சனி, 21 ஆகஸ்ட், 2021

வெள்ளைத் தீ - பாவலர் அறிவுமதி - சோலச்சி

    வெள்ளைத் தீ - பாவலர் அறிவுமதி - சோலச்சி

   நான் மிகவும் நேசிக்கும் கவிஞர்களில்  திரைப்பட பாடலாசிரியர் அண்ணன் பாவலர் அறிவுமதியும் ஒருவர். அண்ணன் அவர்களை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் சந்தித்தபோது ''தாங்கள் மீண்டும் ஒரு சிறுகதை தொகுப்பு கொண்டு வர வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டேன். ஏன் என்று ஆவலோடு கேட்ட அண்ணனிடம் ''தங்களின் வெள்ளைத் தீ சிறுகதை தொகுப்பினை வாசித்தேன்'' என்றேன்.


     அப்படியா என்று ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்தார். என் பேரன்புக்கு சொந்தக்காரர் ராசிபுரம் நாணற்காடன் அவர்கள்தான் இந்த நூலினை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர்.

    நூலில் பதினோரு சிறுகதைகள் உள்ளன. பதினொன்றும் பதினோரு முத்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

   அண்ணனிடம் 'உயிர்விடும் மூச்சு' என்கிற சிறுகதை குறித்து பேசும்போது அந்த கதை தனக்கு மிகவும் பிடித்த கதை என்றார். பெண்சிசு பேசுவது போல் அவ்வளவு அழகான கவித்துவத்துடன் எழுதியிருப்பார். அந்தக் கதையை வாசிக்கின்ற போது தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்கிற ஏக்கமும் வரும் ; பெண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையை கொண்டாடி மகிழ வேண்டும் என்கிற எண்ணமும் மேலோங்கும்.

   என்னுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் '' அண்ணாவின்... கலைஞரின் தமிழ் பிடித்து வளர்ந்ததுதான் என் உரை நடை. வண்ணதாசனைப் போல்.... கலாப்பிரியாவைப் போலத்தான் நானும். நடை... நடை மட்டும்தான்.

   நடையிலும் பல்வேறு நடைகளைத் தேடித்தேடிப் படித்துப் படித்து பாடுபொருள்களுக்குத் தகுந்தபடி நடை உத்திகளை பயன்படுத்தத் தீவிரமாய் முயற்சி செய்தேன்.

   தமிழில் எனக்கென தனித்த அடையாளத்திற்குரிய உரைநடையை உருவாக்க முயற்சித்திருப்பதன் அடையாளங்களே இந்தச் சிறுகதைகள்.

   கையெழுத்துப் பரம்பரைக்கு என்னைக் கைப்பிடித்து அழைத்து வந்தது திராவிட இயக்கம். ''

   சென்னை தணல் பதிப்பகம் மூலமாக 2004 ஆம் ஆண்டில் இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. 70 பக்கங்களை கொண்ட மிகச்சிறிய நூல் என்றாலும் அறிவார்ந்த மிகப்பெரிய நூல்.



விற்பனை உரிமை:
தமிழ் அலை
எண் 1, காவலர் குறுந்தெரு,
ஆலந்தூர் சாலை,
சைதாப்பேட்டை
சென்னை 600015
tamilalai@gmail.com
பேச: 9786218777

பேரன்பின் மகிழ்வில்
சோலச்சி

பேச: 9788210863

1 கருத்து:

  1. அறிவுமதி மாமாவோடு எடுத்த புகைப்படத்துடன் வெள்ளைத் தீ பற்றி எழுதியிருப்பது மகிழ்வும் அன்பும் தம்பி

    பதிலளிநீக்கு