வெள்ளி, 26 ஜூலை, 2024

சோலச்சியின் காட்டு நெறிஞ்சி- பேரா சா.விஸ்வநாதன்

 🌻நல் வணக்கம்🙏



சுரண்டப்பட்டது 

மண்வளம் மட்டுமல்ல

மனித வளமும் தான்!


விழுதொன்று கண்டேன்

கவிதையில் .. பக். 22

                      ....

வீட்டு வேலையும்

விருந்தினர்

உபசரிப்பும்

காத்திருக்கிறது ...


விளம்பர

இடை வேலைக்காக....!

பக்.29.

                       .....

மரம் செழிக்க

வேரும் விழுதும் ...


மாநிலம் தலைக்க

மண்ணும் மனிதமும்...


மண் 

வளர்ச்சியின் முத்திரை!

மனிதம்

நட்பின்

விழித்திரை!

பக்.36.

              ....

தானே தலைவர் என்பார்

தர்மம் நீதி வெல்லும் என்பார்

ஓட்டைகள் ஆயிரம்

வைத்துக் கொண்டு

அங்கே ஒழுகுது

இங்கே ஒழுகுது என்பார்.

தன் ஓட்டை அடைக்க

மறந்திடுவார்!


தமிழாய்! தமிழராய் !

கவிதையில் ..

பக். 74.

                     .....

"சோலச்சி" என்ற, தன் கல்விக்கு வழிகாட்டியதோடு, வாழ்க்கைக்கும் வழிகாட்டிய ஆசிரியையின் பெயரில் இருக்கும்,திருப்பதியை கஜா புயல் நிவாரணத்தின் போது, மருத்துவர் ராமதாஸ் அவர்களின் மருத்துவமனையில் முதன் முதலில் சமூக சேவகராக பார்த்தது. இங்கிருந்து தான் நிவாரணப் பொருட்கள் கிராமங்களுக்குக் கொண்டு செல்லப்படும். மனிதர் மூட்டை அரிசியை அநாயசமாக தூக்கிக் கொண்டு போவார். லாரி பொருட்களை சத்தமில்லாமல் இறக்கி விடுவார்கள் சோலச்சியும், எப்போதும் புன்னகையோடு பயணிக்கும்  ஜெரால்டும். ஜெரால்டு அப்போது பள்ளி மாணவர் இப்போது பொறியாளர்.எத்தனையோ குடும்பங்களுக்கு இவர்கள் வழியே பொருட்கள் போய் சேர்ந்திருக்கிறது.

பின்னர் தான் தெரியும் சோலச்சி, புதுக்கோட்டை மாவட்ட ஒரு பின்தங்கிய கிராமப் பள்ளி ஆசிரியர் என்று.

சோலச்சி, ஆசிரியர், சமூக சேவகர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர் தற்போது நாவலாசிரியர் என்று பன்முகம் கொண்டவர்.


அவரின் இந்த "காட்டு நெறிஞ்சி" கவிதைத் தொகுப்பு, சமூகம், தேசம் சார்ந்த பிரச்சினைகளை பேசும் கவிதை நூல். எல்லோருக்கும், படித்தவுடன் புரியும் எளிய கவிதைகள். 


எல்லா கவிதைகளும் சிறப்பு. அதில் இரண்டு கவிதைகள் எனக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றியது.

ஒன்று, 


உலக சிம்மாசனத்தில்

உயர்ந்த இடம்

உங்களுக்குத்தான்!


முயற்சியில்

நீங்களே 

எனக்குப் பாடம்!


 என்று,நத்தை, சிலந்தி, எறும்பு மூன்றையும் வைத்து வரைந்திருக்கும் . 'முயற்சி' கவிதை.

இரண்டாவது, சென்னை

'கூவம்' ஆற்றை வைத்து எழுதியிருக்கும்

'கண்ணீர் அஞ்சலி ' கவிதை.

1978 ல் நான் சென்னைக்கு முதலில் போன போது முகத்தில் அடித்த கூவம் 'மணம்' இந்த கவிதையைப் படித்த போது மீண்டும் முகத்தில் அடித்தது 


அம்பானி வீட்டுக்கு போகும் இந்தியப் பிரமுகர்கள் 'தராவி'க்குள் போக மாட்டார்கள்.

சென்னையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் கூவம் கரையிலும், பக்கிங்காம் கால்வாய்க் கரையிலும் நடக்க மாட்டார்கள். "இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது" என்பார் காந்தி. சென்னை, மும்பையின் ஆன்மா கூவம் கரையிலும், தராவியிலும் தான் என்று சொல்லலாம். ஒரு முறை, இந்தியாவை உலக வல்லரசாக நினைப்பவர்கள் இந்த இடங்களில் வசிக்கும் மக்களைத் தரிசித்தால் இந்த தேசத்தின் நிலையை அறியலாம்.


கூவம் சிரழிக்கப்பட்டதையும்  தேசத்தின் அவலத்தையும் கூவம் வழி பேசியிருக்கிறார் சோலச்சி, கண்ணீர் அஞ்சலி கவிதையில் . கூவத்தின் வழி இப்படி தேசத்தை யாராவது பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை.


வாசிக்க வேண்டிய கவிதை நூல்.


சோலச்சிக்கு ....💐💐


இனிய நந்தவனம் பதிப்பகம்,

சென்னை.

94432 84823

ரூ.110/-

பேராசிரியர் சா.விஸ்வநாதன்




செயலர்,

வாசகர் பேரவை

புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக