வியாழன், 29 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் குடிமகனின் கதறல் - சோலச்சி





ஊரடங்கில் உறைந்து கிடக்கிறது 
எங்களது உயிர்...

நடமாடுவதற்கே நடுங்குகின்றன
எங்கள் கால்கள்....

நடப்பதை அறியாமல்
தலைதெறிக்க ஓடி
தரையில் வீழ்கின்றன
எங்கள் கால்நடைகள்.....

கூந்தலில்
ரோஜாக்களை சூடி
அழகு பார்த்த
எங்கள் மண்
இரத்த ஆற்றை அள்ளி
உடலெங்கும் பூசி
வழிந்தோடச் செய்கிறது......

தொங்கும் ஆப்பிள்கள்
கொத்துக்கொத்தாக 
குண்டடிபட்டி சாகின்றன....

எல்லையில்லா வான்வெளியில்
எல்லையில் மூச்சுபட்டாலே
எரிந்து போகின்றன
எங்கள் உடல்கள்....












மூத்திரம் அடிப்பதற்கும்
மூச்சு விடுவதற்கும்
முறைப்படி அனுமதி கேட்க
முட்டுச் சந்துக்குள்
முடங்கிக்கிடக்கிறோம்.....

பசுமையான மண்ணில்
பாசாங்காய்
பதற்றத்தை உண்டாக்கி
பற்றியெரியச் செய்யும் வித்தைகள்
பாரபட்சமின்றி நடக்கின்றன......

பனி மலைகள்
இனி பலகோடி ரூபாய்க்கு
ஏலம் போகும்......

பள்ளத்தாக்குகள் பங்களா கட்டுவதற்கு
பயன்படுத்தப்படும் .....

வற்றாத நதிகளில்
தொழில்பட்டறை கழிவுகள்
தொய்வின்றி பயணமாகும்...

காடுகள் அழிக்கப்பட்டு
கால் செண்ட் இடம்
கால் கோடிக்கு விற்பனையாகும்....

முதலைகள் காணா மண்ணில்
பெரும் முதலைகள்
பெருவெளியில் நடமாடும்.....

மொழி திணிப்பும்
உணவு முறையும்
நடைமுறைக்கு தள்ளப்படும்.....

போர்க்கருவிகளின் கூடாரமாய்
அறிவிக்கப்பட்டு
நாங்கள் அகதியாக்கப்படலாம்....

நாதியற்றவர்களாய்
நாடெங்கும்
நடமாடும் நிலையும் வரலாம்.....




அழகிய மண்
இனி
அழுகிய மண்ணாய்
ஆகப்போவதை
அருகிலிருந்தே பார்க்கும்
அவலம் அமையலாம் ......


   - சோலச்சி புதுக்கோட்டை 




         - 2019 ஆகஸ்ட் 25-31ஜனசக்தி இதழில் வெளியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக