வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

வட்ட விழி பொட்டழகி - சோலச்சி

வட்ட விழி பொட்டழகி
வாழைப்பூ கொசுவக்காரி
கட்டு மரத்தில் வாரேன்
கட்டிக் கொள்ள சம்மதமா-  இப்ப
நடுக்கடலில் அலையடிக்குது யார் காரணம்
நடு சாமம் ஆகும் நானும் வந்து
கட்டுறேன் தோரணம்....

ஆழ் கடலில் முக்குளித்து
அள்ளிவந்தேன் முத்துசிப்பி
அடுக்கு பானைக்குள்ளே
அதைக் காத்து வச்சிருக்கேன்
முத்துமாலை செய்யும் நாளு சீக்கிரம் வந்துடனும்
உன் கெளுத்தி மீன் கழுத்தில் மாட்டி அழகு பார்த்திடனும்

சுறா மீன் புடிச்சு
சுருட்டிக் கொண்ட போட்டவளே
கட்டு மரத்தை போல -  உன்ன
கட்டி அணைக்க வேணும்
வானவில்லு தரையிறங்கி
கோலம் போடணும் -  நமக்கு
வட்ட நிலவு வசதியான
கோட்டை கட்டணும்.....

துடுப்புப் போடயிலே
உன் இடுப்பு நெனச்சுக்குவேன்
என் இடுப்பு வலி மறந்து
லாவகமாக மீன் பிடிப்பேன்
நீ விரிக்காமலே உன் வலையில்
நானும் விழுந்துட்டேன்
நீ சிரிக்காமலே உன்னில் சேர
நான் நெருங்கிட்டேன்....

உப்புக் கருவாடு
ஊற வச்ச நெல்லுச்சோறு
ஒவ்வொரு நாளும் எனக்கு
ரசிக்க தரவேணும்
தன்னந்தனியாய் இருப்பதாலே தவிக்கிறேன்
தாரமாக்க சீக்கிரமே துடிக்கிறேன்....
                 - சோலச்சி அகரப்பட்டி

1 கருத்து: