திங்கள், 17 நவம்பர், 2025

ஜாக்டோ - ஜியோ - (2019) சிறைப்போராளியின் கவிதை

 ஜாக்டோ ஜியோ - (2019)சிறை போராளியின் கவிதை:

    


     2025 நவம்பர் 18 போராட வாரீர்...!



கொதித்து அடங்குவதற்கு நீ என்ன குழம்பா

இல்லை

குன்று வெடித்து சிதறும் தீ பிழம்பா..?


இலகுவாக ஒடிந்து விடும் முருங்கையும் அல்ல

நாம்

இலட்சியம் இல்ல வெறுங்கையும் அல்ல...!


கோடி கைகள் உயர்ந்து நிற்கும்

கொள்கைகளின் பிறப்பிடம்

கோரிக்கைகள் வெல்லாமல்

கண்கள் தேடாது உறைவிடம்..!


யாரோ ஒருவர் போராடுவார் என்றே

ஒதுங்கி விடாதே

உந்தன் கோவணமும் பறிபோகும்

மறந்துவிடாதே...!


உரிமை காக்க ஓங்கட்டும் கைகள்

உடைபடும் வரை நிரம்பட்டும் சிறைகள்..!


ஊதியம் பறிபோகும் என்று அஞ்சாதே

உயிரே போனால் எதுவும் மிஞ்சாதே...!


கொசுக்கடியில் சிறைவாசம் கண்டதுண்டா..?

அங்கு

கூழோ கஞ்சியோ குடித்து கிடந்ததுண்டா..?

கழிப்பறையில் தலைவைத்து படுத்ததுண்டா ..?

காலை எப்போது வரும் என கிடந்ததுண்டா..?

மூச்சை அடக்க முடியாமல்

மூத்திரத்தை சுவாசித்தது உண்டா..?


சிறை புகுந்த போராளியின்

சித்திரவதைகள் கேட்டதுண்டா...?

அறச்சிற்றம் கொள்ளாமல்

அடிமைகளாய் கிடப்பில் நியாயம் உண்டா..?


கோட்டை நோக்கி புறப்படாதவரை

அதிகாரத்தின்

கொட்டத்தை அடக்க முடியாது...!


அடங்கி ஒடுங்கி கிடந்தது போதும்

ஆர்ப்பரிக்கும் அலைகடலாய்

திமிரி எழு இப்போது

ஆட்சிக்கட்டில் ஆட்டம் காணும் அப்போது..!


வலிமை கொண்டு

வா...! வா....! வா...! தோழா

வழி பிறக்கும் தோதா...!

                      






 - சோலச்சி

கருத்துகள் இல்லை: