டாடத்தான் மகிழ வேண்டும் .

    உயிர்விடும் மூச்சுக் கதையை வாசிக்கும்போதே கண்கலங்கிவிட்டேன் . பெண்குழந்தைகளைப் பெற்றவர்கள்தான் உண்மையிலேயே பெரும் பாக்கியவான்கள் . தனக்கொரு பெண்குழந்தை இல்லையே என எல்லோரையும் ஏங்க வைத்துவிடுகிறது . பிறக்கப்போகும் குழந்தை பெண்குழந்தையாக இருக்கக்கூடாத என விழிகள் உயர்த்தி இதயக்கதவை திறக்க வைக்கிறது . மகளதிகாரத்தில் வாழ்வதென்பது தனி சுகம்தான் . மகளின் அருமை தெரியாததால் சிலர் ஆண் வாரிசு வேண்டி அலைகிறார்கள் .

    உயிர்விடும் மூச்சு கதையில் பெண்சிசு பற்றி பேசுகிறார் பாவலர் அறிவுமதி அவர்கள் . வயிற்றில் இருப்பது பெண் சிசு என்று தெரிந்ததும் கருவை கலைத்து விடுகிறார்கள் . தாயின் வயிற்றில் கருவாக உருவாகி இருக்கும் பெண் சிசு பேசுவதுபோல் கதாபாத்திரத்தை அமைத்து அந்த பெண் சிசு நம் கருவிழிகளையும் கருப்பையையும் கருணையற்ற இதயத்தையும் அசைத்துப் பார்த்துவிடுகிறது . அந்தப் பெண் சிசு , பேச ஆரம்பிக்கும்பொழுது மகளே நீ எப்போது பிறப்பாய் .. என் மடியிலிலும் மார்பிலும் இப்போதே தவறமாட்டையா என ஏங்க வைத்துவிட்டு பகுத்தறிவு நிறைந்த உலகம் என்றாலும் பெண் சிசு எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார் பாவலர் அறிவுமதி அவர்கள் .

    ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறுதான் பதம் என்பார்கள் . அதுபோல் வெள்ளைத் தீ சிறுகதை நூலுக்கு உயிர் விடும் மூச்சு என்கிற சிறுகதை உச்சத்தின் உச்சம் என்பேன் .

   தாய் கருவுற்று இருக்கிறாள் . தாய்க்கு ஏற்கனவே இரண்டு பெண்குழந்தைகள் உள்ளன . மூன்றாவது பெண் குழந்தைதான் கருவில் இருக்கிறது என்பதாக கதை தொடர்ந்து தொடங்குகிறது .

   அம்மா ... அம்மா !

   உங்க சின்ன செல்லம் பேசறம்மா !

   பெரியக்கா எங்கம்மா ?

   பள்ளிக்கூடம் போயிருக்காங்களா ...  

   சின்னக்கா  ?

   அவுங்களுமா  ?

   ரெண்டு பேருமே எம்மேல எவ்வளவு அன்பா இருக்காங்க . நீங்க படுத்திருக்கும்போது அந்த ரெண்டு பேரும் வந்து உங்க வயித்துல முத்தங் கொடுக்கும்போது எவ்வளவு கூசுது தெரியுமா .....

   அவுங்க பரவாயில்லைம்மா ...

    இந்த அப்பாதான் மோசம் .

முத்தங்கொடுக்குறேனு சொல்லி மீசையால் குத்தக்குத்த எவ்வளவு வலிக்குது தெரியுமா   ? என்ற பெண் சிசு மட்டுமே பேசுவதாக கதை நீள்கிறது . பெண் சிசு வைரையில் பிறந்து எல்லோரையும் பார்க்க வேண்டும் என்று பேராசைப்படுகிறது . அப்போதுதான் ஸ்கேன் செய்து பார்க்கும்போதுதான் கருவில் இருப்பது பெண்குழந்தை என்று தெரிய வருகிறது . மூன்றாவது பெண்குழந்தையா .... என்று எண்ணி கருவைக் கலைக்க முடிவு செய்கிறார்கள் . ஆண்குழந்தை பிறக்கும் என்று எண்ணி ஏழெட்டு பெண்குழந்தைகளை பெற்ற வரலாறு உண்டு .

    தன்னைக் கருவிலேயே கொல்ல முடிவு செய்ததை எண்ணி அந்தப் பெண் சிசு கண்ணீர் விடுவது நம் கண்களில் உணர்த்துகிறது . கரு கலைக்கும் நிலையிலும் அந்த பெண் சிசு சொல்வதாக நிறைவாக இவ்வாறு முடிக்கிறார் பாவலர் அறிவுமதி அவர்கள் .

   ஆனா , ஒரே ஒரு வேண்டுதல் . என்னெக் கொல்லும்போது எங்க அம்மாவுக்கு ... ... ஆச .. அம்மாவுக்கு என்னால எந்த சின்னவலியும் இல்லாம என்ன கொன்னுடுங்கய்யா ....

   அது ... அதுபோதும் எனக்கு .. அது போதும் ....

    அம்மா ...

     அம்மா ...

      ஆம் ...

       .....

    என்ற கதையை நிறைவு செய்து நம் கண்களை குளமாக்கிவிடுகிறார் பாவலர் அறிவுமதி அவர்கள் . அந்தக் காட்சியிலிருந்து இப்போதுவரை என்னால் மீண்டும் வர முடியவில்லை .

 

    வாழ்வியலில் கலந்த கதைதான் அடமானம் . இப்படியும் நடந்திருக்குமா என்றால் நடந்திருக்கிறது என்றே நம்பித்தான் ஆக வேண்டும் . கிராமங்களில் அடமானம் வைப்பது என்பது புதிய சொல்லாடலோ பழக்கவழக்கத்தில் புதியதோ என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை . இந்தியா நூறு இலட்சம் கோடு கடனில் இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன . அப்படியானால் நாம் அனைவரும் அடமானம் வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதே உண்மை . அந்த அரசியலுக்குள் நாம் இப்போது போக வேண்டாம் . கதைக்குள் வருவோம் .

   செடி சேம்பு , மாசாணம் , செங்கன் மூவருக்கும் நடக்கும் கதைக்களத்தைத்தான் அடமானம் என்கிற கதை விளக்குகிறது . தன் மனைவி செடி சேம்புவை கடனுக்காக செங்கானிடம் அடமானம் வைத்துவிடுகிறான் மாசாணம் . பத்து நாளில் மீட்டுக்கொள்கிறேன் என்று சொன்ன மாசாணம் தன் மனைவியை மீட்பதற்கு வருடமாகிவிடுகிறது . அந்த நேரத்தில் செங்கானுக்கும் செடி சேம்புக்கும் பழக்கமாகிவிடுகிறது . ஆற்றிலும் கால் வைக்க முடியாமல் சேற்றிலும் கால் வைக்க முடியாமல் அல்லாடுகிறாள் செடி சேம்பு . மூன்று பேருமே பன்றி மெய்க்கும் தொழிலைத்தான் செய்து வருகிறார்கள் .

    அடமானம் கதையில் செடி சேம்புவின் மனம் படும் துயரை நம்மால் உணர முடிகிறது . அடி .. ஆத்தி மனைவியைப் பிரிந்து ஒரு நிமிடம் இருக்க மாட்டேன் ... என் புருசன விட்டுட்டு ஒரு நிமிஷம் இருக்க மாட்டேன் என எண்ணத் தோன்றுகிறது . பரிதாபத்திற்குரியவள் செடி சேம்பு . இவளின் நிலை வேறு எந்தப் பெண்ணுக்கும் வந்துவிடக் கூடாது . மனைவியை அடமானம் வைக்கும் நிலைக்கு யாரும் தள்ளப்பட்டுவிடக் கூடாது .

   நம்நாட்டு புறாணங்களில்தான் ஐந்து ஆண்களுக்கு ஒரு மனைவி என்றும் அந்த மனைவியை சூதாட்டத்தில் வைத்து தோற்பதெல்லாம் நடந்தேறுகிறது . பெண்களை எந்த அளவுக்கு கொண்டாட வேண்டுமோ அந்த அளவுக்கு உச்சத்தில் வைத்து கொண்டாட வேண்டும் . பெண்களை இக்கட்டான நிலைக்கு தள்ளி அவர்களை சோதிக்கக் கூடாது .

  இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உணர்வுகளைக் கடத்தி நம் ஆழ்மனதை அசைத்துப் பார்க்கிறது .

   களை சிறுகதையில் வரும் பூவா கிழவி இப்போதும் கிராமங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் . கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள நெருக்கத்தையும் புரிதலையும் உணர்த்தக்கூடிய தெளிவு சிறுகதை என ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுகிறது .

      மோகத் தீ பிடித்த வாழ்வில் வெள்ளைத் தீ சிறுகதைத் தொகுப்பானது அசைக்க முடியாத ஆலமரம் போன்றது . இந்த ஆலமரத்தை உணரச் செய்த பாவலர் அறிவுமதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்கின்றேன் .

   2004 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூலினை தணல் பதிப்பகத்தின் மூலமாக சாரல் வெளியீடு செய்திருக்கிறது .

 

விற்பனை உரிமை :

தமிழ் அலை

எண் 1, காவலர் குறுந்தெரு ,

ஆலந்தூர் சாலை ,

சைதாப்பேட்டை

சென்னை – 600015

tamilalai@gmail.com

பேச : +91 9786218777

 

வெளியீடு :

சாரல்

அறிவுமதி

189 அபிபுல்லா சாலை ,

தியாகராயர் நகர் , சென்னை – 600017

பேச : +91 9940221800

 

       நட்பின் வழியில்

    சோலச்சி அகரப்பட்டி

பேச : +91 9788210863

 

2 கருத்துகள்: