சனி, 28 டிசம்பர், 2024

கவிக்கோ விருது பெற்றார் எங்கள் கவிச்சுடர் - சோலச்சி

 வருங்கால சந்ததிக்கு வளர்சங்கதி சொல்பவரே

நெடுங்காலம் இம்மண்ணில் நிலைக்கும் புகழ் கொண்டவரே 

சாட்டையடி கவிதைகளை சரம்சரமாய் தருபவரே 

வேட்டையாடும் இவர்கவிதை வேந்தராய் நிற்பவரே

வெண்ணரசின் கவிக்காட்டினிலே வேங்கையாய் வருபவரே 

இதயம் எல்லாம் இன்பத்தமிழ் கொண்டவரே

உதயசூரியனின் ஒளிபட்டு உலாவுகின்ற எங்கள் கவிச்சுடரே...!

உந்தன் விரல் பிடித்து நடக்கின்றோம் 

எங்கள் பெரும் கவியே கவிச்சுடரே வாழியவே...!

       - சோலச்சி 



தமிழ் நிலத்தின் பெரும் அடையாளமாய் புதுக்கோட்டையில் வாழ்ந்து வரும் எங்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் "கவிக்கோ விருது" பெற்றிருக்கின்றார் என்றால் அது புதுக்கோட்டையின் மணி மகுடங்களில் போற்றத்தக்க பெரும் நிகழ்வு ஆகும்.


அந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக இன்று மாலை ( 28.12.2024 ) எங்கள் கவிச்சுடர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.


எங்கள் முன்னோடி கவிஞர் நா.முத்துநிலவன், விமர்சக எழுத்தாளர் கஸ்தூரி ரெங்கன், எழுத்தாளர் அண்டனூர் சுரா, என் பாசத்திற்குரிய தம்பி விதைக்கலாம் ஸ்ரீ மலையப்பன் மற்றும் உங்கள் பேரன்புக்குச் சொந்தக்காரன் சோலச்சியும் உடன் சென்று சந்தித்து மகிழ்ந்தோம்.

வாசலில் வரவேற்றுக் கொண்டிருந்த அறிவகத்தின் அலமாரிகளை உற்றுப் பார்த்த பொழுது சோலச்சியின் "கருப்பு சட்டையும் கத்திக் கம்புகளும்" நூலும் அதில் இடம்பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

நான் ஆவலோடு எதிர்பார்த்தது எங்கள் கவிச்சுடர் ஐயாவின் கவிதை நூலைத்தான். கவிச்சுடர் ஐயா அவர்களின் கவிதை நூலினை ஆவலோடு எடுத்து அகம் மகிழ புரட்டிப் பார்த்தேன். அதே நூலினை எங்களுக்கு பேரன்பு பரிசாக வழங்கி சிறப்பித்த நிகழ்வு காலத்திற்கும் கொண்டாடி மகிழக்கூடிய நிகழ்வு ஆகும். 

வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்றே இன்றைய நிகழ்வினை பதிவிடுகின்றேன். 

பேரன்பின் மகிழ்வில் 

சோலச்சி

28.12.2024








கருத்துகள் இல்லை: