ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

சுனை சிந்திய கண்ணீர்.... - சோலச்சி

         சுனை சிந்திய கண்ணீர் ..... [வள்ளல் பாரி]
                                 -சோலச்சி
மலைகள் யாவும்
புகழப்படுவதில்லை...
ஆனால்
பறம்பு மலை மட்டும்
இகழப்படுவதேயில்லை....!

பாரியை மைந்தனாய்
பெத்தெடுத்தது...
முந்நூறு ஊர்களை
காத்து வந்தது ....!

செல்வம் சேர்ப்பது
எளிது
சீரிய வழியில் செலவு
அரிது....!

வற்றாத சுனைகளும்
வளம் தரும்  பலாக்களும்
திகட்டாத தேன்களும்
செறிந்து இருக்கும் ...
பாரியின் குணம் போல்
உயர்ந்து இருக்கும்...!

பேரரசு மத்தியிலே
சிற்றரசுகள் ....
சிற்றரசுகளில்
பறம்புநாடு
சிறப்பாய்....
பார் வியக்கும்
வனப்பாய்.....!

குறிஞ்சியும்
முல்லை அரும்புகளும் சூழ்ந்த
பறம்பு நாடு....
சோலைகள் நிறைந்த
சின்ன நாடு....!

பறம்பு மலை உள்ளதால்
பறம்பு நாடானது....
பறம்புக்கு புகழ்
பாரியால் வந்தது ...!

முந்நாளில் பறம்பு மலை
இந்நாளில் பிரான் மலை ....

முந்நூறு ஊர்களை
ஆண்ட மன்னவன்...
முகம் சுளிக்காது
வாரி வழங்கும்
தென்னவன்.....!

பறம்பு மலை
சுனை நீர் சுவை கூட்டும்...
மலர்களை வண்டுகள் முட்டும்
பலா மெரு கூட்டும்....!

கவி புனையும் கபிலரை
தோழனாகக் கொண்டவர்
பறம்புக்கு
பாரியே ஆண்டவர்...!

சிற்றரசரின் புகழ்
சிலருக்கு பிடிக்கவில்லை
யாரிடமும்
இவர் நடிக்கவில்லை
வேந்தர்கள் பலருக்கு
இதயம் கூட துடிக்கவில்லை....!

யாழிசைகள்
மீட்டுக்கொண்டே....
குயிலிசைகள்
இசைத்துக் கொண்டே....

பாரியின் கைகள் சுருங்கி
இருக்காது ...
பாரில் யாரையும் வெறுக்காது....!

சந்தனமோ மார்பில்
குளிர்ச்சியில்...
மன்னவன் முகமோ
மலர்ச்சியில்....

கடல் மடை
திறந்தார் போல் பேச்சு
காவல் காப்பதே
அவரின் மூச்சு.....

மண வயதில் மகள்கள்
இரண்டு
அங்கவை சங்கவை
பெயர் கொண்டு ....!

பாரி போல் பெருங்குணம்
கொண்டவர்கள்...
பாமரர் இதயத்தை
கண்டவர்கள் ....!

காட்டு வழி பயணத்தில்
கண்கவர் சோலைகள்
கண்களைப் பறித்தது...
ஒற்றைத்தூர் முல்லைக்கொடி
அரசன் வழி மறித்தது....
துன்பம் காணா பாரி
துவண்டு போனார்...
ஏறிவந்த தேரில்
முல்லையை ஏற்றலானார்...!

நடந்தே இல்லம்
சென்றார்
நாளொருநாளில்
புதிய தேரொன்றும்
செய்துகொண்டார்....

விரைந்து தேர் செய்யும்
வலிமையானவர்
வாழ்வில் என்றும்
எளிமையானவர்....!

உயர்திணைகளுக்கு மட்டும்
உரியவர் அல்ல....
அஃறிணைகளுக்கும்
அருமை தோழர்....!

வளம் கொண்ட பாரியை
வதைப்பது எப்படி...
முடியரசுகள் மூன்றும்
திட்டம் தீட்டின...
மங்கைகளை மணக்க
மடல்கள் அனுப்பின....!
மடல்களும் கிடைத்தது
மன்னவன் மீசை துடித்தது...

சூழ்ச்சி கண்டு நொந்தார்
சூட்சுமமாக பதில் தந்தார்...!

சேர சோழ பாண்டியர்
ஒன்றாக கூடினர்
பாரி வள்ளலை
வசையும் பாடினர்...

போர் முரசுகள் முழங்கின
படைகள் பறம்பைச் சூழ
பறவைகளும் கலங்கின....!

கவின்மிகு கபிலர்
கடும் வாதம் செய்தார்
மலைமேல் பாரி
மனதை நெய்தார்....!

ஊர்களனைத்தும்
தானமானது.....
இம்மலையும் பலருக்கு
தானமானது...
எஞ்சியிருப்பது நானும் அவரும்
போரோ தேவையில்லை ...
போரெனில் உங்களில்
பலவுயிர்கள் மாயும்
எங்கள் வாள்களே தேயும் ....!

அஞ்சி ஒடுங்குவது
பாரியின் குணமல்ல...
அச்சமில்லையேல்
களம் காணுங்கள்
போர் எங்களுக்கு புதிதல்ல.....!

கபிலரின் உதடுகள்  பேசின
கடுஞ்சொற்களை வீசின....
அச்சத்தில்
படைகள் திரும்பின...
பாரியை கொல்வதையே
விரும்பின....!

கபிலரில்லா நேரத்தில்
பாணராக சிலர்
பண்கள் பாடினர்...
தர ஒன்றுமில்லாததால்
தன்னையே வழங்கினார்....
பாணர்கள்
அமைதியாய் சற்றே நின்றனர்
படைகள் காண கொன்றனர்....!

பாணராக வந்தவர்கள்
முடிவேந்தர்களின்
பணியாட்கள்
நல்லோராய் நடித்தனர்....
பாரியின் நிலையால்
பலரும் துடித்தனர்....

பறம்பு நாடு வீதியெங்கும்
கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது
பாமரக் கூட்டம்
முகமோ வாடியது....!

பாரியின் இறப்பால்
படபடத்தார் கபிலர்...
செந்தீமூட்டி சாக துடித்தார்....
பாரியின் செல்வங்களோ
தடுத்தன...
கண்ணீரால் துடித்தன....!

கபிலரின் ஆதரவில்
கன்னியர்கள் இருந்தனர்...
கடும் சோகத்தையே
அருந்தினர்....

சோகத்தை தன்னுள்
போட்டுக்கொண்டார்...
போராட்டத்தோடு
மங்கைகளை
காத்து வந்தார்....

நாட்கள் கடந்தன
நலமாய்
கனிந்தன....
மங்கைகளை
மலையமான் அரசனின்
மகன்களுக்கு
மணம் முடித்தார்...
ஆனந்த கண்ணீர்
வடித்தார்....!

நட்பின் சிகரமாய்
விளங்கியவர்
அறம் ஒன்றையே
முழங்கியவர்....

கடமை முடிந்ததென்று
சிரித்தார்...
தென்பெண்ணையாற்றில் தீமூட்டி
உயிர் மரித்தார்....!

அலறிக்கொண்டே ஓடிய ஆறு
அன்று முதல்
அழுதுகொண்டே .....

பாவம்.....
பறம்புமலை
பாரியையும் இழந்தது...
பாணரையும் இழந்தது....
அலைமோதிய சுனை
இன்றும்
அழுதுகொண்டே  வழிகிறது.....

       -சோலச்சி புதுக்கோட்டை

2 கருத்துகள்: