சனி, 13 டிசம்பர், 2025

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - காலத்தால் அழியாத காவிய படைப்பு. கவிஞர் க.சிவக்குமார்

 

சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - காலத்தால் அழியாத காவிய படைப்பு.

கவிஞர் க.சிவக்குமார்



கண்களால் வாசித்ததை...

இதயங்களால் நேசித்து...

மனதால் யோசித்து கரம்பிடித்து எழுதுகிறேன்.

      சேற்றில் மலர்ந்த செந்தாமரை மலர்போல் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் அகரப்பட்டியில் பிறந்து சிகரத்தை தொட்டுவிட துடிக்கும்

புரட்சியாளர்...

சமூக சிந்தனையாளர்

படைப்பாளி

உழைப்பாளி

எழுத்தாளர்

போராளி

அகரம் முதல் சிகரம் வரை தோள் கொடுக்கும் உன்னதமான அன்புமிக்க தோழர் சோலச்சி.

தமிழைச் சீண்டுவோர் கதி கலங்கி ஓடட்டும்

என்ற வரிகளை இடி முழங்கச் சொல்லியுள்ளார்...

முதல் பக்கத்திலே இப்படி என்றால் அடுத்த பக்கங்களில் எப்படி இருக்குமென்று கதிகலங்கிப்போனேன்.

பிணத்தை எரிச்சப்ப

காத்து பெருக்கெடுத்து வீச

புகைபூரா கோயிலுக்குள்ள

பூந்து விளையாடுச்சு

இனிப் பொறந்தா

புகையாதான் பொறக்கணும்னு

போறபோக்குல

இங்க செத்தாதான் சாமியவே பார்க்கமுடியுமுனு

எங்கப்பா சொன்னது

இப்பவும் கேட்குது.....

என்ற தீண்டாமை எவ்வளவு தாண்டவம் ஆடுகிறது என்பதை வாசிக்கும் பொழுது உணரமுடிகிறது.

உழைக்கும் வர்க்கத்தையும்

போராடும் வர்க்கத்தையும்

    தோழா ழோழா என தோள்தட்டி எழுப்பியதையும் தனது கவிதை வரி சொற்களால் தட்டி எழுப்பியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.

கிராமத்து வீட்டு வாழ்க்கை...

விடுதி வாழ்க்கை...

வயல் வாழ்க்கையையும்...

பட்டணத்தில்தான் பட்ட

இன்னல்களையும்

வெளிப்படையாகவே எழுதியுள்ளார்...

காதலும் கடந்து போகும்...

சாதல் என்பது நினைவில் நின்று விடும்

என்பதை தனது அம்மாவின் இறப்பை இன்று வரை நினைவில் கொண்டுள்ளதை அடக்க முடியாத அழுகையால் படைத்துள்ளார்.

நீர் நிலம் கண்மாய் பனை மரங்கள்

பறவைகள் மலைகள்...

காற்று மழை புயல் இவைகளுடன் தான் வாழ்ந்த வாழ்வை அற்புதமாக கூறியுள்ளார்...

நீயும் அதுதான்

நானும் அதுதான்...

ஒரு நூல் இடைவெளிதான்

என்கிற கவிதையில் நால்வர்ணத்தை நெற்றியில் அடித்தார் போல் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்...

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நீங்கள் இந்த கவ நூலை வாங்கி வாசிக்கும்பொழுது அதன் உண்மை தன்மையை உணரலாம்.

     கூடடைய வேண்டிய பறவையொன்று யாருமற்ற சாமத்தில் பயணிக்கிறது என்ற வரிகளை வாசித்தபோது, ​​சாமத்தில் கூட சத்தமின்றி பறவைகள் பயணிக்குமா என பயந்துப் போனேன்.

      கூட்டமாய் விளக்கேற்றி கொஞ்சி விளையாடும் வின்மீன்கள் எனும் கவிதையின் வீச்சைக்கண்டு வியந்துப்போனேன்.

    அப்பாையால வாங்கிய அடி சோலச்சி அவர்களுக்கு வலித்ததோ என்னவோ தெரியல. ஆனால், ஆத்தா எழுந்து வா என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவி வரிகளை வாசிக்கும்போது என்னை அறியாமலே என் கண்களில் கண்ணீர் கொட்டிவிட்டன. புத்தகம் நனைந்து விட்டது.

     சிரித்த முகத்தோடு வாழும் மனிதர்கள் சிலரின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சோகங்களையும் துயரங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி விடுமா என்றும் கலங்கிப்போனேன். தாயின் இழப்பு எந்த அளவிற்கு மனதைப்பாதிக்கும் என்பதை மனம் உருக எழுதியுள்ளார். தாயின் அருமையை உணர்த்தியுள்ளார்.

      மோகன் வாத்தியாரும் குழந்தைவேல் வாத்தியாரும் பள்ளிக்கு வராமல் மாணவர்கள் கோவில்களில் விழுந்து அழுது புரண்டுள்ளனர். சொல்லியுள்ளார். அதை வாசிக்கும்போது எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன்.

     பள்ளிப்பருவ காதலை பக்குவமாய் பத்திரப்படுத்தி வைத்து மறவாமால் இன்றுவரை நினைவில் வைத்திருப்பதை ஆட்டோகிராப் சினிமாவில் பார்ப்பதைப்போல் தான் கடந்து போகும் வந்தான் காலங்களை கண்ணீர்மல்க எழுதியுள்ளார்.

      பலருடைய வாழ்க்கை ஆட்டோகிராப் போலவே நகர்ந்து செல்வதை தனது கவிதை வரிகளால் நினைவுபடுத்தியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

      படி....படி....படி என்ற தலைப்பில் தன் வாழ்வில் கற்றவற்றை பிறருக்கு பயனுறும்படி பயனுறபடி படி படி என படிபடியாக உரக்கச்சொல்லியுள்ளார்.

  தூங்கி கெடக்குடா தேசம்...நலிஞ்சுப்போச்சுடா தூக்கி நிறுத்துடா என்று நாட்டுப்பற்றுடன் தூங்காமல் கனத்த இதயத்தோடு கவலையுடன் எழுதியுள்ளார்.

இயற்கையின் படைப்பையும்

செயற்கையின் ஆணவத்தையும்

பெண்களின் பெருமையையும்...

பெண் படும் கொடுமைகளையும்

தடைகளை உடைத்தெறிந்தவற்றையும் சிறிதும் தயக்கமில்லாமல் எழுதியுள்ளார்.

   இல்லை இல்லை இல்லை என்ற சொல்லை மறந்தால் தொடருமா தொல்லை என்ற சொல்லை தொல்லையில்லாமல் எழுதியுள்ளார்.

  முடியாது என்பவனுக்கு எதுவும் முடியாது. முடியும் என்பவனுக்கு எதுவும் சாத்தியமே என்றும் விழிப்புடன் விழித்தெழுந்து உயிர்த்தெழ வேண்டும் என்று உரக்கச்சொல்லியுள்ளார்.

   இளமையில் கல்வி கற்பதே தனது உயிர் மூச்சாக கருதியுள்ளார். தான் கற்றதன் பயனாக இன்று பிறருக்கு கற்பித்தலை தனது தலையாய கடமையாக கருதி செயலாற்றுகிறார்.

   களத்தில் இறங்கிப் போராடுவது எவ்வளவு கடினம் என்பதை வலியுடனும் வேதனையுடனும் கூறியுள்ளார்.

   மூச்சுக்கும் பேச்சுக்கும் நாம் வரி செலுத்துவதை வரியாக விவரித்துள்ளார்.

அடடா தோழா எழடா நீயும் ஆழ்ந்த உறக்கம் இன்னும் ஏனடா என்ற வரிகளால் தோழர்களை தட்டி எழுப்பியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இளைப்பாறுவதற்கும்

களைப்பாறுவற்கும்

சாய்ந்து கொள்வதற்கு சிலருக்கு சில சாய்வுகள் தேவை என்பதை சாய்வில்லாமல் சாய்வு என்ற தலைப்பில் எழுதியவற்றை எண்ணிப்பார்க்க வைக்கிறது. நண்பர்கள் சாய்ந்து கொள்வதற்கு நட்பு எனும் நாற்காலி தேவைப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்ணின் வீரத்தையும்

மன வலிமையையும்

தைரியத்தையும்

நம் நாட்டுக்காக

இரத்தம் சிந்தி மாண்டுப்போன

பெண்களின் புரட்சியை புரியும்படி எளிமையாக எழுதியுள்ளார். நாஞ்செலி எனும் வீரத்தாய் என்ற தலைப்பில் எழுதியுள்ள கவிதை வலி நிறைந்தது. பெண்களின் தன்மானத்தை காப்பதற்காக அந்த தாய் எடுத்த முடிவுதான் பின்னாளில் பேரழுச்சியை ஏற்படுத்தியது.

  பறவைகளின் காதலையும் உணர்வுகளையும் தன் இருப்பிடம் நோக்கி திரும்பும் அந்த பற்றுதலையும் நன்கு உணர்ந்து எழுதப்பட்டுள்ளது. ரசனை மிக்க கவிதை.

  ஆணவம் மேலோங்கும் அதிகாரத்தை அதிரச்செய்யும்படியான படைப்புகளை நிறைய படைத்துள்ளார்.

  விசாலமான பார்வை இருந்தால் போதும் வீசும் காற்று கூட தென்றலாய் மாறும் என்ற கவி வரிகளை வாசிக்கும்போதே தென்றல் வீசுகிறது.

 எழுதுகோல்களுக்கும் துப்பாக்கிகளுக்கும் இடையிலான சக்தியை தன் கவி வரிகளால் விவரித்துள்ளார். இனம் மொழி சாதி மதங்கள் ஏற்படுத்தும் விபரீதங்களை தன் ஆதங்கமாக அள்ளி வீசியுள்ளார்...

  சட்டங்கள் என்றவுடன் சாமியும் சத்தமில்லாமல் உறங்கி விட்டனவோ என்று சாடியுள்ளார்...

  சொற்களுக்கும் மணம் உண்டு என்பதனை மனம் மகிழும் படி கூறியுள்ளார்...

  வாழ்க்கையை இழந்த ஒரு பெண்ணின் துயரத்தை பட்டமரத்தோடு ஒப்பிட்டு எழுதியுள்ளதை வாசிக்கும்போது மனதில் வலியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது அப்படி ஒரு வரிகள். தாயின் பாசத்தையும் இழப்பையும் வேறு எவராலும் இப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை...


ஆண்ட பரம்பரையும்

ஓர் நாள் மாண்டு போகுமோ...

அதிகார திமிரை

அரை நிர்வாணமாக்குவோம்

என்பதை தலை நிமிர்ந்து

நெஞ்சை நிமிர்த்தி உரக்கச்சொல்லியுள்ளார்...

கோடி கோடியாய் சேர்த்தாலும்...

கோவணமின்றி பிறக்கிறார்கள்...

கொடித்துணியோடு

எரிக்கிறார்கள்...

எதுவும் சொந்தமில்லை

என்பதனை சில வரிகள்

உணர வைக்கின்றன...

மழை பெய்தபோது

வானத்திற்கு வேர்த்தது போல...

புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது...

எனது கண்களுக்கு வேர்த்து விட்டன...

நீ இளைப்பாறினால்(மரம்)

நாங்கள் களைப்பாறுவோம் (காற்று)

அப்பாையால ஒரு அடி

  கவிதை நூலை வாசிக்கும் வரை எனது வாழ்கையில் நடந்த சம்பவங்களே மிகவும் துயரமானதாகவும் உயரமானதாகவும் கடினமானதாகவும் நினைத்திருந்தேன். வாசித்தப்பிறகு மிகவும் யோசித்துப்பார்க்கிறேன்.

  இதற்குமேல் என்னால் புத்தகத்தில் உள்ள வரிகளின் வலிகளை தாங்கிக்கொண்டு தொடர்ந்து எழுதமுடியவில்லை

இது எனது ஆழ்மனதின் பதிவாகும்...

கவிஞர் . சிவக்குமார்

வானம் மழையைப் பொழியும்பொழுது

மேகத்திற்கே வேர்த்தது போல...

இந்நூலை வாசிக்கும்போது எனக்குள்ளே

ஓர் உணர்வு தோன்றியது ஏனோ...

புத்தகத்தை வாங்கி வாசிப்பாருங்கள்

காலத்தால் அழியாத காவியப் படைப்பை வழங்கிய எழுத்தாளர் சோலச்சி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

கவிஞர் க.சிவக்குமார்

புதுக்கோட்டை

98659 80793

வெளியிடு:

செங்காந்தள் சோழன் பதிப்பகம்

மணப்பாறை

தமிழ்நாடு

+91 98657 80742

விலை ரூ 150/-



சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி – காலத்தால் அழியாத காவிய படைப்பு…. ஒரு பார்வை... கவிஞர் க.சிவக்குமார்

https://akkinikkunchu.com/?p=352040/



சனி, 29 நவம்பர், 2025

கவிஞர் சி.கலையரசன் அவர்களின் வீதியில் தவழும் விதைகள் - ஒரு பார்வை - சோலச்சி

 

கவிஞர் சி.கலையரசன் அவர்களின் வீதியில் தவழும் விதைகள் – ஒரு பார்வை – சோலச்சி



    தமிழரின் வரலாறு என்பது நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்டது. இலக்கணம், இலக்கியத்தில் இயல் இசை நாடகமாய் திகழும் முத்தமிழுக்கு என்று நிறைய சிறப்புகள் உண்டு. அதனை கொண்டாடும் விதமாக நாள்தோறும் தமிழில் எண்ணற்ற நூல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கவிஞர் சி.கலையரசன் அவர்களின் வீதியில் தவழும் விதைகள் என்கிற கவிதை நூல் தமிழ் உலகிற்கு புதிய வரவாக கிடைத்துள்ளது. தனது தாய் தந்தையருக்கு இந்நூலை அர்ப்பணித்துள்ள கவிஞர் சி.கலையரசன் அவர்கள் எண்ணற்ற பாடுபொருள்களை உள்வாங்கி தனக்கே உரிய எளிய நடையில் கவிதைகளைப் புனைந்துள்ளார்.

       வாசிப்பவர்களுக்கு ஏற்ற எளிய நடையில் மொழி வளத்தை உள்வாங்கி சிறப்பான கவிதைகளை தந்துள்ள கவிஞருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை முதலில் தெரிவித்து மகிழ்கிறேன்.

    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்றார் ஔவையார். செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றார் பாரதியார். இந்த கவிதைகள் யாருக்கேனும் புரியாமல் இருக்குமா.? அப்படியானால் மொழி நடையில் எளிய பதத்தை புகுத்தி வாசகரை வாசிக்க செய்வதில்தான் ஒரு படைப்பாளன் வெற்றி அடைகின்றார். அந்த வகையில் கவிஞர் சி.கலையரசன் அவர்களும் வெற்றி அடைந்து இருக்கின்றார்.

சோம்பலுக்குள் மூழ்கிவிட்டால்

மீளமுடி யாது!.. வெறும்

தூக்கம்ஒன்றே நோக்கம்என்றால்

நாளைவிடி யாது!

சாம்பலுக்குள் மீண்டெழும்தீ

எளிதில்அணை யாது!.. உன்

சாதனைக்குப் பூமிப்பந்தில்

ஈடுஇணை ஏது?

     என்று எல்லோரையும் எழுச்சி பெற்று பூமிப்பந்தில் சாதனை புரிய தன்னம்பிக்கையை தூண்டுவார் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள். இதே கருத்தை வலியுறுத்தி இந்நூலின் முதல் கவிதையாக வெற்றி கனியைப் பறிப்பதற்கு தன்னம்பிக்கை என்னும் விதையை விதைக்கின்றார் கவிஞர்.

இலக்கெனும் விதைபதித்து

உழைப்பெனும் நீர்பாய்ச்சி

முயற்சிக் கணைதொடுத்தால்

விழாதோ வெற்றிக்கனி...

 என்று தன்னம்பிக்கையோடு கவிதை நூலை தொடங்குவது கூடுதல் சிறப்பு. அதோடு நின்று விடாமல் உழைப்பின் வியர்வையை உச்சியில் வைத்து கொண்டாடுகின்றார். உழைக்காமல் வியர்வை சிந்தாமல் சம்பாதிப்பது எப்படி என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் உழைப்பின் பெருமையை பாடுவது சிறப்பு.

வியர்வைத் துளியில்

என் முகம் பார்த்தேன்

அதிலும் உழைப்பின்

வடிவமே தெரிந்தது.....

 என்கின்றார் கவிஞர். ஒரு மனிதனின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது தன்னம்பிக்கையும் அவரது உழைப்பும்தான் என்பதை உணர வேண்டும்.

       பெண்மையை கொண்டாடாத கவிஞர்களே கிடையாது. திருவள்ளுவர் கூட பெண்ணை உச்சம் தொட்டு கொண்டாடியிருப்பார்.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

என்பது திருக்குறள். இதற்கான விளக்கத்தை வாசகராகிய உங்களிடமே விட்டு விடுகின்றேன். ஏனென்றால், தேடலில்தான் உண்மையான ரசனையை உள்வாங்க முடியும்.

பெண்மை மென்மையின்

உறைவிடம்.!

உணர்ச்சி பிம்பத்தின்

ஊற்று.!

இல்லறத்தின் இனிய

ஒளி.!

என்று குறிப்பிடுகின்றார் கவிஞர். ஆமாம், இல்லறத்தின் இனிய ஒளி என்பது மிகையல்ல.

     கனவு மெய்ப்பட வேண்டும் என்கிற கவிதையில் ஆசிரியர்களை மனசார வாழ்த்தி மகிழ்கின்றார்.

சமுதாய வீதியிலே

சாதிமத இருளகற்றும்

சூரியனாய்க் கதிர்பரப்பி

ஒளி தரவே வாழ்த்துகின்றேன்...

     என்று வாழ்த்துவது பாராட்டுக்குரியதுதான். என்றாலும், இந்த சமூகம் ஆசிரியர்களை வேற்று கிரகவாசிகளை போல் பார்க்கும் நிலையும் உருவாகியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தால்தான் வளரும் தலைமுறையினரின் வாழ்க்கை சிறப்பாக அமையும். ஆனால் நடப்பது என்ன.? மாணவர்களை ஆசிரியர் கண்டித்தால் நடக்கும் போராட்டங்களையும் ஆசிரியர்கள் படும் துயரங்களையும் நாளேடுகளிலும் ஊடகங்களிலும் பார்க்க முடிகிறது. ஆசிரியர்களை கொண்டாடாத சமூகம் எப்படி முன்னேற்றத்தை காணும் என்பதையும் இச்சமூகம் உணர வேண்டும்.

    ஜனநாயகம் என்கிற தலைப்பிலான கவிதையில் தேர்தலை பற்றியும் வாக்களிக்கும் உரிமை பற்றியும் எடுத்துரைக்கின்றார். வாக்களிப்பது நமது உரிமை. அதை பணத்திற்காக அடமானம் வைத்து விடக்கூடாது எனவும் அறைகூவல் விடுக்கின்றார்.

தேர்தல் களத்தில்

நடத்தப்படுவது

ஓட்டு வேட்டை அல்ல

உரிமை வேட்டை.

என்கின்றார். அதனால் சிந்தித்து செயலாற்று உன் சிறப்பறிந்து பணியாற்று என்றும் வழிகாட்டுகின்றார். சரியானவர்களை நாம் தேர்ந்தெடுக்காமல் அது சரி இல்லை இது சரியில்லை என்று குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

        மனைவியின் சமையல் என்கிற கவிதையில் அவரது மனைவியின் சமையலை வேண்டும் அளவிற்கு கொண்டாடித் இருக்கின்றார். இதன் மூலம் மனைவிக்கு ஏற்ற கணவன் என்பதற்கான நற்சான்றிதழையும் பெற்று விடுகின்றார் என்பதுதான் உண்மை. மனைவியிடம் நற்சான்றிதழ் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனாலும், இந்தக் கவிதையின் மூலம் கவிஞர் சி.கலையரசன் அவர்கள் மனைவியிடம் பெரும் பாராட்டை பெற்றிருப்பார் என்பதையும் உணர முடியும்.

என் மனைவி விஜயா

சமையல் செய்தால்

வீதியெல்லாம் வாசம்வரும்...

.....

......

பாகற்காய் வறுவலும்

பப்பாளிக் கூட்டும்

வெண்டிக்காய் மண்டியும்

வெள்ளரிக்காய் பச்சடியும்

....

.....

உண்ட கை உடன் மணக்கும்

ஊரெல்லாம் வாசம் வரும்

தென்றல் தவழ்ந்து வரும்

தெருவெல்லாம் வாசம் வரும்...

என்று மனைவியின் சமயலை உலகறிய கொண்டாடி மகிழும் கவிஞர் உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரர்தான். யாரெல்லாம் மனைவியின் சமையலை கொண்டாடுகிறோம் என்பதை அவரவரின் பார்வைக்கே விட்டு விடுகின்றேன்.

தாயென்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு…

நீ தனித்தனியா கோவில் குளம் அலைவது எதுக்கு…

அம்மாவின் பாதத்தில் கற்பூரம் கொளுத்து…

ஆனந்த கண்ணீரில் அபிஷேகம் நடத்து…

என்று அருணாச்சலம் திரைப்படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஒரு பாடலை எழுதி இருப்பார். இன்றைய காலகட்டத்தில் தாய் தந்தையரை பேணி காப்பது அரிதினும் அரிதான செயலாகவே பார்க்கப்படுகிறது. வீதியில் தவழும் விதைகள் என்னும் தலைப்பில்

வீட்டு பெட்டகத்தை

விலை உயர்ந்த

திரவியத்தை பேணிக்

காத்தல் கடனாகும்....

    பெற்றோரை அகவை முதிர்வு காலத்தில் பேணிக்காப்பது நம்முடைய கடமையெனவும் வலியுறுத்துகின்றார்.



விளை நிலங்கள் வீடான கதை என்னும் தலைப்பில்

காடு மேடெல்லாம்

கழனியாக்கி கற்பிளந்து

கடும் விஷப்பாம்பும்

காட்டு விலங்குகளும்

காணாமல் போக

காலம் நேரம் பார்க்காமல்

கடும் உழைப்பால் சீர்திருத்தி

ஏரோட்டும் உழவர்

போராட்டம் நிகழ்ந்த

காலம் எங்கே.?

.....

ஏரோடும் கழனியெல்லாம்

காரோடும் வீதியாச்சே....

தாகம் தணிக்கும்

தண்ணீரும் காசாச்சே

எதிர்காலம் என்னவாகும்

எண்ணிப் பார்த்தாயா.?

என கவலைப்படுகின்றார் கவிஞர். இயற்கையை நேசிக்கும் இந்த மனித இனத்தையும் அனைத்து உயிர்களையும் நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி எல்லாம் கவிதை எழுத முடியும்.

     நெஞ்சுக்கு நெருக்கமான கவிதைகளாக படைத்துள்ளார் கவிஞர். கவிதைகளை வாசிக்கின்ற பொழுது அவை உங்களோடு நெருக்கமாக பேசி மகிழும்.

     இந்நூலில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம், முண்டாசு கவிஞர் பாரதி, கல்வியாளர் மெக்காலே, பெருந்தலைவர் காமராசர், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், பொதுவுடமை சித்தாந்தத்தின் பேராசான் தோழர் ஜீவா, சுவாமி விவேகானந்தர் என எல்லோரையும் கொண்டாடி மகிழ்கின்றார். வளரும் தலைமுறையினர் இப்பெரும் ஆளுமைகளைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

   தாய்மை, நட்பு, காதல், சமூகம், இயற்கை என அனைத்தையும் பாடுபொருளாக கொண்டு தனக்கான மொழியில் எளிய நடையில் நூலாக வழங்கியிருக்கும் கவிஞரை மனசார பாராட்டி மகிழ்கின்றேன். நடப்பு அரசியலையும் சனாதனத்தின் கோரப்பிடியையும் நிறையவே பாட வேண்டும் என்ற வேண்டுகோளோடு தமிழ் கூறும் நல்உலகிற்க்கு கிடைத்த இக்கவிஞரையும் அவர் அளித்த வீதியில் தவழும் விதைகள் என்னும் நூலையும் கொண்டாடி மகிழ்வது நம்முடைய தலையாய கடமை. ஏராளமான நூல்களை தமிழுக்கு வழங்கி மேன்மை அடைய கவிஞர் சி.கலையரசன் அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.



வெளியீடு: மௌவல் பதிப்பகம்

பதிப்பகத்தார் அலைபேசி எண்: 9787709687 , 9488840898

ஆண்டு: 2025

பக்கம்: 176

விலை: ரூபாய் 150/-

நூலாசிரியர்: கவிஞர் சி.கலையரசன்

அலைபேசி எண்: 9524252032











அன்பு பண்பு பாசம்

நட்பின் வழியில்

சோலச்சி






திங்கள், 17 நவம்பர், 2025

ஜாக்டோ - ஜியோ - (2019) சிறைப்போராளியின் கவிதை

 ஜாக்டோ ஜியோ - (2019)சிறை போராளியின் கவிதை:

    


     2025 நவம்பர் 18 போராட வாரீர்...!



கொதித்து அடங்குவதற்கு நீ என்ன குழம்பா

இல்லை

குன்று வெடித்து சிதறும் தீ பிழம்பா..?


இலகுவாக ஒடிந்து விடும் முருங்கையும் அல்ல

நாம்

இலட்சியம் இல்ல வெறுங்கையும் அல்ல...!


கோடி கைகள் உயர்ந்து நிற்கும்

கொள்கைகளின் பிறப்பிடம்

கோரிக்கைகள் வெல்லாமல்

கண்கள் தேடாது உறைவிடம்..!


யாரோ ஒருவர் போராடுவார் என்றே

ஒதுங்கி விடாதே

உந்தன் கோவணமும் பறிபோகும்

மறந்துவிடாதே...!


உரிமை காக்க ஓங்கட்டும் கைகள்

உடைபடும் வரை நிரம்பட்டும் சிறைகள்..!


ஊதியம் பறிபோகும் என்று அஞ்சாதே

உயிரே போனால் எதுவும் மிஞ்சாதே...!


கொசுக்கடியில் சிறைவாசம் கண்டதுண்டா..?

அங்கு

கூழோ கஞ்சியோ குடித்து கிடந்ததுண்டா..?

கழிப்பறையில் தலைவைத்து படுத்ததுண்டா ..?

காலை எப்போது வரும் என கிடந்ததுண்டா..?

மூச்சை அடக்க முடியாமல்

மூத்திரத்தை சுவாசித்தது உண்டா..?


சிறை புகுந்த போராளியின்

சித்திரவதைகள் கேட்டதுண்டா...?

அறச்சிற்றம் கொள்ளாமல்

அடிமைகளாய் கிடப்பில் நியாயம் உண்டா..?


கோட்டை நோக்கி புறப்படாதவரை

அதிகாரத்தின்

கொட்டத்தை அடக்க முடியாது...!


அடங்கி ஒடுங்கி கிடந்தது போதும்

ஆர்ப்பரிக்கும் அலைகடலாய்

திமிரி எழு இப்போது

ஆட்சிக்கட்டில் ஆட்டம் காணும் அப்போது..!


வலிமை கொண்டு

வா...! வா....! வா...! தோழா

வழி பிறக்கும் தோதா...!

                      






 - சோலச்சி

செவ்வாய், 28 அக்டோபர், 2025

"சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி நூல் குறித்து - கவிஞர் சின்ன கனகு

 

"சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி நூல் குறித்து கவிஞர் சின்ன கனகு "


வாசகர் 🌹கருத்து

🍀🍀🍀🍀🍀🍀🍀


வட்டார மொழி

செதுக்கள் சேதாரம்

சிராய்ப்பு  இல்லாத

ஆப்பை( அகப்பை)

தலைப்பே சிறப்பு..!


மறைந்தும் மறையாத

தாயிடம்

துன்பம் விலக

தூங்கி எழ

ஆப்பையால ஒரு அடி

அரு மருந்தாக

வருந்தி கேட்பு..!


வாழப் படி

ஆழ(ள)ப் படி

நல்ல நூலைப் படி

மூனு படி அருமை..!


வான் வெளி

வசிப்பிட தேடலிலும்

வாகை சூடிய

பெண் இனமே

சாமி சன்னதியில்

அனுமதி இல்லையே..!


கீழக்கரை

மேலெழுவதை

சகிக்காமல்

வானுக்கும் பூமிக்கும்

பற்றும்

ஆதிக்க சா- தீ

அணைக்க அழைப்பு..!


இருப்பதை காக்க

இழந்ததை மீட்க

எழுத்து வா

தொழிற் சங்க

அறைகூவல்..!


பெருமாள்பட்டிகளின்

பேருண்மை..!


வெட்டாமல் விட்டு விட்டால்

பறவைகள் எச்சம் கூட

மரங்கள் நிறைந்த காடு..!


பதவிப்பசி

பரிமாறப்படுகிறது

மனிதக்கறி விருந்து

பனி மலை

ஆப்பிள் தோப்பில்..!


இப்படி

கவிஞர் சோலச்சியின்

ஆப்பையால் ஒரு அடி

இன்னும் ஏராளமான

தழும்புகளுடன்

கவிதையாக....

                 

கவிஞர் சின்ன கனகு 





                   
அன்புடன்

         வாசிப்பின்  வாசகர்

சின்ன கனகு புதுக்கோட்டை

               +91 98431 21055







கவிதை நூலை வாங்கி வாசிக்க:

செங்காந்தள் சோழன் பதிப்பகம்

+91 98657 80742




சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி - நிழற்படங்கள்

     சோலச்சியின் ஆப்பையால ஒரு அடி நூல் வெளியீட்டு விழா நிழற்படங்கள். 2025 புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் நடைபெற்றது. 


கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்கள் வெளியிட 
தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.




உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்கள் 























பதிப்பகத்தார் சிறப்பு செய்யப்படுகிறார்கள்.





















































































































































































































கவிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.












































































மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 






















கவிதை நூலை வாங்கி வாசிக்க:

செங்காந்தள் சோழன் பதிப்பகம்

+91 98657 80742