Monday, 18 April 2016

களப்பணியாற்றுங்கள் தோழர்களே...

களப்பணியாற்றுங்கள் தோழர்களே....

   சாதியக் கொடுமைகளிலிருந்து குறைந்தபட்சமாவது விடுபட வேண்டுமென்றால் ஆசிரியர்களால் மட்டும்தான் சாத்தியமாகும்.  எனது சொந்த ஊரில்தான் ஆரம்பக்கல்வியை முடித்தேன். அந்த ஊர் சாதிய வன்கொடுமைகள் நிறைந்த ஊர். பள்ளியிலும் சாதிய வன்கொடுமைகள் அரங்கேறியது. ஆசிரியர்களாலேயே ஏதும் செய்ய இயலாத நிலை. அங்கு பணியாற்றிய ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் நால்வர். செல்வி பழனியாயி (பணி நிறைவு),   திருமிகு கந்தப்பன் ( தற்போது வேறு பள்ளியில் தலைமையாசிரியர்),     திருமிகு இக்னேசியஸ் (பணிநிறைவு) ,   திருமிகு தவ.சாலைவேலம்மா (தற்போது வேறுபள்ளியில் தலைமையாசிரியர் ). முதல் மூவரிடம் நான் ஆரம்பக்கல்வி கற்றேன்.

   முதலில் ஆசிரியர் பழனியாயி அவர்கள்.  "கள் " இறக்கும் தொழில் அமோகமாக நடைபெற்ற காலம் அது.  உயர்சாதியாக கருதப்பட்ட மாணவர்களில் சிலர்  "கள்" குடித்துவிட்டுதான் பள்ளுக்கு வருவார்கள். அவர்களை திருத்த எடுத்துக்கொண்ட முயற்சி அதிகம். சேரியில் பிறந்த மாணவர்களில் நானும் ஒருவன். சேரி மாணவர்கள் மற்றவர்களோடு கைகோர்த்து திரியமுடியாது. ஒன்றாக அமரக்கூட முடியாது. அப்படி அமர்வதை உயர்சாதி என்று தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் எவரேனும் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்...........

      சாதிப்பாகுபாடுகளை களையவும் சேரிக்குழந்தைகளையும் மடியில் அமர வைத்து களப்பணி ஆற்றியவர் ஆசிரியர் செல்வி பழனியாயி அவர்கள். அவர் எடுத்துகொண்ட முயற்சிக்கு கிடைத்த பாராட்டுக்கள் எது தெரியுமா........? அவமானங்களும் அருவருக்கத்தக்க வார்த்தைகளும்தான். எதிர்ப்புகளை எதிர் கொண்டார். சிந்தா மூக்கோடும் சீவாத்தலையோடும் வந்த மாணவர்களை சாதி பார்க்காமல் அரவணைத்து அழகுபடுத்தினார்.  ஊர் மக்களின் பழக்கவழக்கங்களையும் நெறிப்படுத்தினார். அவரிடம் படித்த மாணவர்கள் இன்று பலரும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இன்றும் ஊரில் நடைபெறும் குடும்ப விழாக்களில் இவருக்கு முதல்மரியாதை கொடுக்க இவரிடம் படித்த மாணவர்கள்  தவறுவதில்லை.

   அடுத்து  தலைமை ஆசிரியர் இக்னேசியஸ் அவர்கள்.  வகுப்பில் உயர்சாதி குழந்தைகள் மட்டுமே பெஞ்சிலும் தரைப்பலகையிலும் உட்காரக்கூடிய அவலநிலை. அதை உடைத்தெறிந்து ,என் போன்ற மாணவர்களையும் சமமாக உட்கார வைத்தார். எதிர்ப்புகள் கிளம்பியபோதும் துளியும் அச்சப்படவில்லை. மாணவர் தேர்தலை முதல்முறையாக நடத்தினார். நான் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இன்றும் என் மாணவர்களிடம் நான் மாணவர் தேர்தலை நடத்தி வருகிறேன். சாதியப்பாகுபாடுகள் களைய இவரது பணியும் துணை நின்றது.

   அடுத்து ஆசிரியர் கந்தப்பன் அவர்கள். கல்வியில் சேரிக்குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அனைத்து மாணவர்களிடமும் அன்போடு பழகினார். ஒற்றுமை உணர்வை ஏற்படுத்த முழுமூச்சாக களப்பணியாற்றினார். இவர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் நம் கட்டுப்பாடு உனக்கு தெரியாதா என்று பலரும் முறையிட்டபோதும் எதையும் உள்வாங்கிக்கொள்ளாமல் களப்பணியாற்றினார். இம்மூன்று ஆசிரியரகளும் வெவ்வேறு காலங்களில் பணியாற்றியிருந்தாலும் நல்ல  கல்வியால் சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும்
என ஆழமாக நம்பினார்கள்.

   அடுத்து ஆசிரியர் தவ.சாலைவேலம்மா. நான் ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்து போது, என்னை அழைத்து மாதம் ரூபாய் முந்நூறு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியராக பணியமர்த்தி அழகு பார்த்தார். நான் சற்றே தயங்கியபோது, வாங்க தம்பி யார் தடுக்குறானு பாக்குறேன் என்று துணிச்சலோடு செயல்பட்டார். அதுமட்டமல்லாது இந்த ஊரில் படிக்காமல் வேறு ஊரில் படித்து வந்த அனைத்து அடித்தட்டு குழந்தைகளையும் சேர்க்க வைத்து பாதுகாப்பு அரணாக விளங்கினார். இந்த நால்வருமே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   இன்று ஓரளவுக்கு சாதிக்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்று நம்புகிறேன். இருந்தபோதும் ஆங்காங்கே பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டும். ஆசிரியர்களால் மட்டும்தான் முடியும். ஊதியத்தையும் கடந்து உள்ளன்போடு  இவர்களைப்போல் களமாடிக்கொண்டு இருக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு என் வாழ்த்துகள் எப்போதும் உண்டு.
       நட்பின் வழியில்
          சோலச்சி, புதுக்கோட்டை
  

No comments:

Post a Comment