செவ்வாய், 31 டிசம்பர், 2024

எழுத்தாளர் சாரத மற்றும் ஜனமித்திரன் நூற்றாண்டு விழா

 29.10.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி.



புதுக்கோட்டையில் பிறந்து ஆந்திரா மாநிலம் தெனாலியில் வாழ்ந்து தெலுங்கு இலக்கியத்தில் சரித்திர புகழ்பெற்ற எழுத்தாளர் சாரத அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் புதுக்கோட்டை தனி அரசில் (சமஸ்தானம்) வெளிவந்த ஜனமித்திரன் இதழின் நூற்றாண்டு விழா மற்றும் எழுத்தாளர் அண்டனூர் சுரா, எழுத்தாளர் துவாரக சாமிநாதன், கவிஞர் அழ.கேணேசன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முன்னெடுப்பில் நடைபெற்ற இவ்விழாவில் இலக்கிய ஆளுமைகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் எழுத்தாளர் அறம், தெலுங்கு இலக்கியத்தின் சாகித்திய அகடமி விருது பெற்ற லட்சுமி நாராயணா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் கவிஞர் ஸ்டாலின் சரவணன், புதுக்கோட்டை பிலிம் சொசைட்டியின் தலைவர் நிறுவனர் எஸ். இளங்கோ, அம்பிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் சந்திரா ரவீந்திரன், எழுத்தாளர் இரா.காமராசு, எழுத்தாளர்கள் ரமணி,  கங்கா, டி.எஸ்.நடராஜன், மணி மோகன், கோவில் குணா, மூட்டம்பட்டி ராசு, கவிஞர் பீர்முகமது, தீக்கதிர்  சு.மதியழகன், கஸ்தூரி ரங்கன், ஸ்ரீமலையப்பன், எழுத்தாளர் சங்கீதா, கவிஞர் செங்கை தீபிகா, கவிஞர் கண்மணி ராசா, கவிஞர் கலியமூர்த்தி.... ( பட்டியல் நீளும்) என தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் புதுக்கோட்டையின் ஆகச் சிறந்த ஆளுமைகள் அனைவரும் கலந்து கொண்ட இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.


புதுக்கோட்டையின் அறிவுக்களஞ்சியம் தமிழ்ச்செம்மல் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை புதிய செய்திகளையும் புதிய படைப்பாளிகளுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டியது. நாங்கள் போற்றி மகிழும் குழந்தை நல மருத்துவர் ச.ராமதாஸ் அவர்களும் பேராசிரியர் ச.விஸ்வநாதன், மருத்துவர் ஜெயராமன் போன்றோரும் கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு. 

விழாவினை செவ்வனே சிறப்பாக நடந்தேற ஒருங்கிணைப்பு செய்த மாவட்ட செயலாளர் ஒட்டடை  பாலச்சந்திரனுக்கும் மாவட்டத் தலைவர் அண்டனூர் சுரா மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட தோழர்கள் அனைவருக்கும் பேரன்பின் நன்றிகளை தெரிவித்து மகிழ்கின்றோம்.


 புதுக்கோட்டையில் எண்ணற்ற இலக்கிய அமைப்புகள் இருந்தாலும் ஓர் இதயமாக இணைந்து செயல்படுவதுதான் புதுக்கோட்டையின் பெருமைகளுள் ஒன்றாகும். விழா குறித்த அறிமுக உரையும் மற்றும் புதுக்கோட்டையில் தற்போது சாதித்துக் கொண்டிருக்கக்கூடிய கவிஞர்கள் மற்றும் இளைய படைப்பாளிகள் சமூக அக்கறை கொண்டோர்கள் குறித்தும் பேசினேன். 


காலையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்  மாநில செயற்குழு கூட்டமும் மாலை நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


சோலச்சி

மாவட்ட பொருளாளர் 

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.

புதுக்கோட்டை மாநகரம்.


















சனி, 28 டிசம்பர், 2024

கவிக்கோ விருது பெற்றார் எங்கள் கவிச்சுடர் - சோலச்சி

 வருங்கால சந்ததிக்கு வளர்சங்கதி சொல்பவரே

நெடுங்காலம் இம்மண்ணில் நிலைக்கும் புகழ் கொண்டவரே 

சாட்டையடி கவிதைகளை சரம்சரமாய் தருபவரே 

வேட்டையாடும் இவர்கவிதை வேந்தராய் நிற்பவரே

வெண்ணரசின் கவிக்காட்டினிலே வேங்கையாய் வருபவரே 

இதயம் எல்லாம் இன்பத்தமிழ் கொண்டவரே

உதயசூரியனின் ஒளிபட்டு உலாவுகின்ற எங்கள் கவிச்சுடரே...!

உந்தன் விரல் பிடித்து நடக்கின்றோம் 

எங்கள் பெரும் கவியே கவிச்சுடரே வாழியவே...!

       - சோலச்சி 



தமிழ் நிலத்தின் பெரும் அடையாளமாய் புதுக்கோட்டையில் வாழ்ந்து வரும் எங்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் "கவிக்கோ விருது" பெற்றிருக்கின்றார் என்றால் அது புதுக்கோட்டையின் மணி மகுடங்களில் போற்றத்தக்க பெரும் நிகழ்வு ஆகும்.


அந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக இன்று மாலை ( 28.12.2024 ) எங்கள் கவிச்சுடர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.


எங்கள் முன்னோடி கவிஞர் நா.முத்துநிலவன், விமர்சக எழுத்தாளர் கஸ்தூரி ரெங்கன், எழுத்தாளர் அண்டனூர் சுரா, என் பாசத்திற்குரிய தம்பி விதைக்கலாம் ஸ்ரீ மலையப்பன் மற்றும் உங்கள் பேரன்புக்குச் சொந்தக்காரன் சோலச்சியும் உடன் சென்று சந்தித்து மகிழ்ந்தோம்.

வாசலில் வரவேற்றுக் கொண்டிருந்த அறிவகத்தின் அலமாரிகளை உற்றுப் பார்த்த பொழுது சோலச்சியின் "கருப்பு சட்டையும் கத்திக் கம்புகளும்" நூலும் அதில் இடம்பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

நான் ஆவலோடு எதிர்பார்த்தது எங்கள் கவிச்சுடர் ஐயாவின் கவிதை நூலைத்தான். கவிச்சுடர் ஐயா அவர்களின் கவிதை நூலினை ஆவலோடு எடுத்து அகம் மகிழ புரட்டிப் பார்த்தேன். அதே நூலினை எங்களுக்கு பேரன்பு பரிசாக வழங்கி சிறப்பித்த நிகழ்வு காலத்திற்கும் கொண்டாடி மகிழக்கூடிய நிகழ்வு ஆகும். 

வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்றே இன்றைய நிகழ்வினை பதிவிடுகின்றேன். 

பேரன்பின் மகிழ்வில் 

சோலச்சி

28.12.2024








திங்கள், 23 டிசம்பர், 2024

தொவரக்காடு - நண்பன் வ.கருப்பையாவுக்கு - சோலச்சி

 


நான் எழுதிய நான்காவது சிறுகதை நூல் "தொவரக்காடு". இந்நூலை நினைவில் வாழும் என் ஆருயிர் நண்பன் விராச்சிலை வ.கருப்பையாவுக்கு அர்ப்பணிப்பு செய்திருப்பேன். இந்நூலில் நான் எழுதிய என்னுரையை பதிவு செய்துள்ளேன்.

             ஆகச் சிறந்தது நட்பு



     எழுதிக் குவித்துவிட வேண்டும் என்பது அல்ல எனது இலக்கு. எழுத்து ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும்.   இணையம் வசதிகள் பெருகிவிட்டாலும் பாமரரும் வாசிக்கும் வண்ணம் நூல்களை கொண்டு செல்ல வேண்டும்.  எழுதுவதற்கு பலரும் முன்வந்து விட்டாலும் அவற்றை அச்சில் கோர்த்து நூலாக வெளியிடுவதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது.  எப்படியோ நூலாக கொண்டுவந்துவிட்டாலும் எழுதிய நூலாசிரியரே தனது தோளில் சுமந்து விற்க வேண்டிய அவலநிலை இன்னும் நீடிக்கிறது. 


    காடு மேடு என்று அலைந்து திரிகின்றேன். அனைவருடனும் கைகுலுக்குகிறேன். நயவஞ்சகர்கள் என தெரிந்தும் எழுத்தின் மூலமாக அவர்களின் குணத்தை மாற்ற முயற்சிக்கிறேன். சமூக போராட்டங்களில் முன் நிற்கின்றேன். பாலைவனக் காற்றில் மூழ்கி அதையும் ரசிக்கின்றேன். எங்காவது கார்மேகம் தழுவி இந்தப் பூமியை குளிர்வித்துவிடாதா என்ற நினைப்பில் பயணிக்கின்றேன். 


   தொவரக்காட்டினை ஒழுங்குபடுத்திய புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலை மற்றும் ஹோட்டல் நிர்வாக கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் திருமதி மு.ராதா அவர்களுக்கும் மனிதநேயத்தின் மாண்புகளை தன்னகத்தே கொண்டு பயணித்துவரும் தோழர் ஆக்ஸ்போர்டு சுரேஷ் அவர்களுக்கும் பொன்னமராவதி மருத்துவ நுண்ணறிஞர் டாக்டர் ஆ.அழகேசன் அவர்களுக்கும் போலிஸ் டுடே பத்திரிகையின் செய்தியாளர் ஆருயிர் நண்பர் கும்பகோணம் த.மணிகண்டன் அவர்களுக்கும் தொவரக்காட்டிற்கென அட்டைப்படம் உருவாக்கித்தந்த பலகுரல் வித்தகர் பாடகர் பேராசிரியர் சி.பூ.முடியரசன் அவர்களுக்கும் அகநி பதிப்பகம் பேரன்புக்குரிய அண்ணன் மு.முருகேஷ் அவர்களுக்கும்  நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

  

     நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் நாம் ஆய்வு செய்கிறோமோ இல்லையோ யாரோ ஒருவர் ஆய்வு செய்துகொண்டும் ரசித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.  நாம் ஆய்வு செய்யாவிட்டாலும் ரசிக்க கற்றுக்கொள்வது அவசியம்.  ரசனை ஒன்றுதான் நமக்கான வாழ்வியலைப் பெற்றுத்தரும்.


   வான சூரியனின் ஒளியில் எத்தனையோ கோடி உயிர்கள் உயிர்பெற்று வாழ்கின்றன.  வட்ட நிலவுக்கு ஏற்றார்போல் எத்தனையோ உயிர்கள்  தத்தமது தகவமைப்பை மாற்றிக்கொண்டு வாழ்கின்றன. பறக்கும் தூரம்வரை பரந்து விரிந்து செல்லும் காற்று எத்தனையோ கோடி உயிர்களின் வாழ்வுக்கு துணை நிற்கிறது.  வான சூரியன், வட்ட நிலா, காற்று என இதன் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம். மற்றவர்களின் வாழ்வுக்கு துணை நிற்பதால் தனது தனித்துவத்தை இவை என்றாவது இழந்திருக்கிறதா....? மற்றவர்களுக்காகவும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.  


   ஆயிரத்து ஐநூறு பேர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அந்தச் சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். அந்தச் சிறுவன் பள்ளியின் சீருடையான வெள்ளைச்சட்டை மற்றும் சாக்கு போன்று இருக்கும் காக்கி நிற கால்சட்டையைத் தவிர வேறு ஆடைகளை அணிந்தது கிடையாது. எப்போதும் துருதுருவென இருக்கும் அந்தச் சிறுவனின் பேச்சையும் செயல்பாடுகளையும் கண்டு மாணவர்கள் நிறைய பேர் அவனோடு நட்பு பாராட்டினார்கள்.


   அந்தச் சிறுவனின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் இவனோடு நெருங்கி பழகினான். இருவரையும் பள்ளியில் தனித்தனியே பார்க்க முடியாத அளவுக்கு நண்பர்கள் ஆனார்கள். 


   ஒருநாள் பள்ளிக்கூடம் முடிந்ததும் மாலை நேரத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பையன்,  தன் நண்பனை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றான். இரவு தங்கிய அவனிடம் நண்பனின் அப்பா, அம்மா,  தங்கைகள் அனைவரும் பாசமழை பொழிகின்றனர். அப்படியொரு இனிமையான இரவுப் பொழுதை அன்றுதான் அனுபவித்தான். பாசமழையில் நனைந்து உறங்கி காலையில் எழுந்து கண்மாயில் குளிந்துவிட்டு வந்த அவனிடம் தாம்பூலத்தட்டை நீட்டுகிறாள் நண்பனின் அம்மா. சற்றே தயங்கியபடி அனைவரையும் பார்க்கும் அவனை ''புடிப்பா..... உள்ளபோயி போட்டுக்கிட்டு வா...'' என்கிறாள் அம்மா. அவனுக்கே அளவெடுத்து தைத்தது போல் புத்தம் புதிய பேண்ட் சட்டை. புதிய ஆடை அணிந்து வந்த அவனை, வீடே கொண்டாடி மகிழ்ந்தது. வாழ்வில் முதல்முறையாக பள்ளிச்சீருடையை களைந்துவிட்டு வேறு ஆடை அணிந்த அந்தச் சிறுவன் நான்தான். புதிய ஆடையை அணிவித்து மகிழ்ந்தவன் என் ஆருயிர் நண்பன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் விராச்சிலை திரு.வயிரவன் சாந்தி இவர்களின் மகன் கருப்பையா. 


   நான் வாழ்வதற்கும் வளர்வதற்கும் துணை நின்றவர்களில் மிகவும் முக்கியமானவன். என்னை நன்கு அறிந்தவன். நச்சாந்துபட்டியிலிருந்த சித்திவிநாயகர் திரையரங்கம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள திரையரங்குகளில் எத்தனையோ படங்களை இரவுபகலாக பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். நுங்கு வெட்டி குடித்துவிட்டு கண்மாயிலும் கிணற்றிலும் நீச்சலடித்து விளையாடி மகிழ்ந்திருக்கின்றோம். எனது கண்ணீரை துடைத்து வெற்றியின் வாசலை கண்டுபிடித்து வழி நடத்தியவன். 



   என்னோடு இரண்டறக்கலந்த என் ஆருயிர் நண்பன் வ.கருப்பையா தற்போது என் அருகே இல்லை.  கொரணா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்த காலத்தில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி கொரணா பெருந்தொற்று ஏற்பட்டு என்னை மீளாத்துயரில் தவிக்கவிட்டுச் சென்றான். என்னை வாழ வைத்தவனுக்கு இந்த தொவரக்காட்டை படைத்தளிக்கின்றேன். 

                                                                           பேரன்பின் வழியில்

                                                                                     சோலச்சி



திருவள்ளுவர் நகர்,

புல்வயல் அஞ்சல் - 622104

வயலோகம் வழி

புதுக்கோட்டை மாவட்டம்.

தமிழ்நாடு.

பேச : 9788210863

மின்னஞ்சல்: solachysolachy@gmail.com

வலைப்பக்கம்: solachy.blogspot.com




வெள்ளி, 6 டிசம்பர், 2024

விகடன் பதிப்பு அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா - தொல். திருமாவளவன்

 தாய்ச்சொல் - 06

-------------------

யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்! 

-- பகையின் 

சூதுமறிந்தே தகர்த்தோம்!

---------------------

என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளே வணக்கம்! 


" எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் " - இது புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம்  வெளியிடும் நூல். 


ஆதவ் அர்ஜூன் அவர்களின் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' என்னும் தேர்தல் உத்திகளை வகுக்கும் தன்னார்வ அமைப்பும் இதன் இணை வெளியீட்டு நிறுவனமாகும். 


இது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று (திசம்பர் -06) சென்னையில் வெளியிடப்படுகிறது. 


முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் என்னுடைய நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. 


இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஏப்ரல்14- புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவதாகவும் நான் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லப்பட்டது. அந்நிகழ்வில் ஆங்கில 'இந்து இதழின்' ஆசிரியர் திரு. இராம் அவர்களும், மும்பையிலிருந்து திரு. ஆனந்த்டெல்டும்டே அவர்களும் பங்கேற்கவிருப்பதாகத் திட்டம் இருந்தது. ஆனால், அந்நிகழ்வு  திட்டமிட்டவாறு நடைபெறாமல் தள்ளிப்போனது. 


சில மாதங்களுக்குப் பின்னர் முதல்வர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்; திரு.இராகுல்காந்தி அவர்களை அழைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியும்கூட நிறைவேறவில்லை என்றும் தகவல்கள் கிடைத்தன. 


அதன்பின்னர், நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன்,

இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமலும் அழைப்பிதழ் அச்சிடப்படாமலும் இருந்த சூழலாகும். 


நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது  ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால், திடுமென ஒரு தமிழ் நாளேடு இதனை பெரிய செய்தியாக- தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. 


திரு. விஜய் அவர்களின் கட்சி மாநாட்டுக்குப் பிறகு அவ்வாறு வெளியிட்டது. அதாவது,

 "டிசம்பர்-06,  விஜய் - திருமா ஒரே மேடையில்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு, ஒரு நூல் வெளியீட்டு விழாவைப் பூதாகரப்படுத்தி அந்நாளேடு அதனை அரசியலாக்கியது. 


இது தான் அவ்விழாவைப் பற்றிய 'எதிரும் புதிருமான' உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பல்வேறு யூகங்களுக்கும் இடமளித்தது. குறிப்பாக, மரபு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை கூட்டணி தொடர்பான உரையாடல்களாக அரங்கேறின.


ஒரு நூல்வெளியீட்டு விழாவாக, அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறியிருக்க வேண்டிய நிகழ்வுக்கு அரசியல் சாயம் பூசியது அந்த நாளேடு தான். அது ஏன்? அந்த நாளேட்டுக்கு அந்தத் தகவல் எப்படி கிடைத்தது? 


அதாவது, விகடன் பதிப்பகத்தில் ஒரு சிலருக்கும், 'விஓசி' நிறுவனத்தில் ஓரிருவருக்கும், அடுத்து எனக்கும் மட்டுமே அப்போதைக்குத் தெரிந்திருந்த அச்செய்தி, எப்படி அந்த நாளேட்டின் கவனத்துக்குப் போனது?


அதிகாரப்பூர்வமாக விகடன் பதிப்பகமோ, விஓசி நிறுவனமோ உறுதிப்படுத்தாத ஒரு செய்தியை அந்த நாளேடு ஏன்  பூதாகரப்படுத்தியது? அதற்கு ஏன் திட்டமிட்டு அரசியல் சாயம் பூசியது? 


கடந்த முப்பந்தைந்து ஆண்டுகளில் விடுதலைச் சிறுத்தைகளையோ, திருமாவளவனையோ ஒரு பொருட்டாகவேக் கருதாத அந்த நாளேடு, திடுமென தலைப்புச் செய்தியில் எனது பெயரைப் பதிவு செய்திருக்கிறது என்றால் அதன் உள்நோக்கம் என்ன? 


என்னைப் பற்றியும் விசிக பற்றியும் எதிர்மறையாக மட்டுமே செய்திகள் வெளியிடுவதைத் தனது தார்மீகக் கடமையாகக் கருதி தொடர்ந்து செயல்பட்டுவரும் அந்த நாளேட்டுக்குத் திடீரென என்மீது  நல்லெண்ணக் கரிசனம் எங்கிருந்து வந்தது? 


அந்த நாளேட்டின் அத்தகைய செயற்பாட்டில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்பது "உள்ளங்கை நெல்லிக்கனி" போல தெற்றெனத் தெரிகிறது. 


அந்த நாளேட்டு நிறுவனத்துக்கு அப்படி என்ன உள்நோக்கம் இருக்கமுடியும்? இவ்வினா எழுவது இயல்பேயாகும். 


திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையிலுள்ள நட்புறவில் அய்யத்தைக் கிளப்பி, கருத்து முரண்களை எழுப்பி, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அதன் மூலம் கூட்டணியில் விரிசலை உருவாக்குவதும் தான் அதன் உள்நோக்கமாக இருக்கமுடியும்.


"திமுகவைத் தனது அரசியல் எதிரி என வெளிப்படையாகப் பேசியும், 'திராவிட முன்மாதிரி அரசு' என்பதைக் கடுமையாக விமர்சித்தும் தனது மாநாட்டில் உரையாற்றியுள்ள விஜய் அவர்களோடு, உங்கள் கூட்டணியிலுள்ள திருமாவளவன் ஒரே மேடையில் ஏறப் போகிறார் பாருங்கள் " -என திமுக தொண்டர்களுக்குச் செய்தி சொல்வதும்; அதனடிப்படையில்

என்மீதான அரசியல் நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குவதும் தான் அந்த நாளேட்டின் நோக்கமென்பது 

"வெள்ளிடை மலையென" வெளிப்படுகிறது. 


அந்த நாளேட்டுக்கு அப்படியொரு உள்நோக்கம் இல்லையெனில், அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்திக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? 


மாறுப்பட்ட கொள்கைகளும் முரண்பட்ட நிலைப்பாடுகளும் கொண்டவர்கள் பொது நிகழ்வுகளில் ஒரே மேடையில் பங்கேற்பது வாடிக்கையானது தானே! எதிரும் புதிருமாக அரசியல் களத்தில் கடுமையாக மோதிக்கொள்ளும் 

தலைவர்கள் கூட ஒரே மேடையில் நிற்பதும் தவிர்க்கமுடியாதது தானே!

 

இந்திய அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்களும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஒரே மேடையில் நின்றபோதும் அந்த நாளேடு அப்படித்தான் தலைப்புச் செய்தி வெளியிட்டதா?


இந்நிலையில்,--

இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் உள்நோக்கம் கற்பித்து அதனைப்  பூதாகரப்படுத்திய அந்த நாளேட்டின் சதி அரசியல் பற்றி ஏன் ஒருவரும் வாய் திறக்கவில்லை?


அடுத்து, இந்த விழாவில் பங்கேற்க 

நான் ஓராண்டுக்கு முன்னரே இசைவளித்துவிட்டேன். விஜய் அவர்களின் மாநாட்டு உரைக்கு முன்னர், அவர் வருவதை அறிந்தபோதும்கூட அந்நிகழ்வில் நான் பங்கேற்பதை பதிப்பகத்தாரிடம் உறுதி செய்துவிட்டேன். 


ஆனால், அவரது மாநாட்டு உரைக்குப் பின்னர்,  'அவர் நூல் வெளியீட்டு விழா மேடையில் என்ன பேசுவோரோ' என்கிற அச்சத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினேன். அப்போது, 

 "அவர் துளியும் அரசியல் பேசமாட்டாரென" விகடன் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.


அதன்பின்னர் தான், அந்த நாளேடு இப்படியொரு தலைப்புச் செய்தியை வெளியிட்டுச் சமூக ஊடகங்களுக்குத் தீனி போட்டது. 'வெறும் வாய்க்கு அவல் கிடைத்த கதையாக' இன்று வரையிலும் பலபேர் அதனை அசைபோட்டுக் கொண்டே உள்ளனர். 


அந்த நாளேட்டின் உள்நோக்கம் பற்றி அலச விரும்பாமல் மிக இயல்பாக அதனைக் கடந்து போகிறவர்கள், விகடன் எடுத்த முடிவு பற்றியும் பேசாமல் மவுனித்திருப்பது ஏன்? 


அந்த நாளேட்டின் சதி அரசியல், தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு எந்த நெருக்கடியையும்  ஏற்படுத்த வாய்ப்பில்லை. அவர் இனிமேல் தான் கூட்டணி அமைக்கப் போகிறார்.


ஆனால், விசிக ஏற்கனவே ஒரு கூட்டணியைத் தோழமை கட்சிகளோடு இணைந்து உருவாக்கியிருக்கிறது. 

திமுக தலைமையிலான அந்தக் கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதையும் அதன்மூலம் தமிழ்நாட்டில் சனாதன சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுப்பதையும் தனது முதன்மையான கடமைகளாகவும்  கொண்டு செயலாற்றி வருகிறது.


இந்நிலையில், அந்த நாளேட்டின் உள்நோக்கத்தையும் அத்தகைய சக்திகளின் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு, தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்கும் அரசியல் நெருக்கடியை விசிக எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு ஆளாகியது.


யார் என்ன சொன்னாலும் 

அதனைப் பொருட்படுத்தாமல் 

விஜய் அவர்களோடு மேடையேறும் துணிச்சல் திருமாவளவனுக்கு இல்லையா? 


அது அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டுவிழா தானே; அதனை அவர் புறக்கணிக்கலாமா?


திரையுலகின் சாதனையாளராகப் புகழ்பெற்ற கவர்ச்சிமிகு கதாநாயகர் விஜய் அவர்களோடு மேடை ஏறுவதற்கு கிடைத்த ஒரு அளப்பரிய வாய்ப்பை அவர் நழுவ விடலாமா?


அப்படியே ஒருவேளை அவரோடு கூட்டணி அமைத்தால்தான் என்ன தவறு ? திருமாவுக்கு காலச் சூழலுக்கேற்ப அரசியல் செய்யத் தெரியவில்லையா? 


வராதுபோல் வந்த மாமணி போல் ஒரு வாய்ப்பு வரும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குச் சூழலைக் கையாளத் தெரியாமல் அவர் தடுமாறுகிறாரா?  


திமுக அவரை அச்சுறுத்துகிறதா? 

அந்த அச்சுறுத்தலுக்கு அவர் பணிந்து விட்டாரா?


திமுக கூட்டணியை விட்டு வெளியேற அவரை எது தடுக்கிறது? 


இவ்வாறு சிலர் தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் பல்வேறு ஊகங்களை ஊடகங்களில் அள்ளி இறைத்து நம்மை வறுத்தெடுக்கிறார்கள்.


இவர்களில் பெரும்பாலோர், 

திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள்.  


இவர்களில் யாரும்,  விகடன் பதிப்பகம் ஏன் ஏற்கனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்திட முடிவெடுத்தது?- என்கிற கேள்வியை எழுப்பவில்லை. 


"விஜய் போதும்; திருமா தேவையில்லை " என்கிற முடிவை விகடனால் எப்படி எடுக்க முடிந்தது?அதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? -என்று எவரும் அலசவில்லை.


விஜய் வருத்தப்பட்டு விடக்கூடாது;  திருமா வருத்தப்பட்டாலும் வருத்தப்படட்டும் என எப்படி அவர்களால் இலகுவாக நகர முடிந்தது? - என்று கேள்வி எழுப்பவும் இங்கே எவருக்கும் துணிச்சல் இல்லை.


இதனை ஒரு வாதத்திற்காகத் தான் நான் முன் வைக்கிறேன். 


விகடன் இப்படி முடிவெடுப்பதற்கு நானும் தான் காரணம்.


" விஜய் அவர்கள் வேண்டாம் 

அவரைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஒருபோதும் கூறமாட்டேன்; உங்களுக்கு துளியும் சங்கடத்தை உருவாக்கமாட்டேன். அவரை வைத்தே விழாவைச் சிறப்பாக நடத்துங்கள் " என்று விகடன் பதிப்பகத்தாரிடம் அந்த நாளேட்டுச் செய்தியைக் கண்டதுமே நான் கூறிவிட்டேன்.


என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எங்ஙனம் நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?


நமக்கென்ன ஆதாயம் என்று கணக்குப் பார்க்காமல், நமது கொள்கை பகைவர்களின் சூது- சூழ்ச்சிக்குப் பலியாகி, அவர்களின் நோக்கம் நிறைவேற இடமளித்துவிடக் கூடாதென்கிற எச்சரிக்கை உணர்வோடு தானே நாம் முடிவெடுக்க இயலும்!  


எனவே, விஜய் அவர்களைக் கொண்டே அவர்கள் விழா நடத்தட்டும் என்று மிகமிக தொடக்க நிலையிலேயே அவர்களிடம் எனது நிலைப்பாட்டைக் கூறிவிட்டேன். 


ஒருவேளை நான் அப்படி கூறாவிட்டாலும் கூட அவர்களால் இந்த முடிவைத் தான் எடுத்திருக்க இயலும். இது தான் இன்றைய சமூக - அரசியலின் இயல்நிலை போக்காகும்.


'விஜய் அவர்களைத் தவிர்த்திட முயற்சி செய்யுங்கள்' என்று நான் கூறியிருந்தாலும், அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்பதுதான் மிகவும் இயல்பான உண்மை நிலையாகும்.


இந்நிலையில், நான் அவ்வாறு கூறியதன் அடிப்படையில் தான், அவர்களால் அந்த முடிவை குற்ற உணர்வின்றி எடுக்க முடிந்தது 

என்றும் நான் நம்புகிறேன். 


அடுத்து, "விஜய் இந்நிகழ்வில் பங்கேற்று நூலை வெளியிட்ட பின்னர், அதாவது, திசம்பர் 06 க்குப் பிறகு இதே நூலை வேறொரு நாளில், வேறொரு இடத்தில் 'அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை' ஒருங்கிணையுங்கள்; அதில் நான் பங்கேற்கிறேன்"- என்கிற கருத்தையும் விகடன் பதிப்பகத்திற்கு முன் வைத்தேன். 

அதற்கு வாய்ப்பில்லை என்பதை அப்போதே என்னால் உணரமுடிந்தது. 


இந்நிலையில், நமக்கு எதிராக ஒட்டுமொத்த குற்றச்சாட்டுகளையும் மனம்போன போக்கில் வாரி வாரி வீசுபவர்கள் எப்படி நம் பக்கம் நின்று  சிந்திப்பார்கள்? 


விஜய் அவர்களை மிகப்பெரிய சக்தியாகவும், நம்மை ஒரு "துக்கடா" வாகவும் எடைபோடுகிறவர்களால் எவ்வாறு நமக்காக வாதிட முடியும்?


"தான் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை; விஜய் பங்கேற்கட்டும்" என திருமாவளவன் பெருந்தன்மையோடு  ஒதுங்கியிருக்கிறார் என்று பேசுவதற்கு இங்கே யாருண்டு? 


"அவருக்கு நெருக்கடி வேண்டாம்; அவரைத் தவிர்க்கவும் வேண்டாம்; அவரை வைத்தே நிகழ்வை நடத்துங்கள் - என்று விஜய் அவர்கள்கூட விகடனுக்குச் சொல்லியிருக்கலாமே " -எனப் பேசுகிற துணிச்சல் இங்கே யாருக்குண்டு?


அல்லது " திருமாவை மட்டும் வைத்து நடத்துகிறோம் என விகடனே விஜய் அவர்களிடம் சொல்லியிருந்தால்,  அவர் என்ன மறுதலிக்கவா போகிறார்?  நான் தான் வெளியிடுவேன் என அடம் பிடிக்கவா போகிறார்? அதனை விகடன் செய்யாதது ஏன்? "- என்று வாதிடுகிற நேர்மைத் திறம் இங்கே எவருக்குண்டு? 


மாறாக, முகம் சுளிக்கும் மொழியில், மூக்கைப் பிடிக்கும் நடையில், நரகல் சொற்களை நாவால் அள்ளி நம்மீதே வீசுகின்றனர்.


"ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டுக்குள் சிக்கியிருக்கிறார் திருமா; அதனால்தான் அவர்மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார் " என்று சொல்லுகிற அதே நபர்கள் தாம்,--

"திமுகவுக்கு அஞ்சுகிறார் அதனால்தான் இந்த நிகழ்வில் பங்கேற்காமல் திருமா தவிர்த்து விட்டார் " என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகின்றனர். 


ஆதவ் அர்ஜூன் கட்டுப்பாட்டில் திருமா இருப்பது உண்மையெனில், அவர் அழைத்தும்கூட ஏன் திருமா இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? 


அதேபோல, திமுக அவரை அச்சுறுத்துவது உண்மையாக இருந்தால், அதற்குப் பணிந்து ஆதவ் அர்ஜூனா மீது அவர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற கேள்வி எழுவதும் இயல்புதானே? 


ஆனால், அப்படியெல்லாம் அவர்களில் யாரும் இங்கே சிந்திக்கமாட்டார்கள். 


‘திருமாவை யாரும் அப்படி கட்டுக்குள் வைத்திருக்க முடியாது; அவர் சுதந்திரமாகவும் துணிவாகவும் முடிவெடுக்க கூடியவர்’ என்றெல்லாம்  யாரும் இங்கே நமக்காக வாதாடவும் மாட்டார்கள். 


மாறாக, விஜயோடு நிற்பது தனக்குப்  பெருமையென கருதி திருமாவளவன் மேடைக்கு வருவார் என்றும்; அல்லது தேர்தலில் போட்டியிடக் கூடுதல் இடங்கள், அதிகாரப்பகிர்வு என ஆசைப்பட்டு திருமாவளவன் விஜய் அவர்களோடு கைகோர்ப்பார் என்றும்; அல்லது அதே வேட்கையோடு திமுக கூட்டணியை விட்டு வெளியேறி  அதிமுகவோடு இணைவார் என்றும் தான்,  அவர்கள் நம்மைப் பற்றி கணக்குப் போடுகிறார்கள். 

இதுதான் நம்மைப் பற்றிய அவர்களின் மதிப்பீடு! 


அது நிறைவேறவில்லை என்றதும் தான், வாய்க்கு வந்தபடி அவதூறுகளை அள்ளி இறைக்கின்றனர். 


அவை, 'தங்களின் செயல்திட்டத்தைத் திருமாவளவன் நொறுக்கிவிட்டானே' என்று ஆதங்கப்படுவோர் அள்ளி வீசும்  அமில வசவுகள்.


அவற்றுக்குச் செவிமடுக்க வேண்டாம். வழக்கம்போல கடந்து செல்வோம். 


நம்மை அச்சுறுத்துவதற்கும் 

நம்மை அவர்களின் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் இங்கே எவரால் முடியும்? 


கடந்த கால் நூற்றாண்டு காலத் தேர்தல் அரசியலிலும் அதற்கு முன்னர் பத்தாண்டு காலத் தேர்தல் புறக்கணிப்பு அரசியல் களத்திலும் 

எத்தனை எத்தனை அடக்குமுறைகளையும் அச்சுறுத்தல்களையும் நாம் 

எதிர் கொண்டிருப்போம்? 


எவ்வளவுக்கு எவ்வளவு  அவதூறுகளையும் 

அடாப்பழிகளையும் நாம்  சந்தித்திருப்போம்? 


யாவற்றையும் பொறுத்து - அவதூறுகளைச் சகித்து -

ஆதிக்கம் எதிர்த்து -

அடக்குமுறைகள் தகர்த்து -

சதிவலைகள் அறுத்து -

சமத்துவக் களத்தில் 

வேரூன்றி நிலைத்து -


கொள்கை பகைவீழ்த்தத் 

துளியும் சலிப்பின்றிச் சோர்வின்றித் துணிவுடன் போராடும் வாதாடும் -


சிறுத்தைகளை விலை பேசவும்; சிறுத்தைகளுக்கு வலை வீசவும்; 

இங்கே ஆற்றல் எவருக்குண்டு? 


எவரும் உளறட்டும்! 

ஏளனம் பேசட்டும்!


எதுவும் சொல்லட்டும்! 

எள்ளல் செய்யட்டும்!


இழிவாய் தூற்றட்டும்!

இகழ்ந்து மகிழட்டும்! 


அஞ்சுவது அஞ்சல் 

அறிவார்த் தொழில்!

அய்யன் வள்ளுவனின் 

அறன்விளையும் அறிவுரை!


பனைமரத்தடியில் 

பால் அருந்தினாலும்

காண்பவர் கண்களுக்கு

கள்ளருந்துவதாகத் தானே 

தோன்றும்?


அதன்படி, பொதுமக்கள் 

நம்மீது கொண்டுள்ள 

நம்பிக்கைக்குப் பாத்திரமாக 

நடந்து கொள்வதே தற்போதைய 

நமது முதன்மையான கடமை! 


எனவே, 

*யாதுமுணர்ந்தே தவிர்த்தோம்!*

-- *பகையின்*

*சூதுமறிந்தே* *தகர்த்தோம்!*


இவண்: 

*தொல். திருமாவளவன்.*

நிறுவனர் - தலைவர்

விசிக.



திங்கள், 25 நவம்பர், 2024

நவம்பர் 25 என் தாயின் நினைவு தினம் - சோலச்சி

 

நவம்பர் 25


நினைக்காத நாளில்லை 

இருந்தும் தாயே

இன்று உன் நினைவு நாளே...!!!




அன்னைக்கி ராத்திரி பூரா 

என் மடியில

உன் தலைய வச்சு

ஆராரோ பாடி அழுதே மயங்கி கிடந்தேன்...


அஞ்சாறு நாளாவே ஒத்த சொல்லு

சொல்லி முடிக்க 

அய்யய்யோ சிரமப்பட்ட...


அஞ்சாறு வருசமா நார்க்கட்டுலே கெதினு

ஆத்தாடி முடங்கி கிடந்த

இல்லாத வைத்தியம் எல்லாம்

ஏதேதோ செஞ்சும்

என் தாயி உன்னைத்தான் 

எந்திரிக்க வைக்க முடியலையே...


அரசாங்க வேலைக்கி நானு போயி

மாசம் ஒன்னும் ஆகலயே...

அந்த சேதி கேக்கத்தான்

உசுர தக்க வச்சு கெடந்தியா....


ஆசையா நீ கேட்ட கருப்பு திராட்சை 

அரைக்கிலோ பத்து ரூபானு

வாங்கியாந்து ஊட்டி விட்டேன்

அந்த சாறுதான் நீ குடிச்ச

கடைசி ஆகாரம்....


மூச்சு மட்டும் விட்டு விட்டு ஓடுச்சு

கண்ணு நிலைக்குத்தி முகட்டையே பாத்துச்சு

அந்த பார்வைக்கு பொருளென்ன 

என் தாயி....


நல்ல சேலை கட்டி ஒருநாளும் பார்த்ததில்லை

நகை நட்டு காது மூக்குல போட்டதில்லை

வறுமைய விரட்ட வழி தெரியாம

வகமடுப்பா போயிட்டியே....


காத்தால வானத்துல வெள்ளி மொளச்சு

வேடிக்கை பாத்துச்சு...

அந்த நேரத்துலதான் நம் வீட்டு வாசலுல

ஊரு சனமே ஒன்னா கூடுச்சு...


எப்பவும் கூவுற சேவலு

அன்னக்கினு அழுதே கூவுச்சு

அதுக்கும் தெரிஞ்சுருக்கு உன் மூச்சு நின்ன கதை....


அஞ்சாறு வருசமா அழுதே துவண்ட நானு

அன்னக்கினு அரை சொட்டு கண்ணீரு வடிக்கலயே...

அத ஊரு சனம் சொல்லி பேசுறது

காதுல கேட்டும் என் கண்ணு கலங்கலயே

கல்லா நின்று தொலஞ்சேனே....


தாயே நல்லடக்கம் செஞ்சு நானு வந்தேன்

அப்ப அணை உடைஞ்சு கரை புரண்ட கண்ணீர

தடுக்க யாராலும் முடியலையே...

என் தாயி இப்பவரை உன் நினைவு குறையலயே....


படிக்காத ஆளா இருந்தாலும் - என் தாயி 

படிச்சு படிச்சு நீ சொன்னத

வெளையாட்டா கடந்து போனேனே

இப்ப வெவரம் தெரிஞ்சுருச்சு

என் வேதனைய வெளியில் சொல்ல முடியலயே....


இருக்கும் வரை அம்மான்னு சொன்னதில்ல

தாயினுதான் நானழச்சேன்

என் தாயி அத நீயும் 

தடுத்ததில்ல....


குண்டாஞ்சட்டியில கஞ்சி ஊத்தி 

ஊட்டி விடுவ

இப்ப ஒருமுறை கொண்டாந்து 

ஊட்டி விடுவே.....!!!

          - உன் அன்பு மகன் சோலச்சி







செவ்வாய், 19 நவம்பர், 2024

சோலச்சி பிறந்த தினம்



எட்டுத்திக்கும் வில் ஏந்திபடியே நிற்கும் சில உறவுகள் 
கட்டுக் கட்டாய் வந்து விழும் வசவுகள் 
இதயத்தில் ஊடுருவி ரத்த நாளங்களை உறிஞ்சியும்
கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொரித்தபோதும்
எரிக்கும் விழிகளாலே வீழ்த்திய போதும்
வானளவு ஏமாற்றங்களை வாரி கொடுத்த போதும்
இரும்பு கரம் கொண்டு நசுக்கிய போதும் 
ஓரவஞ்சனையால் ஒதுக்கி தள்ளிய போதும்
உதிரமே கைவிட்ட போதும் 
விழுகின்றேன்...
எழுகின்றேன்...
மீண்டும் மீண்டும் 
பூத்துக் கொண்டே இருக்கின்றேன்...


கூட வந்ததை குறை சொல்வதற்கில்லை 
கூடி பிறந்ததோ இன்பத்தின் எல்லை
கூட பிறந்ததோ எந்த சொற்களுக்குள்ளும் அகப்படவில்லை...!


எதிர்பார்ப்பு இல்லாத பேரன்பினை
பரந்த நிலமெங்கும் பாயாக விரிக்கின்றேன்
தாயாக என் நட்புகள் தாங்கி பிடிப்பதால் 
தடம் பதித்து பயணிக்கின்றேன்
மகுடங்களுக்குள் நுழைந்து விடாமல் 
நல்ல மனங்களுக்குள் உட்புகுகின்றேன்
தோளோடு அணைத்துக் கொள்ளும்
அந்த கதகதப்பில் மகிழ்கின்றேன்...


நான் பிறப்பெடுப்பேன் என்று 
எண்ணியதில்லை என் பெற்றோரும் 
எதார்த்தமாய் அமைந்த வாழ்வில் 
இரண்டாவதாக பிறந்தேன் 
இப்போது ஆறுதல் சொல்ல 
தாய் இல்லை என்றாலும் 
அவர் இருந்தவரை அவருக்கு தாயானேன்
அவ்வாறே அப்பாவுக்கும் தொடர்கிறேன்....


வெறும் கையோடு பிறந்தேன் 
வெறும் பயலாய் தொடரவில்லை 
விரல்கள்தோறும் பேரன்பு நிறைந்து கிடக்கிறது
இறுக பற்றிக் கொள்கிறேன் 
இருக்கும் வரை 
இல்லை என்காமல் 
அள்ளிக் கொடுங்கள் பேரன்பினை...!


கூழ் குடித்து பிறந்தவன் 
கூரை வீட்டில் வளர்ந்தவன் - உங்கள் 
கூட்டாளியாக தொடர்பவன்..!!!

            நவம்பர் 19
சோலச்சி பிறந்த தினம் 














ஞாயிறு, 17 நவம்பர், 2024

கலைமாமணி நவீனன் நினைவு விருது 2024

 கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கும் விழா புதுக்கோட்டை- 2024


இடமிருந்து வலம் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி, மருத்துவர் ச.ராம்தாஸ், ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் சேதுராமன், சோலச்சி, முனைவர் தாமோதர கண்ணன், ரவி நவீனன்.


சென்னை கலைமாமணி நவீனன் நினைவு அறக்கட்டளையும் புதுக்கோட்டை வாசகர் பேரவையும் இணைந்து நடத்திய கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கும் விழாவும் மற்றும் உழல் வழிகள் நூல் வெளியீட்டு விழாவும் சனிக்கிழமை (16.11.2024) மாலை புதுக்கோட்டை அறிவியல் இயக்க அரங்கில் நடைபெற்றது. சர்வஜித் அறக்கட்டளையின் நிறுவனர் எங்கள் ஐயா மருத்துவர் ச.ராம்தாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலக்கிய ஆளுமைகளுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்பட்டது. உலக அரங்கில் ஒப்பற்ற ஆளுமை எங்கள் ஐயா ஞானாலய பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் ஐயா தமிழ்ச்செம்மல் தங்கமூர்த்தி அவர்களுக்கும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சேதுராமன் அவர்களுக்கும் ஆவணப்பட இயக்குனர் முனைவர் தாமோதர கண்ணன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. மாபெரும் ஆளுமைகளுடன் சோலச்சி ஆகிய எனக்கும் இவ்விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. வாழ்நாளில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது எல்லாம் அரிதிலும் அரிது. இம்மாபெரும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்த கலைமாமணி நவீனன் அவர்களின் புதல்வர் எழுத்தாளர் ரவி நவீனன் அவர்களுக்கும் வாசகர் பேரவையின் செயலர் எங்கள் ஐயா பேராசிரியர் சா.விஸ்வநாதன் அவர்களுக்கும் பேரன்பு நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.


கலைமாமணி நவீனன் அவர்கள் தனது 17-வது வயதிலேயே பத்திரிகைத்துறைக்கு வந்தவர். 92 வயது வரை எழுதிக் கொண்டே இருந்தவர்.  ஆரம்ப காலத்தில் "நவயுவன்' என்ற பத்திரிகை மூலம் தனது பத்திரிகைப் பணியைத் தொடங்கியவர் பின்னாளில்  "சுதேசமித்ரன்', "மஞ்சரி', "தென்றல் திரை' உள்ளிட்ட பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார்.


சினிமா செய்திகளை வெளியிடுவதற்கு என்றே  "நவீனன்' என்ற பெயரில் தினசரி பத்திரிகை தொடங்கினார். பொருளாதார நெருக்கடியால் அவரால் இப்பத்திரிகையை  தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் "தினமணி கதிர்' உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பணியாற்றும் சூழல் உருவானது.


 எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து 1980-ம் ஆண்டு "சினிமா எக்ஸ்பிரஸ்' தொடங்கப்பட்டபோது அதன் முதல் ஆசிரியராக நவீனன் நியமிக்கப்பட்டார். "தினமணி' நாளிதழ் வெளியிட்ட அண்ணா பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். சினிமா மற்றும் அரசியல் உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தினமணி கதிரில் தொடராக எழுதி வந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறுக்கு அருகில் உள்ள பூதலூர் கிராமத்தைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் முத்துசாமி.



 










கலைமாமணி 
 நவீனன் நினைவு விருது பெற்ற ஆளுமைகளுடன் சோலச்சி 

விழாவில் கலந்துகொண்ட திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையம் பகுதி நேர செய்தி வாசிப்பாளர்
 தோழர் ஸ்ரீகாந்த் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி மற்றும் எழுத்தாளர் ரவி நவீனன். 


.
முனைவர் தாமோதரக் கண்ணன் அவர்களுக்கு கலைமாமணி நவீனம் நினைவு விருது வழங்கப்படுகிறது.


பேராசிரியர் சேதுராமன் அவர்களுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது.


தமிழ்ச் செம்மல் தங்கம்மூர்த்தி அவர்களுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது.



ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது. உடன் பேராசிரியர் சா.விஸ்வநாதன்.








எழுத்தாளர் ரவி நவீனன் அவர்களுக்கு மருத்துவர் ச. ராமதாஸ் அவர்களால் நினைவு பரிசு வழங்கப்படுகிறது. வலமிருந்து பேராசிரியர் சா. விஸ்வநாதன், ரவி நவீனன்.



முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் , புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோருடனும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, கார்த்தி, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களோடும் நெருங்கிப் பழகியவர்.


 2009-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும், மணிமேகலை மன்றம் வழங்கிய இலக்கியச் சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார். தனது சினிமா செய்திகளில் வதந்திகளை எழுதாமல் உண்மை நிகழ்வுகளை மிகவும் துணிச்சலாகவும் நேர்மையாகவும் எழுதி வந்தவர். தனது நேர்மையை மாபெரும் ஆயுதமாக பயன்படுத்தியதால்தான் எல்லோருடனும் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டியது. தனது அப்பா நவீனன் அவர்கள் புதுக்கோட்டையில் சில காலம்  தங்கி பணி செய்ததாக தகவல் அறிந்ததும்  இந்நிகழ்வை புதுக்கோட்டையில்தான் நடத்த வேண்டும் என்கிற பேராவலில் நிகழ்ச்சியை நடத்தியதாகவும் அவரது மகன் ரவி நவீனன் அவர்கள் விழாவில் நெகழ்ச்சியோடு பதிவு செய்தார்கள்.


சோலச்சிக்கு கலைமாமணி நவீனன் நினைவு விருது வழங்கப்படுகிறது.


                                              பேரன்பின் வழியில் 

                                                       சோலச்சி 

                                                     9788210863 

                                       solachysolachy@gmail.com







ஞாயிறு, 10 நவம்பர், 2024

ஆளுமைகளை வளர்த்தெடுக்கும் வாசிப்போர் மன்றம் - சோலச்சி

"வியக்க வைத்த ஆளுமைகள்" 




 மொழி சுவை உடையது. ஆம்.. எப்போது என்றால் குழந்தைகள் பேசுகின்ற பொழுது மொழி சுவையுடையதாக மாறுகிறது. புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு என்று தனித்துவ அடையாளம் உண்டு. இந்தப் பள்ளியை மிகவும் நேர்த்தியாக நிர்வகித்து வரும் என் பேரன்புக்குரிய தமிழ்ச்செம்மல் தங்கமூர்த்தி அவர்கள் "வாசிப்போர் மன்றம்" என்கின்ற அமைப்பு ஏற்படுத்தி மாணவர்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்தி வருகின்றார்கள்.


 அந்த வகையில் நவம்பர் மாத வாசிப்போர் மன்றத்தில் சிறப்பு விருந்தினராக சனிக்கிழமை ( 09.11.2024 ) கலந்து கொண்டேன். அன்றைய நிகழ்வு என்பது பார்போற்றும் நல்ல எழுத்தாளர் திரு .எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடைய சிறார் நூல்கள் குறித்த அமர்வு. எட்டு மாணவர்கள் பேசுவதாக நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதில் இரண்டு மாணவர்கள் எதிர்பாராத விதமாக விடுப்பு எடுக்க நிகழ்வில் ஆறு மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நூல் குறித்து எந்தவித குறிப்பும் இல்லாமல் குழந்தைகளுக்கே உரிய மொழி நடையில் பேசிய விதம் அடடா.‌.. அடடா.. அடடா... என்று சொல்லும் அளவிற்கு மெய் சிலிர்க்க வைத்துவிட்டது. 



ஓர் ஆங்கிலப் பள்ளியில் தமிழ் மொழியை இவ்வளவு உச்சத்திற்கு வளர்த்தெடுக்க முடியும் எனில் சிறந்த நிர்வாகத் திறமை மற்றும் மொழி ஆளுமை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியமாகும். மாணவர்களே வரவேற்கிறார்கள்; மாணவர்களே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள்; மாணவர்களே நன்றி கூறுகிறார்கள்; முழுக்க முழுக்க மாணவர்களின் கட்டுப்பாட்டில் மாணவர்களின் செயல்பாட்டில்  எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆசிரியர்களின் வழிகாட்டலோடு சுதந்திரமான அமைப்பாக வாசிப்போர் மன்றம் செயல்படுகிறது.



 நிகழ்ச்சியை என் பேரன்புக்குரிய அண்ணன் கவிஞர் காசாவயல் கண்ணன் மற்றும் பள்ளியின் துணை முதல்வர் தோழர் குமாரவேல் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பேரன்புக்குரிய அண்ணன் கவிஞர் மா.செல்லதுரை மற்றும் அருமை தம்பி கவிஞர் சிக்கந்தர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். 

 எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தனது சிறார் கதைகள் குறித்து பேசுவதாக இருந்தால் குழந்தைகளின் மொழியில் பேசுவாரா என்பது ஐயம் தான். ஆனால், ஒவ்வொரு குழந்தைகளும் தாங்கள் வாசித்த நூலை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு அவர்களது மொழி நடையில் பேச்சு வழக்கில் மிகவும் எதார்த்தமாக பேசியதை எண்ணி பெரிதும் வியக்கின்றேன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தால் குழந்தைச் செல்வங்களை உச்சி முகர்ந்து பாராட்டி  மகிந்திருப்பார். நானும் மனம் நிறைவோடு பாராட்டி மகிழ்ந்தேன்; மகிழ்கின்றேன். 


 நான் பணியாற்றும் பள்ளியில் வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் இலக்கிய விழா என்கிற பெயரில் மாணவர்களின் பேச்சு , நடனம்,  நூல்கள் வாசிப்பு இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 எட்டாம் வகுப்பு பயிலும் மாரீஸ்வரி என்ற மாணவி எலியின் பாஸ்வேர்டு என்கிற கதையை சைகையோடு குரலில் ஏற்றம் இறக்கத்தோடு சொன்ன விதம் இப்போதும் என் கண்கள் முன்னே காட்சியாக விரிந்து கொண்டிருக்கிறது. இது போன்ற நிகழ்வுகளை அனைத்து பள்ளிகளிலும் முன்னெடுக்கலாம். மாணவர்களிடம் பாடப் புத்தகத்தை தாண்டிய திறனையும் வளர்த்தெடுக்க வேண்டும். 


மாணவர்களிடம் நூல்களிடைய உரையாடும் நட்பினை ஏற்படுத்தி விட்டால் பாசிசத்திற்கு இடம் அளிக்காத ஒளிமயமான சுதந்திரம்; சமத்துவம்; சகோதரத்துவம் மிகுந்த இந்தியாவை நிச்சயமாக நிலைநாட்ட முடியும். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளரும் எங்கள் பேரன்புக்குரிய கவிஞருமான  எங்கள் தமிழ்ச்செம்மல் அவர்களால் கலந்துகொள்ள இயலவில்லை. நிகழ்வு அரங்கம் முழுவதும் எங்கள் தமிழ்ச்செம்மல் அவர்களின் பேரன்பு நிறைந்து காணப்பட்டதை உணர்ந்தேன். ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தனித்துவம் மென்மேலும் உயர பாராட்டி மகிழ்கிறேன். எங்கள் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி அவர்களுக்கு பேரன்பு நிறைந்த நன்றியை தெரிவித்து மகிழ்கின்றேன். 

பேரன்பின் வழியில் 
 சோலச்சி.
 10.11.2024

திங்கள், 2 செப்டம்பர், 2024

சோலச்சியின் முட்டிக்குறிச்சி நாவலுக்கு பாராட்டு

 "தனது தோழனை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய தமிழ்நாடு கலை இலக்கிப் பெருமன்றம்"





சோலச்சியின் முட்டிக்குறிச்சி நாவல் மணப்பாறை சௌமா இலக்கிய விருது பெற்றமைக்காக 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்கோட்டை எம்.ஐ கல்வி நிறுவனத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாவட்ட அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வுக்கு  மாநிலக்குழு உறுப்பினர் எழுச்சிக்கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்கள் திருச்சியிலிருந்து கலந்து கொண்டது நிகழ்வினை மேலும் சிறப்பு செய்தது. மாநில குழு உறுப்பினர் எழுத்தாளர் கோவில் குணா,  பேராசிரியர் சிவகவி காளிதாஸ், எழுத்தாளர் சி.பாலையா, எழுத்தாளர் கொத்தமங்கலம் சிவானந்தம், கவிஞர் சின்ன கனகு, என ஆளுமைகள் பலரும் முட்டிக்குறிச்சி நாவல் குறித்து பேசினார்கள்.


எழுச்சிக்கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்களின் புரட்சிகரமான உரை தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம் தோழர்களின் இதயங்களை மேலும் வலுவாக்கியது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் மாதவன் அவர்கள், கவிஞர் ஜீவாதாசன், பாடகர் பெருமாள் பட்டி அடைக்கலம், எழுத்தாளர் பாலஜோதி இராமச்சந்திரன்,  கவிஞர் அழகுநிலவன், கவிஞர் பெர்னாட்ஷா, இந்திய கம்யூனிஸ்ட் தோழர் பாண்டியராஜன் உட்பட தோழர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது. 


"முட்டிக்குறிச்சி" நாவல் முழுவதையும் அழகான கவிதையாக்கி எல்லோரும் பாராட்டும்படி வாசித்தார் கவிஞர் சின்ன கனகு.  


கவிஞர் சின்ன கனகு அவர்கள் முட்டிக்குறிச்சி நாவல் குறித்து வாசித்த கவிதை உங்கள் வாசிப்புக்கு.....


பொய்யாய் முரண்டு பிடித்த

பெட்டைக்கோழி சேவலுடன் 

கூடிமகிழும் காட்சி 

காளைக்கோழி மலையின் 

திமிழ் கொண்டைபிடித்த

மகிழ்ச்சி 


மனிதத் தோலின் நிறம் 

சிகப்பு சீக்கென்பதால் 

அழகப்பன் பிறப்பு 

அழுஞ்சிப் பழத்துடன் 

ஒப்பீடு சிறப்பு


கட்டாந்தரையொரசி

காரைமுள்ளெடுத்து கீறி

சுவைக்கும் கத்தாழம்பழத்தை

ஈட்டியுள்ள

செவத்தப்பயலுகலாக பயமுறுத்தும்

முரணருமை


பட்டவன் முனியன்

நாட்டார் தெய்வங்கள் 

இடமாறிய சிவன்

தடமாறா பதிவு 


ஜாதி வன்ம

சின்னச்சாமிக்கு

நூதன தண்டனை அளித்து

தப்பித்த தடையமழிப்பு


கருப்பையாவுடன்

காதல் கொண்டதால்

பயங்கோலி வெள்ளாளச்சிக்கு

பெருமலையும் கடுகானகாட்சி

ஊரையே ஒதுக்கிவைத்தது சாட்சி


முட்டுச்சேலை  

ஒரு சமூகம்

தொட்டுத் தந்தால் 

தீட்டோடிப்போகும் 

கேள்விப்பட்டிருக்கிறேன் 

முட்டுக்குறிச்சியில் 

இத்தனை துன்பங்கள் 

கலங்கி தவிக்கிறேன் 


பார்வதி கண்டவனார் 

காராளவேந்தன் காவண்ணா

இருந்தென்ன 

அன்று 

வயநாட்டில்

இன்று

வங்காளத்தில்

வளனார்கள் 

மாரியம்மாக்களை 

சூறையாடிக்கொண்டேயுள்ளனர்

வேரறுக்க கரம்கோர்ப்போம்


நேற்றைய நிகழ்வுகளை 

நாளைய தலைமுறையடைய 

இன்று

கற்பனை கலப்பில்லா

வட்டார மொழி சிதைவில்லா

கற்றாலை

அட்டைப்பட முகப்புடன் 

முட்டிக்குறிச்சி

மூலிகை நூல்படியமைத்த 

விருதாளர் இன்னும் பல 

படைப்புகள்கண்டு 

விருதுகள்

பெற வாழ்த்துகிறேன்...


                  அன்புடன்

               சின்ன💊கனகு




மாவட்டத் தலைவர் எழுத்தாளர் அண்டனூர் சுரா அவர்கள் தலைமையில் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் நிகழ்ச்சி தொகுப்பு என சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு கவிஞர் சிவகுமார் அவர்கள் நன்றிபாராட்டினார்.



தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட பொருளாளராகிய சோலச்சியின் நூலைக் கொண்டாடுவது என்பது தனது தோழனை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய நிகழ்வாகும். பேரன்பின் தோழமைகளுக்கு பேரன்பு நிறைந்த மகிழ்ச்சியை தெரிவித்து மகிழ்கின்றேன்.


பேரன்பின் வழியில் 

சோலச்சி