எட்டுத்திக்கும் வில் ஏந்திபடியே நிற்கும் சில உறவுகள்
கட்டுக் கட்டாய் வந்து விழும் வசவுகள்
இதயத்தில் ஊடுருவி ரத்த நாளங்களை உறிஞ்சியும்
கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தபோதும்
எரிக்கும் விழிகளாலே வீழ்த்திய போதும்
வானளவு ஏமாற்றங்களை வாரி கொடுத்த போதும்
இரும்பு கரம் கொண்டு நசுக்கிய போதும்
ஓரவஞ்சனையால் ஒதுக்கி தள்ளிய போதும்
உதிரமே கைவிட்ட போதும்
விழுகின்றேன்...
எழுகின்றேன்...
மீண்டும் மீண்டும்
பூத்துக் கொண்டே இருக்கின்றேன்...
கூட வந்ததை குறை சொல்வதற்கில்லை
கூடி பிறந்ததோ இன்பத்தின் எல்லை
கூட பிறந்ததோ எந்த சொற்களுக்குள்ளும் அகப்படவில்லை...!
எதிர்பார்ப்பு இல்லாத பேரன்பினை
பரந்த நிலமெங்கும் பாயாக விரிக்கின்றேன்
தாயாக என் நட்புகள் தாங்கி பிடிப்பதால்
தடம் பதித்து பயணிக்கின்றேன்
மகுடங்களுக்குள் நுழைந்து விடாமல்
நல்ல மனங்களுக்குள் உட்புகுகின்றேன்
தோளோடு அணைத்துக் கொள்ளும்
அந்த கதகதப்பில் மகிழ்கின்றேன்...
நான் பிறப்பெடுப்பேன் என்று
எண்ணியதில்லை என் பெற்றோரும்
எதார்த்தமாய் அமைந்த வாழ்வில்
இரண்டாவதாக பிறந்தேன்
இப்போது ஆறுதல் சொல்ல
தாய் இல்லை என்றாலும்
அவர் இருந்தவரை அவருக்கு தாயானேன்
அவ்வாறே அப்பாவுக்கும் தொடர்கிறேன்....
வெறும் கையோடு பிறந்தேன்
வெறும் பயலாய் தொடரவில்லை
விரல்கள்தோறும் பேரன்பு நிறைந்து கிடக்கிறது
இறுக பற்றிக் கொள்கிறேன்
இருக்கும் வரை
இல்லை என்காமல்
அள்ளிக் கொடுங்கள் பேரன்பினை...!
கூழ் குடித்து பிறந்தவன்
கூரை வீட்டில் வளர்ந்தவன் - உங்கள்
கூட்டாளியாக தொடர்பவன்..!!!
நவம்பர் 19
சோலச்சி பிறந்த தினம்
2 கருத்துகள்:
அரசுப்பள்ளி ஆசிரியராக, அரசியல் விழிப்புணர்வு ஆர்வலராக மற்றும் வேளாண்மை செய்யும் தோழராக உங்கள் நட்பு என்றுமே எங்களுக்கு மதிப்பு மிக்கது!🫡 உம் பணிகள் சிறக்க வாழ்த்துகள் தோழர்!🤝
மகிழ்ச்சி தோழர்
கருத்துரையிடுக