செவ்வாய், 29 ஜூன், 2021

கொரணா காலத்து குறிப்புகள் - சோலச்சி

அடடா உலகம் நடுங்குது
ஆழ குழிதோண்டி இறங்குது
அணுகுண்டு இருந்தும் வீணானது
அழிவு தானே செய்தியானது

செத்தால் தானே வாயை கட்டுவோம்
இன்று
வாயை கட்டி அல்லவா
வலம் வருகின்றோம்

இடைவெளி விட்டு பழக முடிகிறது
இல்லை என்றால் உயிர் மடிகிறது

கடவுளின் செயலாளர்கள்
என தம்பட்டம் செய்வோரும்
கருவரைக்குள் செல்லவே
அஞ்சுகின்றனர்

யார் பெரியவர் என்ற போட்டியில்
தோற்றுப் போனார் கடவுள்

மத போதையின் பலர் -மாட்டு
மூத்திரம் குடித்தே மாண்டனர்
அறிவை தீட்டிய பலர்
ஆகாத செயலிலிருந்து மீண்டனர்

நூல்களோடு பழகுவது
ஞானக் குளியல்
நூல் அறிவின்றி செய்கின்றனர் சிலர்
சாணி குளியல்

அருவியில் குளித்தால் போதாதென்று
மாட்டுச் சாணியிலும் குளித்து
மதம் வளர்க்கின்றனர்

கேடு கெட்டு போச்சு வாழ்க்கை
தொடு நீ வாழ்ந்திட வழக்கை

கொராணா கொன்று குவித்தது குறைவு
கொடும் பசியாலும்
வேலை இன்றியும்
நடையாய் நடந்து செத்தது அதன் விளைவு

காப்பான் என்றே ஒன்றிப்போனோம்
கழுத்தை நெரித்து கருக்கலைத்தான்
கணக்கில்லாமல் பொதுச்சொத்தை வித்தான்

விளக்கை ஏற்று
வெறுங்கை தட்டு என
வேடிக்கை காட்டினான்
வெந்த புண்ணில் காய்ச்சிய வேலை நீட்டினான்

அய்யகோ..! என் நாடு
அடிமைப்பட்டுக் கிடந்தது
பல்லிளித்து பாசாங்கு செய்தது
குனிந்த முதுகு நிமிரவே இல்லை
கையில்
அணிந்த கயிறுகளுக்கு அளவே இல்லை

எல்லாம் மோடி வித்தையாய் இருக்கு
எழுந்து வா தோழா
வாலை நறுக்கு...

கொத்துக் கொத்தாய் அவரையைத்தான் பார்த்தோம்
கொத்தாய் மனிதர் செத்ததால்
அதிர்ச்சியில் உதடுகள் வேர்த்தோம்

கொராணா - காக்கிகளுக்குள் புகுந்தும்
கலவரம் செய்தது
ஜெயராஜ் பென்னிக்ஸை கொன்று குவித்தது

டீக்கடை சட்டியும் சாலையில் பறந்தது
பசுமாடும் பால் சுரக்க மறந்தது

ஆண்ட பரம்பரையும்
அடங்கி சென்றது
ஆண்டவன் வாரிசும்
அங்காடியில் நின்றது

கொராணா தீண்ட சிங்கமும் செத்தது
கொடிய சாதி மட்டும்
கொக்கரித்து நிக்குது...

கருப்பு சிவப்பு நீலம்
ஊர்தோறும் பறக்கட்டும்
காவிகளின் கொட்டம்
கண்ணெதிரே நொறுங்கட்டும்

பானையோடு பழகுங்கள் நல்லது-  என
உரக்கச் சொல்லுங்கள்
உதித்தது சூரியன்
நிமிர்ந்து நில்லுங்கள்...!!!
               -சோலச்சி
               பேச: 9788210863

1 கருத்து: